இலையுதிர் காலமாதலால் ஒவ்வொரு பௌர்ணிமையிலும் அரச மரங்கள், இலைகளை சட்டை கழற்றுவது போல ஒரு வித சலசலப்புடன் உதிர்த்துக் கொட்டுகிறது ! அல்லது இலையுதிர்காலத்தின் இறுதி மரணந்தழுவும் வெள்ளரசு மரத்தினிலைகள் தெரு நாயொன்று சிரங்கு தாளாமல் உடலை சடசடத்து உலுப்பிக் கொள்வது போல உதிர்த்துக் கொட்டுகிறது ! கீழே போதிசத்துவன் இருந்தான் புகழ் மாலையில் நனைவது போல பழம் இலைகளாலும், இலைகளின் சவங்களாலும், சருகுகளாலும் அபிஷேகிக்கப்பட்டான். அதில் எதோ உத்தமத்தை உணர்ந்தவன், சடத்துவத்தைத் தாண்டி சத்துவத்துக்குள் நுழைந்தான். பிரம்மச்சரியத்தின் அந்தம் பற்றி புல்லுருவியாக வியாபகமாகிக் கொண்டு வருகின்ற படிகளில் என் முன்னேற்றம் தெரிகிறது ! என் அம்மா எனக்குத் தந்த இறுதி அரவண...