வள்ளிநாயகிக்கு இரண்டாம்கட்டப் பரிசோதனைக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. அம்மா சொல்லிவிட்டிருந்தா , நிறைய இதில மினக்கெடுத்தாத, வாறது தான் வரும்...கிடைக்கிறது தான் கிடைக்குமெண்டு.அவளுக்கேதும் பயமில்லை, ஆனா பரிசோதகரா வாறவர் அவளைக் கண்டோ, அவளோட கதைச்சிட்டோ பயப்பிட்டுவிடக் கூடாதெண்ட நல்ல எண்ணம் அவளுக்கிருந்தது.தெவுமி குரானா சொல்லிக் கொண்டிருந்தாள், நீ கதைக்க வெளிக்கிடாத....கதைச்சால்...உண்ட பரிசோதனை தவிடுபொடியாயிரும் என்று ! அவள் அதையும் கேட்டுக் கொண்டாள்.றஞ்சன பொடிவிதாறன சொன்னான், நீர் கதையும் ...வாறவன் கேக்கிற வரைக்கும் கதையும் ...கதைச்சால் நீர் எக்ஸ்பிளைன் பண்ணுறத்தை எல்லாம் அவன் காது குடுத்துக் கேப்பான், பிறகு அனலைசிங் கமிட்டி எண்டு இன்னொண்டு கூட்டுவான்...அதுக்குப் பிறகு நிச்சயம் வெற்றி மாதிரித் தான். ஆனபடியால் கதையும் என்றான். வள்ளிநாயகி அதையும் கேட்டுக் கொண்டாள்.
புறபிசர் அல்பிரட் டி
சில்வா மட்டும் உம்முனா மூஞ்சிக்குப் பிறந்தவர் மாதிரி முந்த நாள்
அதிகாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்துவிட்டு மிஸ்ட் கோலாக்கி
விட்டார். பிறகு ஒரு அரை மணிநேரம் கழித்து, வள்ளிநாயகி, அருணகிரிநாதன்
கட்டிப் பிடிக்கவருவதாய்க் கனவு கண்டுகொண்டிருக்கிற இடைப்பட்ட அதிகாலையில்
அழைப்பை எடுத்தார். உம்மில எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு எண்டு முன்னூற்றி
இருபத்தோராவது தடவையாய்ச் சொன்னார், அத்தின தடவை அவற்றை பெஞ்சாதிக்குச்
சொல்லியிருந்தா அவருக்கொரு விவாகரத்தாகி இருக்காதெண்டும், அதுக்குப் பிறகு
ஒரு குழந்தை பிறந்திருக்காதெண்டும் அவளுக்குச் சொல்லத்
தோன்றியது.இருப்பினும் அதிகாலையில் பல்லுமினுக்காமல் அவள் அதிகம் கதைக்க
விரும்புகிறதில்லையால் புறபிசர் சொல்லுவதைக் காது கொடுத்துக் கேட்டாள்.
அவர் கதைப்பதெல்லாம் அவளது அறையில் மின்விசிறி சுற்றும் ஓசையைவிடக்
குறைவாகக் கேட்டது. தீசிஸில் உள்ளதைவிடக் கூடுதலான வாதங்களை முன்வைக்கச்
சொன்னது மட்டும் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
புறபிசர்
போனை வைத்ததும் ஆங்கிலத்தில் உள்ள பரவலாக்கப்பட்ட கெட்ட வார்த்தையொன்றை
மியூட் செய்து உச்சரித்தாள்.ஆங்கில நாட்காட்டியின் கடைசி
விடுமுறையொன்றுக்குத் தவமிருந்து ஒரு சில உதிரிப்பாகங்களை வாங்குவதற்காகப்
மலிபன் சந்துக்குப் போன அன்று வழமையை விட அவள் கறுத்துப் போயிருப்பதாக
பெட்டாவில் கூவி விற்கும் அங்க்காடிக்காரன் சொன்னபோது, அவள் நான்காவது
நாளாக அந்தத் தெருவிலே நடந்துகொண்டிருப்பதை உணர்ந்தாள்.
உருக்கில்
ஒரு மின்னணுச் சுற்றொன்றைச் செய்து கொள்ளத் தேவையான உதிரிகளை
வாங்குவதற்காக அவள் முதல் நாள் நாயைப் போலவும், இரண்டாம் நாள் நரியைப்
போலவும், மூன்றாம் நாள் பேயைப் போலவும், இப்போது ஆவியாகவும்
அலைந்துகொண்டிருந்தாள்.
அவள் பரிசோதனைக்கு ஆரம்பமாவதற்கு
முதல் தனக்கு ஐன்ஸ்டீனைப் போலத் தாடியும் மீசையும் வளாராதென்பது
குறித்துக் கவலைப் பட்டுக் கொண்டே, புறபிசர், நான் இதைச் செய்ய லாயக்கானவள்
இல்லை என்று சொல்லிவிட்டு அவரது அறையில் இருந்து வேகமாக வெளியேறி
வந்து,திருமதி ரொசாரியோ அன்ரிஸ் பீட்டர்ஸின் முதுகில் இடிபட்டுக் கொண்டு,
தன் தலையைச் சொறிந்து கொண்டு நின்றாள். திருமதி ரொசாரியோ, கடுத்த
புன்னகையுடன், வாரும்....உமக்காகத் தான் நான் இவ்விடம் வந்தேன், எப்ப
தீஸிசைப் புரஜெக்ட் போர்மேட்டில் தரப் போறீர் ? உமக்கு நானே ஒரு
கன்வீனியன்டான நாளைச் செலக்ட் பண்ணித் தாரன், நாளைக்கு என்னிண்ட அறைக்கு
வாருமன் என்ன...அப்ப நாங்கள் சந்திப்போம் ! என்று ஆங்கிலத்தில் கூறிக்
கொண்டே திரும்பிப் பார்க்காமல் நடந்தார். திருமதி ரொசாரியோ டிப்பாட்மென்ட்
அறையை விட்டு நடக்கும் போது அவர் ஒரு இளம் சிவப்பு நிறப் பூனையொன்றுக்கு,
குருத்துப் பச்சை நிறத்தில் மீசை வளர்த்துவிட்டதைப் போலவிருந்தார். அவர்
இவ்வளவு நேரமும் வள்ளிநாயகியுடன் கதைத்ததெல்லாம் மியாவ் மியாவ் என்று
காதுக்குள் எதிரொலித்தது. வள்ளிநாயகி தன் வலது காதில் ஓங்கி அறைந்து
'ங்ஙொய்' என்ற ஓசையைப் பெற விரும்பினாள்.
அது நடந்து
முதலாம் நாள் சாமம் தாண்டி, அவள் 'பைரேட் பேயில்' பாக்கியராஜாவின் ஏதாவது
ஒரு படத்தைத் தரவிறக்கிப் பார்க்கவிரும்பினாள். அதையும் புறபிசர் அல்பிரட்
டி சில்வா தடைசெய்தார். I hope you will ....என்று தொடங்குற அப்போலோஜி
மற்றும் இரங்கல் மின் மடல் ஒன்றினை அனுப்பி, அவளை மீண்டும் 'அதனைச்'
செய்யத் தூண்டினார்.
சொல்லப் போனால் புறபிசரும், அவளது
வளாகத்து மனிதர்களும் கொஞ்சம் அதிகமாகவே தன்னில் நம்பிக்கை வைத்திருப்பதாய்
உணர்ந்தாள். அவளுக்கோ 'கொசெக்சி பசப்புகழ்' அளவுக்கு மூளை
இல்லாவிட்டாலும் எதோ கொஞ்சம் இருக்கிறதாய் அருணகிரிநாதன் ஒரு மழை
இரவில்....'வள்ளி..., உங்களுக்கு கொஞ்சம் மூளை இருக்குத் தான்.....என்று
தொலை பேசிக்குள்ளாள் பல்லுத் தெரியிற மாதிரி சிரித்துக் கொண்டே சொன்னான்.
அவள் மயங்கித் தான் பொயிட்டாள்;)
இவ்வளவு பொசிட்டிவவான விடயங்கள் நடந்திருந்தும், வள்ளிநாயகிக்கு இருக்கும் தயக்கங்கள் ஐந்து இருந்தன.
ஒன்று, அவள் புதுசாக் கண்டுபிடிக்கிற அளவுக்கு அங்க ஒன்றும் கண்டுபிடிக்கப் படாம இல்லை.
ரெண்டு,
அவள் இப்போதைக்குக் கண்டு பிடிக்க ஒன்றையும் விரும்பேல்ல, அப்பிடியே கண்டு
பிடிக்க விரும்பினாலும் அருனகிரிநாதனிண்ட முதலாவது காதலிக்கு தன்னிலும்
நீட்டுத் தலைமுடியா எண்டதைக் கண்டுபிடிக்க மட்டுமே அப்போதைக்கு
விரும்பினாள்.
மூன்றாவது, தனக்குத் தாடி மீசை இல்லை என்கிற
மிகப் பெரிய குறைபாடு ! எல்லா சயன்டிஸ்ட்டும் தாடி
வைத்திருப்பார்களென்றும் , தனக்கு அது இல்லையென்றதும் தனது
கண்டுபிடிப்புக்கே அர்த்தம் இல்லாததாய் உணர்ந்தாள். தாடி இல்லாத
சயன்டிஸ்ட்டாய் தன்னை அவளாலேயே ஏற்றுக்கொள்ளக் கூட முடியவில்லை.
நான்காவது,
இது கொஞ்சம் நியாயமாத் தான் எனக்கும் படுகுது. சொந்த வாழ்க்கையில ஒரு
தோல்வியும் இல்லாமல் எப்பிடி சயன்டிஸ்ட் ஆகிறது. புறபிசர் அல்பிரட் டீ
சில்வாவுக்கு இதெல்லாம் சொன்னா எப்பிடி விளங்கித் துலையும் ?
ஐந்தாவது
, அது கொஞ்சம் நேர்மையான காரணம், புறபிசர் அல்பிரட்டின் வார்த்தையில்
சொன்னால் , நேர்மையீனம் என்றும் சொல்லலாம். அதாவது அவளிண்ட தீசிஸில் நிறைய
ஓட்டை ஓடிசல்கள் இருந்தன. முன்னுக்குப் பின்னான நிறைய முரண்பாடுகளை அவள்
முன்வைத்திருந்தாள். அவள் குடுத்திருந்த மொடல்கள் எல்லாமே றோ மெட்டீரியல்
லேசில கிடைக்காத சாமான்கள். இன்னொரு முக்கியமான விடயம், அவள் ஏனோ தானோ
என்று செயத்திட்டத்தைத் தொடங்கி தையா தக்கா என்று முடித்திருந்தாள்.
இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால், செயற்திட்டம் எழுதி முடிக்கிற தருவாய்
நெருங்கிற போதே இது உதவாதென்ற மேலோட்டமான முடிவுக்கு வந்திருந்தாள். ஆக
இத்தகைய உளப் பிராந்தியை வைத்துக் கொண்டு எதையும் தான் கண்டுபிடித்துக்
கிழிக்கப் போவதில்லை என்ற முடிவுக்குள் வந்துவிட்டிருந்தாள்.
இன்னும்
கொஞ்சம் கையை மீறிப் போனால், புறபிசர் கெஞ்சிக் கேப்பாராயின், சிக்காக்கோ
பல்கழைக்கழக வெளிவாரி மாணவரொருவனின் வலைப்பதிவை ஹக் செய்து
புறபிசருக்கு அலப்பறை விடலாம் என்று கூட கொஞ்சம் அதிகபட்சமாகக் கற்பனை
பண்ணிக் கொண்டிருந்தாள். தெரியாத் தனமாகவும், தெரிந்த தனமாகவும் ஒரு
'ஸ்கூட்டி பெப்பெட்டுக்கு' ஆசைப்பட்டுமுதல் மதிப்பெண் வாங்கிக் கொண்டதை
நினைத்து அவள் 'குங் பு' முறையில் தன்னைத் தாக்கத் தயாரான சமயம் தான்,
ஒரு
சமயம் அருணகிரிநாதன் சொன்ன சமாசாரமொன்று நினைவுக்கு வந்து தொலைத்தது.
'வள்ளிநாயகி நீங்கள் எங்கையோ இருக்க வேண்டிய ஆள்.... உங்களை நான் கொஞ்சக்
காலத்தாலை ஒக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியிலையோ, ஹாவர்ட் யூனிவர்சிட்டியிலையோ
சந்திக்க விரும்புகிறன் என்று...
......அது ஒரு எழுநூற்றிப்
பன்னிரெண்டாவது குறுந்தகவலாக அவளுக்குக் கிடைத்திருந்தது.அவள் , அவளது
தொள்ளாயிரத்து மூன்றாவதான குறுந்தகவலை ஒரு ஸ்மைலியுடன் அருணகிரினாதனுக்கு
அனுப்பினாள்.அவன் சொன்ன பேக்குத் தனத்துக்கு அவளுக்குப் பதில் சொல்லத்
தெரியாததாலும், அவன் இன்னுமொருதடவை அந்தக் குறுந்தகவலின் அர்த்தமென்ன என்று
கேட்டால், அந்த ஸ்மைலிக்குள் ஆயிரம் அர்த்தம் உண்டென்றும் பீலா விடலாம்
என்பதே அவள் உத்தேசம்.
இப்படிக்கேடு கெட்ட விடயங்களெல்லாம் அவளுக்குள்
வந்து தொலைக்கிற சமயத்துக்கு, ஏதாவதொன்றை உருப்பிடியாக் கண்டு
பிடிக்கலாம் என்று அவளது அப்பா , நித்திரையில் இருந்துகொண்டே சொன்னார்.
பிறகு, இந்த நாசமறுந்த நுளம்புக்கு ஒரு மருந்தக் கண்டு பிடிக்கேல்ல
இவங்களெல்லாம் என்ன கருமத்துக்கு விஞ்ஞானிகள் என்றும் தன் பாட்டில்
சொல்லிக் கொண்டார். வள்ளிநாயகி நினைத்தாள், எப்பிடியாவது ஒரு பேசப்படுகிற
விஞ்ஞானியாகி , தனக்குக் கிடைக்கிற முதலாவது விருந்துபசாரத்தில் நிறையச்
'சாம்பியனும்', கொஞ்சம் 'ரெட் புல்லும்' குடித்துவிட்டு வீட்டில்
இருப்பவர்களைக் கண்டபடித் திட்டவேன்றுமென்று.
பிறகு போதை
கொஞ்சம் உச்சத்துக்கு ஏற புறபிசர் அல்பிரட்டை ஓங்கிக் குத்தினாலும்
கண்டுகொள்ளமாட்டினம் என்றும் எண்ணமிட்டாள். விஞ்ஞானிகள் அடித்தால் வாங்கித்
தானே ஆகோணும்! அவள் புறபிசரின் மூஞ்சியைக் குறிபார்ப்பதாயும், அவர் தன்
பன்றி மூக்கு விரியத் தான், குத்தின அசமந்தத்தினால்த் தும்முவதாயும்,
அதைக் கேட்டு HOD ஓடிவந்து அவளது மிகுதிச் செயத்திட்டத்தைக் கேட்டு
நச்சரிப்பதாயும் அவளுக்குத் துர்ச் சொப்பனங்கள் அடிக்கடி வந்து போயின!
மூன்றாம்
நாள் பகல், அவளுக்குக் கொஞ்சம் ஓய்வும், சிறிது கோப்பியும் கிடைத்தது.
அவள் அதனைச் செய்துவிடத் தயாரானாள். செய்யோணும் என்றா , செய்து
முடிச்சிறோணும், வேற கதையில்லை. தீசிசை ஒல்ட்டர் பண்ணத் தொடங்கினாள்.
எல்லாக் கோளாறுக்கும் அவளிடம் ஒரு தெளிவான பதில் இருந்தது. கடைசிச்
சமன்பாட்டை நிறுவத் தாயாரான போது தான், அதை அப்பிடிச் செய்தால் என்ன என்று
தோணியது. அதை அப்படியும், மற்றதை இப்படியுமாகச் செய்து ஒழுங்காக்கீறோனும்
என்று அஞ்சாறு வருசத்துக்கு முன்னால்க் கும்பிட்டுக் கொண்டிருந்த கடவுள்
மேல் சத்தியம் செய்தாள். கடவுளிற்ற சத்தியம் பண்ணியாச்சு, பிறகென்ன !
கொஞ்சம் மூளை தெளிவான மாதிரியும், அவள் புதுசாப் பிறந்த மாதிரியும்
இருந்தது.
அவள் இன்னொன்றைப் புதுசாப் பெற்றெடுக்க
விரும்பினாள். அம்மாவிட்ட நேரே போய்ச் சொன்னாள், அம்மா, எனக்கொண்டொரு
பிள்ளையிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் ?
....அம்மா
மனுசிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மனுசிக்கு அருணகிரினாதனின்ற விஷயம்
சாதுவாத் தெரியுமெண்டாலும், வள்ளிநாயகி கதைச்ச கதை கொஞ்சமும்
பிடிக்கேல்ல...மனுசி முழிச்சுக் கொண்டே அவளை முறைக்க வெளிக்கிட்டுது......
வள்ளிநாயகிக்கு மனுசியிண்ட விஷயம் விளங்கினோன்ன, கலகலவெண்டு வெங்கலப் பாத்திரம் கவுண்டடிச்சாப் போலச் சிரிச்சாள்.
அவள்
சிரிக்கேக்க அமலா போல் மாதிரி இருந்தாளா எண்டு கேட்டா, நான் இல்லை எண்டு
தான் சொல்லுவன். ஆனா அருணகிரிநாதன் அங்க இருந்திருந்தால் அவள் ஏஞ்சலினா
ஜூலி மாதிரிச் சிரிக்கிறாள், அவளுக்குள்லாற ஒரு பொஷ் வடிவு
இருக்கெண்டுவான். சரி அவன்ற கதைய விடுவமேன்,
இப்ப வள்ளிநாயகி அம்மாக் காறிக்கு என்ன பதில் சொல்லப் போறாளாம் ?ஐயோ ஐயோ...விசர் மனுசி அம்மா நீ !
நான்
சொல்ல வந்ததே விளங்காம எனக்கெண்டு அம்மாவா வந்து வாச்சியே !நான்
சொல்லவந்தது என்னை மாதிரி இன்னொண்டை நான் உருவாக்கப் போறன் எண்டு
!... என்றாள்.
மனுசி இன்னும் கொஞ்சம் குழம்பி ...'ங்ஞே'
எண்டு முழிச்சுது.வள்ளி நாயகி இன்னும் சொன்னாள் , அப்பாட்டக் கேட்டன்,
அவரும் ஒப்புக் கொண்டுட்டேர்.
வள்ளிநாயகியின் தாய்க்குத் தலை சுற்றி அபுதாபி வரைக்கும் போய்விட்டு வந்தது.
என்ன
கொப்பருக்கும் சம்மதமாமோ ? .....வள்ளிநாயகி இன்னும் கொஞ்சம் சிரித்தாள்.
நிறையச் சிரிக்க அவளால் முடியவில்லை, இன்னும் ஒரு ஆவர்த்தனம் சிரித்தால்
மனுசி, அவளைக் கலைத்துக் கலைத்து அகப்பையால் அடிக்க ஆயத்தமாகியிருந்தது.
அவள்
விளக்கினாள். அம்மா , நான் எழுதின தீசிஸ் பெரும்பாலும் சரியாய் வருமெண்டு
புறபிசர் சொல்லுறேர். அதைச் செயல்த்திட்டமாக் கொண்டு வந்தால் ஒரு சின்ன
மனித நரம்பு உணரி ஒன்றை நான் உருவாக்கினதாக முடியும். அது கிட்டத்தட்ட மனித
இயல்புக்கு ஒத்துவாரதால, அது ஒரு ரோபோவைப் போலக் கிடக்கும்.
பாக்கிறவயலைக் கவருற மாதிரி அதை ஒரு மனித உருவத்திலையும்
அமைக்கலாம்....இதைத் தான்..என்னைப் போல ஒண்டு என்டன்.....என்றாள்.
மனுசி
ஒரு முடக்கு நெல்லிக்கிரஷ் குடித்து, தனது தாகத்தைத் தீர்த்துக்
கொண்டது.மனுசிக்கு என்ன விளங்கிச்சோ, வள்ளி நாயகிக்கு இன்னும் கொஞ்சம் சீனி
கூடப் போட்டு நெல்லிக்கிரஷ்ஷைக் கரைத்துக் குடிக்கும் படிக் கொடுத்தது.
வள்ளிநாயகி ஒரு சொகுசுப் பார்வையுடன் அதை வாங்கிக் கொண்டு வந்து, சுப்பர்
சிங்கர் ஜூனியர் பார்த்தாள். அதில் புஷ்பவனம் குப்புசாமி சாக்லேட் மழை வர
வைத்துக் கொண்டிருந்தார்.
புறபிசர் வள்ளிநாயகியை மலை போல
நம்பினார். அவளை சிலோன் *----------* கமிட்டியில் சேர்த்துவிடுவதாகச்
சொன்னார். அவள் அங்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் சொன்னார். பின்
அதற்கு அவள் ஒரு பரீட்சைக்குத் தயாராகவேண்டுமேன்று ஒரு விஷவாயுக் கசிவை
வெளிவிட்டார். வள்ளிநாயகிக்கு சில சமயம் புறபிசர் மேல் அபாரமான மதிப்பும்,
அடங்காத கோவமும் மாறிமாறித் தோன்றி மறைந்தன.
புறபிசருடன் ஒரே
'குஷ்டமப்பா' என்று அவசரவவசரமாக Facebook கில் நிலைத்தகவல் போட்டாள்,
அதைப் பன்னிரண்டு பேர் வந்து லைக்கினது அவளுக்கு ஒருவித ஆறுதலாகவும்
இருந்தது.
வள்ளிநாயகிக்கு ரங்கீலா என்றொரு நண்பி இருந்தாள்.
ரங்க்கீலாவைப் பற்றி இவ்விடத்தில் சொல்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டாலும்,
அந்தப் பெயர் வள்ளிநாயகிக்குப் பிடித்திருந்ததலேயே அவளித் தன்
கூட்டாளியாக்கிக் கொண்டாள் என்பதைச் சொல்லிவிட்டு மிச்சக் கதைக்கு
நகர்கிறேன்.
அடுத்த நாள்க் காலை புறபிசர் அல்பிரட்
தொலைபேசியில் வள்ளிநாயகியை அழைத்து, தொடர்ந்தும் தன்னால் சூப்பர்வைசிங்
செய்யமுடியாமைக்கான நூற்றியொரு காரணங்களை முன்வைத்து அவற்றுக்கான
விளக்கங்களை மின்மடலில் உத்தியோக பூர்வமாக அனுப்புவதாகக் குறிப்பிட்டார் .
இன்னும் 'சாங் லீ' என்கிற சீனத்து இம்பேரியல் பல்கழக்கழகத்து உயர் பட்டைய
மேற்படிப்பு முனைவர் ஒருவர் உனது ஆராய்ச்சியை ஊக்குவிக்குமுகமாக உனக்குச்
சூப்பர்வைசராக இருக்க விரும்புவதாக தானாகவே முன்வந்து சர்கியூல் அனுப்பி
இருக்கிறார். ஒத்துக் கொள் என்ன ! என்று மிரட்டுவதைப் போல அன்பாகக்
கேட்டார்.
சனியனைப் பிடிச்சு சாரத்துக்குள்ள போட்டுக் கொள்ள
வேண்டியாகீட்டு....'ஓக்கேய் புறபிசர்' என்று ஒயிலான ஆங்கிலத்தில் பதில்
சொன்னாள். I like your English action என்று வள்ளிநாயகியினுடைய
ஆங்கிலத்தைப் பாராட்டிய அடுத்த வாரம்,
சாங் லீயை உத்தியோக பூர்வமாக அவள் சந்தித்தாள்.சாங் லீயின் ஆங்கிலத்திற்கு
(
அது ஆங்கிலமா பிரெஞ்சா என்று வள்ளி நாயகி இன்னமும் முடிவு கட்டவில்லை )
ஈடு கொடுக்க முடியாமல், தனது ஆராய்ச்சியை மழை காரணமாக நிறுத்திக் கொள்ளப்
பிரியப்பட்டாள். அதற்கு சாங் லீ ஒரு குடையும், ரெயின் கோட்டும் சொந்தக்
காசில் வாங்கித் தருவதாகக் கூறி , அடுத்த கட்ட ஆப்பைக் காய் நகர்த்தினார்.
வேறு
வழியில்லாமல், வள்ளிநாயகி, தான் ஏற்கனவே கண்டு பிடித்து வைத்திருந்த
அஸ்திரங்களைப் போட்டுச் சமாளிக்க வேண்டியதாகிப் போயிற்று. சாங் லீ
ஆராய்ச்சி சம்பந்தமாக அடிக்கடிக் கேள்விகள் கேட்டுக் கதைக்காமல்
இருப்பதற்க்கு அவள் பல்வேறு உக்திகளைக் கையாண்டாள். சாங் லீ, பிறமொழி
இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவரெண்டு அவர் வாயால் சொல்லக் கேட்டதும், வள்ளி
நாயகிக்கு சண்முகாசில் யாரோ ஓசியில் குல்பி வாங்கித் தந்தமாதிரி வாயெல்லாம்
இனித்தது.
எங்கள் ஊரில் பாரதியார் இருக்கிறாரே,
அவர்...என்று இழுப்பாள். சாங் லீ....சொல்லுவார், அவர் 'எட்டை புர்ர்ர்றம்'
(எழுத்துப் பிழை இல்லை ) இல்லையா ? என்று. வள்ளிநாயகி திருப்பி, இங்கே
ஒரு நபர் இருந்தார் அவருக்கு சிறீல சிறி ஆறுமுக நாவலர் என்று பெயர்,
அவர்...... சாங் லீ சொல்லுவார், ஏராளமான இடைச்செருகல்களை இலக்கியத்தில்
செய்தவர் தானே ? என்று.
அதன் பிறகு வள்ளிநாயகி சொல்லுவாள், அட ...நாசமாப் போனவனே ! என்று....சாங் லீ சொல்லுவார் தாங் யூ...த்தாங் யூ என்று !
இவ்வாறாக
அவளது மனித நரம்பு உணரி ஒருமாதிரி கொஞ்சம் கொஞ்சமாய்க் கருக்கட்டிக்
கொண்டே வந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகநரம்பு உணரி வளர்ந்து,
நிறைந்த உருக்குக் கம்பிகளாலும் ,திரான்சிஸ்டர்களினாலும், சிலிக்கன்
படையேடுகளின் வரிசையினாலும், ஆவர்த்தன அட்டவணையில் அவளின் நண்பிக்கு
பள்ளிக் கூடத்தில் பாடமாகாத மூலகங்களின் இத்துநூண்டுப் பொருட்களினாலும்
இன்னும் அவள் வெளியே சொல்லக் கூடாதென்று புறபிசர் அல்பிரட் டீ சில்வாவினால்
எச்சரிக்கப் பட்ட 'அந்தப்' பொருட்களின் கூட்டினாலும் அது உருவாகிக்
கொண்டு வந்தது.
சாங் லீ, ஒரு எலி பிடிக்கும் நாயைப் போல
சுற்றும் முற்றும் அவளது ஆய்வுகூட அறையைச் சுற்றி அலைந்துகொண்டே
இருப்பார்.ஆய்வு கூடமொன்றில் ஒரு ஆராய்ச்சி மாணவி எப்படி
நடந்துகொள்ளவேண்டுமேன்று தினமும் பாடமெடுப்பார். வள்ளி நாயகி சொல்லுவாள்,
கேக்கிறவன் கேனைப் பயலுண்ணா எலி ஏரோப் பிளேன் ஒட்டும்னானாம் ! சாங் லீ
சொல்லுவார்.....Not eli...I am Chang Leeei....என்று :)
இவ்வளவு
நடந்ததுக்குப் பிறகு இப்ப என்ன கதை எண்டு கேக்கிறிங்களா ? வள்ளி நாயகி
இப்போது சிலோன் இன்வேன்சன் சாம்பாரில் ,ராமசாமி, கந்தசாமி, முனிசாமி,
ஹேமந்த அத்துலத்முதலி, ரசூல் பூக்குட்டி ( இவர் எ ஆர் ரகுமானிட்ட பாட்டுத்
தொகுக்கிற ஆள் இல்ல, நான் அவரின்ட பேரைச் சுடவும் இல்லை ) , திருமதி.
ஜிஞ்சக் ஹன்சாமாலி, பூஞ்சி பண்டாகே சாபுதந்திரி , இப்னு மாலின், டிலீஷா
குமரப்பா, மனீஷா அத்தொடங்கெட்டிய, அனுபம் வீரவன்சகேமுதலாலி , மல்லவராச்சி
முதியான்சிலாகே திக்குபண்டா .... இவ்வாறான பெயர்களையுடைய இன்வேன்சன்
சாம்பாரின் உத்தியோக உயர் அதிகாரிகளின் மத்தியில் ஒரு சுழல் நாற்காலியில்,
சுழல்வதற்குத் தயாராகாத நிலையில் அவளுடைய மனித நரம்பு உணரியுடன்
வீற்றிருக்கிறாள்.
அவளைப் பார்க்க, இரவிவர்மா கீறின
கிட்டடியில் வந்த புது எடிஷன் துர்க்கையம்மன் மாதிரிக் கிடக்கு. ஒரு கையில
வெட் திசுவும், இன்னொரு கையில மல்டிக் கலர் பிளாஸ்டிக் வயர் தொங்கும்மனித
நரம்பு உணரியுமாக இருந்தாள். அவள் சரளமாகக் கதைப்பதற்குத் தயாராக
இருந்தாள்.
சாம்பாரில் இருந்த ஒவ்வொருவரும் தத்தமது பெயரைச்
சொல்லி தம்மை அறிமுகப் படுத்தினர். வள்ளிநாயகி தன் பங்குக்குத் தன் பெயரைச்
சொல்லி அறிமுகப் படுத்தினாள்.
I am Vallinayaki Sekarasasekaram !..................
இன்னும்
நிறைய தன் பற்றியும், தன் ஆராய்ச்சி பற்றியும் ஆங்கிலத்தில் உரையாடத்
தயாராக நாக்கைச் சுழற்றி வைத்துக் கொண்டே, சுழல்க் கதிரையின்
முன்னாசனத்துக்காக தன், இருக்கும் பொசிஷனை மாற்றிக் கொண்டிருந்தாள்.
டிலீஷா குமரப்பா , வள்ளிநாயகியைக் குறுக்க மறுத்துக் கேட்டாள்.உம்மைப் பற்றி வேணாம். உம்முடைய ரோபோ பற்றிக் கதையும்........,
.....அவரைப் பற்றிச் சொல்லும்......?
வள்ளிநாயகி
உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள், தமிழனுக்கு வேற எங்கேயும் எதிரி இல்ல,
இன்னொரு தமிழன் தான். அதிலையும் பொம்புளைக்கு வேற எங்கயும் எதிரி இல்ல,
இன்னொரு பொம்புளை தான் என்று.
டிலீஷா குமரப்பா, மீண்டும் கேட்டாள், 'அவரைப்' பற்றிச் சொல்லும் என்று.....
வள்ளிநாயகிக்கு ஒரே ஆச்சரியம் !
அவரைப் பற்றியா !
அவர்.....ஒ...அவள் 'அதைத்' தான் 'அவர்' என்று மரியாதைப் பண்பில சொல்லுறாள்!!!
வள்ளிநாயகிக்குக்
குற்ற உணர்ச்சி பெருக்கெடுத்தது. தனது மனித நரம்பு உணரிக்குத் தான்
இதுவரைக்கும் அழகியல் இயல்புடைய ஒரு தமிழ்ப் பெயரையும்
தெரியாததையிட்டு.வள்ளிநாயகி, சாம்பரில் உள்ள அத்தனைபேரையும் ஒருதடவை நன்கு
பார்த்தாள். அவள் முன்னுக்குப் பின்னாக எதையோ தான் செய்யப் போறதை முன்பே
உணர்ந்திருந்தாலோ தெரியவில்லை, ஆனால் இந்த ஸ்கிரிப்டிலை வள்ளி நாயகி
சாம்பரை விட்டு அசுவாரசியத்துடன் வெளியே வந்ததாய்த் தான் இருக்கிறது.
திருமதி ஜிஞ்சக் ஹன்சமாலி, வள்ளிநாயகியத் தடுத்துக் கேட்டாள், அறிமுகம் நடந்துகொண்டிருக்கேக்க எங்க எழும்பிப் போக எத்தனிக்கிறீர் ?
திரு அனுபம் வீரவன்சகேமுதலாலி கேட்டார்...ஏன் இவ்வாறு எழுந்து போகப் பார்க்கிறீர் ?
உமக்கு என்ன நடந்தது 'வல்லி நாய் கி' ? .....
வள்ளிநாயகி
வீராவேசமாக எழும்பினாள், அவளுக்குத் தான் எடுத்தது தான் சரி என்று பட்டது.
விறு விரென சாம்பரை விட்டு வெளியே நடந்து வந்தாள். அவள் புதிதாக
வாங்கியிருந்த குதிநீண்ட செருப்பு ஓரிரு தடவை விழுத்தாட்டிய போதும் அவள்,
நிமிர்ந்தபடியே அங்கிருந்து பதினெட்டு ரூபாய் கொடுத்து பஸ்ஸில் வீட்டுக்கு
வந்து சேர்ந்தாள். கொடுத்த இருபது ரூபாய்க்கு மிச்சக் காசு கேட்டுக் கூட
அவள் கண்டெக்டருடன் ஒருவார்த்தையும் கதைக்கவில்லை.
தாய்
மனுசி ஏண்டீ பாதீல வந்துட்ட என்று....ஒருவகைத் தினுசான ஒப்பாரிக் குரலில்
கேட்டாள். இவ்விடத்தில் இவ் ஒப்பாரிக் குரலை தண்டியலங்காரத்தில் சேர்க்கும்
படிக்கு சிபாரிசு செய்கிறேன்.
வள்ளிநாயகி சொன்னாள், என்ட
ரோபோவுக்கு நான் இன்னும் ஒரு பேரைத் தானும் தெரிவு செய்யேல்ல....தெரிவு
செஞ்சு, ஆறுதலா ஒரு தமிழ்ப் பேர் வெச்சிட்டு...பிறகு அங்க போறனேன் என்று !
***
புறபிசரும்,
முனைவருமான சாங் லீ அடுத்த நாள் முற்பகல், அவரது அறையில் பரிசோதனை எலியை
மல்லாக்காய்க் கிழித்துத் தொங்கப்போட்டதைப் போல தூக்கில் தொங்கிக்
கொண்டிருந்தார்!
புறபிசர் அல்பிரட் டீ சில்வா
தேத்தண்ணிக்குள்ள அதிகமான ஹோக்டைனைச் சேர்த்துக் கொண்டு சுவாசிக்கத்
தடுமாறி லங்கா ஹோஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருந்தார்!
அருணகிரிநாதன்
ரெண்டு நாள்க் கழிச்சு அவளுக்குத் தொலைபேசி, உமக்கும் எனக்கும் ஒத்தே
வராது வள்ளிநாயகி ! என்று சொல்லிவிட்டு தொலைபேசியைப்படக்கென்று
துண்டித்துக் கொண்டான்.
வள்ளிநாயகி, தனது ரோபோவுக்கு அழகிய
தமிழ்ப் பெயறொன்றைத் தெரிவு செய்துவிட்டு சாம்பருக்குப் போன அன்று பனியார
மழையும், கொக்கீஸ் காற்றும் வீசியது. அன்றைக்குத் தான்வள்ளிநாயகிக்கு
அல்பிரட் ஐயன்ஸ்டீன் சாவில் இருந்து மீண்டு வந்து கான்கிராசுலேசன்ஸ்
சொல்லியிருந்தார்.
வள்ளிநாயகி அல்பேர்ட் ஐயன்ஸ்டீனைப் போல
தனக்கும் தாடி வளர்வதை உணர்ந்தாள். தாடி வளர்ந்த அடுத்த கணமே தன்னை தானொரு
விஞ்ஞானி என்பதை மாற்றமேதுமன்றி ஏற்றுகொண்டாள்.
அப்ப தான் வள்ளிநாயகி உணர்ந்தாள் வரலாறு முக்கியம் எண்டுறத்தை !
நிலா-
2/2/2012
Comments
Post a Comment