அண்மையில் பரவி வரும் பெண் வெறுப்பு நோய் சம்பந்தமானது,
பெண்கள் மீதான இயலாமையை நினைத்துக் குமுறிக் குமுறி எல்லா இடங்களிலும் தமது தலையை பிய்த்துக்கொள்வதும், தாங்கொணா வயிற்றுளைவில் குடலேறிக் கிடப்பவர்களையும் பார்க்க முடிகிறது. மிக நல்லது.மீண்டும் மீண்டும் உங்களது நிலைப்பாட்டினை அருவருப்பு சார்ந்ததாகவே நிரூபித்து வருகிறீர்கள். நீங்கள் நிரூபிக்கவும் தேவையில்லை, உங்களது இயல்பான குணாதிசயங்கள் அதுவாகவே வெளிவருகின்றது. எங்களுக்கு இது வேடிக்கையின்றி ஒரு பொருட்டும் இல்லை.
பெண்ணுடலை மோப்பம்பிடித்துப் பார்க்கிற பாலியல் வறுமையும், வசை வறுமையும் கொண்ட கூட்டங்களே, எழுத்தையும், திறன்பாட்டினையும் கூட உங்களால் அதைத்தாண்டிப் பார்க்க முடியவில்லை. உங்கள் மன நோய்களுக்கு தக்க மருந்தினை உங்கள் வயதான காலங்களில் உங்களிடம் தர வேண்டாமே என்று பார்க்கிறேன்.
எனக்குத்தெரிந்து எந்தப் பெண்ணும் பிச்சை வாங்கிப் புத்தகம் வெளியிடுவதில்லை. எந்த ஆணினுடைய கையாலாகாததனத்தையும் பார்த்துப் பயந்ததும் இல்லை ;இந்தளவு நோய்க்கூறும் இனங்காணப்படவில்லை.
பெண்ணியலாளர்கள் , பெண் எழுத்தாளர்கள், பெண் களப்பணியாளர்கள், ஏன் பெண்களாக இருக்கிற எல்லோருமே இவர்களுடைய கட்டாக்காலித்தனத்திற்கு ஆப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதே இவர்களது பேரவா.
பருவம் தப்பிய வசந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிற என்னினிய அங்கிள்மாருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய பாலிய வயதில் ஏற்பட்ட கோளாறுகளால் நிறையப் பாதிக்கப்படிருக்கிறீர்கள். பாவம் நீங்கள்.
வேணுமென்றால் எங்களுக்கெதிராக ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்களேன். தனித்தனியாக அறையைப் பூட்டி விட்டு ஒவ்வொருவராக அழுகிறதை ஒரு கிழமைக்கு மேலாக பார்க்க முடியாது.
கால்நூற்றாண்டு வயது கூட ஆகவில்லை எனக்கு. எங்களுடைய சிந்தனை பற்றிய தெளிவும், தேவையும், தெரிவும் என்னவென்று எங்களுக்குத் தெரியும். எங்கள் அப்பாக்கள் யாரும் எங்களை எழுத்தாளர் ஆக்குவதிலோ, ஏரோப்பிளேன் ஓட்டியாக ஆக்குவதற்கோ விருப்புக் காட்டுவதாகக் கூறவில்லை. என்னவாக வரவேண்டும் என்பது எங்களுக்கே தெரியும். இது எங்களுடைய தலைமுறை.
ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதுப் பெண்குழந்தை என்ன வாசிக்கிறது என்பதை, நாற்பது வயதில் உங்களால் நினைத்தும் பார்க்க முடியாது. ஒட்டு மொத்தமாகத்தான் சொல்கிறேன்.
என்ன படித்தோம், என்ன படிக்கிறோம், என்ன வாசிக்கிறோம், என்ன எழுதுகிறோம், என்ன களப்பணி செய்கிறோம் என்பவை பற்றிய விழிப்புணர்வு தாராளமாக எங்களுக்கிருக்கிறது. இன்றைக்கு பெண்களின் நிலை என்பதை நீங்கள் தீர்மானிக்கவில்லை; கடந்து வந்த எல்லாப் பெண்களும் தீர்மானித்தது தான்.
ஆரோக்கியமாக கடைசியிலே எதையாவது சொல்லுவதாக நினைத்துக் கொண்டு, உங்களுடைய பிடியில் உங்களின் தொடர்ச்சிகளை நீங்களாக அனுமதி கொடுத்தாலன்றி உருவாக முடியாது என்ற அலட்சியத்தை வாந்தியெடுத்துள்ளீர்கள். வாந்தி ரொம்ப நாறுகிறது.
பி.கு : வாந்தியெடுத்தவர்களை விட வாந்தியை முகர்ந்து பார்த்து வாசனை சொல்லும் குறிசொல்லிகளை பார்க்கும் போது பஜன்லால் சேட்டு ஞாபகம் வாறதை தவிர்க்க முடியேல்ல.
-நிலா லோகநாதன்.
Ungalathu vaarthaihal kadumai nirainthu kanappaduhirathu. Psycological counciling'kku parinthurai seihintren
ReplyDelete