பழங்கவிதைகள் சிலவற்றை ப்ளாக்கில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.இவை அனைத்துமே 2007ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை. பள்ளிக்கூடக் காலத்தில் எழுதப்பட்டவை.
தொலைந்து போன சில தடயங்களைத் தேடித் பகிந்துகொள்வதில் உள்ள ஆவணப்படுத்துகை, ஒருவகை நிறைவானதும், இன்பமானதும் கூட. இன்றைய எழுத்துக்கும் அன்றைய எழுத்துக்குமிடையிலான இடைவெளியை இன்னமும் வியந்துகொண்டிருக்கிறேன்.
நிலா.லோ
2012
இந்தத் தொப்பி.......
இந்தத் தொப்பி யாருக்குப் பொருத்தமென்று
இளையோரையெல்லாம் கேட்டு வைத்தான்.
இன்னோரன்ன இழவுகளாலே
இனிப் பொருத்தமென்றால் இது தான் என்றான்.
அவனைக் கண்டவரெல்லாம் அது அவனுக்குத் தானென்றார்.
இவனைக் கண்டவரெல்லாம் அது இவனுக்குமென்றார்.
ஒருவரும் தனக்கென்று சொல்லி
தலை கொடாமல் சென்ற போது-
அந்தோ அது வந்துதலையில் வீழ்ந்து -தெறித்து,
முன்னோர் அலறி முறை கெடும் வண்ணம்
வீணாய்ப் போனார் எம்மின மக்காள்!
2004
கற்புடை பாடலொன்று!
பூனைக்குட்டிகளைச்
சாம்பலக் கிடங்குக்குள் வளர்க்கும்
பெண்களைப் பற்றி
கற்புடை பாடலொன்று பாடவா?
இறுதி முறையாக துயரப்பறவை
வட்டமிட்டபோது,
பூனைக்குஞ்சுகள் அடுப்பங்கரையச்
சுற்றி வட்டமிட்டனவா?
பெண்களே நீங்கள் அதனருகில்
நிற்கும் வரை பாதுகாப்பாக
குளிர்க்காய்வதாய் நினைத்துக் கொள்கிறீர்களா?
பூனைகள் மீன்களை
அடுப்பங்கரையிலிருந்தே விழுங்குகின்றன.
நீங்கள் கழுவிய மீன்களைப் பூனைகள்
விழுங்குதல் நியாயமாகப் படுகிறதா?
ஒ..பெண்களே,
உங்கள் பூனைகளுக்கு
அடுப்பங்கரைக்கு வெளியில் உணவைத் தேடித்தாருங்கள்.
அவை விழுங்குவதற்கான பூச்சிகளும்,
பூரான்களும் அவ்விடமே உள்ளன!
ஒ..பெண்களே
தேடுதலுக்கு அரியவையும் உண்டோ?
பேச்சற்ற பண்பொன்றை
உனக்கு மற்றவர்கள் போதிக்கவிளையும் தருணமொன்றில்,
சகோதரி,
உன் தேடுதலை
பலவீனங்களால் மட்டுப்படுத்தாதே!
இயல்பாகவே,
எதிர்ப்புணர்வை நேசிப்பதைக்காட்டு !
அத்தகைய நாளொன்றில்,
யாவரிலும் வலியோளாக நீ வட்டமிடுவாய் !
2007
மக்களைப் பற்றி.....
மக்களே கவிதையின்பாடகராயின்
பாடல்கள் எழுவது மக்களைப் பற்றியோ ?
மக்களே காலத்தின்
நெருக்குதலாயின் நெருக்குதல்
மக்களைப் பற்றியே ஆமோ ?
மக்களே உங்கள் விருந்தினராயின்
விருந்துகள் அவரை உபசரிக்காவோ ?
மக்களே உங்கள் விருந்தினராயின்,
மக்களும் விருந்தாய் மாறுதல் ஆமோ ?
மக்களே உங்கள் இலக்குகள் ஆயின்,
மக்களைப் பற்றியே-பேசுவார் எல்லாம்-
மரித்தவர் ஆவதைத் தடுப்பவர் எவரோ ?
2006
தூக்கணாம் குருவியின்........
தூக்கணாம் குருவியின்
கூடுகளைப் பாரீர்.தூர்ந்து விழுந்த
அந்த மரத்தைப் பாரீர்.
உருக்குலைந்த என் தோழர்கள்-
நெருக்குதலைக் கேளீர்.
எங்கும் மேன்மையை தங்குதல் பற்றி
எவர் கதைப்பார் ?
தங்கும் தரித்திரம் தொலைவதும் பற்றி எவர் கதைப்பார் ?
எரிந்த களத்தினில் இடி விழுதலைப் பற்றி-
எவர் கதைப்பார் ?
கிளைத்த பணத்தின் கிளையொன்றின் மீது,
கிடந்தது கதைகள் எழுதுவார் பலர்-
மேன்மை பெற்ற மேல்சாதியரெல்லாம்
கீழ் சாதியாரைத் தீண்டியதை.
ஆண்டாவா ஆண்டவா அடுக்காதென்று
அலறியவரெல்லாம்
மீண்டவாறு வந்த கதை யார் சொல்வார் ?
மீண்டும் புதிய நாள் போலொன்று
புதிதாய்ப் பூர்க்க யார் வைப்பார் ?
2002
சில சொற்களைப் பற்றி....
சில சொற்களைப் பற்றிமெதுவாகக் கதைப்பதில் உமக்குச் சந்தோசமா?
ஓம் ஓம்..சந்தோசம்....
சில செயலக்ளைப் பற்றிமந்தமாகக் கதைப்பதில் உமக்குச் சந்தோசமா?
ஓம் ஓம் சாலச் சந்தோசம்.......
இன்னும், சில வாதங்களை வாதிக்காமலிருப்பதில் உமது நோக்கமென்ன ?
உதவாக் கதையை கதையாதிருப்பது நல்லது!
நல்லது,
உமது உணவை யார் தந்ததுஎன்பதைப்பற்றியும் கதைக்க வேண்டாமா?
ஐயோ, எசமானர் வீட்டு நாய் கடிக்கும்!
2007
அப்பாவி!
சிங்களவன் எம்மை மிதிப்பானோ ?
....த்திரம் பருக்குவானோ ?
தாரில் வீழ்த்திச் சுடுகடிக்கச் சாக்காட்டுவானோ ?
மித்திப்பான்-பருக்குவான்-சுடுகடிக்கச் சாக்காட்டுவான்!
நாங்கள் இப்போதும் ,
இதற்கு முந்தியும்அவனுக்கென்ன செய்தோம்?
முதலில் பருக்கினோம்,
தாரில் போட்டோம்,
பின் முதுகில் எழுதினோம்.
சிங்களவனெம்மைச் சுடுவதுமுண்டோ?
ஓம், அதிகமுண்டு.
இதெற்கென்ன நாம் செய்வோம்?
வலக்காதில் பென்சிலைப் புகுத்தி,
இடக்காதால் எடுப்போம்-
சிங்களன் எங்கள் பெண்களைபிள்ளைபெறச் செய்தானா?
ஓம், அதிகமாய் .... அதிகம் செய்தான்.....
நாங்கள் என்ன செய்தோம்?-
அவன் பெற்றதையும், நாம் பெற்றதையும்
வெளிநாடு அனுப்பிவிட்டு -ஒளிந்துகொண்டோம்.
இனி சிங்களனுக்கு நாம் என்ன செய்வோம் ?
அதிகபட்சம-
வேறொரு நாட்டிலிருந்து கடலில் முத்துக் குளித்துவிட்டு
கொடி தூக்குவோம்!
சிங்களன் இனி என்ன செய்வான் ?
அவன் தானே, அப்பாவி ஆவான்!
***
2006 மாசி 17
நச்சுக்குப்பி
என்னுடைய தோழர்கள்
வயலிலே களை பிடுங்கினார்கள்.
என்னுடைய தோழர்கள்
வெயிலிலே வேர்வை சிந்தினார்கள்.
என்னுடைய தோழர்கள்
புரட்சியைத் தூண்டிப் பாடினார்கள்.
என்னுடைய தோழர்கள்
எல்லா நாடுகளிலும் இருந்தார்கள்-
என்னுடைய தோழர்கள்
எனக்கு அரிசியைத் தந்தார்கள்.
என்னுடைய தோழர்கள்
வீரத்தை விளைவித்தார்கள்.
என்னுடைய தோழர்கள்
பழமைகளை முறியடித்தார்கள்.
என்னுடைய தோழர்கள் ,
ஒருநாள்,என்னையும் போராட அழைத்த போது,
நச்சுக் குப்பியொன்றை இலவசமாகப் பரிசளித்து-
வெட்கமில்லாமல் வாழ்ந்து வந்தேன்.
என்னுடைய நீரையும்,
என்னுடைய காற்றையும்,
என்னுடைய வளத்தையும் அவர்கள் பிடுங்கிய போது,
எனக்கும் உண்பதற்குநச்சுக்குப்பியைத் தவிர வேறிருக்கவில்லை.
2004
Comments
Post a Comment