நாவலை மேம்பாலத்துக்கருகில் மிகப் பயத்துடன் நடந்துகொண்டிருந்த போது யாரோ என் முதுகுக்குப் பின்னால் இருந்து மிஸ் கந்தையா என்று கூப்பிட்டது நன்றாகக் காதில் விழுந்தது. கூப்பிட்ட குரல் எனக்கானதாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய இளம்பிராயத்தில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். சிறிது குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தேன். ஆளைச் சரியாக மட்டுக் கட்ட முடியவில்லை.
திரும்பிப் பார்த்து நேரம் செலவழியாமல் நடக்க முனைந்தேன். அந்த நபர் என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வந்து எனக்கு முன் பாதையை வழி மறித்துக் கொண்டு என்னைத் தெரியேல்லையோ எண்டு கேட்டார். எனக்கு சாதுவாகவும் நினைவில்லையாதலால், மன்னிக்கோணும் எனக்கு சற்றைக்கும் நினைவு படுத்த முடியேல்ல என்றேன் . நினைவுப் படுத்துவதில் உள்ள சிரமத்தை விட அவர் எனக்கு முன்பாக வழிமறித்துக் கொண்டு நின்ற விதம் சங்கடமானதாக இருந்தது.
இப்ப இங்கையோ இருக்கிறீர் எண்டார் . என்னைப் பொதுவாக யாரும் 'றீர் ' அடைமொழி பாவித்து அழைப்பதே இல்லை எனலாம். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
எனக்கு சொல்லுவதற்கு ஒரு பதிலும் இருக்கவில்லை. அவர் கொஞ்சம் உரத்த குரலில் சிரித்துவிட்டு என்னைத் தெரியேல்ல...? நான் தான் ! பிரகாஷ் ! வவுனியாவில....
காம்பில....வேப்பங்குளத்தில.....
எனக்கு எல்லாம் சரளமாக ஞாபகத்துக்கு வரத் தொடங்கியது. மன்னிக்கோணும்...! ஆளடையாளம் காண முடியேல்ல !வெறி சொறி....என்றேன் .
அது பரவாயில்ல....நீங்களெல்லாம் திருப்பி ஞாபகப்படுத்தி எங்களோடை கதைக்கிறதே பெரிசெல்லோ எண்டார்.
நான் மெதுவாகச் சிரித்தேன். இப்ப எங்க இருக்கிறிங்கள் எண்டு கேட்டேன்.
நுகேகொடையில் இருப்பதாகச் சொன்னார். குடும்பம் ? ....
நான் கனக்க காலம் செண்டு தான் கலியாணம் கட்டினன். ரெண்டு ஆம்பிளைப் பிள்ளையள். மூத்தவனுக்கு கம்பஸ் கிடைச்சிருக்கு. சின்னவருக்குக் கொஞ்சம் ஏலாது. அவனை அம்மா பாத்துக் கொள்ளுறா எண்டு விட்டு என்னைப் பற்றி நான் சொல்லுவதற்காக நிறுத்தினார்.
நான் பாலத்தடியில் இருந்து தள்ளிப் போய் நிக்க வேண்டும் என்று விருப்பப் பட்டேன். அவரும் அதை விரும்பியவராய் கொஞ்சம் முன் தள்ளி நடந்தார்.
மகள் ஒராள் எண்டேன்....
சின்னாளோ எண்டார் .....,
இருபத்திரண்டு வயது....கம்பசில இருக்கிறா ....
அவருக்கு பெரிய சந்தோசம்.இன்னும் எதையோ கேக்கிறாப் போல இருந்தார். சித்தார்த்தன் மேல் நாட்டுக்கு ஆராய்ச்சிப் படிப்புக்குப் போயிருக்கிறார். வார மார்கழியில் அவருக்கு விடுமுறை என்றேன். சித்தார்த்தனைச் சந்திக்க வீட்டிற்கு வருவதாகச் சொல்லிவிட்டு விலாசத்தை வாங்கிச் சென்றார்.
விடைபெற்றுப் போகு முன்....காருக்கு என்ன நடந்தது என்று கேட்டார்.....
நான் இதுவரைக்கும் ஒரு காரும் வாங்கியிருக்கவில்லை என்று அவருக்கு விளங்கப்படுத்துவது லேசான விடயமில்லை என்பதால் சிரித்துவிட்டு மெல்ல நடக்கத் தொடங்கினேன்.
திரு .பிரகாஷ் தான் தனது, புதிய உயர் ரகக் காரில் வந்ததாகக் கூறிக் கொண்டு, அதனை நிறுத்துவதற்குத் தடையான வீதியின் பகுதியொன்றில் நிறுத்திவிட்டு வந்ததாயும்,தாறுமாறான கொழும்பின் நெரிசலில் காருக்கு ஏதும் சிராய்ப்போ, ஆபத்தோ ஏற்பட்டு விடுமென்றும் கூறிக் கொண்டே, அதனை நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடந்தார்.
திரு.பிரகாஷை வவுனியாவில் நாங்கள் இருந்த போது அறிமுகம். அவர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பொன்றில் பெரிய பதவியாய் இருந்தார். எங்களை விட எட்டு ஒன்பது வயது அதிகம் இருக்கலாம். இடம் பெயர்ந்து நாங்கள் குடும்பமாக இருந்த போது அப்பாவிற்கு கொஞ்சம் உதவியாக இருந்தவர். பிறகு அப்பா, அம்மா , அண்ணா போன்றவர்களிடம் குடும்ப நண்பராக ஆனவர். திரு பிரகாஷ் அரசியல் பேசுவதில் அதிக விருப்புக் கொண்டவர். அப்பாவோடு அரசியல் பேசுவதற்காக வெள்ளி அல்லது வியாழக் கிழமைகளில் செஞ்சிலுவைச் சங்க வாகனத்தோடு வீட்டிற்கு வருவார். நான் அப்போது கொழும்புப் பல்கழைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். ஆகையால் அவர் வந்து போவதைத் தவிர அதிகம் புழங்கக் கிடைக்கவில்லை. நான் வாரம் தோறும் அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை விடுமுறை நாட்களில் வரும் போதும், விடுதலையில் வீட்டுக்கு வரும் போதும் அப்பாவின் பேரைச் சொல்லி, மிஸ் கந்தையா, என்ன உம்முடைய கல்லூரியில் ஜே வி பி கலாசாரம் பரவுகிறதாம், நீர் அதில் பங்கெடுக்கேல்லையா என்று நக்கலாய் விசாரிப்பார். நான் அதிகம் கதைக்காமல் 'மாணவர்களை அரசியலுக்குள் கொண்டு வரச் சரியான நேரம் பாக்கினம், ஆனா இதால நல்ல மாற்றம் கிடைக்காது என்று சொல்வேன்.
நீர் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கத் தொடங்கீட்டீர் போல மிஸ் கந்தையா என்று சொல்லுவார். என்னுடைய முழுப் பெயர் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது போல எப்போதும் என்னுடைய தகப்பனாரின் பெயரைச் சொல்லியே அழைப்பார். மறை முகமாக என்னில் நிறைய மரியாதை வைத்திருந்தார்.
நான் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்று சொல்லி விளங்கப்படுத்த இயலாது என்று எனக்குத் தெரியும். அவருக்கு, தமிழ்த் தேசியவாத ஆதரவாளியாய் நான் இருந்தால் நல்லம் போலப் பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் தான் எந்தப் பக்கம் என்று சொல்லவதை எப்போதுமே தவிர்ப்பார்.
பிறகு காணக் கிடைக்கிற போதெல்லாம் ,சின்ன மாணவர்கள் அரசியலில் தலையிடாமல் இருப்பதே சிறந்த புத்திசாலித் தனம் என்பதை வலியுறுத்திச் சொல்லுவார். மாணவர்கள் அரசியலில் தலையிடாமல் இருக்க வேண்டுமா பெண் மாணவர்கள் அரசியலில் தலையிடாமல் இருக்க வேண்டுமா என்று அவர் தெளிவாகச் சொல்ல முனையவுமில்லை.
நான் பள்ளிக் கூடம் படிக்கும் காலத்தில் இருந்தே ஆங்கில ஏடுகள், குறித்த சில பத்திரிக்கைகளுக்கு எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அது என் தகப்பனாருக்குத் தெரிந்திருந்த போதும், அவர் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. திரு பிரகாஷ்,அது பற்றி அறிந்திருந்தார். நான் ஏதாவது அரசியல் பற்றி எழுதுகிறேனா என்று அடிக்கடிக் கேட்பார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒரு இலக்கியக் கையேடு நடார்த்தினோம். நானும் சித்தார்த்தனும் அதில் மாறி மாறி ஆசிரியர்களாக இருந்தோம். அந்தக் கையேட்டில் நான் ஏதாவது அரசியல் எழுதுகிறேனா என்று அறிய ஆவலாய் இருந்தார். அது பல்கலைக் கழக வளாக மாணவர்களின் கைகளுக்கு மட்டும் கிடைப்பதால் அவர் நிறைய ஏமார்ந்து போனார். இருந்தும் அதைப் பற்றி அறிய முயற்சி செய்தார். இவாறாக என்னுடன் சங்கடப் படும் படியாக நடந்து கொண்டமையினால் அவரை முகம் முறித்துக் கொள்ள வேண்டி இருந்தது. நான் பொதுவாக யாருடனும் முகம் முறித்துக் கொள்ளப் பிரியப்படுவதே இல்லை. அதிகம் தொந்தரவு செய்கிறவர்களை எனது வட்டத்துக்குள் சேர்க்காமல் இருக்க விரும்புவேன். அதற்குப் பிறகு நான் பட்ட மேற்படிப்புக்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விடுதியிலேயே கொழும்பில் தங்கிப் படிக்க வேண்டியிருந்தமையினால் எங்கள் குடும்பம் முழுமையாக கொழும்புக்கு மாற்றலானது. அதன் பிறகு திரு.பிரகாஷைச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பமே இல்லாமல்ப் போய் விட்டது.
எமது திருமணம் மிகப் பிரயத்தனத்துக்குப் பின் நடந்த போது திரு.பிரகாஷ் எதோ ஒரு வழியில் எங்கள் திருமணத்தினால் உறவினரானது தெரிய வந்தது. சித்தார்த்தன் நான்கு முறை ஆராய்ச்சிப் பட்டப் படிப்பிற்காக புது தில்லி போய் வந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு முறை அங்கு போகும் போதும் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்து அவருக்கு வேண்டிய உணவுவகைகளை பெற்றுக் கொடுப்பதில் அவருடைய நண்பர் சதீஷ் குமாருக்கு மிகுந்த பங்குண்டு. சித்தார்த்தனுக்கு உணவு வகைகள் ஒவ்வாமையால் அடிக்கடி உடல் உபாதைகள் வந்து விடுவதுண்டு. சுற்றிச் சுற்றிப் பார்த்ததில், சதீஷ் குமார் என்கிற எங்கள் குடும்ப நண்பரின் நெருங்கின சொந்தக் காரராக திரு .பிரகாஷ் இருந்திருக்கிறார். ஆகையால் அவரை நாங்கள் அடியோடு மறந்து விடாமல் அவர் பற்றிக் கதைக்க எதுவாகிலும், எப்போவாவது தட்டுப்படுவதுண்டு.
திரு. பிரகாஷ் சொல்லுவார், வர்க்கத்தின் அடிமைகளை கொழுத்திவிட்டுக் கொண்டு வேவு பாக்கிற வேலையைத் தான் இந்த மேல்தட்டு அரசியல்வாதிகள் செய்யப்பாக்கினம். இது
ஐ தே க வோ, அரசாங்கமோ, தமிழரசோ, ஜே வி பி யோ...சமசாஜமோ எதுவெண்டாலும், எல்லாத்துக்கும் இது பொருந்தும் என்பார். இன்னும், பூஷ்வாக்களின் கதைகளைப் பேசிக்கொண்டு திரிவது, நாங்கள் பூர்ஷுவாக்களாய் ஆவதைப் போல என்பார்.
அரசியல், லாபத்தைச் சம்பாதிக்கிற ஒரு தொழில் முறை, அப்பிடியெண்டா, இது நடந்துகொண்டே இருக்கும் தானே ? என்று விட்டு அகன்றுவிடுவேன் நான்.
ஒரு நாள் நான் கல்லூரி வளாகத்துக்குள் விடுதிக்குப் போய்க் கொண்டிருந்த போது,
அன்றைக்கு ஒரு பூரணை விடுமுறை தினம், கல்லூரியில் முற்போக்குக் கட்சிக்கான கூட்டம் நடந்துகொண்டிருந்தது. கட்சிக் கூட்டத்தில் சித்தார்த்தன் கதைப்பதாக ஏற்பாடாகி இருந்தது.
மிஸ் கந்தையா என்று அழைத்துக் கொண்டே திரு பிரகாஷ் அவ்விடம் ஓடி வந்தார்.
நீங்கள் எப்பிடி வளாகத்துக்குள்ள ? ஆங்கிலத்தில் கேட்டேன்.
ஏன் நாங்கள் உங்கட வளாகத்துக்குள்ள வரக் கூடாதோ ?....எங்கட நிறுவனத்தின் சார்பாக, ஒரு விழிப்புணர்வுக் கருதரங்க்கொன்றுக்காக வந்தோம், மிஸ் கந்தையாவைக் கண்டதும், கதைக்க ஓடி வந்தேன். தவறோ ? .....
அப்பிடியெல்லாம் இல்லை.
அப்பிடிஎன்றால், இன்றைக்கு நீர் வீட்டை போகையில்லைப் போல, பூரணை விடுமுறைக்கும் வகுப்புக்கள் இருக்கும் போல, என்றுவிட்டுச் சிரித்தார்.
இன்றைக்கு ஒரு முக்கியமான கூட்டம் இருக்குது, வளாகத்தில....என்னையறியாமல் உண்மையைச் சொல்லிவிட்டேன்.
ஒ...அதுபற்றி உமக்கு ஒரு எச்சரிக்கை செய்துவிட வேண்டுமென்று நினைக்கிறன். அரசியல்வாதிகள் சுயநலனிற்காக மாணவர்களையும், பொதுமக்களையும் தங்கள்
கட்டுக்குள் இழுக்கிறார்கள். பட்டமேற்படிப்பு மாணவியான உமக்கு இது என்னை விடவும் நன்றாகத் தெரிந்திருக்கும்.இருந்தும் இவ்வாறான ஆள்மயக்கிக் கூட்டங்களைத் தவிர்க்கப் பாரும் என்றார்.
நான் பேசுவதொன்றுக்கும் வழியில்லாமலும், மேலதிகமாகக் கதைக்க விரும்பாமலும் நின்றேன்.
ஒ..சித்தார்த்தன் கூட்டத்தில் கதைப்பதானால், அதற்காக நீர் போவதை நான் தடுக்க இயலாது இல்லையா, மிஸ் கந்தையா ? என்றுவிட்டு லேசாகச் சிரித்தார்.
என்னைப் பார்த்து நேரிடையாகச் சிரிப்பதில் உள்ள சங்கடம் அதிலிருந்தது.
திரு.பிரகாஷுக்கு என்னைப் பற்றியும், சித்தார்த்தனைப் பற்றியும் கூடத் தெரிந்திருக்கிறது. அவர் ஒரு கட்டத்துக்கு மேல் அழுகிய புழுவோன்றைப் போல அருவருப்பாகத் தெரிந்தார்.
இது முற்போக்கு அரசியல் சார்ந்த மாணவர்கள் மாணவர்களுக்காக நடார்த்தும் கூட்டம் ! என்றேன்.
நீங்கள் பட்டப்படிப்புப் படித்துவிட்டு, கோட்டும் சூட்டும் அணிந்துகொண்டு காரில் டாம்பீகமாகப் போகும் போதும், நான் உயிரோடு இருந்தால், இந்த வர்க்க பேதமற்ற அரசியலைப் பற்றிக் கேட்பேன். எங்களைப் போன்றவர்கள், குடிப்பதற்கும், கொப்பளிப்பதட்கும் தண்ணீரை மட்டும் தான் பயன்படுத்துகிறோம். நீர் என்னுடைய நண்பனின் மகள் என்பதால் மிகக் கரிசனத்தோடு , உமக்கிதை நான் சொல்லுவதாய் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
மனிதர்களில் வர்க்க அரசியல் இல்லாதவர்கள் என்று ஒருவரும் ஒருபோதும் இருக்கப் போவதில்லை என்பதை இன்னும் பத்துப்பதினைந்து வருடங்கள் கழித்துத் தெரிந்து கொள்வீர்.
உமக்கு நல் வந்தனங்கள், நான் அதிகமாகக் கதைத்துவிட்டேன் போல ! மறுபடியும் என்னைச் சந்திக்க நீர் விரும்பமாட்டீர் என்று நினைக்கிறேன்,
மிஸ் கந்தையா, உமக்கும் சித்தார்த்தனுக்கும் இனிய திருமண உறவு உண்டாகட்டும். விடை பெறுகிறேன் !அது தான் உங்களுக்கு உகந்தது !
திரு. பிரகாஷ் என்னுடன் கதைத்த கடைசி வார்த்தைகள் இது தான்.
நான் உரையாடலை நினைவுப் படுத்திக் கொண்டிருண்டிருந்த சமயம், திரு.பிரகாஷ் பாலத்தைத் தாண்டி காரில் விரைந்துகொண்டிருந்தார்.
லோ.நிலா
2010
Comments
Post a Comment