மரங்கள் அடர்ந்த காட்டுச் செடிகள் உதிர்ந்து உலருவதைப் போல ஒவ்வொரு இதழாக, உதிரி உதிரியாக நினைவுகளின் அடிக்குறிப்புகள் முகிழ்ந்து எழுந்துகொண்டிருந்தது. எனக்கு நினைவுகளில் இருந்து மீண்டு கொள்கிற தோரணை அல்லது அந்த வித்தை அடிப்படையிலேயே தெரியவில்லை. எனக்கு முன்னால் போகிற நிழல் என்னை விட ஒரு படி முன்னால் போகிறது என்பதை மட்டும் என்னால் உட்கார்ந்து யோசிக்கக் கூடிய தெளிவு இருக்கிறது. மற்றும் படி நான் மிகுந்த குழப்பமான மன நிலையில் இருந்தேன் போலும். நான் பழகி வாழ்ந்த தெருக்களில் என்னைக் கவனிப்பவர்கள் குறைந்து போனதையிட்டு ஒருவித மகிழ்ச்சி. இதைத்தான் காலம் பதில் சொல்லும் என்று பலர் சொல்லுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பேசப்பட்ட காலம் முடிந்து என்னைப் பற்றிப் பேசப்படுகிற காலம் எழுந்த இந்த கூர்ப்பு மாற்றத்தை நான் கொண்டாடுவதா இல்லையா என்றும் தெரியவில்லை. நான் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஒரு வணிகப் பத்திரிக்கையின் கிசுகிசுக்களுக்கு ஒப்ப நான் ஒவ்வொருவர் காதுகளிலும் கோலாகலமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கு ஆதரவுகளும் அதிகம், என் பக்கம் நியாயமும் இருக்...