Skip to main content

கால முடிவில் வாழ்வைச் சந்தித்தல்



(கால முடிவில் வாழ்வைச் சந்தித்தல்-17-06-2012  அன்று நடந்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆண்டுவிழாக் கவியரங்கத்தில் வாசித்தது )



பிதாவே, நிச்சயம் நடக்கப்போகும் மரணத்தை, அது எப்போது நேரிட்டாலும்,
உமக்குள்ளே அதனை ஜெயத்துடன் சந்திக்க பெலன் தாருமென உம்மைத் துதிக்கிறேன்.ஆமென்!
என் ஆன்மாவைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர்;
உமது பரிசுத்தரை அழிவைக் காணவிடமாட்டீர்;
உமது சமூகத்தில் எனக்கு நிறைவான இறுதி மகிழ்ச்சியைக் காட்டுவீர்!!!
உமது குறிக்கோள் எதுவாகினும் என்னை கைமீற  விடமாட்டீர்!
உமது லட்சியத்தை என் மேல் திணிக்க மாட்டீர்!
உமது வாழ்வாதாரங்களை நான் அழித்ததாய் நினைக்க மாட்டீர் !
எனது சாவில் உம் பங்கை உலகுக்குக் காட்ட மாடீர் !
ஆகையால் எனது ஸ்தோத்திரங்களை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொள்வீர்
ஆண்டவரே,

தனது முடிச்சுக்களில் இருந்து
தானாகக் கழன்று போகும்
தன்னையே மூச்சுத் திணறடிக்கும்
என் வாழும் உரிமையைப் போல
என் அகச்சுதந்திரம் போல
இன்னொன்றைக் கண்டு பிடிக்கும் வரை -எனது
கால முடிவை ,
வரை முறை/ மறு பரிசீலனை செய்வீர்களா ?

தன் பாதையைக் கண்டறிந்து தொலையும்
ரயில் தண்டவாளங்களைப் போல
நிரம்பி வழியும் அன்புக் கிண்ணங்களின்
இறுதித் தூறலைப் போல,
தேவ பிதாவே,
அது என் நேர்கோட்டில் விழுந்த அதிர்ச்சி அடி !

பெரீயதொரு மரத்தின் கிளைகளினூடே,
பரவிச் செல்லும் எதிரொலியைப் போல
பாய்மரக்கப்பல்களின் கவிழுகையைப் போல,
கூச்சலிட்ட சிறுவர்களால் துயில் கலையும் புறாக் கூட்டத்தைப் போல,
தேவ பிதாவே,
அது என் நேர்கோட்டில் விழுந்த அதிர்ச்சி அடி !

மிகை நேசிக்கப்பட்ட,
பொருத்தமான சொற்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்ட,
எதிர்பாராமலும் காயப்படுத்தப்படாத,
என்னக்குள் மட்டுமே பத்திரப்படுத்தப்பட்ட,
நிசத்துடன் மட்டுமே நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த....
..............................
.............
அது என் நேர்கோட்டில் விழுந்த அதிர்ச்சி அடி !

கால முடிவொன்றில் , கடவுளின்  முகத்தை அணிந்து கொண்ட, என் இனிய குழந்தையே !
ஏய்,,இனியும் உன்னை
இப்படி லூசுக் கதைகள் சொல்லி நித்திரையாக்க இயலாதென்று எனக்குத் தெரியும்.


மறுபடியும் ஒரு நாளும் நான் உங்கள்  கனவுக்குள் வலுக்கட்டாயமாக புகவில்லையா? 
உங்கள்  ஒருநாளின் நினைப்புக்குள் என் எதிர்த் தோற்றம் தனும் வரவில்லையா?
நான் செத்துப் போனதாய் எண்ணும் ஒரு கணம் நீங்கள்  துடிப்பதை நிறுத்துவீர்களா?
நாங்கள் - இல்லை , நீ சொல்வது போல், 
நான் எனும் தனி மனுஷியும், நீ எனும் தனி மனிதனும் போட்ட கணக்குகளில்
நாம் என்று எப்போதும்  இருக்கவில்லையா?
நாங்கள் தொடராமல் 
இருந்த வழித்தடங்களை எனக்கும் உனக்குமாய் தொட்டுக் காட்டியது நானும் நீயும் இல்லையா?
உங்களை  மிக வேதனைப் படுத்தும் தருணமும்,
என்னை மிக வேதனைப் படுத்தும் தருணமும் ஒன்றாக அல்லாவா இருந்திருக்கிறது?
சரி, இவைகளை விட்டுத் தள்ளுங்கள் ,
வலி என்கிறது விரவுகின்ற போது,
முதுகுத் தண்டில் பிளந்து , அக்கினிக் குழம்பில் நாக்கைத் தோய்த்து,
குரலும் , துத்தமும் வெளிவர முடியாமல்
பினைந்து  கொண்டே அழக் காட்டித் தரும்
பிணி- எனக்கும் உங்களுக்கும்  ஒரே செயலுக்காய் வந்திருக்கிறதல்லவா?
ஒரே தெருவில், ஒரே இடத்தில் ,ஒரே செயலுக்காய் 
நாங்கள் மாறி மாறித் தண்டிக்கப் படுகிறோம் இல்லையா?
தறிகெட்டு அலையும் -என் 
மூளையின் நரம்புகளை வேரோடு பிடுங்கி 
உங்கள்  வீட்டு புழக்கடையில் நட்டு வைத்திருக்கும் 
இந்த லாவகமான பணியை,
நான் செய்யக் கூடாதா? 
நான் உங்களை  கொலைக்குத் தயாராகும் படி 
எப்போவாவது சொல்லியிருக்கிறேனா கண்ணே ?
கொலைகளில் இருந்தும், 
கொடும் விதிகளில் இருந்தும் காப்பாற்றப் படுவீர்கள் என்றல்லவா 
புலம்பிக் கொண்டிருக்கிறேன்.
 
பேசப்படாத
ஒவ்வொரு முடிச்சுக்களுக்குள்ளும்
பிரியங்களின் பொதிச்  சோறு-
நானாகிய உன் அம்மாவினது
ஈரக்கைகளால்
பினைந்து வைக்கப்பட்டுருக்கிறது.
நீ அறியாத பொழுதுகளில்
தீத்தப்படவென !

கால முடிவொன்றில் , கடவுளின் முகத்தை அணிந்து கொண்ட, என் குழந்தையே !
ஏய்,,இனியும் உன்னை
இப்படி லூசுக் கதைகள் சொல்லி நித்திரையாக்க இயலாதென்று எனக்குத் தெரியும்! 

நமது பலவீனம் நம்மைப் பலவீனர்கள் ஆக்காதென்று தெரிந்திருந்தும்,
தோல்வியடைந்த மனிதர்களை யாரும் முத்தமிடத் துணிவதில்லை என்று தெரிந்திருந்தும்,
செயலும், துணிச்சலும் கொண்ட எந்த உள்ளுணர்வையும்
நீண்ட நேரத்துக்கு விடாதீர்கள்.
தவிர்க்கவிலாததாய்த் தோன்றும் இச் சூழலை முறிப்பது
பற்றி மட்டுமே யோசியுங்கள் !
கிளர்வூட்டப்பட்ட எந்தக் கருமங்கள் பற்றியும்
சற்றேனும் நினைவு கொள்ளாதீர்கள்.
கைதிகளின் பலியை கைப்பற்றுதல்கள் என்றே கொள்ளுங்கள்.
அவர்களது விழியில் தெரிகிற அச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மனக்கிலேசங்க்களோ,
அழுத்தங்களோ
பயங்கரவாத உணர்வோ ,
எது வருகினும்
உங்களுடைய நீண்ட முழு மானுடத்துடன் மறுத்துவிடுங்கள்.


கால முடிவென்பது  கட்டாயம் என்று உரக்கக் கத்துங்கள்.
உங்களது சுவர்க்கத்தின் மீது மட்டுமே கவர்ச்சி இருப்பதாகக் கத்துங்கள்.
சாவின் சலிப்பூட்டும் பண்பை எம் மீது அள்ளித் தெளியுங்கள்.
பணிந்து போன பண்பான குரல்களுக்கான அவர்களை,
அவர்களைக் கொண்டே அடியுங்கள்.

வலிமையடைய விடாதீர்கள்.....
தொந்தரவில் மாட்டி விடுங்கள்.....
அவர்களின் மீதுங்கள்  கட்டற்ற அன்பைப் பொழிவதைப் போல்
காட்டுங்கள்.....
பலவீனர்களாக்குங்கள்......
அடிமைகளை உருவாக்குங்கள்.....
அவர்களது கனவுகளை, நாம் இல்லாது காணுவதற்கான
வலிமையை ஒரு போதும் வழங்காதீர்கள் !
தியாகங்களே வலியன என்று எடுத்துரையுங்கள்.
மற்றதைப் பற்றி எண்ணுவதைத் தடுங்கள்.
எப்போதும் உங்களைப் பற்றியே எண்ணுகின்றார்களா
என்பதை உறுதிப்படுத்திய பின்னரே எதுவும் கதையுங்கள்.....
எப்போதும் உங்கள் ஆதாரங்களை அழித்துக் கொண்டே வாருங்கள்...
உங்களுக்கான பாடல் ஒன்றைப் படிக்கும் போது,
உங்கள் தியாகங்களைப் பட்டியற்படுத்துங்கள்.

உணர்வுகளை இழந்தவரும்,
உணர்கொம்புகளை மழுங்காட்டியவரும்,
எதிர்த்துப் பேசத் திராணியற்றவரும்,
குற்றங்களை ஒப்புக்கொள்ளத் தயாரானவர்க்களுமான
அவர்களை உற்று நோக்குங்கள்.


கால முடிவுகளின் சந்தர்ப்பங்களை வரையறுக்கப் போகிறீர்களா?   
உங்களைப் போற்றும் இன்னொருவரருக்கு,
அன்பு தெறித்த வலியில்,
வாழ்வின்மையைப் போதிக்கும் காதலொன்று இருக்கும் போது,
இரக்கமற்ற கட்டாரிகளைக் கூரியதாக்கிப் பாய்ச்சும் போதும்  உமது மென்  பாதங்களை கண்களில் ஒற்றிக் கொள்ளக் கேட்டல் ......!     கால முடிவொன்றில்,   கடவுளின் முகத்தை அணிந்து கொள்வதைப் போல வேதனையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா ? 

தேவ பிதாவே,
சாவின் சலிப்பூட்டும் வண்ணங்களில்
உமது எல்லாக் கலைகளையும் முதலில் இருந்து தொடங்க மாட்டீரா என்று
ஏங்குகிறோம்.
இலையுதிர்காலத்தினதோ,
இறப்பின் தீவிரத்தினதோ,
நீங்கள் எங்கோ வெகு தொலைவில் போகப்போகிற முடிவையோ,
நேசிக்கக் கற்றுத் தாருங்கள்.
சொற்களைச் செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா ?
எமது வாழ்க்கைக்காக எம்மை ஓட வைத்துக் கொண்டே இருப்பீர்களா ?
நிலைப்பைப் பற்றி எவ்வளவு நிச்சயமாய்
நீங்கள் சொன்னீர்களோ, அவ்வளவு நிச்சயமாய்
நான் அழிந்து போவதை பார்த்துக் கொண்டிருப்பீர்களா ?

கால முடிவொன்றில் ,கடவுளின் முகத்தை அணிந்து கொண்ட, என்  இனிமையிலும் இனிமையான குழந்தையே !
ஏய்,,இனியும் உன்னை
இப்படி லூசுக் கதைகள் சொல்லி நித்திரையாக்க இயலாதென்று எனக்குத் தெரியும்.
இன்னமும் பிறவாதவர்களைப் போல நடந்துகொள்ளத் தெரியாததால்,
நாம் மடக்கதை கதைக்கவில்லை !
இருப்பினும்,


ஏற்பின் கதவடைப்புக்கள் இல்லாத காலத்தில், 
உங்கள் பற்றி நான் பேசத் தந்த வாய்ப்புகளுக்கு நன்றி,
ஆயின்
எதிர்க்காமல் இருத்தல் என்றால் என்ன சுவாமி ?

நிலா -
17-6-2012

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...