நா வலை மேம்பாலத்துக்கருகில் மிகப் பயத்துடன் நடந்துகொண்டிருந்த போது யாரோ என் முதுகுக்குப் பின்னால் இருந்து மிஸ் கந்தையா என்று கூப்பிட்டது நன்றாகக் காதில் விழுந்தது. கூப்பிட்ட குரல் எனக்கானதாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய இளம்பிராயத்தில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். சிறிது குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தேன். ஆளைச் சரியாக மட்டுக் கட்ட முடியவில்லை. திரும்பிப் பார்த்து நேரம் செலவழியாமல் நடக்க முனைந்தேன். அந்த நபர் என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வந்து எனக்கு முன் பாதையை வழி மறித்துக் கொண்டு என்னைத் தெரியேல்லையோ எண்டு கேட்டார். எனக்கு சாதுவாகவும் நினைவில்லையாதலால், மன்னிக்கோணும் எனக்கு சற்றைக்கும் நினைவு படுத்த முடியேல்ல என்றேன் . நினைவுப் படுத்துவதில் உள்ள சிரமத்தை விட அவர் எனக்கு முன்பாக வழிமறித்துக் கொண்டு நின்ற விதம் சங்கடமானதாக இருந்தது. இப்ப இங்கையோ இருக்கிறீர் எண்டார் . என்னைப் பொதுவாக யாரும் 'றீர் ' அடைமொழி பாவித்து அழைப்பதே இல்லை எனலாம். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு சொல்லுவதற்கு ஒரு பதிலும் இருக்கவில்லை. அவர் கொஞ்சம் உரத்த குரலில் சிரித்த...