முத்தமொன்று முடியும் போது
காதல் முடிஞ்சு போகுது -கண்ணையா !
உன் முதுகுத் தண்டில் வீரம் பாய்கையில்
அதுவும் பழசாய்ப் போகுது -சின்னையா !
பித்தம் ஏறித் தலைக்கணம் கூடையில்
வாழ்க்கை சிதைஞ்சு போகுது -கண்ணையா !
நித்தம் நாமேன் நிமிர்ந்து எழுந்து-
யுத்தம் செய்தால் என்னய்யா ?
அச்சம் பயிர்ப்பு அடிமைகள் உடைப்பு
அவரவர் அளவுக்கு ஏத்தாப் போல்
சித்தம் போன போக்கைக் கொஞ்சம்
சிதைச்சு வெச்சா என்னய்யா ?
அடுத்தவர் பிழைப்பும் அடிமைக்குச் சோறும்
அதுவும் நம்ம வாழ்க்கை தான்-
அரமணை போல இருக்கிற வாழ்க்கை
அதுவும் நமக்கு கீழை தான் !
இருக்கிற சோற்றை இரவலா வாங்கி
இனிக்கிற வாழ்க்கை எதுக்கையா?
இனி, இனிக்கும் இறுக்கும் எல்லாம்
சிறக்கும்-சொன்னால் கொஞ்சம் கேப்பாயா ?
ஓடுற நதியில் ஒரு பகல் தின்று
ஒடுக்கும் மனிதரை ஓசையில் வென்று
ஆடுற மழயில் அரை வரை நனைஞ்சு
அங்கொரு தீயைச் சமைப்போமே !
மூழ்கிற வெள்ளம் தலை வரை வந்தால்
மொண்டு கடலைக் குடிப்போமே !
சாகிற வரையில் சரிசமனாக
சரிஞ்சும் வளைஞ்சும் கொடுப்போமே !
போகிற பாதை புதுசெனத் தெரிஞ்சால்
புலரும் வரையில் காப்போமே !
புலரக் கொஞ்சம் சுணங்கும் என்றால்
புதுசாய் இரவைக் கழிப்போமே !
பகைவரை எல்லாம் பலமாய் அணைப்போம்.
கவலைகள் தீரப் பாட்டுக்கள் செய்வோம்.
ஓடிக் கொண்டே இருப்பதை ரசிப்போம்.
ஒரு பகல் தனிலும் இறப்பதை சிரிப்போம்.
வியப்பும் விழிப்பும் மனிதர்களுக்காம்,
வினையும் விசையும் அவரவர் போக்காம்,
ஆணும் பெண்ணும் அணைப்பதைப் போலே,
அதை நாம் படித்தால் அதுவும் சுகமாம் !
மனிதரை நாங்கள் மெதுவாய்ப் படிப்போம்.
மானிடர் நிலைப்பை மனதுக்குள் ஜெயிப்போம்.
பூமியில் யாரும் வாழ்ந்திடும் போது,
புதுசாய்ப் பூப்பதை இறப்பிலும் உணர்வோம்!
சேவைகள் என்பது செயல் போல் இல்லை
செய்வதை இனியார் அறிவதும் இல்லை
வேலைகள் என்றால் வினையாய் முடிப்போம்
வினைகளைக் கண்டால் விலகிட அழைப்போம்
மூளையைக் கொஞ்சம் கசக்கியே பிழிந்து
முழுப்பலத்தோடு ஆய்வுகள் செய்வோம்
காடுகள் மலைகள் கழனிகள் தாண்டி
கரைவதைப் போலே ஒரு சுகம் உண்டா?
தொழில்களை செய்வார் சிறப்புகள் பற்றி
தொடர்ந்து களைத்துக் கதைப்போமே
திறமைகள் எங்கும் இருந்திடக் கண்டால்
திரண்டு அழைப்புக் கொடுப்போமே !
குழந்தைகள் உணவு ,குழந்தைகள் கல்வி
குழந்தைகள் இருப்பை நிலைப்போமே !
குழந்தையைப் போலே வாழுதல் என்றால்
குணமாய் உன்னைச் சொல்வேனே !
நீண்ட காமம் நிலைப்பதுமில்லை
நிலையாக் காமம் நியமமுமில்லை
ஆழ்ந்த காதல் அசைவுகளோடே
அவரவர் தனியாய் அழிவதுமில்லை !
ஆணும் பெண்ணும் கைகளைக் கோர்த்து
அன்பாய் வீதியில் நடக்கோணும் !
அவரவர் பார்வையில் அதுதவறேன்றால்
அன்பாய் ஒதுங்கிப் போகணும் !
தேனும் பாலும் கலந்திட நாளும்
திசைகள் யாவையும் அணியோனும்
தினமொரு கலையை படித்திட நாமும்
திமிராய் எழும்பிக் கூடோனும் !
படித்திட்ட எதையும் பரி-சோதிக்கா-
பகலை நாங்கள் தவிர்க்கோணும்.
இரவில் எதுவும் இடைஞ்சலாய் இருந்தால்
இயல்பாய்ச் சிரிச்சு மழுப்போனும் !
தோணுற தொணியில் அதட்டிட
உரிமைகள் பல பல இருக்கோணும் !
உரிமைகள் இருக்கென அதட்டிட
நினைச்சால் இருவரும் உடைஞ்சு அழுகோணும் !
சிரிச்சிட பழக்கின தினங்களை எல்லாம்
சில நாள் மறந்தால் முறைக்கோணும் !
முறைசிட தோணும் முணுக்கென்ற கோபம்
முத்தத்தால்த் தான் மறையோனும் !
சுடச்சுட தேநீர் கடையில் குடித்து
புதுசாய்ப் போட்ட பால் அப்பம் தின்று-
குளிரக் குளிர மெது நடை நடந்து -
தோளில் சாய்ந்து புகைப்படமெடுத்து,
அலைகளுக்குள்ளே வசதியாய்ப் படுத்தது -
அதுவரை கவிதைகள் படிக்கோணும்
அவசரப் படுகிற தருணங்கள் வருகையில்
அந்தரமாயும் இருக்கோனும்!
தோணியில் கொஞ்சம் கால்களை நனைத்து
தோய்ந்து தோய்ந்து மிதக்கோணும்.
புதிசாய் ஏதும் ஆசைகள் வந்து, உன் பழைய காதல்
கடைகளை விரித்தால் அழுகாமல் நான் கேட்கோணும்!
கத்திக் குழறும் சண்டை பிடிச்சு
ஒரு நாள் நாங்கள் பிரியோனும்.
நீண்ட பயண வசுவில் அமர்ந்து , யாரும் பார்க்கும் நேரம் தவிர்த்து
அணைத்து அணைத்துத் தேற்றோணும்.
இன்பம் தோன்றும், துன்பம் போகும்
எல்லாப் பொழுதிலும் இருக்கோணும்
இரக்கம் என்பது இயல்பாய்த் தோன்ற
இனிதாய் எல்லாம் நடக்கோணும்
இயல்பாய் ஒருநாள் மடியில் சாய்ந்து
இறக்கும் வேளை வரும் போதும்
துயரே அறியாப் புன்னகை சொல்லி
புதிதாய் என்னை அனுப்போணும் !
அறிந்தோ தெரிந்தோ -
உணர்ந்தோ தெளிந்தோ -
அனைவரும் இயல்பாய் இருக்கோணும்
அதுவே இனிமையைப் பகறோனும் !
அனைவரும் இயல்பாய் இருக்கோணும்
அதுவே இனிமையைப் பகறோனும் !
நிலா-
Comments
Post a Comment