Skip to main content

சாமகானமும் காம்போதியும்









முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது. 

சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர். 

மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்கிட்டு, ஒரு ரொமாண்டிக் மூட்டில இருப்பினையாம். அதுவும் சும்மா கயிலாய மலையில ஜில் எண்டு காத்து வீசுற மாலைப்பொழுதில. அப்பத்தான், ஒருநாளாகிற பொழுது, இராவணன் ஜாலியா புட்பக விமானத்தில (இலங்கையெண்டா அரச குடும்பத்தினர் தனி விமானம் வெச்சிருக்கிறதும், சரி விடுவம்) காடு மலை, கழனி எண்டு பியர்கிரில்ஸ் போல பறந்து திரிஞ்சேராம். அப்பிடிப் போகக்குள்ள கயிலாய மலையைப் பாத்து, பெரிய நிலப்பரப்பா இருக்கே வாங்கிப்போட்டா பிற்காலத்திலே உதவுமே எண்டு இலங்கைக்குக் ஷிப்ட் பண்ண ஆசைப்பட்டிருக்கிறேர். இலங்கையை விடப் பெரிய பரப்பை, இலங்கைக்குள்ள எப்பிடிக் கொண்டுவருவார் எண்டு உங்கட மூளைய பாவிச்சுக் கேள்வி கேக்கப்டாது. கடவுள்க்கதை எண்டு சொல்லேக்க எப்பிடி உங்கட மூளை இருந்ததோ அப்பிடியே பவுத்திரமா வெச்சிருங்கோள். 

முந்தி பகீரதன் எண்டொருத்தர் இருந்தவர் அவர் ஆகாச கங்கையை பூமிக்கு கொண்டு வர ஆசைப்பட்ட ஆள். அந்தாள் தவம் கிவமெல்லாம் இருந்தீச்சு. இந்த கெங்கா சாந்தனுக்கு போக்குக் காட்டின கதை தெரியுந்தானே? கெங்காவா கொக்கா? இவர் போய் வா... எண்டா வந்திருவாவே? ஆனாப்பாருங்கோ பகீரதனுக்காக டீலிங் கதைக்கப் போன இடத்தில சிவனுக்கும் கெங்காக்கும் எதோ நடந்திருக்கும் போல. ஆளின்ர தலையில ஏறி இருந்திட்டு மனுசி. அவரும் கங்கையைத் தலையில் அணிந்து பபிள் விட்டுக்கொண்டு இருந்தார். சரி சரி...சிவன் பபிள்ளாம் விடமாட்டாரு சம்பந்தம்! பேந்து, "வளர்சடை மேற்புனல்வைத்து" எண்டு முதலாந்திருமுறையில சம்மந்தப்பயல் பாடல் பாடியும் விட்டுட்டான். பெருமை தானே, அந்தாளும் பேயாம இருந்திட்டுது. 

சரி இராவணண்ட கதைக்கு வருவம். இந்தக்காலத்தில் சிவனை அடா புடா  வெண்டு எழுத முடியுது, ஆனாப்பாருங்கோ இராவணனை அவன் இவன் எண்டு எழுதுற  சிலாக்கியம் இன்னும் வாய்க்கேல்ல. முப்பாட்டன், (ரைமிங்கா வேறொன்டு வருகுது...) எண்டு வந்திருவாங்கள். 

இராவணன், வெட்டவெளியில சுத்திக்கொண்டு இருக்கேக்க, அவற்றை புட்பக விமானத்தில சமநிலைப்பிரச்சினை! எயார் சேர்குலேஷன் வளி பதனிடுக்கியில காணாதாம். தொபக்கடீர் எண்டு ஒரு மலையில மோதிட்டுது. ஆள் மலையை நைசா தோண்டப் பாக்கிறேர். நரேந்திர மோடிக்கு இது தெரிஞ்சா.... என்ன சேர்ந்து தோண்டி விப்பினம்! உதெல்லாம் ஒரு சிரியஸ் விஷயமே! இராவணன் கண்ண மலங்க முழிச்சுப் பாத்தா, கைலாச மலை....இலங்கையில இருந்து, ஹிமாச்சல் பிரதேஷ் வரைக்கும் சுமார் ஒரு நாளும் இருவத்திரண்டு மணித்தியாலமும் பறந்தே பயணிக்கோணும். கிங் பிஸ்சர் எண்டா இருவத்தொண்டாம், விஜய் மல்லையாவுக்கு எதோ சலுகையாம். தனி ஆளா இராவணன் மட்டும்...அதான், சமநிலை குழம்பிப்போட்டுது. 

ச்சே! சரியா வந்து புட்பகவிமானம் கைலாசத்தில மோதேக்க, சிவன் உமாவைப் பாத்து இளையரஜாண்ட, தில்லுபரு ஜானி பாட்டு படிக்க, உமையாள்,ஜஸ்ட்டின் பீபிரிண்ட மை வேர்ல்ட்டில இருந்து பேபி பாட்டப் படிச்சுக் கொண்டிருந்தா. பாட்டும் கூத்தும், களிப்பும் ஒரேயடியாப் போச்சு. 

உலக நாயகி எண்டாலும், பெண்களைப் படைக்கேக்க சிவன் பயத்தையும், அச்சத்தையும் சேர்த்துத் தான் படைச்சவர். ஏனென்டாப் பாருங்கோ அதெல்லாம் பெண்களிட்ட பிறப்பிலே டீ. என். ஏ யில இருந்தே இருக்கெண்டு சொல்லோணுமெல்ல, நாள பின்ன எத வெச்சு பொம்பிளையளுக்கு பாடமெடுக்கிறதாம்? ஓம் ஓம், காளியா இருக்கேக்க, சிவன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஷோவில தன்ர காலைத் தலை வரை தூக்கி காளிக்குக் காட்ட, நானென்ன காரைக்காலைச் சேர்ந்த புனிதவதி எண்டு நெச்சியோ?  "ஆடும் போது அரவா உன் அடியில் இருக்க வேண்டும்" எண்டு பாட?  காளி வெளு வெளுவெண்டு மேடையிலேயே போட்டு சிவனை வெளுத்த கதைக்குப் பிறகு தான், கலா மாஸ்ட்டர் கிழி கிழி எண்டு சொல்லத் தொடங்கினவவாம். 

அ ...அ ...அதெல்லாம் கதைக்கப்படாது கேட்டேளா. அதால புட்பகவிமானம் கைலாசத்தில மோதேக்க, பயங்கலந்த அச்சத்தில சிவனின்ட கையைப் பிடிச்சொண்டு, ஹேய்...ஷிவா...பூ..க..ம்..பம் பம்... எண்டு சொல்லுறா. ஷட் ஆப் தேவி! பூகம்பம் பூமியில வாறது, நாங்க கைலாசத்தில இருக்கிறம். இதுக்குப் பேர் கைலாசபம்;) எண்டு திருத்திக்கொண்டே, பொறணை, நான் பாக்கிறன் எண்டு, கீழ குனிஞ்சு பாக்கிறேர், 

அலவாங்குக்கு தலாணி கட்டின மாதிரி பத்துத் தலையோட இராவணன். மீசையும் வாயுமா நிக்கிறான். ஒரு மீசையா பத்து மீசை;தலா மீசைக்கொரு வாய். வாய்க்கு முப்பத்திரண்டு பல்லு. ரொமான்சைக் குழப்ப வந்த பன்னாடை! இப்பிடித்தான் சிவன் திட்டினார்.சிவ பூசையில கரடி என்ட வழக்கு இதுக்குப் பிறகு தான் வந்தா எண்டு கேட்டா எனக்கு இந்த மாதிரி விசயமெல்லாம் தெரியாது கேட்டேளா, நான் ஒரு சிங்கிள் பெட்டை. 

இராவணனுக்கு பலன்ஸ் குழம்பி சாதுவா மயக்கமும் வருது, அதுவும் இமயமலை உச்சியில, ஓக்சிஜன் சிலிண்டர் இல்லாம ரொமான்ஸ் பண்ணுற இவையைப் பாத்தா பத்திக்கொண்டு வராதா என்ன? அவனுக்கு இம்பலன்ஸ். ஒரு சோடி நுரையீரலை வெச்சுக் கொண்டு பத்துத் தலையில இருக்கிற தலா ஒவ்வொரு மூக்குகளாலயும் மூச்சு எடுத்து விடுறது எவ்வளவு கொம்பிளிக்கேட்டட் விசயம் தெரியுமே. ஆளுக்கு வீசிங் வேற. துலைஞ்சவன் அங்கதன் தூது வந்திட்டு போகேக்க அரியணைக் கைப்பிடியில கிடந்த வீஸிங் பம்ப்பை எடுத்துக் கொண்டோடிட்டான். எளிய வானரம்! போனவனை திருப்பிப் பிடிச்சிருக்கலாம் தான். ஆனா, ராமற்ற மோதிரத்தை சொருகி வெச்சிருந்த அதே இடத்தில வீஸிங் பம்ப்பையும் சொருகிக் கொண்டு ஐயா மாறுறேர். அந்தக் கருமத்தை இனி மூக்கில வெக்கேலுமா? துலைஞ்சோடு எண்டு விட்டது தான். 

ஒக்சிஜன் கிடைக்காம இராவணன் தடுமாறுறான். ஐஸ்கிரீமோ, குளுக்கோலைனோ குடிச்சா நல்லம் போல இருந்தது, ஆனா சிவன் விட்டாத் தானே, சிவனுக்கு செரியான கோவம். நெற்றிக் கண்ணைத் திறக்க ரெடி ஆள்! அவரின்ட சிக்ஸ் பாக் உடம்பு முறுக்கேறுது. உமையாள் சொல்லுறா, இஞ்சேயப்பா சும்மா இருங்க, இந்த நிலமையில பூலோகத்தில ஓவியர் ரவிவர்மாவோ, மருதுவோ, ஆதிமூலமோ கண்டா உங்கட கேவலமான போசை படமாக் கீறி குழந்தையள் படிக்கிற பாடப்புத்தகத்திலையும், ஊர்க் கோயில் வழியவும் வெச்சிருவினம். எனக்கே சக்கிக்கேல்ல,பிறகு பக்தர் எண்ணிக்கையும் குறைஞ்சிரும். இன்னும் குமார சம்பவமே நடக்கேல்ல அழகான முருகன் பிறக்க முன்னம் உங்கட ஹீரோயிசம் குறைஞ்சு போப்போது. பான் போலிங் குறைஞ்சா எப்பிடி நீங்க முழு முதல்க் கடவுளாகிறது, பிறகெப்பிடி நான் கடவுளற்ற பெண்சாதி எண்டு கோயில்ல கொலுவிருக்கிறது? எதையும் செய்யேக்க நாலுதரம் யோசியுங்கோ. ஆவசரப்பட்டு எதுக்கெடுத்தாலும் நெத்திக்கண்ணை திறக்கிறது...ச்ச்சே, வேற வேலை இல்லை? நெத்திக் கண் என்ன என்ற கொப்பர் இமவான் தந்த சீதனப் பெட்டி எண்டு நினைச்சிங்களே,அடிக்கடித் திறந்து பாத்து புளகாங்கிதம் அடைய? சிவன் சாதுவாச் சாந்தமானார். 

நெற்றிக்கண்ணைத் திறக்காம வேறு..வேறு..வேறு...வேற எதையும் திறந்தா வீரபத்திரர் உருவாகியிருவார். அங்கால வாயு பகவான் அலமலந்து கொண்டு நிக்குது, எதையாவது தந்தா கீழ ஊத்தாம சரவண பொய்கையிலே கொண்டு போய்ச் சேர்க்கிறதுக்கு. என்ன அரியண்டம் பிடிச்ச வாழ்க்கை இது. அரங்கேற்றம் பிரமிளாக்கு கூட படத்தில இவ்வளவு கஷ்டத்தை நான் குடுக்கேலேயே என்று தலையில் சிவன் அடித்துக் கொண்டார். அதப்பாத்த தேவி டக்கெண்டு ஐடியா குடுக்கிறா, சும்மா ரண்டு வார்த்தை கோவமாப் பேசிட்டு விடுங்க. சிவனுக்கு கோவம் போற மாதிரி இல்ல. அதுவும் தனக்கு இமவான் சீதனமாக் குடுத்த லாண்ட், இமயமலை! அதைப் போய் உருவிக் கொண்டு ஓடப் பாக்கிறான். 

பிச்சை எடுக்கிறார் பெருமாளு அதைப்பறிக்கிறான் அனுமாரு....!  கோவம் கொப்புளிக்க, ராவணணை தண்ட காலை நீட்டி பெருவிரலால அந்துப் பூச்சியை நசுக்கிரமாதிரி நசுக்கிப்போட்டேர். அதுக்கு பிறகும் அது கூர்ப்படைஞ்சிருக்கு பாருங்களேன்! 

ஆள், இம்பாலன்ஸ் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தான். இப்பத்தான் தெரிஞ்சுது சிவபெருமான் காலால நசுக்கிறேர் எண்டு. ஓ...கோட், ப்ளீஸ் போர்கிவ் மீ! ஐ ஆம் அநேபில் டு ப்ரீத்...எண்டு பள்ளிக்கூடத்தில அப்போலாஜி லெட்டர் எழுதின கணக்கா, மேல சிவனை அண்ணாந்து பாத்துக் கத்தினான். ரொமான்ஸ் மூட் குழம்பிப் போயிருந்த சிவனைப் பாக்க படு கேவலமாயிருந்தது வேற கதை. தேவி மட்டும் சும்மாவா, அவவுக்கும் மூட் ஸ்விங் ஆகிப்போட்டுது. ச்சுபிச்சிக்கீ....லுலுலூ....செல்லமெல்லோ எண்டு கெஞ்சிப் பாத்தான் இராவணன். 

சிவன், நாட்டமை படத்து பசுபதி போல உர்ர்ர் எண்டே இருந்தார். சரிப்பட்டு வரேல. துன்பம் விலகி ஓட என்ன செய்வமெண்டு யோசிச்சான். ஆங்..ஐடியா...சாரே ஈயாள் ஒரு பாட்டுப் பாடும், நிங்களை குளிர்விக்க, கொறைச்சு அருள் புரியணும். எண்டு சொல்லிக் கொண்டே.... தன்ர தலைகளில ஒண்டை, அம்மா சமையலுக்கு வெண்டிக்காய் ஓடிக்கிரதைப் போல, (ஏன் அப்பா சமையலுக்கு ஓடிக்கிறதை போல எண்டு எழுதேல எண்டு கேட்டா, இது கடவுள் கதை. கருமமா தான் இருக்கும்) ஒடிச்சுப் போட்டான். கையில ஒண்டை முருங்கைக்காய் மாதிரி காஷுவலா வெட்டிப் போட்டான்.(எதால, எந்த எக்குப்மென்ட் எண்டெல்லாம் வரலாறு சொல்லேல்ல) இரண்டையும் கொன்ஜொய்ன்ட் பண்ணினான். அதாவது, என்ர ஐடியாப்படி தலையை வெட்டின, கழுத்துக் குழியிண்ட துவாரத்துக்குள்ள கையின் கிண்ணப்பந்துகளை உள்ளே திணிச்சான். இப்ப அப்பிடியே வீணை ரெடி. கம்பிக்கு என்ன செய்தான் எண்டு தெரியேல்ல. ஆரையையும், அரந்தியையும் வெளிய எடுத்து தொடுத்தானா (ஸாரி, வன்முறை கொப்புளிக்குது எண்டு சென்சார்ல கட் பண்ணிடாதிங்கோ), இல்லாட்டி, ஏற்கனவே ரெடியா கம்பி கிம்பி வெச்சிருந்தானா போன்ற சந்தேகங்களை படப்புத்தகமோ, கந்தபுராணமோ(அதை எல்லாமா வாசிக்கிறாய் எண்டு என்னை ஒதுக்கி வைக்கபிடாது.கிளு கிளுப்புக்காக வாசிக்கிறானான். வீடாக்கள் பிள்ளை கந்தபுராணம் வாசிக்குது, பக்திமானா வளரும் எண்டு காத்திருக்கிறாங்கள்) சொல்லித் தரேல்ல. 

இராவணன், அந்த ரெடிமேட் பாடி வீணையை மீட்டிக் கொண்டே, சாமகானம் பாடினான். அதுக்குப்பிறகு, "சம்" பாடி சரண்டர் என்டாகிட்டுது. 

சாமகானம் பாடினான் எண்டு தான் சமயப்புத்தகத்தில போட்டிருக்கு, என்ன பாட்டுப் பாடினான் எண்டு போடேல்ல யுவர் ஆனார். அதால அதுக்கெல்லாம் ரெபரன்ஸ் குடுக்க முடியாது. பாட்டைக் கேட்டு, சிவனும், உமையும் இராவணனை மன்னிச்சு விட்ட கதை உங்களுக்குத் தெரியும். சில புத்தகத்தில சிவனே, இராவணா, எம்மைப் போற்றி சாமகானம் பாடு எண்டு கேட்டதாயும் இருக்கு. கடவுளுக்கு தன்னடக்கம் வேணும் எண்டதுக்காக அந்தப் பராவை நான் எடிட் பண்ணிபோட்டன் பாருங்கோ! 

ஆனா சாமகானம் காம்போதி ராகத்தில பாடினான். காம்போதி ராகம் துன்பங்களை நீக்க வல்லது. நோய் நீக்கி! தலை சுற்றல், வாந்தி,மயக்கம், பித்து முதலிய நோய்களை நீக்க வல்லது. (பேசாம பாட்டப் பாடி வைத்தியம் பாக்கலாமே, லூசுகள் இருந்து டொக்ட்ருக்கு படிக்குதுகள்) கருணை, இரக்கம், தயவு தாட்சண்ணியம் இதெல்லாம் வர வைக்கும்.இரக்கம் வருமெண்டு தெரிஞ்சு தான் ஓ.எல் பிரக்டிகல் சோதினைக்கு இந்த ராகத்தில, “சஞ்சத வரனா” படிச்சுக் காட்டினேன்., டீச்சர் ரொம்ப இறங்கி...இறங்கி...கதிரையால “இறங்கி” வந்து, காதைத் திருகி, இனிமேல்ப் பாட்டுப் படிப்பியா...படிப்பியா எண்டு கேட்டுக் கொண்டே ரண்டு செவிட்டில விட்டவா. 

இதைத் தமிழில செம்பாலை எண்டு சொல்லுவம். ஓம், மேற்செம்பாலை கல்யாணி, அரும்பாலை கரகரப்பிரியா. யதுகுலகாம்போதி காம்போதிட அண்ணா. அதாவது ஹரிகாம்போதிட பிள்ளையள் தான் யதுகுலகாம்போதியும், காம்போதியும். அண்ணன், யதுகுல காம்போதிய விட்டிட்டு ஏன் காம்போதிய பற்றி எழுதிறன் எண்டு கேக்கப்டாது. கேட்டால் அதுக்குப் பதில், நான் சாதி பாக்கிறேல்ல. ஓம் அது யது குலத்து ஆக்கள் பாடுற இராகமாம். அதால சாதியில்லாத ராகத்தப்பற்றி எழுதிறன்.

காம்போதி ராகத்தைப் பற்றி ஆளமாச் சொல்லுரதுக்ககத் தான் மேலே இந்தச் சாமகானக் கதை. காம்போதி இராகம், 78மேளகர்த்தா இராங்களில,28 வது தாய் ராகம் ஹரிகாம்போதின்ட இளவல் இராகம். ஆரோகணம் : ச ரி க ம ப த அவரோகணம் : நி த ப ம க ரி ச சட்ஜம், பஞ்சம், சதுச்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், சதுசுருதி தைவதம், கைசிகி நிஷாதம். பாத்தாலே தெரியுது சாடவ சம்பூரண ராகம். அதுதான் ஹை ஒக்டேனில பாடும் போது ஆறு, சுரத் தானங்களும் கீழ்ஸ்தாயி பாடும் போது ஏழு சுரத்தானங்களையும் பிடிக்கும். ஆரோகணத்தில் நிஷாதம் வராது. அந்த ஏழுல ஆறு தான் வருது என்டேனே, மிஸ்சாகிற ஸ்தானம் “நி”-நிஷாதம். அதால இது ஒரு வர்ஜ ராகம். வர்ஜம் என்றால் இல்லாம இருக்கிறது என்று வடமொழியில் பொருள். 

உதுக்கெல்லாம் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாரங்க தேவரை உதைச்சால் சரிவரும். சாரங்க தேவர் யாரென்று தேடிப் பாத்தியாளண்டா நான் என்ன சொல்லுறன் எண்டு விளங்கும். இவ்வளாவு இரக்கமா இருக்கிற ராகம் எண்டதால் இது ஒரு ஆண்பால் இராகம். (ஆமா இராகங்களுக்கு பால் இருக்கு) ஹிந்துஸ்தானி இசையில இதை கமாஜ் எண்டும், இங்கிலிசுக்காரர் இதை செலியூஸ் எண்டும் சொல்லுவினம். தக்கராகம் எண்டும் தமிழில சொல்லுவம். “Quintessence of the scriptures” எண்டு இந்த ராகத்தை இங்கிலிசுக்காரர் விழிப்பினம்.அதாவது வேதங்களின் இனிய சாராம்சம் எண்டு பொருள்படும். 

றிக் வேதம் இருக்கெல்லோ, அதிண்ட எளிமையான பாட்டுக்களை எல்லாம் சாம வேதம் எண்டு தனியாப் பிரிச்சீச்சினம். பிரிச்சுப் போட்டு அதின்ட உன்னதமான இசையை சாம கானம் எண்டிச்சினம். ஆனா றிக் வேதத்திண்ட எட்டவது அத்தியாயத்தில, சாமகானம் பாடும் போது நரி ஊளையிடுற மாதிரி இருக்கெண்டு யாரோ ஒரு கிரேட்டஸ்ட் தவசீலர் எழுதி இருக்கிறேர். (இதுக்குத் தான் சொல்லுறது அதுகளை எல்லாம் நம்பாதிங்கோ எண்டு).

சொம்மா, பழைய நோட்ஸ் கொப்பிய பாடமாக்கீட்டு கதை அலம்பினா நாங்க எப்பிடி ராகங் கண்டு பிடிப்பமுன்னு கேக்கிறது காதில விழுது. த்தோ வர்றேன்... காளமேகத்தாரை தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு, காளமேகப் புலவர் சிண்டு முடிஞ்சு விடுறதில பலே கெட்டி. அவர் ஒரு வெண்பாப் பாட்டுப் பாடினார். சிவன் பேமிலியை ஒரு நோய்வாய்ப்பட்ட குடும்பம் எண்டு சொல்லி. 

 "வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம் பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! – ஓதக்கேள்! வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார் எந்தவினை தீர்ப்பார் இவர்? நடம் – முடம் – திடம் – சடை"

அதாவது சிவன் காலைத் தூக்கிக் கொண்டி நிக்கிறாராம். அவருக்கு காலில வாதமாம். திருமால் தண்ணிக்க கிடக்கிறாராம், அதால அவருக்கு டயபாட்டீஸ் ஆம். தண்ணிக்க கிடந்தா சலதோஷம் எல்லா வரோணும். டயபாட்டிஸ் எப்பிடி? ஒருவேளை அந்தத் தண்ணியோ?! இருக்கும். அப்ப டயனிலும், மெட்போமினும் வாங்கிக் குடுங்கப்பா! பிள்ளையாருக்கு பெரிய வண்டியாம். அதுதானே அருகம்புல்லு மாலை போடுறிங்களே, வயிறு இன்னுமா குறையேலை? யாருக்கு கதை விடுறியள். அருகம்புல்லாம். வயிறு குறையுதாம். அந்தாளும் எலியுமா சேர்ந்து சாப்பிட்ட மோதகக் கணக்குக்கு எவ்வளவு இன்சுலின் போட்டாலும் சமப்படாதாம், அதில அருகம்புல்லாம். இதான் காளமேகம் எழுதின பாட்டு. 

கும்மிப்பாட்டு, குலவைப்பாட்டு மாதிரி, இது நோய்ப் ஒரு பாட்டு, இதை அப்பிடியே கொப்பி அடிச்சு,பாப விநாசம் முதலியார் ஒரு பாட்டு இயற்றி இருக்கிறேர். இவருக்கும் பாபநாசம் சிவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அந்தப் பாட்டு காம்போதி இராகத்தில இருக்கும். அதாவது நோய், நோய் நீங்குதல் எல்லாமே காம்போதி இராகத்தில அமைஞ்சிருக்கு. 

"நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல் முடமானதேன் என்று சொல்லுவீரய்யா" எண்டு எடுப்பு இருக்கும் அந்தப்பாட்டில. டீ.என் கிருஷ்ணா பாட அடிக்கடிக் கேட்டிருப்பிங்கள். பின்னே யூ டியூப் வரும். 

இனி லேசா சினிமாப் பாட்டோட கோர்த்து விட்டா,இனி நீங்கள் காம்போதியைப் பிடிச்சிருவிங்கள் என்ன? 

1.அமைதியான நதிக்கரையில் ஓடம் 

2.பழமுதிர்சோலை எனக்காகத் தான்...(இந்தப் பாடலில இல்லாத சந்தோசமா, இயற்கையை மறந்த இன்பமா, இன்னும் புதுசா உங்களுக்கு இந்த ராகத்தைப் பற்றி சொல்லப் போகுது? ) 

3.ஒரு நாள் ஒரு கனவு,அதை மறக்கவும் முடியாது... 
4.சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு... 

5.தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாது... 
6.கண்ணுபடப் போவுதையா சின்ன கவுண்டரு... 
7.பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா!... 
8.நானே நானா , யாரோ தனா?... 
9.வான மழை போலே, புது பாடல்கள்... 
10.என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை?... 
11.கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா... 

இப்ப காம்போதியைப் பற்றி லைட்டா அறிஞ்சிருப்பிங்கள். அடுத்த பதிவில இன்னொரு ராகத்தோட சந்திக்கிறன்.

Comments

Popular posts from this blog

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...