நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு.
இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை.
காலம்- சனி(13.02.2010) மாலை 6.30மணி.
சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார்.
இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன்.
நாடகங்கள் என்றவுடன் வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது.
எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள் நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு காட்சிப்படுத்த மாட்டார்களா என்றிருந்த எனக்கு இது மிகப் பெரும் தாக சாந்தி.இந்த கலைச் சேவையை பேரவாவினால் 'கொழும்பு- கலையிலக்கியப் பேரவை' தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
"இராவணேசன்" என்கிறது மரபு தழுவிய கூத்துருவ நாடகக்கூத்து,மரபைத்தழுவிய ஒரு பரீட்சார்த்த நாடக முயற்சி என்பதால் இப் பெயர் வரவேற்கக் கூடியதே. தனியே கூத்து என்றால் மரபு சார்ந்த எதிர்ப்பையும் , நாடகம் என்றால் அதன் கூத்துருவையும் நிராகரிக்க வேண்டி வந்திருக்கும், இன்றைய காலத்திட்கேற்ப இரண்டையும் இணைத்து தந்திருக்கிறார்கள். நாடகத்துக்கு உதவி நெறியாள்கை விமல் ராஜ் அவர்கள்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவோடு தொடங்கப்பட்டது.1960 களில் பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களைக் கொண்டு அரங்கடப்பட்ட இந்நாடகம், இன்று சுமார் 45வருடங்களின் பின்னர் எம்மவர் பார்வைக்காக, காலமாற்றத்தோடு புரையோடி, உருத்திருந்தி காட்சிப்படுத்தப்பட்டது.
மேடை நாடகங்களைப் பொறுத்த மட்டில் அவற்றின் த்திரத்தன்மையை காட்டக் கூடியவை, அவை தங்கியிருக்கும் மேடை,களரி,அரங்கு போன்ற மக்கள் சூழ் அமைப்பேயாகும்;இருந்த போதிலும் இவை யாவற்றையும் பொருட்படுத்தாது ஒரு எளிமையான அரங்கில், விருப்பம் நிறைந்த பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு, குறுகிய இடப்பரப்புக்குள்ளாகவே ஆடல்கள்,பாடல்கள், போர்க்காட்சிகள், துரித அரங்க மாற்றங்கள் யாவற்றையும் மட்டக்களப்பிலே இருந்து குழுத்தாங்கி வந்து செயல்புயலாக்கி விட்டார்கள்.
இந்த இடப்பற்றாக்குறை அரங்கம் ஐரோப்பிய அரங்கின் தாக்கத்தைத் தந்தது உண்மை ! முதற்கண் அந்த திருப்தியான அர்ப்பனத்திட்கு நன்றிகள். உள்ளடக்க நிலையிலும் சமகால அரங்கப் போக்கில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக்கொண்டு இருப்பதினாலும் விமர்சனத்துக்குரிய நல்ல நாடகம் என்ற வகையில் இதனைப் பற்றி எழுத முற்படுகிறேன். மேடையமைப்பை திருமதி .காஞ்சனா அவர்கள் நிர்வகித்திருந்தார்.
இந்த இடப்பற்றாக்குறை அரங்கம் ஐரோப்பிய அரங்கின் தாக்கத்தைத் தந்தது உண்மை ! முதற்கண் அந்த திருப்தியான அர்ப்பனத்திட்கு நன்றிகள். உள்ளடக்க நிலையிலும் சமகால அரங்கப் போக்கில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக்கொண்டு இருப்பதினாலும் விமர்சனத்துக்குரிய நல்ல நாடகம் என்ற வகையில் இதனைப் பற்றி எழுத முற்படுகிறேன். மேடையமைப்பை திருமதி .காஞ்சனா அவர்கள் நிர்வகித்திருந்தார்.
இந்நாடகம்,
# பழங்கூத்தை புத்தாக்கம் செய்து மரபியல் நெறிகளை சேர்த்துக்கொண்டமை,
# கூத்துருவ நாடகம் என்ற சட்டத்துக்குள் நின்று நவீன சிந்தனைப் பாங்கில் உள்ளீட்டை அமைத்துக்கொண்டமை,
# காப்பியப் பொருளை சமகாலத்து மக்களின் உணர்வுக்குள் கொணர்ந்தமை போன்ற ரீதியில் முதன்மை பெறுகிறது.
தமிழர்களின் மரபு வழிப்பட்ட தேசிய வடிவம் கூத்து என்பதில் எவ்வித ஐயமும் இல்லை, இந்த ஒரு தேசியம் என்கிற விடயத்தை நாடக அரங்காக காட்சிப்படுத்தியமையும், அதனுடன் பிரதேச மரபை இணைத்து வடமோடியாடலாக அமைத்துக் கொண்டமையும் வலிமையான விடயம்.
அங்கு, கட்டியமுரைத்தல், பாத்திர அறிமுகம் போன்றவற்றை எடுத்தும், கூத்தின் யாப்பு என்று கூறக்கூடிய காப்பு ,மங்கலம் போன்றவற்றை விடுத்தும், நாடக; கூத்து முறைக்குள் நவீனத்தை சொருகி இருந்தார்கள். கட்டியக் காரர் அதாவது கதை சொல்லி சூத்திர தாரியைப்போல் நாடகத்தின் கதைப்போக்கை எடுத்தியம்புகிற பாணி கிரேக்க 'ஹோரசின்' சாயல். இவ்வுத்தி எமது நாடகக் கலைக்கு புதிது.
இசையைப் பொருத்தமட்டில் மரபுக் கருவிகளே பெரும்பாலும் பாவிக்கப் பட்டன, எனினும் ஹார்மோனியம், வயலின்(சரஸ்வதி) போன்றவையும் பயன்படுத்தப்பட்டமை குறிப்படித்தக்கது. பம்பை, தபேலா ( வேணுதாஸ்) மத்தளம்,உடுக்கை, சிம்பல்,( பேரா.மௌனகுரு) மற்றும் ஹார்மோனியம்(ஐரோப்பிய நாடகக்கலையில் பாவிக்கப்படுவது)( ரோஜின் ) யுத்தக் குறியீடான போர் முரசை மட்டும் அண்ணாவியார் உபயோகித்தமை, இளஞ்சந்ததியிடம் போர் தவறு என்கிறதயுணர்த்துவதாகப் பட்டது, இதுவும் நவீன படிமக் குறியீடே!
நாடக வெற்றியில் இன்னுமொரு பங்களிப்பு பாத்திரப் பொருத்தமும் நடிப்பும். இலக்கியத்தின் பாத்திரங்களை ஒப்பனையிலும், உருவகத்திரும் அந்த பிரதேச வாரியான பாங்கிட்கமைய மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இராவணன், மண்டோதரி, கும்பகர்ணன், இராகவன், லக்குமணன்,அங்கதன், இந்திரசித்து,அனுமன், நீலன்.. பாத்திரங்களோடு பௌதீக அமைப்பும் எதுவாயிருந்தது. தனிப்பட்ட ரீதியில் பாத்திரங்களை விமர்சிக்கப் போகையில் நடிகர்கள் அனைவரும் ஓரளவு இசையுடன் பாடக்கூடியவர்களாயும், ஜதியில் ஆடக் கூடியவர்களாயுமிருந்தது, நுணுக்கம்!
அரங்கு நிறைந்த பார்வையாளர்கள்.ஒரு கட்டத்தில் திறந்த வெளியரங்கில் அரங்காடுபவர்களுக்கு மிகக் கிட்டவாகவே பாய் போடப்பட்டு அதிலும் நிறைந்த ரசிகப் பெருமக்கள். பெரும்பாலும் குழந்தைகள்,பள்ளி மாணவர்களைக் காண முடிந்தது. கூடவே அவர்கள் குதூகலப் படுவதையும்.
அரங்காடலுக்கு முந்தியதாக நாடகப் பாத்திரங்கள் சிலரை அரிதார ஒப்பனைகண்டதும் ஒரு குழந்தையைப் போல மனம் குதூகலிக்கத்தொடங்கி விட்டது.நாடகம் தொடங்கு முன் கலைஞர்களின் மும்மொழியிலுமான அறிமுகம்,பின் இலங்கையின் நவீன சிங்கள நாடகத்துறையின் பிதாமகர்களில் ஒருவரான திரு .பராக்கிரம நிரிஎல்ல அவர்களின் அறிமுகஉரை.
தொடர்ந்து பேராசிரியர் மௌனகுரு அவர்கள் மட்டக்களப்புக் கூத்தை நவீன நாடக அரங்கிற்குள் கொண்டு வந்தவர், தன்னை ஒரு எழுத்துரு,ஆடற்பயிட்சி,ஒருங்கிணைப்பு,தயாரிப்பு,நெறியாள்கை எல்லாமும் சார்ந்த அண்ணாவியாராக இன்றைக்கு நிலைப்படுத்திக்கொண்டார்.
அழிந்து வரும் நம் இயல்பியல் கூத்துகள்,நாடகங்கள்,நாட்டுப்புற இசைகள், இசைக்கருவிகள் யாவும் ஆவணப்படும் வகையில் பல நூறு இறுவட்டுக்களை ஆவணப்படுத்தி இவற்றுக்கெல்லாம் நிலைப்பாடு தேடித்தந்தவர். பேராசிரியர். சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவுகளோடு இற்றைக்கு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் இதே நாடகத்தில் 'இராவணன்' பாத்திரத்தில் தாம் தமது 22வது வயதில் நடித்தமையையும் நினைவு படுத்திக் கொண்டார். அதே இளமைத்துடிப்புடன் போர் முரசை உரக்க முழங்கிய போது, கலைகளை வாழவைக்கும் கலைஞன் என்றும் இதே இளமையுடன் வாழ வேண்டும் என்று மனது சொல்லிக் கொண்டது.
ஒரு நாடகத்தின் பாத்திர வடிவமைப்பிட்கும் அதன் இசைவுக்கும் ஒப்பனை மிகவும் இன்றியமையத ஒன்றாகும். இப்பின்னணியிலேயே ஒப்பனைக்கலை பற்றி அணுகவேண்டும். நாடகத்தில் இருவகைப்பட்ட ஒப்பனைக் கலைத்திறன் வெளிப்படுகிறது. முதல் படியாக நாடகக் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தல். இரண்டாவது படியாக நாடக அரங்கினை அழகுபடுத்துதல் என இருபடிகளில் ஒப்பனை அமைகிறது.
மரபுவழி நாட்டுக்கூத்துக்கள் பெரும்பாலும் ஊர்களிலே வட்டக் களரிகளிலே திறந்த வெளி அரங்கில் இரவிரவாக அதிகாலை வரை நடைபெறும் . ஒளி அமைப்பு வசதிகள் குறைந்த அந்தக் காலத்தில் நடிகர்களின் ஒப்பனை துலக்கமாகத் தெரியும் பொருட்டு மிகையாக இருக்கும். இன்று அப்படியல்ல; இயல்பாய் இருந்தது. . நவீன நாடகங்களில் குறியீட்டு முறையிலான ஓப்பனைகளைச் செய்து பாத்திரத்தின் குணாம்சங்களே மிகைப்படுத்திக் காட்டப்பட்டது. .
ஒப்பனையில் மரபு ரீதியாக 'வடமோடிக் கூத்தின்' ஒப்பனைகளை நோக்கினால், அரச பாத்திரங்களுக்கு 'சகிட முடி' என்கிற ஆபரணம் அணிவிக்கப்படும்.அது, கூம்பிய கோபுரம் போன்ற அமைப்புடையது. அழகிய பெரிய வேலைப்பாடுகள் கிரீடத்தைத் தாங்கி காணப்படும். பாரம் குறைந்த மரத்தைக் குடைந்தே இதனைச் செய்வர். மினுங்கல் கடதாசிகளும்,வர்ணங்களும் பூசப்பட்டிருக்கும், பார்ப்பதற்கும் மிகவும் கவர்ச்சியாகவும் இது அமைந்திருக்கும். தலையை விட அளவில் பெரிதாய் இருக்கும் அக் கிரீடத்தை தலையிலே துணியைச் சுற்றி அதன்மேல் அசையாதவாறு கட்டிவிடுவர். இது தான் மரபு. ஆனால் இங்கு துணியினால் செய்யப்பட்ட ஆபரணங்களையே அரச வம்சத்தார் அணிந்திருந்தனர்.
வடமோடியில்(மட்டக்களப்பு) அரசர்களுக்கு இடுப்பில் அணியப்படுவது “கரப்புடை” எனப்படும்.இங்கு கரை வைத்த காலுடையே அணியப்பட்டிருந்தது. இடுப்பிலிருந்து முழங்கால் வரைக்கும் பிரம்பாலான வட்டங்கள் கட்டப்படும். இங்கு கழுத்தணியில் மட்டுமே இது உபயோகிக்கப் பட்டது. முழுவதுமாக கூத்தை அடிப்படையாகக் கொண்டதல்லாதது என்பதினால் குறை கூறுவதற்கில்லை. இங்கு ஒப்பனையை மேற்கொண்டிருந்தவர், ஜனகரளிய குழுவின் கைதேர்ந்த ஒப்பனைக் கலைஞர், திரு . பாலித அபேலால் அவர்கள்.
இன்று இங்கு நாடகக் கலையில் "பார்சி" நாடக மரபு ஒப்பனையே கடை பிடிக்கப் பட்டது. நவீன நாடகங்களில் இம்முறையே இப்போது கடைபிடிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
நாடக ஆரம்பத்தில், அத்தனை குழு நபர்களையும் அரங்கத்தில் வட்டமாக நிறுத்தி வைத்து,ஆட்டத்தின் போது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கக் கூடிய அசைவுப் பயிற்சியையும், மனதின் திடத்திட்கு 'ஓம்' என்கிற ஆழ்ந்த உச்சரிப்பையும்பார்வையாளர்களுக்கு முன்பாகவே நிகழ்த்தி,ஒவ்வொரு மாணாக்கருக்கும் கைலாகு கொடுத்து, அண்ணாவியாருக்கும் மாணாக்கருக்குமுள்ள பரஸ்பரம் உணர்த்தப்பட்டது.
இது வழமையான மரபு என்கிற போதும்,பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எப்படியிருந்ததோ, எனக்கு கண்ணீர் வரச் செய்கிற நெகிழ்வைத் தந்தது. இந்த மாதிரியான பாரம்பரியங்கள் தாங்கிய செயற்பாடுகள், இளையவர்களுக்கு எதையோ புரியவைக்கிறது மாதிரிக் கிடந்தது. இவை தான் ஒரு நெறி கடந்த கலையின் நீடித்த நிலைக்கு அத்திவாரம். கலை வளர்க்கும் சாதனங்கள்!
இது வழமையான மரபு என்கிற போதும்,பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எப்படியிருந்ததோ, எனக்கு கண்ணீர் வரச் செய்கிற நெகிழ்வைத் தந்தது. இந்த மாதிரியான பாரம்பரியங்கள் தாங்கிய செயற்பாடுகள், இளையவர்களுக்கு எதையோ புரியவைக்கிறது மாதிரிக் கிடந்தது. இவை தான் ஒரு நெறி கடந்த கலையின் நீடித்த நிலைக்கு அத்திவாரம். கலை வளர்க்கும் சாதனங்கள்!
தட்டியினால் ஆன அரங்க மாற்றம், குறிப்பாக சொல்லப்பட வேண்டியதே, இராவண சபையிலே பச்சை வர்ணத்தில் இருந்தமை இலங்காபுரி பசுஞ்சோலை மிக்கது என்று காட்டுவதாயும்; இராகவனது சேனையைக் காட்டும் போது, வெண்தட்டியரங்காகவும் இருந்தது. அதுவே இராகவனது துணையிழந்த சோகத்தைப் பிரதிபலிக்கும் படிமமாயமைந்தது.
தட்டி தாங்கி யுத்த வீரர்களாக இறுதியில் அறிமுகமான நாடகத்தின் அரங்க மாற்றுகையாளர்கள் நிர்மலகாந்தன் , மதிராஜ், திருச்செந்தூரன் , நிராஜ் , கின்ஸ்லி , பேரின்பாகினி , மற்றும் பிரதீப் ஆகியோரே. இவர்களது நடிப்பும் உயர்வானதே.
அடுத்த காட்சி மாறுகையில், மாய்ந்து கிடக்கிற இராவணனது வைரமார்பிலே மண்டோதரி புலம்பியழுகிற காட்சிகளில், அரங்கம் வெண்தட்டியாக மாறுகிறது; சோகத்தின் பிரதிபலிப்பு. துக்கத்தின் வர்ணம் வெள்ளையாகிறது அங்கு;இந்நிலை பெயருகின்ற அரங்க நுட்பம் பார்த்துக்ய்ந்து கிடக்கிற இராவணனது வைரமார்பிலே மண்டோதரி புலம்பியழுகிற காட்சிகளில், அரங்கம் வெண்தட்டியாக மாறுகிறது; சோகத்தின் பிரதிபலிப்பு. துக்கத்தின் வர்ணம் வெள்ளையாகிறது அங்கு;இந்நிலை பெயருகின்ற அரங்க நுட்பம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெருவியப்பாயமைந்தது.
கட்டியம் கூறுபவர்கள்(காளிதாஸ் மற்றும் மோகனதாஸ் ) "இராவணேசன்" பெயர் விளக்கமும் ,கூத்தின் நாயகனையும் அறிமுகம் செய்கின்றனர்.மற்றுமொரு கதைசொல்லியான மோகனதாசுக்கு மொழியை விட பம்பை,மத்தளம் போன்ற வார்த்தியங்கள் உச்சக் கட்டக் காட்சிகளின் போது கைகொடுத்தது. போர்க்காட்சிகளில் அவருடைய வேகமான உணர்ச்சிக் குரலும் வார்த்திய வாசிப்பும் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவந்ததென்னமோ உண்மை.
'இராமன் இல்லையென்றால் அவதாரம் இல்லை:இராவணன் இல்லை என்றிருந்திருந்தால் இராமாயணம் இல்லை' என்கிற யதார்த்தக் கட்டியவுரையுடன் நாடகமாரம்பமாகிறது!
இராவணன் என்கிற கம்பீரத்தின் தோற்ற முதல்வாயும், கூத்தின் நாயகனுமகிய திரு. ஜெயசங்கர் ஒப்பனையின் செழிப்போடு ஒரு துரித ஜாதிப்பாடலோடு அறிமுகமாகிறார். ஆரம்பத்திலேயே குரலில் ஒரு விதத் தொய்வு, எதிர்பார்ப்பைக் குறைகின்றது. இராவண கம்பீரம் குறைந்து விட்டது போலக் கொஞ்சம் நெருடல். அன்றைக்கு முன்னம் இரண்டு தடவை பாரம்பரிய முறைப்படி ஒத்திகை நடந்ததும் இதற்கொரு காரணமாயிருக்கலாம்.
அங்கதன்(பிறேம்) , இராவண சபைக்குள் நுழைந்த விதம் யார் முகத்திலும் ஈயாடவில்லை, காப்பியத்தில் அவனது குறும்புத்தனம் அருமையாக விளக்கப் பட்டிருக்கும் இருப்பினும், இராவண அங்கத ஏட்டிக்குப் போட்டியான உரையாடல்கள் அவ்வளவு உணர்ச்சிக்குள் இட்டுச் செல்லவில்லை.
அடுத்து நாடகம் முழுக்க வரக் கூடிய அருமையான பாத்திரம் மண்டோதரி,(சுயானந்தி) ஒவ்வொரு காட்சிகளிலும் சிறப்பான கைதேர்ந்த நடிப்பு, நேர்த்தியான பயிற்சியைக் குறிக்கின்றது. குரலிலும் இனிமை, ஜாதியுடன் இசைந்த பாடலைப் பாடுகையில் ஒரு இடத்தில் தனும் சுருதி பிசகவில்லை, அதுவே பாத்திரத்துக்கு இன்னுமொரு பக்கபலம்.
" போருக்குப் போகாதே மன்னா" என்று இராவணனைத் தடுக்கும் காட்சியிலும், இந்திரசித்து மடிந்து கிடக்கிற காட்சியில் "அம்மா, அம்மா, என்று அழைத்தபடி திரிந்த என் புத்திரன் போர்க்களத்தில் அலறி விழுந்த போது யார் பெயரை உச்சரித்தானோ என்று கதறும் போதும், எனக்குப் பக்கத்திலிருந்த 'பெரிய மனிதர்' ஒருவர் 'உச்சுக் கொட்டிக்' கலங்கியதைக் கண்டேன் ;பாத்திரத்தின் வலிமையது. மண்டோதரியின் ஒப்பனையும், தாயையும், துணைவியையும் ஒரு பாத்திரத்துக்குள் கொணர எடுத்த முயற்சியும், இன்னுங்கூட நாடகம் முடிந்த பின்னும் மண்டோதரி நினைவில் நிற்கிறார்.
இராவணன் இறந்து போன காட்சிகளில் மண்டோதரி புலம்பல் என்ற தனிப்படலமே கம்பராமாயணத்தில் இருக்கிறது, இருப்பினும் அக் காட்சிகளின் நீளம் போதாது ஒரு குறை. சீதையாகட்டும்,பாஞ்சாலியாகட்டும்,கிரேக்கத்தின் ஹெலன் குமாரி ஆகட்டும்பெண்களை வைத்துத் தான் ஆண்கள் போர் செய்கிறார்கள்............ -- மண்டோதரி கூறுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சமகாலத்துக்குப் கச்சிதமாகப் பொருந்துகிறது.
இராவணன் இறந்து போன காட்சிகளில் மண்டோதரி புலம்பல் என்ற தனிப்படலமே கம்பராமாயணத்தில் இருக்கிறது, இருப்பினும் அக் காட்சிகளின் நீளம் போதாது ஒரு குறை. சீதையாகட்டும்,பாஞ்சாலியாகட்டும்,கிரேக்கத்தின் ஹெலன் குமாரி ஆகட்டும்பெண்களை வைத்துத் தான் ஆண்கள் போர் செய்கிறார்கள்............ -- மண்டோதரி கூறுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சமகாலத்துக்குப் கச்சிதமாகப் பொருந்துகிறது.
கும்பகர்ணன்,(விமல் ராஜ்) இன்னுமொரு சிறப்பான நடிகன். ஆடை ஆபரணங்களும், ஒப்பனையும் சிறப்பு. கையில் 'கதை' தவிர்த்து வேல் வைத்திருந்தமையின் படிமம் இறுதிவரைக்கும் புரியவேயில்லை. போருக்குப் புறப்பட்டெழும் போததன் நாட்டியம், தீவிர பயிற்சியும்,தேர்ச்சியும் இருந்திருக்க வேண்டும் அவையே நடுக்குகிறது;அத்தனை ஆர்ப்பாட்டம். சிறு பாத்திரம் தான் என்றாலும் அருமை.
அடுத்து இந்திரசித்து,(தவராஜா) இராவணனின் வீர புதல்வன் என்கிற கம்பீரம் எல்லா இடத்திலும் குறைவு. போர்க்களத்தில் விபீடனச்சிற்றப்பனைக் கண்டு திரும்பிவந்து எடுத்துரைக்கிற காட்சிகளின் முகபாவனையால், அரங்கில் எதிர்பார்ப்பில்லை. அத்தனை மத்திமம்.
இராகவன் (தயாபரன்) அளவான நடிப்பு, இன்று போய் நாளை வா என்று இராமன், சொல்கிற தருவாயில் இராவணனுடைய முகம் அஷ்ட கோணலாக ஒரு தினுசான முகபாவம் காட்டும்; தேர்ச்சி மிக்க நடிப்பது.
சிறிய பாத்திரமேயானாலும் இலக்குவனது ( விவானந்த ராஜா) பாத்திரம் நீண்ட நேரம் மனதில் நிற்கிறது, போராடல்களின் போது கையாண்ட திறமான நாட்டியக் கட்டங்களும் அதன் போததன் இசையும் உயர் ரகம். எனக்கு முன்னால் இருந்த 'சுடு மூஞ்சி' நண்பரொருவரே கையில் தாளம் போடத்தொடங்கி விட்டாரென்றால், பார்வையாளனை எந்தளவுக்கு இசை ஆக்கிரமித்திருக்கென்பதை நீங்களே ஊகித்துவிடுங்கள்.
தேராக வந்த இரு பெண்கள், டிலகஷனா ஆங்கிலத்தில் ஆரம்ப உரை சொன்ன லாவண்யா , தேர்க்குதிரைகள் போலவே துரிதம். ஒரு ஜதியில் அவர்கள் தருகிற விறுவிறுப்பு, முகத்துக்கு முகம் இராகவனும், இராவணேசனும் சந்திக்கிற பொழுதுகளின் உச்சக்கட்டத்தை மெருகூட்டியது.
நாடகத்தில் பொதுவாகவே, இறுதிக் காட்சிகளே அடிக்கோடிட்டுக் காட்டக் கூடியவை. அந்த யுத்தக் காட்சிகள் ஒவ்வொருவரையும் இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்ததென்றால் மிகையாகாது, யுத்த பேரிகைகளின் முழக்கமும், கொம்பு ஊதப்படுவதும், தட்டி தாங்கிய போர் வீரர்கள் அரங்கத்தை மாற்றியமைப்பதும், "'ஹோ"' என்கிற பேரிரைச்சலும் ஆயிரம் யுத்தக்களங்களைக் கண்ட தமிழர் நமக்கு அன்றைக்கும் புத்திதாகத் தானிருந்தது. ஒவ்வொரு அரங்காடட்காரர்களினதும் தீவிர உழைப்பு அந்த இறுதி நொடிகளிலேயே புலப்பட்டுப் போக, சுமார் பத்து நிமிடங்கள் அவை யுத்த பூமியாகிவிட்டது, அரங்கினுள் நுழைந்து, எழுந்து, சென்று ஜய கோஷம் போடவேண்டும் போல் உணர்ச்சி வசப்பட்டிருந்தேன் . (யாரும் பார்த்திருக்கா விட்டால் அதைதான் செய்திருப்பேன். )யுத்தத்தின் போததன், இராவணேசனின் மாயப்படையால் தான் மறைக்கப் படுதலும் ,வீரர்கள் தேடித் திணறுகின்ற காட்சியும், அம்புகளின் மலைக்குள் இராகவனை மறைந்து விடுகிற சாகசமும், இறுதியில் இராகவனது முகம் பார்த்தபடி இராவணன் நிலத்தில் வீழ்ந்து மாய்ந்து போகிறதும், உண்மையிலேயே உணர்ச்சிமயமான தருணங்கள்.
"வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய,
தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா, நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா"
சமகால நிகழ்வு எதையோ கண்முன் கொணர்ந்து நிறுத்தின மாதிரிக்கும் ஒரு சிலேடை எண்ணம்; நடிப்பின் வழியும் காட்சியின் தாக்கமும் நாடகம் சற்றைக்குள் முடிந்து விட்டதே என்று சலிப்பாகப் போய் விட்டது, இன்னும் விடிய விடிய பாரம்பரிய முறையில் அரங்காடியிருந்தால் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் போலத்தோணியது.
மேடைக்குப் பின் செயற்பட்டவர்களைப் பற்றிக் கூறவேண்டும், உடை, மேடை வடிவமைப்பு, மேடைப் பொருட்கள் போன்றவற்றை அழகிய முறையில் ஆவன செய்திருந்தார் திருமதி. வாசுகி.ஜெய்சங்கர்.
காட்சி மாற்றங்களின் போததன் இசையமைப்பு, பாடல்களில் தொனித்த தெளிவும், இயல்பும் நாடகத்தோடு ஒன்றிவிட வைத்தது,மரபு தழுவிய இசையை கூத்துருவ நாடகம் முழுதுமாக ,நுணுக்கமாகத்தந்திருந்த திரு.பிரதீபன் அவர்களை பாராட்டுக்கள் சென்றடைகின்றது. இசையின் மற்றுமொரு அங்கமான , பின்னணிப் பாடகிகளை பின்னிணைப்பாக சொல்லி விடுவதில் எனக்கு உசிதம் இல்லை, குறிப்பாக செல்வி. கீதா அவர்களின் குரல், மண்டோதரியின் புலம்பல்க்காட்சிகளில்,
'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! '
சோகத்தைப் பிழிகிறது போன்ற கணீர் குரல், யாரைத்தான் கலங்கடித்திராது?,
மேழும் அபிராமி, சிவகௌரி, துஷ்யந்தி, ரூபினா, ஜெகதா, இவர்களதும் குழுயிசைப்பு, இவர்கள் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரி பட்டதாரி மாணவிகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
அதர்மம் தோற்க, தர்மம் வென்றதென்ரும், பெண்ணால் கெட்டான் இராவணேசன், உயிர்களைப் பிறப்பித்துப் போடும் பெண்கள் போர் விரும்பாதவர்கள். என்கிறது போன்ற பல வியாபகமான இறுதிக்கருதுகோளகளையும் பார்வையாளனை சுமந்து செல்லவைத்தது, நாடகம்.
இவ்வாறாக இரண்டு மணி நேரம் பார்வையாளனைக் கட்டிப் போட்டிருந்த கூத்துருவ நாடகம், இளந்தலை முறையினருக்குப் புதிது என்ற போதிலும் அதன் தார்ப்பரியத்தையும் மரபு தழுவிய சாடல்களையும் அதனது உத்வேகப் போக்குடன் கைப்பற்றிக்கொண்டோம். இதுவே ஒரு சிறப்பான கலைப் படைப்பின் உச்சக்கட்டமும் கூட.
உண்மையில் நலிந்து போகின்ற இவ்வாறான கலைகளை புதிய போக்கில், இளஞ்சமுதாயத்தினருக்கு இட்டுக்காட்டுவதும், ஊக்குவிப்பதுமே இன்றைய முன் சமுதாயம் செய்ய வேண்டிய தலையாய கடமையாகும். ஈழத்தமிழர்களின் 'முது சோம்' என்ற வகையில் கூத்துக்கள் அங்கீகரிக்கப் படுகின்றன. கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய சிந்தனையாக்கத்தின் விளைவு இது என்று கூடச் சொல்லலாம். எனவே எமக்கான தனித்துவங்களையும், மரபுகளையும் பேணுகின்ற வகையிலும், எதிர்வினைகளின் அழகியல் முனைப்பிலிருந்து விடுபட்டுத் தெளிவதற்கும் நாம் இவ்வாறான கலைகளை செம்மையாக ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு இதன் தேவை கட்டாயம் என்றும் கூறலாம்.
நாடகத்தோடையே ஒன்றிப் போய் விட்டதால் இறங்க வேண்டிய தரிப்பிடம் தாண்டி இறங்கி விட்டு நடந்தே வீடு போய்ச் சேர்ந்தேன் என்றால் நம்புவீர்களோ என்னமோ? :)
-நிலா -
04.30.A.M
எனது அன்பையும் தோழமையையும் மெளனகுரு சேருக்குச் சொல்க.
ReplyDeleteஅத்துடன்..இதனைப் பதிவிலிட்ட தங்களுக்கும் 10000 நன்றிகள்.
வாழ்க. நின் கலைப்பணி வாழிய வாழியவே.
உண்மையில் நலிந்து போகின்ற இவ்வாறான கலைகளை புதிய போக்கில், இளஞ்சமுதாயத்தினருக்கு இட்டுக் காட்டுவதும், ஊக்குவிப்பதுமே இன்றைய முன் சமுதாயம் செய்ய வேண்டிய தலையாய கடமையாகும்” சரியான கருத்து
ReplyDeleteயம்மாடி ... என்ன கொடுமை இது? நீங்கள ஒரு ஜெனரேசன் முன்னுக்கு போட்டிங்களா? இல்லை நாங்கள் போட்டமா எண்டு குழப்பமா இருக்கு.. முந்தி ( 95 க்கு முன் ) திருவிழாக்களில பொடுற கூத்து சும்மா அவங்கள் காமெடியா ஆடிப்பாடறதுக்காகவும் பலர்பலரா உடுபபுபோட்டு இரக்கிறததுக்காகவும் பாக்கிற.. இப்ப சினிமா தொலைக்கா்ட்சி இதுகளிண்ட ஆதிக்கத்தால கூத்தையெல்லாம் மறந்திட்டம்.. உங்களைப்பாக்க அதிசயமாயும் வியப்பாயுமம் இருக்கு.. ஹம்ம்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமுன்பே இராவணேசன் நாடகத்தைப் பேரா.மௌனகுரு அவர்கள் வழங்கிய ஒளிப்பேழை வழியாகக் கண்டுள்ளேன்.கிரேக்கர்களுக்கு இணையான நாடகப் பின்புலம் நமக்கு இருந்தும் இடையில் ஒரு தொய்வு இருந்துள்ளது. அத்தொய்வு ஈழத்தமிழர்களால் சரிசெய்யப்பட்டுள்ளது என்று உணர்ந்தேன்.
நாங்கள் இலங்கை வந்து கண்ட உணர்வைத் தங்கள் பதிவு உண்டாக்கியது.பேராசிரியர் மௌனகுரு ஐயாவுக்கு என் வணக்கம் கூறவும்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
வணக்கம்,
ReplyDeleteதமிழ் ஒபெரா என்னும் ஓர் வேள்வியை மௌனகுரு ஆசானின் உதவியுடன் நள்ளிரவுச்சூரியன் நாட்டில் 2009 ல் ஆரம்பித்துள்ளேன்.கூத்தின் சீர்படுத்தியவடிவமே தமிழ் ஓபெரா.
உலகம் வெப்பமாதல் என்னும் கருவில் முதாலாவது தமிழ் ஒபெரா
21 வைகாசி 2010ல் வெள்ளி மாலை 6 மணிக்கு நோர்வே ஒபெராஅரங்கில் நடைபெறவுள்ளது.
உலகம் முழுவதும் பரந்துள்ள நாம் இனியாவது எமது தோட்டத்துமல்லிகையும் மணக்கும் என்போம்!
அன்புடன்,
வாசுகி ஜெயபாலன்
my contact email vasukijaya@yahoo.com
ReplyDeleteவணக்கம் தர்ஷாயணீ,
ReplyDeleteமிகவும் அழகான இரசனைக் குறிப்பு.
சிரத்தையுடன் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். மார்ச் மாதம் 24ஆம் திகதி எல்பின்ஸ்டன் அரங்கில் ”பாஸ்கு” (கிறிஸ்துவின் பாடுகள்)நாடகம், கொழும்பு திருமறைக் கலாமன்றத்தினால் அரங்கேற்றப் பட உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இராவணேசன் நல்லதொரு படைப்பு
ReplyDelete@வாசுகி ஜெயபாலன்,
ReplyDeleteவணக்கம் !
பேராசிரியர் மௌனகுரு தமிழ் ஒபேரா பற்றி என்னுடன் கதைத்தார்,இதுபற்றி கலந்துரையாடலும் பின்னைய காலங்களில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ந்தது, தன்னுடைய அனுபவங்களையும் உங்களுடனான நாடக அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.நிகழ்வின் சில ஒளிப்பதிவுகளையும் காணக் கூடியவாறு இருந்தது, அருமையான முயற்சி.
மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி !
@ புல்லட் அண்ணா,
ReplyDeleteஉங்களுடைய கருத்தை படித்துவிட்டு, உங்களின் மேல் தனி அபிப்பிராயம் எட்பட்டுள்ளதாயும் உங்களைச் சந்திக்க விரும்புவதாயும் பேரா மௌனகுரு சொல்லிக் கொண்டிருந்தார் :)
Ravanesan nadakam sirantha oru kalaipadaippu.
ReplyDelete