நிறையக் காலத்துக்கு முன்பாக என்று சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு முன்னதாக...ஒரு படம் பார்த்தேன். அந்தப் படத்தை அதற்கு முன்பாகவும் ஒரு தடவை பார்த்திருக்கிறேன்.
ஏன் எப்போதுமே படங்கள் காலத்தின் பக்கம் சார்ந்தவையாக இருக்கின்றது என்பது பற்றி மட்டும் எனக்குத் தெளிவே இல்லை. சினிமாப் படங்கள் நான் பார்ப்பது மிகக் குறைவு என்று சொல்லலாம், அல்லது பார்த்த படங்கள் மிகக் குறைவு என்று சொல்லலாம், இரண்டுமே ஏறக்குறைய ஒன்று போலத்தான். ஆனால், முந்திப் பார்த்த படங்களை , இப்பக் கொஞ்ச நாளா திருப்பியும் பார்த்துவிட வேண்டும் என்கிற அவா அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நான் காலத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் காலம் இனித் துரிதமடையப் போகிறதா, இல்லை தீர்ந்துவிடப் போகிறதா , இல்லை திடீரென்று வாழ்க்கை பற்றிய தீவிர அவாவா என்று தெரியவில்லை. முந்திக்கும், இப்பவுக்கும் என்னில் நிறைய மாற்றங்கள். ஒரு வேளை காதல்க் கவிதைகளெல்லாம் எழுதுவதில்லை என்று சபதமெடுத்துக் கொண்டிருந்த நான் காதல்க் கவிதைகள் எழுதுகிற அளவுக்கு வளர்ந்துவிட்டதாலாக இருக்கலாம்.
முந்திய என் கவிதைக்கும், இப்பத்தைய என் கவிதைகளுக்கும் கூட நிறைய வித்தியாசங்கள், எப்போவாவது நான் இதை எண்ணி சிரித்த சம்பவங்களும் உண்டு. என் கவிதைகள், எழுத்துக்கள் எல்லாவற்றிலுமே, மாற்றம்.
பொதுவாகச் சொல்லப் போகிறதானால் நான் வளர்ந்த பிள்ளையாகி விட்டிருந்தேன். அல்லது, கல்லூரிக்குப் போகத் தொடங்கி ஒரு ஆண்டு முடிந்து போய்விட்டது, ராக்கிங் பண்ணப்படுவதிலிருந்து, நான் ராக்கிங் பண்ணலாம் என்ற தகுதி பெற்றிருக்கிறேன். அழைப்பு வருகிறதோ இல்லையோ, தினசரி செல்போனை கையில் வைத்தபடியே தூங்கிப் போகிறேன், இப்படி நான் வளர்ந்ததற்கு ஏக அறிகுறிகள் தென்பட்டவண்ணமே இருக்கின்றன். அதிலும் அம்மாவுடன் நான் நிமிர்ந்து கதைப்பதில்லை என்ற தீர்மானந்தான் இதை முக்கியமாக உணர்த்தியது.
பொதுவாகச் சொல்லப் போகிறதானால் நான் வளர்ந்த பிள்ளையாகி விட்டிருந்தேன். அல்லது, கல்லூரிக்குப் போகத் தொடங்கி ஒரு ஆண்டு முடிந்து போய்விட்டது, ராக்கிங் பண்ணப்படுவதிலிருந்து, நான் ராக்கிங் பண்ணலாம் என்ற தகுதி பெற்றிருக்கிறேன். அழைப்பு வருகிறதோ இல்லையோ, தினசரி செல்போனை கையில் வைத்தபடியே தூங்கிப் போகிறேன், இப்படி நான் வளர்ந்ததற்கு ஏக அறிகுறிகள் தென்பட்டவண்ணமே இருக்கின்றன். அதிலும் அம்மாவுடன் நான் நிமிர்ந்து கதைப்பதில்லை என்ற தீர்மானந்தான் இதை முக்கியமாக உணர்த்தியது.
இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேனென்றால், நான் கொஞ்ச நாளுக்கு முன்பாக ஒரு படம் பார்த்தேன், [அதைத் தான் முதல்ப் பந்தியிலேயே சொல்லீட்டியே எண்டால், நான் பாவம் ]படத்துக்கும் எண்ட வாழ்க்கைக்கும்[?] எந்த விதச் சம்பந்தமும் இல்லை. இருக்கப் போவதும் இல்லை. ஒரு அதிர்வுக்கும் இன்னொரு அதிர்வுக்கும் இடையில ஆயிரத்தெட்டு நுணுக்கத்தொடர்புகளைக் காட்டாட்டி எழுதுவதற்கு எதுவுமே தோணுவதே இல்லை.
இந்தப்படம் குழந்தைகள் பற்றிய படம். அதிலும் இதை முந்தியே ஒரு தரம் பாத்திருக்கிறன். இப்ப பார்த்தது நான் வளர்ந்துவிட்டேன் என்கிற விடயத்தை அரை குறையாக நம்பத் தொடங்கினாப் பிறகு. எல்லாக் காலத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தது. வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும், நான் விழிப்புடன் இருந்திருக்கிறேனா என்றால் ஆம், ஆனால் வளர்ந்து விட்டதன் பின் விழிப்புடன் இருந்திருக்கிறேனா என்றால் ஒன்றுமே சொல்லத் தெரியவில்லை. எல்லாக் குழந்தைகளும் வளருகிற போது, அவர்களது அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, நாய், பக்கத்து வீட்டுப் பெடியன் எல்லாமுமே கூடவும் வளரும். குழந்தை வளர்ந்து முடித்த பின் ஒன்று, பக்கத்து வீட்டுப் பெடியன் வளர்ச்சியை நிறுத்தியிருப்பான், அல்லது, வீட்டுக் காரர்களுக்கு மூளை வளர்வதாவது குறைந்து போயிருக்கும்.
மூன்றாவது பந்தியில திருப்பியும் சொல்லுறன், நான் ஒரு படம் பார்த்தன், ஏறக்குறைய காலத்தைச் சொல்லுவதென்றால், போன சனவரி மாசம், இருபத்திமூண்டாம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, இரவு இல்லை, ரெண்டுங்கெட்டான் நேரத்தில, அதிகாலையில ஒரு மணிக்குத் தொடங்கி, படம் முடியிற நேரத்துக்கு அது முடிஞ்சது. படம் பாக்கேக்க, மதுரையில இருந்து அப்பாவின் நண்பர் வாங்கிக் கொண்டுவந்த ரெண்டு கிலோ திராட்சையில், அரைக்கிலோ திராட்சையை தின்று முடித்திருந்தேன்.
மதுரைத் திராட்சைகளைப் பற்றித் தனியாகச் சொல்லவேண்டும், சரியான மொத்தமும், நீளமும், பறங்கிக்காயை, பத்தின் கீழ் அஞ்சால் டிவைட் பண்ணின அளவு சைஸ் ! கருப்பும், ஊதாவும் கலந்த மாதிரி மயக்கம் தருகிற வண்ணம். அதுக்கு இன்டெர் நெட்டில சேர்ச் பண்ணிப் பாத்தால், "லிலக்" எண்ட கலர் சொல்லுது. மதுரையில திராட்சை விளையுமா, இல்லாட்டில் ஏற்றுமதியா எண்டு விஷயம் தெரிஞ்சாக்கள் அடிக்கக் கூடா.
பிரிட்ஜுக்குள்ள வெச்சிருந்த ஒவ்வொரு திராட்சை, முழுதாக முடியும் போதும், வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும், திராட்சைக் கலர்ப் பேனாவால் கிறுக்கித் தள்ளுவதாகத் தான் உணர்ந்தேன். திராட்சையில் போதையுண்டாக்கும் திரவியம் இருப்பது பற்றி நான் ஒண்டுமே சொல்லப் போவதில்லை. தவிர பொதுவாகவே எனக்குத் திராட்சைகள் மிகப் பிடித்தம். காபூல் திராட்சைகள் எங்காவது கிடைக்குமா என்று அப்பாவிடம் முன்பு நச்சரித்திருக்கிறேன். இப்போது எதுபற்றியும், யாரிடமும் வாய் திறந்து கேட்பதில்லை என்றாகிவிட்டதன்பின் , காபூல் பற்றியோ, துனீசியா பற்றியோ வாயே திறப்பதில்லை.
நான் படம் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது நான் சென்னையில் இருந்தேன் என்பதையும் தயை கூர்ந்து சொல்லிவிட விரும்புகிறேன். நடுச் சாமங்களில்,மீனம் பாக்கம் நோக்கிச் செல்லும் விமானப் பறத்தலின் இறுதி எச்சரிக்கை தவிர வேறு எதுவுமே அந்த அர்த்த ராத்திரியில் கேட்கப்போவதில்லை.சிலேடையாகத் திறந்திருக்கும் அப்பாவின் அறையிலிருந்து வரும், குறட்டை ஒலி கூட காற்றின் கனமான அடர்த்தியில் புறக்கணிக்கத்தக்கது . தமிழ் நாடு போகும் போதே தீர்மானித்தது தான், அங்கு எங்குமே சினிமாத் தியட்டர்களுக்குப் போகப் போவதில்லை என்று. பொதுவாகவே சினிமாத் தியட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதை அடியோடு வெறுக்கிற குணம் எனக்கு.
அப்போதைக்கெல்லாம் சென்னை வாழ்க்கையோடு ஒரேயடியாகப் பழகிப் போயிருந்தேன். காலையில் நேரம் சென்று எழும்புவது, கல்லூரிக்குப் போக வேண்டும் என்கிற கடப்பாடு இல்லாமல் வாழ்கிற வாழ்க்கை எத்தனை சுகானுபவ்மானது. சுகத்துக்குப் பழகிவிட்ட உடல், சுமைகளைப் பற்றி கிஞ்சித்தும் நினைத்துக் கொள்வதே இல்லை. இருந்தும் மனம் மட்டும் சுகம் போன்ற இலகு பாரங்களை சுமக்க மறுத்துக் கொண்டே, வலு மிகுந்த எண்ணங்களை தூக்கித் தூக்கி எத்தனை லாவகமாக தலையில் போட்டுக் கொள்ளுகிறது. அதுவும் ஒரு சுகானுபவம் தான்.
அது ஒரு காலம். காலங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், காலத்தின் நிகண்டுகள் குத்திக் கிழித்து தாமும் ஒரு அத்தியாயமாகிக் கொள்ள எத்தனை பிரயத்தனப்படுகின்றது....? குழப்படிக் காரக் காலம். காலம் ஒரு நாள் கழன்று கொண்டு புறத்த்தாலே ஓடும். காலம் ஆரிடமாவது கடன் வாங்கிக் கொண்டிருந்தால், சொல்லாமல்க் கொள்ளாமல் என்னிடமிருந்து ஓடிவிடும். காலம் பள்ளிக் கூடப் பிள்ளையாய் இருந்தால், கெமிஸ்ற்றிச் ரீச்சருக்குப் பயந்து ஓடி ஒழித்துக் கொள்ளும். காலம் ஏன் இப்படி எதுவுமாக இருக்கவில்லை. என், பிராணன் வாங்கும் கடிகாரத்தில், பெரிதும் சிறிதுமாகவே அமர்ந்து ஒன்றை ஒன்றை பிடிக்க முயலும் அரக்க ஓட்டத்தை நினைவு படுத்துகிறது? ....காலம் அப்படித்தான்.
அண்டைக்கு ராத்திரி, அண்டம் விழுங்கப்படுகிற மாதிரியான அம்மானுஷ்ய அமைதியை என் அறைக்குள் ஏற்படுத்திக் கொண்டு , சுழழ விடுகிற காற்றாடியை நிறுத்தியும், உறைகிற காற்றுப் பதணிடுக்கியின் ஈய வாய்களை சாதுவாகச் சாத்தியம், சூழலின் சத்தத்தைக் குறைத்தேன். இருந்தும், உள்ளிதய அறைகள் இரண்டுமே அடித்துக் கொண்ட வேகத்தைப் பற்றி சொல்லுவத்ற்கொன்றுமில்லை.
வெகு நேரங்களித்து நான் உணர்வு பெற்றிருக்க வேண்டும். ஒரு தெய்வாதீனக் குரலின், மெது ஒலி காதுக்குள் அடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது. அது பழையபடி இளையரஜாவை ஹம்மிங் செய்யவைத்து பாதியில் நிறுத்துவதாக அந்தரத்தில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. கனவுக்கும், நனவுக்குமாக நான் செல்லடித்துப் போய்க்கிடந்தபடியினால், அது கனவு தானென்று துல்லியமாக அறிந்துகொள்ள முடிந்தது.
பொதுவாக என் குரல் மீது எனக்கு நல்ல அபிப்பிராயமே இல்லை. எதையாவது எங்காவது கதைக்க வேண்டும் என்கிற பொழுதில் காலை வாரிவிடும் நாசமறுத்த குரல் தான் எனக்கிருந்தது. ஆனால் பல பெண் பிள்ளைகளது போல போலியான மெல்லிய வாசனை மணக்கும் குரல் என்னதல்ல. இது என்னுடைய குரல் தான் என்பதில் எப்போதும் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் எனக்கான குரலா என்று அடிக்கடிச் சந்தேகப் பட்டிருக்கிறேன். ஏதாவது முக்கிய நேரத்தில், தொஞ்சு வழியும். வழிசழ்க் குரல் ! வீட்டிலே கதைக்கிற போது நன்றாகத் தான் இருக்கும், வெளியிலே போய் "அந்த முக்கியமான" நேரத்தில், காத்து மட்டுந்தான் வெளியில் வரும். குரல் வளையில் இருக்கும் "சி" வடிவப் பளிங்குக் கசியிழையத்தை நான் வளர்த்த ஏதாவது ஒரு நாயிடம் கொடுத்துக் கொதரச் சொல்லலாமா என்றிருக்கும். சமயத் துரோகி என் குரல்.
யாரும் வாழ்தல் பற்றி இலக்கணம் சொல்லுவது மிகக் கடினம், ஆனால் நாங்கள் வாழ்ந்து முடித்தது பற்றி மிகச் சுலபமாகச் சொல்லிவிடலாம். காற்றுப் பெட்டிக்கும், குரல்க் கம்பிகளுக்கும் நான் சொல்ல வந்ததன் இலக்கணம் நன்கு புரியும், அதன் உள்ளார்ந்த அரசியலும் கூட. விடயங்ககைத் தெளிய வைத்தலுக்காகச் செத்துப் பிழைத்தது போதுமா போதாதா என்று நான் தீர்மானிக்கா விட்டாலும், இப்போதைக்கு தெளிவு வேண்டாம்.
ஏறத்தாள செத்துப் போயிருந்த எஞ்சிய நாட்களை சென்னையில், மெது மெதுவாக தேச யாத்திரை செய்து ஓட்டவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட மனது அலைகிற திசைக்கு எதிர்த்திசையில், உடலை அசைக்கிற செயல், இதுவும் ஒரு செயன் முறைத் தவம் போல....
அன்றைய ராத்திரி தான் நான் படம் பார்த்தேன். மிகக் கொடூரமான இரவுகளைக் கழிக்க சினிமாப் படங்கள், வீட்டில் இருக்கும் போது, ஆர்மி கம்பியூட்டர் கேம்ஸ், சம்பந்தமே இல்லாத மொக்கை புளொக்குகள், இன்னுமின்னும், மொழிபுரியக் கூடதென்றதுக்காக தேடிக் கேட்கும் வேற்றுமொழிப் பாடல்கள்....நீண்டு கொண்டே போகும்.
சில்ரன் ஒப் ஹெவன்,[Children of heaven ] அன்றைக்குத் தான் பார்த்தேன். அதற்கு முதலும் பார்த்திருக்கிறேன், காலங்களின் முந்திப் பிந்திப் போனவைகளுக்கான தனித் தடயங்கள் போல, எனக்குமிது பெருந்தடயந்தான். சொர்க்கத்தின் குழந்தைகள். பர்சீய பொழியில் இரானில் இருந்து வெளிவந்த படம். ஆரம்பத்தில் இந்தப் படம் பற்றி விமர்சனம் எழுதுவதாகத் தான் விசைப்பலகையைத் தட்டிக் கொண்டிருந்தேன்.
எழுத்துக்கும், விசைப்பலகைக்கும், காகிதத்துக்கும் எவ்வளவோ தொலைவு. எழுத்துடன் இவை எவைக்குமே தொடபில்லை. எண்ணங்கள் பற்றி வாழ்தலில், எழுத்து என்பதே ஒரு இயக்க அசைவு மாதிரி. எழுந்தமானமான உந்துதல். தவிர, எழுத்துக்கும், அதன் இயங்கியலுக்கும் கோடி தொலைவு. எண்ணங்கள் குழந்தைகள் மாதிரி, பிறக்கிற நிலைக்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் ஏகத் தொலைவு, அடிப்படை எழுத்தும் அப்படித் தான், சொல்ல வந்ததுக்கும், முடிவுக்கும் இடையில் எழுத்தாளன் தவிக்கிறதும் இந்த மாதிரியான ஒரு நிலைபரம் தான்.
சொர்க்கத்தின் குழந்தைகள்,1997 இல் வெளிவந்து, சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்பட விருதை 1998 இல் பெற்றுக் கொண்டது. மஜீத் மஜீதியின் கதையும் இயக்கமும். இரண்டு அற்புதமான குழந்தைகளின் உலகம் பற்றியது. எங்களுக்கெல்லாம் தொலைப்பதற்கும், தேடுவதற்கும், நிறைய இருக்கிறது, இருந்திருக்கிறது. நான் குழந்தை நிலையில் இருந்து கிழம்பிக் கொண்ட மட்டில் எவ்வளவு ஆழமாக குழந்தைகள் உலகத்தைப் பார்க்கிறேன், எவ்வளவு கூர்ந்து அதனை அவதானிக்கிறேன் என்று படத்தைப் பார்க்கும் போது உள்வாங்கிக் கொண்டிருந்தேன். ஏராளமான கலைப் படங்களையும், தினுசு தினுசான உலகதரப் படங்கள் என்று சொல்லக் கூடியவற்றைஎல்லாம் பார்த்திருப்போம், காலமும், நேரமும் கூத்தாடுகிற போது, அதைப் பறை சாற்றக் கிளம்பும் ஏதாவது ஒரு படைப்புத் தான், உட்கார்ந்து எழுது என்று சொல்லிவிட்டுச் செல்லும். இந்தப் படம் அது தான்.
சாராச் சிறுமியின் இளஞ்சிவப்பு நிறச்ச்சப்பாத்து, பிய்ந்து போகவே, இரண்டாந்தரப் பாவனைக்காக செருப்புத் தைப்பவரினால், பசை பூசி, லாடமேற்றி, ஊசிகொண்டு தைக்கிற காட்சியோடு படத்தின் ஒளிப்பதிவு விரிகிறது. அந்த இளஞ்சிவப்பு நிறச் சப்பாத்து, பெண்குழந்தைகளைப் பொறுத்த மட்டில் ஒரு குறியீடு. மற்றவர்கள் எப்படிப் பாக்கிறார்களோ தெரியாது, இளஞ்சிவப்பு நிறம் பெண்குழந்தைகளின் விளையாட்டுக்குப் பிடித்தமான , அவர்களது மகிழ்வுக்குப் பிடித்தமான, அவர்களின் மிகத் துல்லியமான குழந்தைத் தன்மையின் நிறமாக..இப்படிப் பலவாகப் படுகிறது.
இதற்கும் நான் குழந்தையாக இருந்த போது என்று தொடங்கி ஒரு கதை சொல்லலாம்...
முன்பு பள்ளிக் கூடத்தில் நாலாமாண்டு, ஐந்தாமாண்டு படிக்கிற காலத்தில, காட்போர்ட் அட்டையில் பொம்மைப் படம் கீறி, அதை உருவமாக வெட்டி, கடுதாசியில் அதற்குச் சட்டைகளேல்லாம் செய்து, டீச்சர் வராத பொழுதுகளில் , எத்தனை ரம்மியமான விளையாட்டு. இதுக்காக அம்மாவிடம் எத்தனையோ தடவைகள் விளாசல் வாங்கியிருக்கிறேன். அந்தக் காலத்தில், கணக்குக் கொப்பியைத் தவிர எல்லாக் கொப்பியுமே ரெண்டு ஒற்றையில் தூங்கும், கோப்பி கட்டியிருக்கும் அத்தனை ஒற்றையிலும் , பொம்மைக்கு உடுப்புத் தச்சுக் கிழிச்சுப் போடுவது இந்த விளையாட்டுக்கேயுரிய தனிப் பலம். இதெல்லாம் சொல்லி விளங்க வைக்கேலாது, பொம்புளைப் பிள்ளைகளின் விளையாட்டுக்கள் எப்பவுமே அலாதியானவை தான்.
இதில குறிபிட்டுச் சொல்லுறது என்னெண்டா, இதில பொம்மையும் அதிண்ட உடுப்புக்களும், அது போடுகிற சப்பாத்துக்களும் "பிங்க்" என்று செல்லமாய் அழைகப்படும் , இளஞ்சிவப்பில் இருந்தால்த் தான் அந்தப் பொம்மை வெச்சிருக்கிராளுக்கு தனி மதிப்பு. ங்கொய்ய்யாலே.....இதுகளிண்ட சூத்திர தாரி பெரும்பாலும் நான் தான். ஏனென்டா படம் கீறத் தெரிஞ்ச ஆளிட்டதைத் தான், பாவைப்பிள்ளை கீறித்தரச் சொல்லி எல்லாரும் படைஎடுப்பினம், அந்தக் காலங்களில என்ற மவுசு தனி தான். இந்த மவுசைத் தக்க வெச்சிருக்கிறதுக்ககவே, லக்ஸ்பிறேப் பெட்டியின், உள்ள்ப்புற வெள்ளை அட்டையை அம்மாட்டை இருந்து களவெடுத்துச் சேர்த்து வேச்சிருக்கிறதும், பிங்க்குக்கு பிக்ங் மச்சிங்கா அண்ணாண்ட கலர்ப் பெட்டியில இருந்து சோக் கலருகளை பதுக்கிறதும் வாடிக்கையாகிவிட்டது.
ஒரு கைதேர்ந்த மகப்பேற்று மருத்துவரிடம் வந்து, குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு பூரித்துக் கொண்டு போகும் தாய்மாரைப் போல, என்னட்ட எல்லாரும் வந்து பாவைப் பிள்ளை கீறி, அதை வெட்டி எடுத்துக் கொண்டு அவை அவையிண்ட வாங்குக்குப் போய் இருப்பினம். ஒரு வைத்திய கலாநிதியைப் போல நான் மவுசு பொங்க நிற்பேன்.... எனக்கு உந்த பிள்ளை வளக்கிற விளையாட்டேலாம் சரிவராது... [இஞ்சே விளையாட்டு மட்டுந்தான்] அல்லது பிடிக்காது.... அந்தக் காலத்திலேயே பெண்ணியம் மாதிரி ஏதோ இழவு பேசிக் கொண்டு வாழ்ந்திருக்கிறனாக்கும். இன்றைக்கும் அப்போததன் தொலைவுடனேயே வாழ்க்கை போய்விடும் என்கிற அச்சம் உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
'பிங்க்' கலருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்குமாப் போல நண்பி ஒருத்தி எனக்கு இருந்தாள். அவள் ஒரு பொம்மைக் களஞ்சியம். அல்லது பொம்மைகளின் பிறப்பிடம். பார்பி பொம்மைகளும், பெண் குழநதைகளும் என்று தனிப் பதிவே எழுதலாம், அத்தனைக்கு அவள் பார்பிப் பயித்தியம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவளுடனான நெருங்கிய பரீட்சயம் கிடைத்தது. எனக்கு நெருங்கிய நண்பர்கள் மிகக் குறைவு, இது ஏதோ ஆகிவிட்டது. ஒரு வருடமும், இரண்டு மாதங்களும் நாங்கள் நெருங்கிய நண்பிகளாய் இருந்திருக்கிறோம், அந்தக் காலத்துக்குள் அவள் பார்பி பற்றி பேசாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்தத் தொந்தரவோ என்னவோ, எங்கள் நட்பு நீடிக்கிறதாய் இல்லை.
மேலும், பார்பித் தொல்லையால் பாதிக்கப் பட்ட என் அம்மா எனக்கு உடனடியாக அகப்பை வைத்தியம் செய்வதாக முடிவெடுத்தமையும் ஒரு காரணமாம். பிற்காலத்தில் நான் நிறைய பார்பிகளுக்குச் சொந்தக் காரியாக இருந்த போதிலும், அவற்றை மனதளவில் நிறைய வெறுத்தேன். குறிப்பாக வளர்ந்த நிலையில் சொல்லப் போவதாக இருந்தால், பார்பிப் பொம்மைகள், பெண் குழந்தைகளை முட்டாள்களாகவும், சுய அடிமைகளாகவும், உள்நோக்கிய பார்வையிலுமாகவுமே வளரவைக்கிறது. அவை ஆபத்து நிறைந்தவை. மற்றைய பொம்மைகளிலும் பார்பிகள் நெடிய ஆபத்தானவை. அவை குழந்தைகள் வளர்ந்த பின்னும் ஆபத்தைக் குறைப்பவை அல்ல. எல்லாக் காலத்திலும் என் நண்பியின் பார்பிகளின் தெரிவு, "பிங்க்" ஆகவே இருந்தது. இளஞ்சிவப்பை சமயா சமயங்களில் நான் வெறுப்பதற்கு இதும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனால் "பிங்க்" குழந்தைகளின் நிறம்!
மேலும், பார்பித் தொல்லையால் பாதிக்கப் பட்ட என் அம்மா எனக்கு உடனடியாக அகப்பை வைத்தியம் செய்வதாக முடிவெடுத்தமையும் ஒரு காரணமாம். பிற்காலத்தில் நான் நிறைய பார்பிகளுக்குச் சொந்தக் காரியாக இருந்த போதிலும், அவற்றை மனதளவில் நிறைய வெறுத்தேன். குறிப்பாக வளர்ந்த நிலையில் சொல்லப் போவதாக இருந்தால், பார்பிப் பொம்மைகள், பெண் குழந்தைகளை முட்டாள்களாகவும், சுய அடிமைகளாகவும், உள்நோக்கிய பார்வையிலுமாகவுமே வளரவைக்கிறது. அவை ஆபத்து நிறைந்தவை. மற்றைய பொம்மைகளிலும் பார்பிகள் நெடிய ஆபத்தானவை. அவை குழந்தைகள் வளர்ந்த பின்னும் ஆபத்தைக் குறைப்பவை அல்ல. எல்லாக் காலத்திலும் என் நண்பியின் பார்பிகளின் தெரிவு, "பிங்க்" ஆகவே இருந்தது. இளஞ்சிவப்பை சமயா சமயங்களில் நான் வெறுப்பதற்கு இதும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனால் "பிங்க்" குழந்தைகளின் நிறம்!
எல்லாம் முடிந்து, நீண்டதொரு கால இடைவெளியின் பின் என் பாலியத் தோழியை முகப் புத்தகத்தில் தேடிப்பிடித்து நட்பிணைத்த அண்டைக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள் பாருங்கள்,
ஹாய் பார்பி கேர்ள் என்று தலைப்புப் போட்டு! ...........அவ்வவ் என்றாகிவிட்டது.
அதுக்குப் பிறகு மூன்று பார்பிப் படங்களை கூகுளில் சேர்ச் செய்து எனக்கு டக் வேறு பண்ணிவிட்டிருந்தாள். ஆரும் பார்ப்பதற்கு முன்னதாக நான் அந்தத் டக்கை உருவிப் போட்டது வேற கதை ;-)
எது எவ்வாறிருப்பினும், குழந்தைகளின் நிறம் "பிங்" என்று அடித்துச் சொல்லுவேன். இது ஆண் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
சொர்க்கத்தின் குழந்தைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா, ஒரு சின்னஞ்சிறு தங்கைக்கு ஒரு சின்னஞ்சிறு அண்ணா, மிகவும் சாதாரணத் தரமானா குடும்பம். ஏழ்மைப்பட்ட குடும்பம். சீநிக்கட்டிகளை உதிர்த்துப் போட்டு தீநீர் கலக்கிக் கொடுக்கும் உத்தியோகத்தில் அவர்களின் அப்பா இருந்தார். அம்மா ஒரு கைக்குழந்தையுடன், [ அந்தக் குழந்தையின் முகமே காட்டப்படாதது அருமையான ஒரு மொழித் தேர்வு ] நோயாளியாகவே படம் முழுதும் இருந்தார்.
தொலைந்து போன காலணிக்காக படம் முழுவதும் அந்தக் குழந்தைகள் ஓடிக் கொண்டே இருப்பார்கள். இது தான் கதை. நான் வார்த்தைகளால் எழுதுவதிலோ, பிரம்மாதம் என்று புழுகுவதிலோ , இந்தப் படம் உங்களின் நினைவுகளைக் கிளறுவதாக இருக்கப் போவதில்லை. அனுபவத்தைக் கிளற வைத்துக் கொண்டு நீங்கள் படத்தைப் பார்க்க உங்கள் பாலிய வயதுக்கு அனுமதி கொடுக்கும் போது தான், அந்த உணர்ச்சிகள் தெளிவடையும்.
படம் 82 நிமிடங்கள் ஓடிக் கொண்டிருந்தது. படத்தை யார் பக்கமும் காட்டவுமில்லை, கமெராவை ஆருக்காகவும் ஒதுக்கியும் விடவில்லை. நேரடிச் சம்பவங்களை கமெராவை ஒழித்து வைத்து எடுத்ததைப் பல துல்லியமான முக உணர்ச்சிகளை படத்தில் வருகிற எல்லாக் குழந்தைகளுமே காட்டியிருந்தார்கள். எனக்கு அந்த அண்ணன் காரப் பையனிடம் ஆளவு கடந்த ஈர்ப்பு உண்டாகிவிட்டது. எனக்காக அழுகிறதை நிப்பாட்டி விட்டு, அவனுக்காக என்று ஒதுக்கி , பதினைந்து நிமிடமும் கால் செக்கனும் எடுத்து, இரண்டு தம்ளர் நீர் குடித்தபடியே அழுதேன்.
ஆனால், படத்தில் அழுவதற்கோ எதுவுமில்லை. அது படம் பார்ப்பவர்களின் மனநிலையைப் பொறுத்தது. அனால் நிறைய உணர்ச்சி மயமான சின்னச் சின்ன பழைய பாலியக் காலத்தை நினைவு படுத்திக் கொண்டே இருக்கக் கூடிய காட்சிகள் அநேகம். மொத்தத்தில் நான் படம் பற்றியோ, அதன் கதை பற்றியோ, காட்சிகள் பற்றியோ சொல்லப் போவதே இல்லை,
ஆனால், படத்தில் அழுவதற்கோ எதுவுமில்லை. அது படம் பார்ப்பவர்களின் மனநிலையைப் பொறுத்தது. அனால் நிறைய உணர்ச்சி மயமான சின்னச் சின்ன பழைய பாலியக் காலத்தை நினைவு படுத்திக் கொண்டே இருக்கக் கூடிய காட்சிகள் அநேகம். மொத்தத்தில் நான் படம் பற்றியோ, அதன் கதை பற்றியோ, காட்சிகள் பற்றியோ சொல்லப் போவதே இல்லை,
இதை எழுதத் தொடங்கி நீண்ட நேரம் ஆனதன் பின் படத்தைப் பற்றி எதையும் சொல்லத் தோணவேயில்லை. மொத்தத்தில் இந்தப் படம் கிளர்த்திய மென் சம்பவங்களை மட்டுமே நினைவுக்குக் கொண்டுவரத் துணிந்திருந்தேன். வாசித்துக் கொண்டு வந்தவர்களை ஏமாற்றவும் விரும்பவில்லை. அதன் விக்கித் தகவலையும், அதைப் பெறக் கூடிய தளமொன்றையும் இப்போதைக்குத் தந்து வைக்கிறேன். பெரும்பாலும் இந்தப் படம் அனைவரது பார்வைக்குளாகவும் வந்ததாய்த் தானிருக்கும்.
எது எப்படியிருப்பினும், காலத்தை, மீளக் கொண்டுவரத் துவதற்கு இப்படி ஏதாவது , பழைய கிளறல்கள் அவசியமாயே இருக்கின்றன.
இரவு தூர்ந்து போன காலையில், இப்படியான ஒரு பகிர்வுடனும், சூடான காலைக் கோப்பியுடனும் இன்றைய நாளுக்கான பயணம் ஆரம்பமாகிறது. விபத்துக்களுக்காகத் தான் பயணங்கள் என்ற முடிபிலிருக்கிறேன்.
-நிலா,
சென்னை ,
12/1/2011.
Dear Tharshayani,
ReplyDeleteI have been reading your blog for past few days. I admire your way of writing, it is exceptional. there is a deep flavour of spritualism. My wishes to go a long way in the literary world.
nalla irukku aanaa rombavum suthi valaichu solliyirukkeenga...sorry for the late comments :))-- sathish D kumar
ReplyDeleteஅருமையான பகிர்வு. மொழியும் எழுத்து நடையும் அற்புதம். நானும் சில உலக திரைப்படங்களை என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன். வாசித்து கருத்து சொல்லவும். மிக்க நன்றி. வாழ்த்துகள்.
ReplyDelete