Skip to main content

நான் ஒரு பேசப்படும் பொருள்




மரங்கள் அடர்ந்த காட்டுச் செடிகள் உதிர்ந்து உலருவதைப் போல ஒவ்வொரு இதழாக, உதிரி உதிரியாக நினைவுகளின் அடிக்குறிப்புகள் முகிழ்ந்து எழுந்துகொண்டிருந்தது. எனக்கு நினைவுகளில் இருந்து மீண்டு கொள்கிற தோரணை அல்லது அந்த வித்தை அடிப்படையிலேயே தெரியவில்லை. எனக்கு முன்னால் போகிற நிழல் என்னை விட ஒரு படி முன்னால் போகிறது என்பதை மட்டும் என்னால் உட்கார்ந்து யோசிக்கக் கூடிய தெளிவு இருக்கிறது. மற்றும் படி நான் மிகுந்த குழப்பமான மன நிலையில் இருந்தேன் போலும்.

 நான் பழகி வாழ்ந்த தெருக்களில் என்னைக் கவனிப்பவர்கள் குறைந்து போனதையிட்டு ஒருவித மகிழ்ச்சி. இதைத்தான் காலம் பதில் சொல்லும் என்று பலர்  சொல்லுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பேசப்பட்ட காலம் முடிந்து என்னைப் பற்றிப் பேசப்படுகிற காலம் எழுந்த இந்த கூர்ப்பு மாற்றத்தை நான் கொண்டாடுவதா இல்லையா என்றும் தெரியவில்லை. நான் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஒரு வணிகப் பத்திரிக்கையின் கிசுகிசுக்களுக்கு ஒப்ப நான் ஒவ்வொருவர் காதுகளிலும் கோலாகலமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கு ஆதரவுகளும் அதிகம், என் பக்கம் நியாயமும் இருக்கிறதாம். 

பேசப்படல், புரியப்படல், உணர்வுகளைக் கடந்து போதல்,பொருள் நிலைவாதக் கொள்கை போல தூக்கி நிறுத்தப் படல், அந்தத்தை அறுத்து அடியோடு வேர்பிடுங்கி விடல் இந்த மாதிரியான எல்லா வார்த்தைகளுக்கும் எனக்கு அர்த்தம் தெரியா விட்டாலும், சாடையான புரிதல் அர்த்தங்கள் எனக்குள் எழுகிறது.என்னைப் பற்றி நிறையப் பேசுவதற்குப் பொருள் புதைந்து கிடக்கிறது என்கிற ஒரு வகை உத்தரவதத்தன்மை என்னை நாளை வரை வாழவைக்கும் பிரயத்தனத்தைச் செய்துகொண்டே  இருக்கிறது. ஆனபோதிலும், நாளைக்கும் என்பற்றி பேசப்பாடல் நிகழும் என்கிறதை நினைக்கையில் நான், ஒரு சடப் பொருளாகிவிட்ட கதை என்னை எது பற்றியுமே சிந்திக்கவைப்பதில்லை.நான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன், எது பற்றி என்பதுவும், எதனால் என்பதுவும் எனக்கும் தெரிந்தும், நான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

   பாலிய வயதில்  ஒரு போதும் நான் அல்லது நீங்கள் கூட ஒரு பேசப்படும் ஒரு பொருளாக மாறுதல் பற்றி நினைத்துக் கூட பாத்திருக்க மாட்டீர்கள். ஏன் பேசப்படல் நிகழ்வதற்கு ஒரு கணம் முன் கூட ! பேசப்படுகின்ற தருணங்கள் மிகக் கவனிக்கத் தக்கன, ஒரு மனிதனின் அல்லது ஒரு சித்துப் பொருளின் வாணாளில்  அதன் தன்மை நிலைப்பு எத்தகையது என்பது சொல்லுதற்கரியது. ஏனென்றால் அதன் மிச்சம் மிகுந்திருக்கும் ஒவ்வொரு அசைவும்  அது பற்றியே அமையும் என்பது பேசுகிரவர்களுக்கோ, பேசப்படுதலைத் தூண்டியவருக்கோ, பேசப்படும் பொருளுக்கோ தெரிவதில்லை. தெரிகிற ஒவ்வொரு பட்சத்திலும், எங்காவது பற்றிப் பிடித்து சுவருடைத்து கோதுடைத்து முன் தள்ளி வருவதற்கு இருக்கின்ற எல்லா தொளைகளும் அடைக்கப்பட்டு, அவற்றின் தாங்கிக் கயிறுகள் இத்தும் போய் விடும். 

   நான் பேசப்படும் பொருளாகிவிட்டிருக்கிறேன். பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.நிறைய அனுதாபங்களை மாலைக்கும், இரவுக்குமாக சாப்பிடப் போதுமானதாக பையில் சுருட்டி வைத்துக் கொண்டிருக்கிறேன். பேச்சுக்களின் முடிவில் கண்ணீர் அல்லது, உச்சுக்கொட்டுதலை சம்பாரித்துக் கொள்கிறேன். என் எஞ்சிய வாழ்க்கைக்கு இது போதுமானதாக இருக்கும் என்று அவனோ, நானோ, எல்லோருமாகவோ  நினைத்து இப்படியெல்லாம் செய்துவிடவில்லை. ஆனால் பேசும் பொருளாகி விட்டிருக்கிறேன். 

நான் பேசப்படுதலைநேசித்தேன், ஆனால் எதைப்பற்றி பேசப்படல் வேண்டும் என்றும நியாயமானதேர்வொன்றை  வைத்திருந்தேன்.ஆனால் காலத்தின் நிகண்டுகள் அதனை மக்கம் புரட்டிவிட்டன. தேர்ந்தெடுத்துப் பேசு என்கிற நிலை நான் ஏதாவது கட்சிக்குத் தலைவனானதும் தான் வருமென்று நினைக்கிறேன், ஆனால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பேசப்படுதலுக்கும், கிசுகிசுக்கப்படுதளுக்கும், காதுகடிதலுக்கும்,
மீள  ஆராயதலுக்குமானதாக நான் நடந்து கொண்டிருக்கிறேன்.நான் பொதுவில் இருக்கிறேன். நான் என்பது இப்போது என்னதல்ல, எனக்கு என்பதும் என்னதல்ல, ஆகையால் எப்போதும் நான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

    என் துக்கம் , ஏக்கம், ஆசை, ஆலாபனை, தேவை,தெரிவு எல்லாமே பொதுவுடமையாகிவிட்டது. நான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் எனதைத் தீர்மானிக்க முதல் அனைவருக்குமாகத் தெரிகிறது எனது தீர்மானம்.இது என் அபிமானத்தின் ஒரு கீறலா, இல்லை நான் போட்டுக்கொண்ட முள்ளு வேலியின் விரிசலா தெரியவில்லை. என் ஜன்னல்களுக்கு திரையில்லை.

 நான் எந்தப் பொழுதுகளிலும் அந்தரங்கத்தைச் சுவாசிக்கவே இல்லை , ஆனால் அவர்கள் என் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கவும் இல்லை. ஆனால் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கிறது, நியாய தேவன் வடிவில். என்னுடன் பயணிக்கும் தேவமகன் ஈறாக எல்லா நிறுத்தங்களும் அவர்களுக்குத் தெரிகிறது. வாழ்க்கையின் ஏடுகளும், பக்கங்களும் பக்கம் பக்கமாக பொது வலையில் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. நான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பேசப்படும் பொருள் என்னுடையது. பேசம் படும் சம்சம் என்னுடையது. பேசப்படும் இலக்குகள் என்னுடையவை .பேசப் படும் குரல்களும் எனக்கானவை. பேசப்படும் தொனிகளும் எனக்காதரவானவை. பேசப்படும் தீவிரமும் எனக்கே உரித்தானவை. 

ஆனால் நான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன், பொதுவில், என்னையும் தாண்டிய ஒரு ஒளி சம்பந்தமாய், அதே ஒளி இழந்தவளாய். ஆனால் பேசத்தூண்டிய பொருளுக்கும் எனக்கும் எந்தவிதத் தன்னிலைவாதமும் இருந்ததாய்த் தெரியவில்லை. ஏனென்றால் அதுவும் பேசிக் கொண்டே இருக்கிறது, கனவுகளிலும், நினைவுகளிலும், சமயா சமயங்களில் நிர்ப்பந்தத்திலும். நான் ஒரு பேசப்படும் பொருள்.



நிலா -

Comments

  1. ம்ம்ம் நல்லதொரு அலசல் பேசாப்பொருளை பேச விழைந்திருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  2. உன்னைப்பற்றி பேசப்படும் விடயம் பெரிதாக தெரியும் வரைதான் நீ பேசப்படுவதும் பெரிதாக தெரியும் . இது உனக்காக அடுத்தவர்கள் ஒதுக்கிய தருணங்கள் உன்னிப்பாக கவனி ...எல்லாவற்றையும் நீ சொல்லிச்சொல்லி சிரிக்கும் காலம் வரும். Malaviga

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...