இலையுதிர் காலமாதலால்
ஒவ்வொரு பௌர்ணிமையிலும்
அரச மரங்கள், இலைகளை
சட்டை கழற்றுவது போல ஒரு வித
சலசலப்புடன் உதிர்த்துக் கொட்டுகிறது !
அல்லது
இலையுதிர்காலத்தின்
இறுதி மரணந்தழுவும்
வெள்ளரசு மரத்தினிலைகள்
தெரு நாயொன்று சிரங்கு தாளாமல்
உடலை சடசடத்து உலுப்பிக் கொள்வது போல
உதிர்த்துக் கொட்டுகிறது !
கீழே போதிசத்துவன் இருந்தான்
புகழ் மாலையில் நனைவது போல
பழம் இலைகளாலும்,
இலைகளின் சவங்களாலும், சருகுகளாலும்
அபிஷேகிக்கப்பட்டான்.
அதில் எதோ
உத்தமத்தை உணர்ந்தவன்,
சடத்துவத்தைத் தாண்டி சத்துவத்துக்குள் நுழைந்தான்.
பிரம்மச்சரியத்தின்
அந்தம் பற்றி புல்லுருவியாக
வியாபகமாகிக் கொண்டு வருகின்ற
படிகளில் என்
முன்னேற்றம் தெரிகிறது !
என் அம்மா
எனக்குத் தந்த இறுதி
அரவணைப்போடு-
'அம்மா' என்கிற காட்சிப்புலமும் ,
அதன் விஸ்தீரணமும் என்
வட்டத்துள் இருந்து தீர்ந்து போயிற்று.
இன்று
உணரக் கூடியதாயிருக்கிறது,
எனக்கான குழந்தைகளுக்காக
சேமித்து வைத்த
அன்பு முத்தங்களைப் பரிமாறியபடி
நிலவு காட்டி சோறூட்டப் போகும்
ஒரு நாளோ இரு நாளோ
என் வாணாளில் இருந்து தொலைந்து விட்டதை.
பொய்- உண்மை-மெய்-வினை-புகழ்ச்சி
ஏதொன்றும் அறியாதவன்.
அல்லது அறிந்தும் அறியாதவன்.
உணர்ச்சிகளுக்குக் குட்டுப்பட்டவன்.
போதிசத்துவன் !
இரவில் பறக்கும்
நாரைக் கொக்குகளை பிடித்துத் தரும்படியோ,
ஒன்றிரண்டு வண்ணத்துப் பூச்சிகள்
தேன் மொண்டு போதையில் போகும் போது,
பிடித்துத் தா என்று-
கெஞ்சிக் கொண்டோ
ஒற்றைக் காலில் முறண்டு பிடித்துக் கொண்டோ
முகவாய்க் கட்டைத் திருப்ப மாட்டாள் -
என் சின்ன மகள் !
தொலை தூரத்தில் விரவும்
தெரிந்தவர்களின் வருகைக்காக,
என் இடுப்பிலிருந்து நழுவி ,
வழுக்கி ஓடி ,
மண் பிறண்ட நுனிவிரல்களால்
என்னையே நோக்கி மீண்டும்
ஓடி வரமாட்டாள் அவள்.
குழந்தைகள் சூழ்ந்த
நதிப் பிரவாகத்தில் இருந்து
வெறுமையின் பழைய வாடை........
அத்துவைதத்தின்-
டாம்பீகத்தைத் தோற்கடித்து-
மாயா சக்திகளை முறியடித்து-
நானும், போதிசத்துவனும்
ஒன்ரற அல்லது இரண்டற அல்லது
முழுவதுமாய்க் கலந்து விட்டோம்.
கலந்ததினால்க் காட்சிகளுக்குப் புலனாக மாட்டோம்.
புலப்பட்டால்த் தான் உணர்ச்சிகளும்,
அதன் பிறழ்வுகளும்.
இப்போது எமக்கது இல்லவே இல்லை !
ஆக ஒரு போதும்
தேவ மாதா சொல்லித் தந்த
பிரம்மச்சரியத்திலிருந்து பிறழப் போவது இல்லை.
ஆத்தும விசாரியைப் போல,
போதியின் விசாலமான வேர்களைக் கடந்து போகிறேன்.
எந்த வேரிலும் இப்போது ஈரமில்லை.
முன் போல ஈரமேயில்லை...!
இனி எனக்கு
எது பற்றியும் அந்தரங்கமான படபடப்பு இல்லை,
ஆதலால்
என் கடைசி மகளையோ, மூத்தவளையோ கை பிடித்து
பள்ளிக்கு அள்ளிச் செல்லும் காட்சிகளும்
கனவில் தனும் வந்து போகாது.
நானும் ,
போதிசத்துவனும் ஒன்றிப் போனோம்
எங்களுக்குள் ஐக்கியம் தாண்டவமாடுகிறது.
தாண்டவத்தின் உச்சியில் நிருத்தியமும் நடக்கிறது.
போதிசத்துவன்,
தன் நிலைபரம் சொல்லி
என்னை ஆசுவாசப் படுத்தியதாய்
எண்ணிக் கொண்டிருக்கிறான்.
எரிகிற தீயில் தழல் பொறுக்கும்
வேலையைச் செய்திருக்கிறான்.
ஹ்ம்ம்...
தான் வாழப்போவதையும்,
தான் வாழப்படப் போவதையும் எண்ணி
கிறக்கத்தின் உச்சியில் இருக்கும் - அவன் -
ஆசைகளை உண்மை சொல்லிக் கலைக்க
விரும்பவில்லை.
நிலையாது நிலையாது என்று சொல்லிக்
கொண்டே நித்தியத்துவம் தேடிப் போகிறான்.......
எது ,
எப்படி,
எவ்வகையாகினும்,
ஒன்றே ஒன்றுக்காக
நான் இன்னமும் நெகிழ்ந்து,
பூரித்துப் போகிறேன்.
இனி
என்
குழந்தைகளுக்காக,
தமிழிலேயோ,
சமஸ்கிருதத்திலேயோ,
மணிப்பிரவாளத்திலேயோ
பெயர் தேட வேண்டி இராது....!
நான்,
பிரம்மச்சரியத்தின் பிலாக்கணத்தை
ஒவ்வொன்றாகப் பாட ஆரம்பிக்கின்றேன்.
ஒவ்வொன்றும், இறுதி நிலையில்,
மூர்ச்சையின் இனிமையைத் தருகிறது.
-நிலா -
3/12/2010
Comments
Post a Comment