Skip to main content

சமுதாய வாழ்க்கை

நண்பர் ஒருவர் நான்கு மாதக் குழந்தையை சினமா அரங்கிற்குக் கூட்டி வந்த பெற்றோரை அக்கறையுடன் விசனப்பட்டிருக்கிறார். குழந்தை வீரிட்டு அழுதிருக்கிறது. இப்படி நானும் நினைத்திருக்கிறேன். எதற்காக குழந்தைகளை பெரியவர்கள் புழங்கும் இடத்திற்க்கு அழைத்து வருகிறார்கள் என, ஆனால் இக்கருத்தைச் சொல்லுவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது. 

நான்கு மாதக் குழந்தை வீட்டில் இருக்க வேண்டும் என்றால் தாயும் வீட்டில் இருக்க வேண்டும். ஆகவே பிள்ளை பெற்ற தாய்க்கு வெளியே வந்து தன் விருப்பம் போல ஏதேனும் செய்ய விருப்பம் இருந்தாலும் பிள்ளையின் காரணத்தால் வர முடியாது. பால் குடிக்கும் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு சினமா பார்க்க தாய் வருவதே இந்தச் சமுகத்தில் அபத்தமாகப் படும். சிறு குழந்தையொன்று இருப்பதற்காக அந்தத் தாய் வீட்டிலேயே கிடக்கத் தேவையில்லை. 

அண்மையில் இலங்கை செய்தியொன்றை வாசித்தேன். சிவனொளி பாத மலைக்கு ஒரு தாய் தன் எட்டு மாதக் குழந்தையுடனும் குடும்பத்துடனும் சென்றிருக்கிறார். மலையில் அன்று அதிக புகார் இருந்ததினால் குழந்தையை தன் தாயிடம் கொடுத்து விட்டு அந்த இளம் அம்மா மலை ஏறி இருக்கிறார். அவருக்கு நேர்த்திக் கடனோ, மலையேறுவதில் விருப்போ, உற்சாக விளையாட்டுக்களில் இன்பம் கொள்ளும் துடிப்பு மிகுதியோ இருந்திருக்கலாம். பிள்ளை பிறந்த பின் அவர் ஏறும் முதல் மலையேற்றமாகவும் அது இருக்கலாம். பிள்ளைக்கு எட்டு மாதம் வரை அவர் இதற்காகக் காத்தும் இருந்திருக்கலாம். பிள்ளை பிறந்த பின் ஏற்படும் postpartum depression ஐக் குறைப்பதற்காக காற்றோட்டமாக உலவ விரும்பியும் இருக்கலாம். 

ஆனால் மலையேறிய பின் குழந்தை பசியினால் அழுததால் பலரும் அந்த இளம் பெண்ணைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். சிலர் தாமே பால் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். குழந்தைக்கு பால் கொடுப்பதை விட தாய்க்கு என்ன வேலை என்று. ஆறு மாதங்களுக்கு மேல் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. குழந்தையின் தாய், குழந்தைக்கான உணவை தயார் செய்து தன் தாயிடம் கொடுக்காமலா மலை ஏறியிருப்பார்? குழந்தையின் தந்தை எங்கே? இது உண்மையில் குழந்தைக்குத் தாயாக இருந்தால் மூடிக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டியது தானே எனும் ஆணாதிக்கச் சிந்தனையின் ஒரு வடிவமே ஒழிய வேறில்லை. 

இந்த உலகு சகல உயிர்களுக்குமானது. பெரியவர்கள் புழங்கும் இடத்தில் குழந்தைகள் இருக்கும் போது இந்தச் சமுகம் குழந்தைகளைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். தாய் மட்டுமே குழந்தையை வளர்க்க வேண்டியதில்லை. குழந்தைகளை தனியே வீட்டில் விடுவது, தெரிந்தவர்களுடன் விடுவதென்பது இந்தக் காலகட்டத்தில் மிகவும் நெருக்குவாரத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில் குழந்தையை பெற்றோர்கள் தம்முடன் வைத்துக் கொண்டு சினமா பார்த்தாலென்ன, மலையேறினால் என்ன, பனிச்சறுக்கினாலென்ன சமுகம் அதனைக் கொண்டாட வேண்டும். காவாந்து பண்ண வேண்டும். சமுகமாக நாம் செய்ய வேண்டியது அவற்றை அனுசரித்தும் ஊக்குவித்தும் போதலே. 

திருமணம்,குடும்பம்,குழந்தைப் பிறப்பு இவை மூன்றும் பெண்ணின் தற்சார்பு நிலையைப் பாதிக்கக் கூடிய விடயங்கள். இவற்றில் குழந்தைப் பிறப்பு மட்டுமே இயற்கையானது. இந்த இயற்கையான நிலையை சமுகமாக பெண்ணின் சுமையாக மட்டும் பார்க்காமலிருக்கப் பழக வேண்டும். குழந்தை பிறந்தால் வேலைக்குப் போவது,குழந்தை பிறந்தால் பயணம் போவது, குழந்தை பிறந்தால் உடலை அழகுபடுத்துவது, குழந்தை பிறந்தால் பால் இச்சை கொள்ளுவது எல்லாமுமே தடையாக இருக்கிறது பெண்ணிற்கு. 

இதனை ஒரு மேம்பட்ட சமுகமாக விளங்கிக் கொண்டு தலைமுறைகளிற்குக் கடத்த வேண்டும். குழந்தை புதிய சூழலிற்குப் பழகுவது அதனைத் தக்கனப் பிழைக்க வைக்கும். நான் பிறந்த காரணத்தினால் என் அம்மா வேலைக்குப் போவதை நிறுத்தினார். வளரும் பருவத்தில் அம்மாவின் வேலை சமைப்பது என்று நான் நினைத்திருக்கிறேன். அம்மா விரும்பிய இடங்களுக்குப் போக நினைக்கும் போது முதுமை வந்துவிட்டது. முதுமையும் ஒரு தடையில்லை. முதுமையுடன் உடல்நிலைக் குறைபாடுகளும் வருகின்றதே!

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி