எந்தவொரு கோட்பாடும்/ தத்துவமும் ஆண்டாண்டு காலமாக ஒன்று போலவே மாறாமல் இருப்பது ஆபத்தானது.
விஞ்ஞான முறைக் கோட்பாடுகள் ஒருபோதும் காலங்கடந்து ஒன்று போலவே இருப்பதில்லை. அவை தம்மைப் புதுப்பிக்கின்றன. புதுப்பிக்கும் வழியை அதன் வழியில் உருவாக்கித் தருகின்றன.
ஆகவே முதலாமாண்டு படித்த அ’னா, ஆ’வன்னா தான் இன்றளவும் கைக்கொடுக்கும் அறிவு என்று சிந்திப்பதும் அதற்கு நன்றியுடையவராக இருப்பதும் தேவையற்றது.
அதே வேளை கோட்பாடுகள்/ தத்துவங்கள் மனித சமுகத்தின் அடிப்படையான வாழ்க்கையில் செய்திருக்கும் மிகப்பெரும் மாற்றங்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. புறக்கணிப்பது வரலாற்றை பிழையான முறையில் போதித்து விடும். வரலாற்றைக் கூர்ந்து அவதானிப்பதன் மூலமே நாம்
மனித குலத்தின் மிக முக்கியமான அடைவுகளின் தன்மையை, நோக்கத்தையெல்லாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த நோக்கு இல்லாவிட்டால் வரலாறு/சமுக விஞ்ஞானப்பரம்பல் புரிந்து கொள்ளப்படும் விதம் மந்தமானதாகவே இருக்கும்.
ஆனால்ப்பாருங்கள், கணித விஞ்ஞானத்தில் மிகச்சிக்கலான ஒன்றை எளிய சூத்திரங்களால் விளக்குவோம். அந்தச்சூத்திரத்தின் தார்ப்பரியம் மட்டுமே விளங்கினால்க் கூட மிகத்துல்லியமாக அந்தச் சிக்கலான விஞ்ஞானத்தையும் அது கொண்டுவரும் ஏனைய அறிவியலையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். அப்புரிதல் வரலாறு எவ்வாறான மாற்றம்/ திரிபிற்கு உட்பட்டு இந்த இடத்தில் வந்திருக்கின்றது, அது எப்படியெல்லாம் பயணிக்கும், அதன் நோக்கங்கள் எப்படியாயின போன்ற சகல கேள்விகளுக்குமான பதிலையும், எங்கெல்லாம் இந்தக் கேள்விக்கான சரியான பதிலைக் கண்டு பிடிக்கலாம் எனும் மிகக்கிட்டிய துல்லியத்தையும் தரும். எமக்கு இந்தப் பொறிமுறை முன்னயதிலும் முக்கியம்.
ஏனென்றால் நாம் எல்லோரும் அனுபவத்தினூடு மட்டுமே வரலாற்றைப் பார்த்து விடவில்லை. படித்தும் அனுமானித்திருக்கிறோம். அது வெறும் வரலாற்றைப் படித்து அறிந்ததன் மூலம் மட்டுமல்ல. கணித விஞ்ஞான பொருளாதார மொழி வரலாற்று நோக்குகளினூடே பயணித்து அவற்றின் உட்சூத்திரத்தை விளங்கிக் கொண்டதன் மூலமே!
ஆகவே இந்த உட்சூத்திரம் மிக முக்கியமானது.
1.இந்த உட்சூத்திரத்தை, தன்னைத்தான் புதுப்பித்துக்கொள்ளாத கோட்பாடுகள்/ தத்துவங்களை வைத்து விளங்கிவிட முடியாது.
2.தன்னைத்தான் புதுப்பித்துக் கொள்ளும் கோட்பாடு தன்னை முன்னேற்றிக் கொள்வதில் மாத்திரம் நின்றுவிடாது. அது தன்னிலிருந்து பிரயோசனமில்லாமலிருப்பதை விடுத்துக் கொள்ளும். அதே வேளை தன்னிடம் காலத்தின் பயணத்தில் பிரயோசனமில்லாத ஒன்று இருந்ததை
வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்.
3. தன்னைப் புதுப்பிப்பதை விரும்பும் அக்கோட்பாட்டின் பயனாளர்கள், அதிலிருந்து தேவையற்றதை விடுவிக்கும் தன்மை இல்லாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை விஞ்ஞான முறைக் கோட்பாடு ஒருபோதும் உருவாக்காது. உண்மையில் அது தன்னைப் புதுப்பிக்கவில்லை, அதன் இருப்பையொட்டிய பயத்தில் சமகாலத்தின் சிறந்த சிந்தனைகளை அதனோடு ஒட்டிவிடுகிறோம். இதற்கு நல்ல உதாரணம் மதங்கள். சமகாலத்தின் சிறப்பான சிந்தனைகளை மட்டும் ஒட்டி, அதன் நேர்மையற்ற, உகந்ததல்லாத, பிழையான பகுதிகளை மாற்ற முயற்சிக்காத எதையும் நாம் சந்தேகிக்க வேண்டும்.
4. ஒரு கோட்பாடு தன்னைப் புதுப்பிக்க அனுமதித்தால் மட்டுமே அது விஞ்ஞான முறைக் கோட்பாடு. அக்கோட்பாடு ஒரு போதும் தன்னை முதலாமரின் பெயரோடு நிறுத்தி விடாது. ஒரு விஞ்ஞான முறைக் கோட்பாட்டிற்கு முதலாமவர் என்று எவரும் இருப்பதில்லை. அது ஒரு சமுகக் கூட்டு முயற்சி.
தன்னை புதுப்பித்த சகலரையும், எல்லாக்காலத்தையும் தன்னுள் உள்வாங்கும். அதே வேளை அதன் முதலாவது பெயருடன் இயங்காது. தன் புதுப்பித்தலின் தன்மையையும் சேர்த்துக்கொள்ளும்.
5. ஒரு கோட்பாடு, தன்னை ஒரு பகுதி மட்டுமே புதுப்பிக்க, ஒரு சாராரை மட்டுமே அனுமதித்து அதன் புதுப்பித்த பெயரை காலத்தின் தேவையோடு, சூழமைவோடு(context) மாற்றாமல் இருந்தால் அது மிகவும் ஆபத்தானது. தன் புனிதத்தன்மையை பேணுகிறது என்று அர்த்தம்.
விஞ்ஞான முறையல்லாத கோட்பாடுகள்/ தத்துவங்களை அவற்றின் தம்மைப்புதுப்பிக்காத தன்மையுடன், விஞ்ஞானம் தம்மைப் புதுப்பிக்கும்
தன்மையுடன் ஒப்பிடுவது அபத்தமானது.
விஞ்ஞானத்தில் அதன் வரலாறு ஒரு போதும் முக்கியமானதல்ல. தெரிந்திருந்தால் நல்லது. விஞ்ஞானத்தில் அந்த விடயம் பற்றிய அறிவும், உட்சூத்திரமுமே முக்கியமானது. அவை தெரிவதன் மூலம் வரலாறும் காலமும் தகவல் வரைபுகளும் தெளிவடைந்து விடுகின்றன. மூக்கைச் சுற்றி இதயத்தைத் தொடத்தேவையில்லை.
முதலாளித்துவத்தின் மிக முக்கியமான தன்மைகளில் ஒன்று மக்களுக்கு தகவலை மட்டும் வழங்கி அதன் உட்சூத்திரத்தை ஒரு போதும் விளங்காமல்ப் பாதுகாப்பது. தகவல் கிடைக்கும் எல்லா வழிகளையும் அதன் உட்சூத்திரம் கிடைக்கும் வழியை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கி விடுவது. அதை நாமும் செய்யக் கூடாது. அது பிழையானது.
இந்த முறையை அந்த முறையுடன் ஒப்பிடுவது அபத்தமானது.
முதலில் தம்மைத்தாம் காலத்தோடு புதுப்பிக்க அனுமதித்து, விஞ்ஞான முறையோடு இயங்கினால் மாத்திரமே விஞ்ஞானத்தோடு ஒப்பிடவாவது முடியுமாக இருக்கும்.
தம்மைத்தாம் புதுப்பித்துக்கொள்ளும் கோட்பாடுகளே சமுகத்தின் சரியான மாற்றங்களுக்குத் தேவையானவை.
அதை விடுத்து, கோட்பாடுகள் மீது நாம் கொண்ட அபிமானத்தால், நம்மிடையே இருக்கும் எல்லா நல்ல முறைமைகளையும், அக்கோட்பாட்டிடம் சேர்த்து இதுவும் இதில் அடக்கம் என்று சொல்லுவதும், கோட்பாட்டின் பிழைகளைக் களைவதை குற்றமாக நினைப்பதும், பிழைகள் எதுவென விளங்கிக் கொள்ளாமையும் விளக்கம் விரும்புபவர்களைக் கூட எதிராளியாக்கி விடும்.
விளக்கம் வேண்டுபவர்களுக்கு நாம் விளக்கம் கொடுப்பதற்கு எம்மிடம் எளிமையான சூத்திரங்கள் தேவை. வெறும் அடர்த்தியான வார்த்தைகள் போதாது.
நாம் முதலில் பங்குபற்றத் தொடங்க வேண்டும். சிந்தித்துத் தொலையவும்.
Comments
Post a Comment