Skip to main content

ஒரு கதை :)


ருக்மால் செனவிரெத்தின ஆகிய கணவனும் துலாஞ்சலி பியுமிகா வன்னப்புகே ஹிமேஷ் ருக்மால் செனவிரெத்தின ஆகிய மனைவியும்....






ண்டைக்குக் காலமை நடந்த நிசக் கதை, , தொழில் நிமித்தமா அலுவலகத்தில் (வருசத்தில ஒரு நாள்த் தான் தொழிலுக்கே போறது, அதில தொழில் நிமித்தமா  வேறயா எண்டு கேக்கப்படாது  ) மனைவி -கணவன் இருவருக்கும் விவாக இரத்துக்கான கவுன்சிலிங்  வழங்க வேண்டி இருந்தது. அவர்கள் தம்பதிகளாகி   ஏழு வருடம். இவ்வளா காலமும் எப்பிடி ஒண்டாக் குப்பை கொட்டினாங்களோ எண்டு மூக்கில விரல் வைக்கிரளவுக்கு   அலுவலக அறைக்குள் நுழையும் போது சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளோடு வந்து சேர்ந்தீச்சினம்.

சில வார்த்தைகள் எங்கையோ எனக்குக் கேட்டாப் போல இருந்தாலும் சரியா விபரம் அறிய முடியேல்ல, எனக்கொரு நண்பர் இருக்கிறார்,சென்சார் வார்த்தைகளில வல்லவர் ; இனிமேல்,  ஏதாவது கிரகக் கோளாரில அவரோட  கதைக்க முடியிற போது , அவரிட்டைக் கேட்டால்ச் சொல்லுவேர்   என்று அவற்றைக் கண்டும் காணாததுமாகக் குறிப்பெடுத்து வைப்பமா எண்டு யோசிக்கிறதுக்குள்ள , ரெண்டு பெரும் வந்து சேர்ந்தீச்சினை.


ஏறத்தாள கடந்த ,ஒரு வருடத்துக்குள் லீகல் அட்வைசிங் செய்யேக்க, அதானுங்கோ சட்ட ஆலோசனை குடுக்கேக்க விவாகரத்து கேஸ் எதேனுமேண்டா வீட்ட போய் , அலைபாயுதே, பாலும் பழமும், விண்ணைத்தாண்டி வருவாயா, மின்னலே, வாரணம் ஆயிரம், சூரியகாந்தி, அலைகள் ஓய்வதில்லை, ஒரு தலை ராகம்,பூவேலி, என்று ஒரு தொகைக் கலெக்ஷன்  சினிமாப்படங்களைச் சிபாரிசு செய்து,  இருந்து நாலு நாளைக்கு ரெண்டுபேருமா சேர்ந்து பாருங்க ;அதுவும் சரிவராட்டி, ரெண்டு பெரும் சேர்ந்து  கொழும்பு டூ கண்டி ரயியில்ல  மழை நாளாப் பார்த்து ஒரு ட்ரிப் அடிச்சிட்டு வாங்க, அதுவும் இல்லாட்டி நான் சொல்லுற ஒரு கடையில போய் பால் அப்பமும்  வெறுந் தேத்தண்ணியும் குடிச்சிட்டு வாங்க....கொய்யாலே அதுவும் சரிவராட்டி ' அந்தக் கடையில' போய் டூனா சப்மரின் தொடர்ந்து ஐஞ்சு நாளைக்குச் சாப்பிட்டுப் பாருங்க....திரும்பச் சேர்ந்தாலும் சேர்ந்திடுவிங்க.... ( ஒரு மாசங்கழிஞ்சு பிரிஞ்சு போனா என்னை அடிக்கக் கூடாது )

உதில ஒண்டுமே சரிவராட்டி திருப்பியும் என்னட்ட அலுவலகம் வாங்க, அதுக்குப் பிறகு பாத்து ஏதாவது செய்வம், இப்பிடித் தான் நான் முதலில ஒரு கை தேர்ந்த வழக்கு நிபுணரைப் போலத் தொடங்குவன். வாறாக்களும்  என்னையும் நம்பித் தலையாட்டிட்டுப் போய்ச் சேருங்கள். பொதுவாப் பிரிச்சு வைக்கப் போறதில்ல என்ட முடிவோட தான் கவுன்சிலிங்கிற்குப் போவதுண்டு. எதுக்கு அடுத்தவன் பாவம், எங்களுக்கு......


அம்மாவுடன் எப்போதாவது இப்பிடி வேலை பற்றி உரையாடும் போது, உனக்கெதுக்கு இந்த வயசுக்கு மீறின வேலை, பேசாமப் போய் வீட்டுப்பாடம் செய்...வேலையும் வேணாம், ஒண்டுமும் வேணாம், எண்டு கத்துவா....இணைய இணைப்பிற்கு மூவாயிரமும், போனுக்கு ரெண்டாயிரமும்  பில் வரும் போது இந்த மாதம் வேலைக்குப் போயிருக்கலாமோ என்று தோணுறது  வேற கதை . ஆகப்பெரிய  பெண் வன்முறை, ஆண் வன்முறை, இத்தியாதி எண்டால் செய்ய வழியில்லை, ஆனா பிரிக்கிற கதை சொன்னால்  சீனியர் லோயர் சந்தோஷப்பட்டாலும், அம்மா வீட்டுக்கு வந்தோன்ன அடிப்பா. அருமந்தக் குடும்பத்தைப் பிரிச்சு வைக்கிற பாவத்துக்கா  உன்னைப் படிக்க வெச்சன்...இந்தப் பயத்துக்காகவே இன்னும் ஒருத்தருக்கும் நான் சுதந்திரம் வழங்கினதில்லை :)


உங்கட சுதந்திரத்தை நீங்க எடுத்துக்கொள்ள நான்  ஏனப்பா  எண்டு கேட்டாத் திருந்தினாத் தானே உவங்கள் ! திருப்பத் திருப்ப  இங்கயே வாறாங்கள். நான் ஆர் சாமி உனக்குச் சுதந்திரம் வாங்கித் தர எண்டாலும் விளங்கித் துலையிதில்லை.ரெண்டு மனிதர்களுக்கிடையிலான பிணக்கை இன்னொரு சக மனிதனாலைத்தீர்த்து, இண்டையில இருந்து உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, ஓடிப்போங்கோ , இண்டையோட நீங்க ஆரோ, அவங்கள் ஆரோ, ரெண்டு பேருக்கும் சம்பந்தமே இல்லை, நடந்ததை எல்லாம் மறந்திடுங்கோ , இனிமேல் ஆளையாள் பார்க்கவோ பேசவோ கூடா ,எண்டு நாக்கில நரம்பில்லாமலுக்கு ,நாட்சந்தியில வெச்சு நாலுபேர் பார்க்க   குரங்கு அப்பம் பிச்சுக் குடுத்த  கதையை என்னால செய்ய எலா...
இப்பிடியெல்லாம் இருக்கேக்க,


மேற்குறிப்பிட்ட  மனைவி  கணவன் ரெண்டுபேருக்குமே  மேலே சிபாரிசு செய்த சினமாப்படங்கள், ரயில்ப்பாதை  உத்சவம், மழை நாள், தேத்தண்ணி, சப்மரின் என்று ஜிலு ஜிலு விஷயங்களை எல்லாம்  சொல்லிப் பாத்தாச்சு, ஆங்... இதுக்குமேல ரொமாண்டிக்காச் சொல்லுறதுக்கு எனக்கென்ன அனுபவமா இருக்கு , வாயில நல்லா வருகுது, எனக்குத் தெரிஞ்சதைச்  தானே நானும் சொல்லுவன்.... !


ஹ்ம்ம்... இப்பிடியே என்ட  ஐடியாவின் பயனாக எதுவும் உருப்பிடாமப் போக, சென்சார் செய்ய வேண்டிய கெட்ட வார்த்தைகளோடு எனது அலுவலகம் வந்து  சேர்ந்தார்கள். (அந்த அலுவலகம் எங்க இருக்கு எண்டெல்லாம் கேக்கக் கூடாது )


மனைவியும் கணவனும் உள்ளே வந்த போது, கணவன் பாவித்திருந்த பேர்பியூமை அவன் மாற்றிக் கொண்டால்க் கூட இந்த  வழக்கில்  குறிப்பிடத்தகு மாற்றம் ஏற்படும் என்பதை  நான் யூகித்திருந்த போதும்  அதை விட அவன் அவசரமாக  மாற்ற வேண்டியது அவனது   கருவாட்டுக்கடைச் செருப்பை என்று பொறி தட்டியதினால் அவனது வாசனைத்திரவியம் பற்றிய கருதுகோளை மனதுக்குள்ளேயே அழித்துக்கொண்டேன். அன்னார்  சவரம் செய்து விட்டு வெங்காயத்தை  மூஞ்சியில் தேய்த்துக் கொள்ளுவார்  போல, ஆப்டர்  ஷேவ்விற்குப் பதிலாக, அப்பிடியொரு நெடி !

அவர்களுக்குக் குழந்தையும் இல்லை என்பதை  மனைவி  ஏற்கனவே குறிப்பில் தந்திருந்தார். வெங்க்காயத்துக்குப் பொறந்தவனே , இந்த லட்சணத்தில இது வேறயா :)


ருக்மால் செனவிரெத்தின ஆகிய கணவனும்  துலாஞ்சலி பியுமிகா வன்னப்புகே ஹிமேஷ்  ருக்மால் செனவிரெத்தின ஆகிய மனைவியும் எனது அலுவலகத்துக்குள் வரும் போதே  பாலர் பாடசாலைப் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் கோள்மூட்டுவதட்காக ஆயத்தமாகிக் கொள்வதைப் போல, தத்தம் இரண்டு கைகளையும் முறுகிக் கொண்டு  அறைக்குள் ஓடி/ பாய்ந்து இரண்டில் ஒரு நிலையைச் செய்து கொண்டு வந்தனர்.


நான் மேலே சொன்னபடி , முதலில் இலத்திரனியல்க் கொப்பியில்  முட்டை முட்டை, கோடு கோடு-  போட்டு விட்டு, பிறகு, கணக்கில் கொஞ்சம் சமபாடுகளுக்கு இன்னுங்கொஞ்சம் சமன்பாடுகளை எழுதிக் கொண்டிருந்தேன். மல்லவறாய்ச்சி மேடம் தொலைபேசியில் அழைத்து  'ஈதர்-நெட்'  அசைமெண்டின் பின்புறத்தாளில் எதோ தமிழில் கிறுக்கி வைத்திருக்கிறீர் என்று ஆங்கிலத்தில் கேட்டார், அப்போது தான் ஞாபகம் வந்தது, அசைமென்ட் சப்மிசனுக்கு முந்தின நாள் மனம் சரியில்லாமல் இருந்ததும்,ஒற்றை கிடைக்காமல், ஒப்படையின் பின்புறத்தாளில்  தூய தமிழில் வாத்தியாரைத் திட்டி வஞ்சிப்பா  எழுதியதுமாக, அரசல் புரசலாக எதோ ஒன்று ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.

ஒ.. மை கோட் ..சம் திங் வென்ட் றோங் வித் மை அசைன்மென்ட் மேடம்...அய் வில் கன்க்லூட் தட், வென் ஐ யாம் தெயா ....


சீ யா ,தங்க்  யூ, குட் பாய்...இதர சொட்களெல்லாம் சொல்லிக் கடுப்பாகிக் கொண்டிருந்த தருணத்தில்த்  தான்,  ருக்மால் செனவிரெத்தின ஆகிய கணவனும்  துலாஞ்சலி பியுமிகா வன்னப்புகே ஹிமேஷ்  ருக்மால் செனவிரெத்தின ஆகிய மனைவியும் வந்து சேர்ந்தனர்.


மனைவியின், கணவனைப் பார்த்து புன்முருவி விட்டு, வழமையான இதர கேள்விகளைக் கேட்டு ,  அடுத்த அறைக்குள் இருக்கும் மன்சூர் அலிக்கான் உங்களுக்குக் கவுன்சிலிங் கொடுப்பார் என்றேன். அவரும் ஒப்புக்குச் சப்பாக, அடுத்த அறைக்குள் போனார், அந்தக் கணத்தில் மனைவியை விட்டு விட்டுப் போகிறதை அவர் மாபெரும் பிரிவாக எண்ணியதை நான் கவனிக்காமலும் இல்லை, பிறகு தலையைக் குழப்பி யோசிச்சாப்பிறகு, மனுசிக்காரி பல பல உண்மைகளை என்னட்டச் சொல்லிப் போட்டால் என்னாவதோ எண்ட காரணமாயிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்தேன்.


இருப்பினும் அக்கணவனும் மனைவியும் அறைக்குள் வருகிற போது அப்பிடியொரு திகில் முகத்தில் இருந்ததை நான் அவதானிக்காமலும் இல்லை.  ராஜேஷ் குமாரின் புத்தகமேதாவது அலுவலகத்தின் முகப்பில் தொங்க விடப்பட்டிருக்கிறதா அல்லது சீனியர் லோயரின் முகத்தை முகப்பூச்சு இல்லாமல்ப் பார்த்திருப்பினாமா என்று சிந்திப்பதற்குள் அது நடந்தது,

கேஸ் ஏற்க்கனவே சமர்ப்பிப்பு செய்திருந்ததினால் முன்கூட்டிய கவுன்சிலிங் அவர்களுக்குத் தொடங்க வேண்டிய நாள் அது, அதுவும்  நான் தான் செய்யோணும் எண்டு அவங்கட தலை விதி. விதியை வெல்வாரும் உண்டோ :)

உள்ளே நுழைஞ்ச மனைவிக்கு  நாற்பது வயதாவது இருக்கும், வெளிநாட்டில் இருந்து வந்தவர் போலவிருந்தார். நான்  மூக்கால் அழுதழுது வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தேன்.

வந்தவர், எனது பேரைச் சொல்லி , 'திருமதி' , இன்னார் இருக்கிறாவா என்று கேட்டார். பதிலுக்கு, நான் தான் அன்னார் எண்டு சொன்னேன், 'திருமதி' என்று குறிப்பிட்டதை அப்போதைக்கு கணக்கில் எடுக்கவில்லை.கொஞ்ச விபரங்களை ஏற்கனவே படித்தும் ஆதலினால் கிரகித்தும் இருந்தவற்றைக் கொண்டு , தொடங்கலாமா , அதுக்கு முன் ஏதாவது ஒரு பாணம் குடிக்கலாம் என்று, பீயோன் அண்ணரைக் கூப்பிட்டேன், 

கெட்ட வார்த்தை பேசிக் களைத்துப் போயிருந்த மனைவி ஒரேஞ்ச் ஜூஸ் க்கே  தனது வாக்கு என்றார், நான் வழமை போல கறுப்புக் கோப்பி என்றேன்.அதற்குப் பின்னும் கூட மனைவியின் முகம் வெலவெலத்துப் போய்க் கிடப்பதை நான் அவதானித்தேன். கெட்ட வார்த்தை பேசுபவர்களின் முகம் வெல வெலத்துப் போகும் என்பதைக் கண்கூடப் பார்த்தவளாகையால், காற்று வரட்டுக்கும் என்று ,வளி பதணிடுக்கியை கொஞ்சம் உயர்த்தி விட்டேன்.

ரிலாக்ஸ்... அம்மணி ! தயங்காமல், உங்களுக்கு விருப்பமான விதத்தில் இங்கே அமர்ந்து கொள்ளலாம், இங்கே அலுவலக அறை  அசௌகரியமாக இருந்தால் வெளியே வராந்தா இருக்கிறது..அல்லாட்டில்  மர  நிழல்..பூந்தோட்டத்துக்குப் போகலாம், உங்களது சவுகரியம் தான் முக்கியம், என்று  எனது குருவானவர் சொல்லித்தந்திருந்த
குளிர்ச் சொற்களை  விட்டேன்.

அப்போதும் மனுசிக்கு கண்ணில பிரளயம் தோணித் தோணி நிக்கிறது நிண்ட பாடில்ல....

எனக்கே வயித்தைக் கலக்கத் தொடங்கீட்டுது.... சாதுப்பிள்ளை மாதிரி  கோப்பியை மிடறு மிடராகக் குடிச்சுப் போட்டு,

நீளமான உட்சுவாசத்தை எடுத்து,  அதே நீண்ட வெளிச்சுவாசத்தை விட்டால் ஏவறையும் சேர்ந்து வருமெண்ட பயத்தில், வெளிச்சுவாசம் விடாமல் மூச்சுத் திணறி,சமாளிச்சுக் கொள்ள சாடையாத் தொண்டையைக் கனைச்சு, ம்ம்...சொல்லுங்கோ...எண்டு தொடங்கினன். 

சொந்தக் கதை சோகக் கதையைத் தொடங்கேக்க  பொதுவாய்ப் பெண்கள் மூண்டு விதமாய்த் தொடங்குவினம், ( அதுக்குள்ளே இல்லாமலும் இருக்கினம், ,அதைப் பிறகு கதைப்பம் )

ஒண்டு),
நான் நல்லாத் தான் பாத்துக் கொண்டன்...அந்த மனுஷன்....என்னை அப்பிடி நினைக்கேலையே....

ரெண்டு), கொஞ்சக் காலம் நல்லாத் தான் மேடம் போய்க் கொண்டிருந்தீச்சு,பிரகவர் வேற மாதிரி ஆகீட்டேர்.....

வேற மாதிரி எண்டா, என்று இந்த இடத்தில் நான் கேள்வி எழுப்போணும், அதற்கு உடனே, மற்றத்தரப்பிலிருந்து, கை லேஞ்சியை எடுத்து கண்ணில வெச்சுக் கொண்டு
சொல்ல  என்ன இருக்கு  மேடம்...அவ்வ..அஹ்ஹா .ஓஒ.வ்வ்வ்வ் ப்ப்ப்ப்    என்ற சத்தம் மட்டுமே வரும், இது  ஹீப்ரூ மொழியில் இருக்கிற சோழக் கல்வெட்டா என்று கேட்க வேண்டாம்....

மூண்டு),
எண்ட டைப் வேற, அவற்றை டைப் வேற...கலியாணத்துக்குப் பிறகு தான் தெரிஞ்சுது.......
லவ் மரேஜ் தான் ....ஆனா அப்ப தெரியேல்ல.... ( காதலிக்கேக்க,  கொய்யாலே இருந்து கிழங்கு புடுங்கினியலா எண்டு கேக்கத் தோணும் , காதலுக்கு கண்ணில்ல எண்டு எனக்கே புத்தி அடிக்குமாப் போலத்தோண , நான் ஏதேனும் கேக்கிறதில்லை )

இந்த மாதிரிக் கேசுகள் மெத்தக் குறைவு....இப்ப இப்ப வருகுது தான், ஆனா சீனியர் என்னைக் கையாள விடுறேல்ல. ( என்ன காரணம் எண்டும் எனக்கும்  தெரியேல்ல)


இந்த மூண்டில ஒண்டாத்தான் மனுசி தொடங்கும் என்று எதிர்பார்த்தன். மனுசி இன்னமும் எதையும் தொடங்கேல்ல ....

எனக்கு மத்தியானப் பசியும் வந்திட்டுது, அம்மா ஜூசும் மலிபன் பிஸ்கெட்டும் கட்டித் தந்தவ...மலிபன் பிஸ்கட் எனக்குக் கண்ணில காட்டக் கூடாதெண்டாலும்,மனுசியிண்ட மௌனத்துக்கு முன்னாள் அதுவே உகந்ததாகப் பட்டிச்சு.  பள்ளிக் கூடத்தில  மாதிரி ஒரு இன்ற்றவெல் பெல் அடிச்சால் எப்பிடியிருக்கும் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கேக்க,

மனுசி திடீரெண்டு கேட்டிச்சு, மேடத்துக்கு உண்மையாவே கலியாணம் ஆகிட்டுதோ எண்டு ...................???

கொய்யாலே, நீ இன்னும் அந்த இடத்திலேயா  நிக்கிற, எனக்குத் தூக்கி வாரிப் போட்டுது. மூஞ்சியைப் பாத்துக் கண்டு பிடிச்சிருமோ, நான் நல்ல காலத்துக்கு அண்டைக்கு சாரி கட்டிக்கொண்டிருந்தன். நான் சொப்பனங்கண்டு விழிச்ச கோழிக்குஞ்சைப் போல மிரண்டன்.

மனுசி திருப்பியும் கேட்டுது, உங்களைப் பார்த்தால் மறீட் எண்டு சொல்லவே ஏலா எண்டுட்டு, புன்னகைச்சீச்சு.

நானும் எதோ ஒரு இழவுக்குச் சிரிச்சு வெச்சிட்டு , ஓம் கலியாணம் நடந்திட்டுது என்டன். சின்னத்தம்பிப் படத்தில வார பிரபுவுக்கு வார அதே கலியாணச் சந்தேகம் எனக்கும் அக்கணம் வந்திச்சு...

கலியாணம் எண்டால் பீப்பீ ஊத்தி...டும் டும் எண்டு மேளமடிச்சு சாப்பாடெல்லாம் போட்டுத் தானே நடக்கும் எண்டு......

இருந்தாலும்  மனுசி என்னுடைய காலியான அத்தாட்சிப் பத்திரமெதையும் கேட்காது  என்ற தன்னம்பிக்கையில், ஓம் நடந்திட்டுது....பைனல்  எக்ஸாம் முடிஞ்சிட்டெண்டு சொல்லுற தோரணையில் சொன்னேன். மனுசிக்கு இன்னும் சந்தேகம்...

பாக்கச் சின்னப்பிள்ளையா இருக்கிறியள், குடும்ப வழக்கு இது....தனக்குச் சங்கடமா இருக்கு..எண்டமாதிரி இழுத்தீச்சு......

நல்ல காலம், உண்மையைச் சொல்லியிருந்தா மனுசி எழும்பி ஓடியிருக்கும்....சீனியர் என்னை கண்டாபிஷேகம் செய்திருப்பா !

மனுசி கேட்டிச்சு, ஆர் யூ ஹிந்து ?
.........................
ஓம் எண்டு சொன்னாத் தாலிக்கொடி எங்க எண்டு கேக்குமோ, இல்லை கிறிஸ்டியன் எண்டால் மோதிரம் எங்க எண்டு கேக்குமோ....எனக்கு சட்டெண்டு ஒண்டும் தோனேல்ல...

நான் பெந்தெகொஸ்தே திருச்சபையைச் சார்ந்தவள் என்டுரலாம்...எண்ட பேர் சைவாக்கள் வைக்கிற மாதிரிக் கிடக்கு...
முழுப் பேர் றெபேக்கா  நிலா,  கிறிஸ்டினா நிலா  இல்லாட்டி சிசிலியா நிலா எண்டு கதை  கட்டலாம் எண்டாலும்  அம்பலமாகினா  அசிங்கமாய்ப் போடும்...

நான் சுத்து மாத்துக்களில மூழ்கி இருக்கேக்க, மனுசி கேட்டிச்சு, அவர் என்ன செய்யிறேர் ?
எவர் ? ............ எண்ட கேள்விக்குப் பின் ஒ...அவர்... ஐ மீன் நான் கலியாணம் கடினதாச் சொல்லப்படும் நபர்....


எனக்கு எண்ட புருஷன் காரன் ஒரு பொப் பாடகராகவோ, கன ரக வாகன ஓட்டியாகவோ, நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியாகவோ,சுடலைக்  காப்பானாகவோ  இருக்க விருப்பம்.
மனுசிக்கு எதைச் சொல்லுவம் எண்ட போது, நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியே உசிதமாகப் பட்டது.....


எங்கன்ட அவர் நிலக்கரி தோண்டுறேர்....... என்றேன் :)


எங்க ?
சீனாவில ..........
ஒ.....அப்ப வந்து போறதில்லையோ ? சரியாய் இளைச்சிட்டியல்....கன வருஷமோ ? ஆம்பிளையளை அங்கால விட்டிட்டிருக்கிறதும் பயம் .....

இந்தமாதிரியான கருத்துக்களை மனுசி தொடர்ந்தேச்சியாகச் சொல்லத் தொடங்கியது. ஒரு கட்டத்தில யார் யாருக்கு கவுன்சிலிங் குடுக்கிறதெண்ட சந்தேகம் எனக்கே வந்திட்டுது.

மனுசி சொன்ன எல்லாத்துக்கும், நான் ஈ ..ஈ என்று இழிச்சுக்கொண்டிருந்தேன். கடைசியாக் கேட்டுது, நல்ல சம்பளம்  வருமோ ? நிலக்கரி தொண்டுறது அபாயம் இல்லையோ ?

பிறகு தயங்கித் தயங்கி..நீங்க சட்டம் படிச்சிருக்கிறிங்க, அவர் ஏன் நிலக்கரி தோண்டுறேர் என்டீச்சே பாக்கலாம் ..............

இப்ப அவர் நிலக்கரி தோண்டுரதில்ல எண்டுட்டன்...கோவத்தில.
அப்ப அது நல்லம் , இப்ப வீட்டோடையே , என்டீச்சு மனுசி.
நான், ஆள் காட்டோட என்டன்.

ங்ஞே ! எண்டு முழிசீச்சு......பிறகு தானாச் சுதாகரிச்சுக் கொண்டு, ஆள் தவறீட்டாரே என்டீச்சு ?

ஆஹா, கதைக்கொரு முற்றுப்புள்ளி கிடைச்ச சந்தோஷத்தில, ஓம்,  நாலு மாசத்துக்கு முதல் செத்துப் போயிட்டேர் , நாலு மாசத்துக்கு முதல் என்று   சொன்னன்.
மனுசி , என்னைப் பார்த்து...என்னென்டாலும், ச்சே பாவம், சின்ன வயசில இந்தக் கொடுமை நடக்கக் கூடாது, முகத்தில தெரியுது, சோகம் இழையோடி, மெலிஞ்சு இருக்கிறிங்கள்...பாவம்...

இவ்வாறாகப் பாவம் பார்த்த மனுசி, அடுத்த அறைக்குள் போய் தனது கணவரான ருக்மால் செனவிரெத்தினவிடம்   எதோ காதுக்குள் கிசுகிசுத்து விட்டு , அன்னாரின் கையைப் பிடித்தும், அன்னார் தம் திருமதியின் தோள்களை அரவணைத்துக் கொண்டும் அலுவலக அறையை விட்டு வெளியேறினர்.

நான்  பேயறைந்து பின்னர் பிசாசு அறைவதற்கு அனுமதி கேட்டாப் போல மலங்க முழிச்சுக் கொண்டு நின்றேன்.
அவர்கள் தமது மோட்டர்க்காரினை முடுக்கிவிட்டுக் கொண்டார்கள், பறந்தார்கள். எனக்கு, அடுத்த கணமே டூனா சப்மரின் சாப்பிட வேண்டும் போல் இருந்தது.

-நிலா
12/10/2012

Comments

  1. ஹா... அருமை..!!
    ஹாஸ்யமும் கருத்துக்களும் களை கட்டியிருக்கு..!! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கணரூபன் (Green Horn :) நக்கல் தான் என்ன? :P

      Delete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...