உலகிலே எத்தனையோ மனிதர்கள் இயற்கையாலும், ஒருவருக்கு ஒருவர் மோதியும், போராலும்,நோயாலும் இறக்கிறார்கள். அதில் ஆபத்தில்லாதவர்கள், அப்பாவிகள், குழந்தைகள்,வயோதிபர்கள், குற்றமுள்ளவர்கள்,குற்றமற்றவர்கள்,இளைஞர்கள் என்று எல்லா வகையினரும் அடக்கம்.
சில குற்றங்கள் தனி நபரை மட்டும் பாதிக்கும். சில குற்றங்கள் ஒரு சமுதாயத்தையே அழிக்க வல்லது. போதைப்பொருள் கடத்தல், மருத்துவ ஊழல், விவசாய ஊழல், அரசியல் குற்றங்கள், போர்க்குற்றங்கள் அத்தகையன. இவ்வாறான குற்ங்களுக்கு தனி நபரோ ஒரு சிறு குழுமமோ எப்போதும் பொறுப்பாக முடியாது. குறிப்பாக போதைபொருள் உபயோகம், கடத்தல் இரண்டுமே இரு தரப்பாலும் தெரிந்தே செய்யப்படுகிறது. கடத்துபவருக்கு பிரக்ஞை இருப்பின் அவருக்கு அது பற்றிய விளைவுகள் தெரியும், உபயோகிப்பவருக்கு கட்டாயம் தெரியும். சிறு குழந்தையாயினும் போதைபொருட்கள் தவறானவை என்கிற பதாகை எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று. அவர்கள் தருவதால்த்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று சொல்லவே முடியாது. சட்ட விரோதமான எல்லாச் செயல்களுக்கும் பின்னால் மிகப்பெரிய வணிகப்புலங்கள் இருக்கும். இங்கும் அவ்வாறே.
இருப்பினும் தண்டனைகள் தனிநபர்க்குக்கு ஏற்படும் பாதிப்பைப் பொறுத்தே வீரியப்படுகின்றது. ஒருவனை பதிலுக்குக் கொல்ல வேண்டும் என்கிற அவாவும் வெறியும், அவன் ஏற்படுத்தியிருந்த பாதிப்பைப் பொறுத்தே விளைகின்றது. நிர்பயா பாலியல் வன்முறையின் போது தூக்குத்தண்டனையை ஆதரித்த அனைவரும் போதைபொருள் கடத்தலின் இரண்டு குற்றவாளிகளை காக்கத்துடிக்கின்றனர். பதினேழு வயதான ஒரு குற்றவாளியை வயதின் காரணமாக தூக்குத்தண்டனையிலிருந்து விலக்கியதற்காக எல்லோரும் சினமுற்றார்கள். தூக்குத்தண்டனையின் பின்னரும் அவர்களை தூற்றினார்கள்.
போதைப்பொருள் ஒரு சமுகத்தை எவ்வாறு சீர்குலைக்கும் என்பது பற்றி அறியாதவர்களா இவர்கள்? ஒருவேளை இதே போதைபொருளை பாலியல்த்தண்டனை கைதிகள் அன்று உபயோகித்திருக்கலாம். அவர்கள் அன்று குடி போதையில் இருந்தார்கள்.
குடிபோதையில் இருந்தார்கள் என்பதால் மன்னிக்க வேண்டுமா? சாராயம் நிலைகுலைய வைக்குமா? சாராயம் சுயநினைவை எப்போதும் இழக்கவைப்பதில்லை என்பதை மருத்துவ ரீதியாக அனைவரும் அறிவர். இருந்தும் குடித்தால் அவர்கள் அப்படித்தான் என்கிற மன்னிப்பை யார் பரவலாக்கினார்கள்? ஒரு குற்றம் செய்ய முன்னர் மது அருந்துவது எந்தவகையில் நியாயப்பாடு ஆனது?
தூக்குத்தண்டனை சரியானதா? சட்டம் என்ற ரீதியில் தனிமனிதனின் வாழும் உரிமையை பறிப்பது எந்த வகையில் ஒரு அமைப்பிடம் போய்ச்சேரும்? தூக்குத்தண்டனை வழங்கியதன் பின்னர் டெல்லியிலோ, அதனை பார்த்த நாடுகளிலோ பாலியல் வன்முறை குறைந்ததா?
உதாரணத்திற்கு தமிழினப் படுகொலைக்காக சம்பந்தப்பட்டவர்களை (ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்) தூக்கில் போடவேண்டுமென்றால் நாலாபக்கமுமிருந்து எல்லோரும் ஆமோதிப்பார்கள். கொண்டாடுவார்கள். களிப்பார்கள். ஆயின் நாட்டின் பரிபாலனத்திற்காக "நாலு பேர் நல்லா இருக்கோணும் என்றதுக்காக" / பெரும்பாண்மை மக்களின் ஒளிமயமான எதிர்காலம் குறித்து செய்யப்பட்ட கொலைகள் சரியானவை தானே? இப்படி நியாயப்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா? இல்லாமல் கட்டாயம் தூக்கில் ஏற்றவேண்டும் என்று நினைப்பீர்களா?
அடுத்த உதாரணம், என்னை பாலியல் ரீதியாக யாராவது வன்முறைப்படுத்தி உயிருடன் விட்டால், நபரை கட்டாயமாக தண்டிக்கச் சொல்லுவேன். இருப்பினும்
கொலை செய்ய வேண்டுமா என்பதை ஓரளவு முதிர்ந்த மனநிலையில் யோசித்து இல்லையென்பேன். அதே வேளை எனது மகளையோ/மகனையோ யாராவது பாலியல் ரீதியாக அச்சுறுத்தப் பார்த்தாலே அவர்களை வேரறுக்க வேண்டுமென்று தோன்றும். தனிப்பட்ட ரீதியில் வன்மம் தோன்றும். அதேசமயம் பக்கத்து ஊரில் ஒரு பெண் பாலியல் ரீதியாக வன்முறைப்படுத்தப்பட்டால் சமுதாயத்தின் மீது கோபமும், அதற்கெதிரான சமுக அசைவுகள் சிலதையும் செய்வேன். அவ்வளவு தான் மூன்றுக்குமான வித்தியாசம்.
தண்டனைகள் எவ்வாறு வேறுபடுகின்றது? ஒருவருக்கு மரண தண்டனை வேண்டும் என்பதைக் கொண்டாடும் மன நிலையிலும்,இன்னொருவருக்கு மரண தண்டனை கூடாது என்று யாசிக்கும் மனநிலையிலும் மக்கள் எவ்வாறு ஆனார்கள்?
மிகவும் நெகிழவைக்கும் கடைசி நேர விருப்பங்களை இந்தக் கைதிகள் முன்வைத்திருந்தார்கள். சான் தனது காதலியை, இறப்பதற்கு முந்தைய இராத்திரி திருமணம் முடிக்க வேண்டுமென்று விண்ணப்பித்தார். அந்த ஒரே ஒரு இரவு மட்டுமென்பது எவ்வளவு நெகிழ்வுக்கும், சொல்லப்பட்டு முடிக்கப்படாத காதலுக்குமுடையதாய் இருந்திருக்கும். அதனை நினைக்க நினைக்க சோகம் பீறிடும். அதே போல மயூரன் ஓவியங்களுடன் தன்னை இருக்கவிடுங்கள் என்றார். தன் இறப்பையும், தனது இறப்பிற்கு முன்னைய கணங்களையும் ஆவணப்பத்திவிடத் துடிக்கும் ஒருவன் தான் வாழ்வதற்காகன நிகழ்தகவை எப்படிப் போட்டிருப்பான்? எவ்வளவு நெகிழ்வானது இந்த இரண்டு விடயங்களும்?
உலகில் கோடான கோடி மக்கள் இறக்குமுன் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று படம்பிடித்துக் காட்டப்பட்டால், இந்த உலகத்தில் யாருமே நின்மதியாக இருந்துவிட முடியாது. எல்லா அற்ப மனிதர்களுக்குள்ளும் வாழ்க்கை பற்றிய நிறைவேறாத அங்கலாய்ப்புகள் நிறைந்து ஊற்றிக்கிடக்கிறது. யாரை தூசு தட்டிப் பார்த்தாலும் அவர்களுக்கான நியாயமும், அவர்களுக்காக அழுபவர்களும், அந்த ஒரு கண வாழ்தலின் ஆர்ப்பாட்டங்களும் கொட்டிக் கிடக்கிறது. ஒருவரை விடுத்து ஒருவரைப் பார்க்கவியலாது.
நாங்கள் எல்லோருமே அறம் சார்ந்த மனிதர்களை மட்டுமே கொண்டாடுகிறோம். அறம் பிறழ்ந்தவர்களை நினைப்பதில்லை. அவர்களுக்கான அறம் பிறழ்ந்ததன் போதான நிகழ்வுகளை தேடிப்பார்ப்பதில்லை.
எல்லோரும் பாவம். எல்லோரும் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று பாவமன்னிப்பும் வழங்கிவிட இயலாது. ஒட்டுமொத்தமாக எல்லோரும் எல்லாக் குற்றத்துக்காகவும் தண்டிக்கப்படுவதும் இல்லை. ஆயின் இவை எல்லாவற்றுக்கும் இடைப்பட்ட மனிதர்கள் இந்த எல்லா நியதிகளுக்காகவும் துன்பப்பட்டும், வருந்தியும், நின்மதியடைந்தும், போராடியுமே சாகவேண்டுமா?
ஒரு குற்றத்தின் கடைக்கோடி பிரதிநிதி தண்டனைக்குட்படுத்தப்படுவதும் அதன் பிரதானி இன்னுமின்னும் தன் பலத்தை பெருப்பித்துக் கொள்வதும், இறுதி வரைக்கும் வெளித்தெரியாமலேயே ஏகபோகமாய் வாழ்வதும் இங்கு தான். இந்தத் தண்டனைகள் அவர்களை எந்தவகையிலாவது பாதிக்குமா என்றால் இல்லை. அந்த ஏகபோகிகள் நம்மிடையே நல்லமுறையில் ஊடுருவியுள்ள மதங்களாகவும், அரசியல் குழுமங்களாகவும், இனங்களின் தூண்களாகவும், பெருவணிக மூலங்களாகவுமிருப்பர். அவற்றை எப்படி ஒழிப்பது?
பெண்களை போகபொருளாக பார்க்கும் ஆண்கள், பெண்களுக்கு பாடம் கற்பிக்கத் துடிக்கும் ஆண்கள்,இவர்களுடைய அன்றாட வாழ்க்கை- எல்லா சாதாரனமாணவர்களது நெருக்கடிகளையும் சேர்த்தல்லவா தமக்கானது என்று வாழ்ந்திருப்பார்கள். இவர்கள் அப்படி நினைப்பதற்கு காலாகாலமாக நாங்கள் உருவாக்கி வைத்திருந்த எல்லாமுமல்லவா காரணம்? இப்போது கூட பெண்கள் இரவில் தனியாகப் போவது ஒரு ஆணினால் தண்டிக்கப்படக் கூடியது என்ற நிதர்சனம் அவன் வாழ்வில் இருக்கிறதில்லையா? எந்தளவுக்கு வாழ்க்கையை அவன் உன்னிப்பாக வாழ்ந்திருப்பான்? அவன் இறக்கும் போது கூட அழியாத அந்த நிதர்சனம் அவனை எவ்வளவு வாட்டி இருந்திருக்கும்? இதை சிரிப்பதற்காக சொல்லவில்லை. வாழும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. வாழும் உரிமை பறிக்கப்படுவது, குற்றம் பற்றிய பயத்தை நிலைநாட்டவல்ல. ஆதிக்கத்தை, அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகவே.
குற்றங்கள் பற்றிய பயமும், பிழைகள் பற்றிய தெளிவும் தண்டனைகளால் எழுப்பப்படக் கூடியதல்ல. இதே இடத்தில் நான் இருந்திருந்தால், தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள மன்னிப்புக் கேட்டிருப்பேன். நன்நடத்தைக் காலத்தால் தண்டனையைக் குறைக்க, 'மிகவும் நல்லவள்' வேடம் போட்டிருப்பேன். நானும் ஓவியம் கீறி இருப்பேன். ஏராளமான கதைகள், கட்டுரைகள் எழுதியிருப்பேன். மிக மிக நேர்மையானவளாக வேடம் போட்டிருப்பேன். வெளியே வருவேன் என்று முழுமையாக நம்பியிருப்பேன். இருந்தும் தூக்குத்தண்டனை கட்டாயமக்கப்பட்டிருந்தால், இறப்பதற்கு முன்னம், " பிறப்புகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், மீண்டும் பிறந்தால் இன்னும் நாசுக்காக கடத்தலில் ஈடுபட வேண்டும். பிடிபடாமல் கடத்துவதெப்படி என்று அறிந்து கொண்டேன்" என்று கூறி விட்டு துப்பாக்கியில் தொளை வாங்கி இறந்திருப்பேன். இறுதி வரைக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்கிற தகிடுதத்தங்ககளைத தவிர வேறெதுவும் நினைவிலிருந்திருக்காது. திருந்தி இருக்கவே மாட்டேன். அல்லது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றிருப்பேன்.
ஆயுள் தண்டனை ஒன்று தான் உபயோகமான தண்டனை. சில சமயங்களில் தூக்குத் தண்டனை, ஒரு வகையான மன அமைதியைத் தரும். கடந்த காலங்களின் குற்றமிழைத்த அவமானங்கள், மேலதிகத் தண்டனைப் பயம், மீள வாழ்தல் பற்றிய பயம், உலகம் பற்றிய இன்னொரு பார்வை, குற்றமிழைத்தவரின் உறவுகள், எல்லாமுமே தூக்குத்தண்டனையை விட அபாயமானவை. இறப்பு மனிதனுக்கு அமைதியையும்,அது சார்ந்தவர்களுக்கு துன்பத்தையும் தரும்.
குறித்த ஒரு நபர் மிகவும் வருந்தித் தெளிய வேண்டுமென்றால் ஆயுள்தண்டனை தான் தீர்வாக இருக்கும். அது பாலியல் வன்முறையாளிக்கோ,கொலையாளிக்கோ,கடத்தலாளிக்கோ,அரசியல்வாதிக்கோ யாருக்காகவிருப்பினும். ஆயுள் தண்டனைக்குரிய உரிய நிரல் இருக்க வேண்டும். தனிமை, ஒருவரை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி, அதை உணரக் கூடிய நிலையில் அவர்கள் இருப்பதே மிகப் பெரிய தண்டனை. அதனை விடப் பெரிய தண்டனைகள் இருப்பதாக அறியேன்.
வாழும் உரிமையை பறிப்பது, அமைப்புசார்ந்த நியாயமில்லாதது.
- Get link
- X
- Other Apps
Labels
மரணதண்டனை
Labels:
மரணதண்டனை
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment