இதோ இந்த புத்தன்
போன மாதம் தான் வைகாசியில் வர்ணம் பூசி
வெளிச்சக் கூடுகள் மின்னி
ஏந்து கரத்தில் தீபம் ஏந்தி
தாமரைக் கடவுளனுக்கு
நீலோத்பலம் பிடுங்கி,
சம்பங்கியும்,
பவள மல்லிகையும் சூட்டி,
கண்களை மூடி
மோனத்தின் உச்சியிலிருக்கும்
புத்தன்-
அதோ அன்று தான் பிறந்தான்.
ராஜ கம்பீரத்தில் மிடுக்கில் திரிந்து,
காலத்தின் கோலத்தில் காவி சூடிக் கொண்டவன்.
அதோ அன்று தான் பிறந்தான்..!
அவனது ,கேசங்களும்
தந்தங்களும், அகவன்கூடும்
தங்கப் பேழையுள் தாங்கப்படும் என்றறியாமலேயே-
முக்தியாகிப் போனான்.
புத்தா,
சந்திக்குச் சந்தி,
அரசமரத்துக்கு மரம்
கல்லாகி, மரமாகி ,கருஞ்சிலையாகி
பெருத்த வண்டிப் பெருச்சாளிப் பிள்ளையார் போல வீற்றிருப்பது-
கடினமடா பார்க்க எனக்கு-
அவருக்குத் தான்
தூக்க முடியாத தொந்தி
நடுத்தெருவிலே குந்தி விட்டார்.
நீ கட்டழகனல்லவா ?
கூடாது கடவுளே -
நீ முக்தியடைந்திருக்கக் கூடாது கடவுளே !
காசினியிலோ
கங்கையிலோ
குளித்து விட்டு
"கப் " என்று இருந்திருக்கலாம்.
பாவி ...
கடவுளாகிப் போனாயே ..!
ஏசுவுக்குப் பின்னால்
போனேன்- சிலுவை
சுமந்து கடவுளானான்.
புத்தா உன் பின்னால்
வந்தால்-
காருண்யம் பேசி
கடவுளானாய்.
செய்யாத பாவத்துக்காய்
நீவிர் எல்லோரும் கடவுளானால்-
செய்த பாவத்துக்கு
நான் நானாகவேயா
கிடப்பது..?
அதோ அன்று தான் பிறந்தான்....,
நல்ல மழை இருட்டு-
ஜன்னல்கள் கூட சட சடவென்று
அடித்துக் கலகமூட்டுகின்றன.
அன்றைக்கு,
ரொட்டியும் ,சம்பலும் சாப்பாடு-
வெளிச்சக் கூடுகளுக்குளிருந்து -ஒளி
பிம்பம் விலகி,
சூழ் கொண்டு
முரண்டு பிடித்து- கூச்சமேயன்றி அழுது..
நீ.....
எனக்குள் பிறந்தாயா?
மகா மாயாவுக்குள் பிறந்தாயா?
எதுவோ ஒன்று!
என்னைச் சுற்றி நீ
பிறந்த நிணம் வீசிக் கொண்டே இருக்கிறது.
அன்று வைகாசிப் பெரு மழை-
மழைக்குள்ளும் வியர்க்கிறது உனக்கு.
நீர் மொண்டு கொண்டு ஜனிக்கிறாய்-
நான் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தக் காத்திருக்கிறேன்.
தங்கத்தில் ஏந்த,
நானொன்றும் ராஜ குமாரனல்லன் என்று ,
பிறந்ததுமே சாத்விகம் கதைத்தாய்.
இப்படி,
சாத்விகமும், அத்துவைதமும் கதைத்துக் கதைத்தே -
கொண்டாய் புத்தா என்னை-
நீ பிறந்த நாளில் என்னைப் பெற்றுப் போட்டு -
நீ இறந்த நாளில் என்னை கொள்ளி போட்டு...
கொன்றாய் புத்தா என்னை!
உன்னுடன் நானும்,
எனது எதுவுமொவும்,
அன்று பிறந்தது -
இன்று , நானும் எனது எதுவுமோவும் கூடவே -
மோட்சம் காணுகிறது -
இரண்டாயிரம் வருஷம்
நீ கடவுளாய் கிடந்தது
போதும்.
பூலோகத்தில் நிறையக் கிடக்கு
பார்ப்பதற்கு-
நீ பிறந்த லும்பினித்
தோட்டத்தைக் கூட சரிவரப்
பார்த்திருக்க மாட்டாய் -
அப்போது உனக்கு
ராஜ மிடுக்கு.
இப்போது பரம் பொருள் மிடுக்கு..!
மிடுக்கிலேயே வாழ்ந்து-
மிடுக்கிலேயே கெட்டோம்,
நீயும் நானுமாய்!
கடவுளாய் இருப்பதும்-
கடவுள் கலைக்கும்
சாத்தானாய் இருப்பதும்
எவ்வளவு கடினம்..?
ஹ்ம்ம்...
நீ வெறுமனே
செத்துப் போன நாளிது.
கேவலம் நீ செத்துப் போனாய் என்று தெரியாமலேயே
பரி நிர்வாணமடைந்தாயாம்...!
பிதற்றும் உலகம்.
ஹ்ம்ம்...
என்னைப் போலத் தான் என் உலகமும்.
நீ கடவுளடா சுவாமி ..!
என்னையும் - கதி மோட்சம்
காண வைத்த,
கடவுளடா சுவாமி - நீ !
நிலா-
2010
2010
Comments
Post a Comment