நிறையக் காலத்துக்கு முன்பாக என்று சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு முன்னதாக...ஒரு படம் பார்த்தேன். அந்தப் படத்தை அதற்கு முன்பாகவும் ஒரு தடவை பார்த்திருக்கிறேன். ஏன் எப்போதுமே படங்கள் காலத்தின் பக்கம் சார்ந்தவையாக இருக்கின்றது என்பது பற்றி மட்டும் எனக்குத் தெளிவே இல்லை. சினிமாப் படங்கள் நான் பார்ப்பது மிகக் குறைவு என்று சொல்லலாம், அல்லது பார்த்த படங்கள் மிகக் குறைவு என்று சொல்லலாம், இரண்டுமே ஏறக்குறைய ஒன்று போலத்தான். ஆனால், முந்திப் பார்த்த படங்களை , இப்பக் கொஞ்ச நாளா திருப்பியும் பார்த்துவிட வேண்டும் என்கிற அவா அதிகரித்துக் கொண்டே வருகிறது. நான் காலத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் காலம் இனித் துரிதமடையப் போகிறதா, இல்லை தீர்ந்துவிடப் போகிறதா , இல்லை திடீரென்று வாழ்க்கை பற்றிய தீவிர அவாவா என்று தெரியவில்லை. முந்திக்கும், இப்பவுக்கும் என்னில் நிறைய மாற்றங்கள். ஒரு வேளை காதல்க் கவிதைகளெல்லாம் எழுதுவதில்லை என்று சபதமெடுத்துக் கொண்டிருந்த நான் காதல்க் கவிதைகள் எழுதுகிற அளவுக்கு வளர்ந்துவிட்டதாலாக இருக்கலாம். ...