Skip to main content

குழந்தைகளுக்காக எழுதுதல்.



இலக்கியங்கள்  மர்மங்களாக பெரியவர்களுக்கு இருக்கும் சமயம், குழந்தைகளுக்கு அவை இனிப்புகளைப் போல அன்றன்றே தீர்ந்து விடுபவையாக இருக்கின்றது. எல்லாக் காலங்களிலும் குழந்தைகள் தாங்கள் வளர்பவர்கள்  என்பதை  அடிப்படையாக  வைத்துச்  செயல்ப்படுவதில்லை என்பதுவே இதற்கான  மேலோட்டமான காரணமாகும்.

குழந்தைகள்      தமக்கான  சமுகத்தை   தம்மூடாகவோ,         பெரியவர்கள்  ஊடாகவா   பார்க்கிறார்கள்  என்பதில்  குழந்தைகளுக்கான  இலக்கியத்தின் தேவை  பெரியவர்களிடம்  நிறைந்து  கிடக்கின்றது. குழந்தைகள் எதனைத் தேடுகிறார்கள் என்பதை பெரியவர்களால் ஒரு போதும் தீர்மானிக்க முடிவதில்லை. அவர்கள் குழந்தையாக இருந்த போதும், அவர்கள் குழந்தைகள், குழந்தைகளாக இருக்கும் போததுமான இரு பெரும் தேடல்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறதில்லை.
சமுகத்தின் வளர்ச்சியும் , சமுகத்தில் குழந்தைகளைப் பார்க்கும் கோணமும், வர்க்கங்களின் வித்தியாசமும் ஒரு குழந்தையின் தேடலை வேறுபடுத்தும்.

இன்று வரைக்கும்  வன்னியில் குழந்தைகள் ஒன்று  சேர்ந்து  'அட்டலங்க்காய் புட்டலங்க்காய்' விளையாடுவதையும், கொழும்பில் எனது பெரும் வாழ்க்கையைக் கழித்த குழந்தைப் பருவம் தாண்டிய என்னால் அவ்வாறான விளையாட்டொன்றை  எனது பாலிய வயதுகளில் ( ஏழெட்டு வருடங்களுக்கு முன் ) எதிர்பார்த்தும் இருக்க முடியாத சூழல் மிக யதார்த்தமான எடுத்துக் காட்டு. இன்றைய குழந்தைகளை பெற்றோர்களாகட்டும் அவர்களுடைய ஆசிரியர்களாகட்டும், குழந்தைப்பருவம் தாண்டிய அவர்களது அயலவர்களாகட்டும் பார்க்கின்ற கோணம் மிக மாறு பட்டது. ஒரு திணுசான பய மருட்சியுடனும், தங்களை விட அனுபவ முதிர்ச்சி கூடியவர்களாகவுமே மனதளவில் பார்க்கிறார்கள். அதுவே இன்றைய குழந்தைகள் மீதான பெரியவர்களின் பயத்தையும்அனுமானிக்க முடியாத குற்ற உணர்வையும் காட்டி நிற்கின்றது.
முப்பது வருடங்களுக்கு முன்பு குழந்தையாக இருந்தவர்களின் அன்றாடத் தேவைகளுக்கும், கடந்த பத்து வருடங்களுக்குள் குழந்தையாக இருந்தவர்களின் தேவைகளுக்கும் பரந்த மாறு பாடு உண்டென்பதை எல்லோராலும் மிகத் தெளிவாக ஏற்றுக் கொள்ள முடியும். அன்றைக்கு எட்டு வயதுப் பெண் குழந்தையினது தேவைக்கும், இன்றைய எட்டு வயதுப் பெண் குழந்தையின் பரிணாம வளர்ச்சியின் தேவைக்குமிடையில் உள்ள வேறுபாடு மிகையளவானது.அரசியலும், நெருக்கடியும் அதிகளவு சொல்லப் போனால் யுத்தமும் குழந்தைகளை, குழந்தைகள் தவிர்ந்த வேறொரு உலகத்துக்குள் அவர்களாகவே அவர்களை உற்பத்தி  செய்து உந்திச் செல்ல வழி விட்டிருக்கிறது என்றபோதில்,

அன்றைய அம்மாமர்களும், பாட்டி மார்களும் குழந்தைகளாக இருந்த போதிருந்த  கதைகளையும், பாடல்களையும் இன்னும் இவர்களுக்கு ஊட்டுவதன் அவசியம் என்ன ? இவர்கள்  என்ன மாதிரியான  கதை சொல்லிகளை சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் ? இன்றைக்கு ஒன்றரை வயது எனது அக்காவின்  மொழியறியாத குழந்தை baba black sheep have you any wool, yes sir , yes sir three bags full எனும் போது, என்னை மறுத்து  five bags என்று கைகளால் விரல் பிடித்துக் காட்டுகிறது. தாராளமயமாக்களின் உந்துதல் தானா இவை ? குழந்தைகளின் பொதுவுடமைச் சிந்தனை தானா இது மனித விழுமியத்தில் குழந்தைகள் எனும் அடிப்படை மனிதர்களின் மீது நாங்கள் என்ன வகையான பார்வையை வைத்திருக்கிறோம்

என்ன வகையான குழந்தைகளாக இவர்கள்  வளர வேண்டும் என்று தீர்மானித்த பின்னல்லவா இன்றைய குழந்தைக்கான உற்பத்தியை மேற் கொள்ளுகிறோம். அடிப்படையில் குழந்தைகளை பானைகள் செய்வது போல செய்வதற்கு விரும்புகிறோம், குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதை எம்மால் முடிந்தவரை நாம் தவிர்க்கிறோம். ஏனென்றால் குழந்தைகளது அரசியலைக் கலப்படமில்லாத கேள்விகளுக்கு எம்மிடம் பதில்கள இல்லை. அல்லது அதற்குப் பதில் சொல்லத் தகுந்தவர்களாக எமது பாடவிதானம் அமைக்கப்படவில்லை. நாங்கள் பாடவிதானத்துக்கமைய வளர்ந்த மனிதர்கள்.

குழந்தைகளுக்கு எழுதுவது என்பது, குழந்தைகளால் தமக்குள் எழுதுவது, வளர்ந்தவர்களால் குழந்தைகளுக்காக எழுதுவது என்று இரண்டு வேறு பட்ட படிகளைக்  கொண்டது. நம்மை ஒத்த நான்கு பெயருக்கிடையே நகைச்சுவைகளையோ, சிறு துணுக்குக்களையோ பரிமாறிக் கொள்ளும் போததன் சொல்ல முடியாத உணர்ச்சிப் பிரவாகம், குழந்தைகள் தமக்குள்ளும் பேசிக் கொள்கிற போது ஏற்படுகின்றது என்பதை எம்மால் உணர முடிவதில்லை. அவர்களது உலகத்தின் அரசியல், அபிலாஷைகள், முரண்பாடுகள் போன்றவற்றை வெளி வரை முறை அற்று அவர்கள் கலந்துரையாடுகிறார்கள். பாலிய வயதில் ஒவ்வொருவருக்கும் ஒன்றோ அல்லது பலவோ சிநேகிதர்கள் இருந்திருப்பார்கள். இங்கு என்ன முரண்பாடான விடயமென்றால் ஒவ்வொரு அம்மாவும், அப்பனும், அக்காளும், அண்ணனும் தாங்கள் குழந்தைகளாய் இருந்த போது செய்ததாக கருதும் வயதுக்கு மீறிய விடயங்களை தங்கள் இளையவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள் என்கிற ஒரு நிலை புரியாத அச்சத்துடனேயே குழந்தைகளுக்கும் தமக்குமிடையேயான பெரு  இடைவெளியை நிரப்பிக் கொண்டு செல்கிறார்கள். உண்மையில் இவர்களுடைய பயத்தினால் குழந்தைகளின் அகமனதில் தம்மையறியாமல் அச்சத்தையும் வளர்ந்தவர்கள் உலகைப் பற்றிய பயத்தையும் விதைக்கிரார்களே ஒழிய பாதுகாப்பை அல்ல.

தமிழ்ச் சூழலில்  குழந்தைகளின் உலகம்  இன்று மாறுபட்டது. அவர்களுக்கு  AK47 இனதும்போக்கஸ் லைட்டினதும் பாவனை தெரிந்திருக்கின்றது. ஜுராசிக் பார்க் எராவில், டைனோசர்கள் தோன்றவில்லை என்று திட்டவட்டமாக நம்புகிறார்கள். வடிவேலு சொல்லும் கெளம்பீட்டான்யா என்பதின் முழு அர்த்தமும், விவேக் சொல்லும் ' பிளாஸ்டிக்கின் பாவனையும் ' நன்கு விளங்கியிருக்கிறது.  கணிதத் தேற்றம் தெரியாதவிடத்து, I am not a Pythagoras என்று இயல்பாகப் பதிலளிக்கவும், அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து பலியானபோது தன்னை விட இளவயதுத்  தம்பியை/ தங்கையை  குளிப்பாட்டி அயர வைக்கவும்  தெரிகிறது.
இது மிக அடிப்படையான பிரதேசத்தில் இருந்து வெளியே வராத ஆறு வயதுக் குழந்தையொன்றின் அடிப்படைப் புரிந்துணர்வு. இவை இவ்வாறாக இருக்க இன்னும் நாங்கள் குழந்தைகளின் காதில் பூ முடியும் புனைவுகளையும், அவர்களைப் பேயர்களாக்கின்ற வேலையற்றவர்களின் புத்தகங்களையும் வாசிக்கக் கொடுக்கிறோம். இலங்கைப் பாடத்திட்டத்தில் சமய (எல்லா ) பாடங்கள் ஈறாக எல்லா இடத்திலும் குழந்தைகளைப் பூச்சாண்டி காட்டத் தொடங்குவதோடு ஆரம்பமாகிறது.

இசுமாயில் நபியின்  பாதம் துடிக்க, வெடித்து பூர்த்த  சம் சம் நீரூற்று, சொர்க்கத்துக்கு கோபுரங்கட்டிய கதை, கன்னி கழியாமல் கிறித்து பிறந்த காதை, குகன் கொடுத்த மீனை ராமன் சாப்பிட்டான் என்பதை மறைத்து எழுதின விளக்கவுரை, சுந்தரர் ஆண் பணையைப் பெண்பணையாக்கின கதை , சுத்தோதனரும், சித்தார்த்தரும் தாமிரக் கட்டியை தங்கக் கட்டியாய் முற்பிறப்பில் மாற்றிய கதை என்று எல்லா இடங்களும் குழந்தைகளுக்கு ஏன் எதற்கேன்று வரைமுறையற்ற கேள்விகளைக் கேட்கத் துணிய வைக்காத கதைகளையும் கருத்துப் புலங்களையும் உருவாக்கிக் கொடுக்கின்றது. படித்தவர்கள பலரும் இதற்காகத் தான் நூலாக்கக் குழுவொன்றை நிர்வாகித்து புசத்துகிறார்கள்.

திடீரென்று ஒரு நாள் சின்னக் குழந்தைக்குத் தம்பி பிறப்பதும், தம்பி எப்படிப் பிறந்தான் என்ற  தார்மீகக் கேள்விக்கு பாட்டி முதற்கொண்டு , தகப்பன் வரை
படுகிற பாடிருக்கிறதே ! குழந்தைகளை எங்களுடைய பொய்களும் போலி உருவகங்களும் தாம் வளர்ந்தவர்களுடைய கபடத்தைக் கற்பித்துக் கொடுக்கின்றன என்பதை நாம் முற்றிலுமாக மறக்கின்றோம். பெரியவர்கள் கபடங்கள் நிறைந்தவர்கள் , தாங்கள் பிழைகளில் இருந்து எப்போதும் தப்பிக்க வேண்டும் என்பதனையே நியமமாகக் கொண்டிருக்கிறார்கள். இதுவே குழந்தைகளின் அடிப்படைப் பாதுகாப்பைக் கூட ரத்து செய்கிறது.

சின்னஞ்சிறு குழந்தைகளை கடவுள் கொடுப்பதில்லை, உன் தாயும் தகப்பனும் உனக்கான ஒரு சகோதரனை/சகோதரியை  அன்பு,பிரேமை ,பண்பு , உனக்குக் கொடுக்கும்  பால்ச் சோற்றில் கொஞ்சம் இதெல்லாம் பிசைந்து உனது பாதுகாப்பிற்காக அவனையும், அவனது பாதுகாப்பிற்காக உன்னையும் கருவிருத்தினோம். அவன் நாளொரு மேனியாக பல மாதங்கள் உன் அம்மாவினுடைய வயிற்றில் சவுகரியமாக வளர்ந்து இப்போது உன்னைக் காணவேண்டும் என்று வயிற்றில் இருந்து பூர்த்தியான குழந்தையாக வெளியேறினான் /வெளியேறினாள்  என்பதை எதற்காக மறைக்க வேண்டும் ?
சின்னக் குழந்தைகளுக்கேயான தமது இளைய சகோதரங்களுடனான முரண்பாடுகளை நாமல்லவா அதிகரித்து விடுகிறோம்?

குழந்தைகளுக்கான இலக்கியங்களில் எதற்காக இவை எழுதப்படுவதில்லை ? வயதி மீறியவையா இவை ? பாலர் பாடப் புத்தகத்தில் சோதிகா, திரிசா, சூரியா எல்லோரையும் அக்கா அண்ணா என்று சொந்தம் கொண்டாடுகின்ற அநியாயம் நிகழும் போது இவற்றினுடைய எழுந்தமான விளக்கம் மிக அரிது தான்.குழந்தைகள் தினத்திலும், குழந்தைகள் சம்பந்தமான சமவாயங்களின் போதும் இவற்றைப் பற்றிச்   சிந்திப்பதோடு நமது சமுதாயம் உறங்கப் போய்விடுகிறதல்லவா? மேலை நாடுகளில் இருந்து வரும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தமிழில் அதிகளவு மொழி மாற்றம் செய்யப்படுபவையாக இல்லை. ஆங்கிலச் சூழலில் வளரும் குழந்தைகளுக்காக அவை அப்படியே தரவிறக்கம் செய்யப்படுகின்றன.
Cold little deer உம், strawberry red fruit உம்  எங்கள் சூழ்நிலைக்குப் பொருந்தாதவை, குளிர் மானையும், சிவப்புச் சீனிச் செர்ரியையும் எங்களால் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாது. அவர்களுடைய  இலக்கியங்கள் கனவுப் படலத்தைப் போல் மிதந்து கொண்டே இருக்கின்றன.அவகாடோ விதையையை  விழுங்கியதற்காகத் தண்டிக்கப் படும் சிறுவனும், ஹவலோன் பண்டிகையில் பூசணிக் காய்க்குள் இருந்து பிறக்கும் தம்பளினாவும், பெரியவர்களுக்கான காமத்தைக் கிளறும் இளைய  பெண்சாதிக் கதைகளும் , சின்றேல்லாவும், நித்திரை அழகியுமே எங்கள்  குழந்தைகளுக்கு அன்றாடம் நாம் காட்டும் வர்ணக் கதைகள். தமிழைப் பொறுத்த வரைக்கும் எல்லாக் கதைகளின் முடிவிலும் ஒரு நீதியைச் சொல்லியே ஆக வேண்டும்.அலிஸ் இன் த வொண்டர் லான்ட் சொல்லித்தந்த கணிதத்தைப் பற்றி இன்று வரைக்கும் யாரும் எந்தக் குழந்தைக்கும் சொல்லித்தரவில்லை.சார்ல்ஸ் டோர்ஜசன் ஒரு கணித மேதை. கணிதம் கதை பூராவும் விரவிக் கிடக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அதனை ஒரு பாண்டஸிப் புத்தகமாக அறிமுகப்படுத்துகிறோம் தவிர அதிலுள்ள கணிதம் பெரியவர்களாலும் உணரப்படுவதில்லை.


தமிழ்க் கதை சொல்லிகளின் மரபு இன்று வரைக்கும் உடைக்கப்படவில்லை. குழந்தைகள், சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் தானியங்கி பொம்மைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது அவர்கள் கேள்விகள் கேக்காத மாதிரியான கதைகளைச் சொல்லத் தொடங்குகிறார்கள்.
அல்லது இருக்கவே இருக்கின்றது ஹரிப் போட்டார் சமாச்சாரம் ! இன்னும் குழந்தைகளை கற்றவர்களாக ஆக்க விரும்பினால் வாழ்ந்து கெட்ட அரசியல்த் தலைவர்களினதும் சமய ஆசாட பூதிகளினதும் கதைகளை சித்திர விளக்கத்தோடு போட்டிருப்பார்கள். எங்களின் குழந்தைகளை கி.பி , கி. மு வுக்குரியவர்களைப் போல் நடத்து காட்டச் சொல்லுவதற்கு இவர்களுக்கு என்ன துணிச்சல் ? எங்கள் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை இந்த எளிய பதிப்பகத்தாரிடம் விட்டு விட்டோம் என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம் !

பொய் சொல்லக் கூடாது என்று முடிகிற ஒவ்வொரு நீதிக் கதையின்  பின்னும் அம்மா நித்திரை வருகிறதாகப் பொய் சொல்லிக் கொண்டே கண்ணயர்ந்து போவாள். 
மொழியில் இருக்கிற அழகியலையும், படிப்பதில் இருக்கின்ற சந்தோஷத்தையும் ஒரு குழந்தை தானே வாசித்து உணர்வதற்குரிய படைப்புக்கள் இங்கு மிகக் குறைவு. நான் பள்ளிக் கூடம் செல்லக் கூடிய உயர் வகுப்பு மாணவர்களைக் கூட இங்கு குழந்தைகளாகத் தான் கொள்கிறேன். உயர் தர வகுப்பில் அவர்களுடைய பௌதீக , இரசாயன வினாக்களில் வரும் மயக்கத் தன்மையான கேள்விகளை இன்னும் இலங்கைக் கல்வித் திணைக்கழகம் அனுமதித்துக் கொண்டே வருவதும், ஆங்கில மூலமான மாணவர்கள் அதிகளைவில் தெளிவான விளக்கத்தோடு இருப்பதும் கூட எங்கள் சூழலுக்கு நாங்கள் வைத்துக் கொள்கிற தீ வைப்புத் தான். என்ன வேடிக்கை என்றால் கற்பித்துக் கொடுக்கவெனப் பழக்கப்பட்ட ஆசிரியப் பெரும்  கூலிப் படைகளுக்கு அவ்வாறான மொழி வாசகங்கள் தூக்கத்திலும் பழகி விட்டமையினாலும் ( தனியே கூப்பிட்டுக் கேட்டால் அர்த்தம் சொல்ல திண்டாடுவார்கள் ) , காலா காலமாய் பட்டப் பழைய வினாக் கோர்ப்புக்களை இன்னமும் வைத்து சிறு மாணவர்களை ஏமாற்ற அவர்களது அறியாமை போதுமாக இருக்கின்றமையினாலும் இவ் விடயம் அவ்வளவாகப் பேசப்படுவதில்லை.உண்மையில் இவ்வளவு முரண்பாடான/சிக்கல்த்  தன்மை நிறைந்த  வார்த்தைகள் உயர்தரப் பாடத் திட்டத்தில் இருப்பதுவே மாணவர்களின்  பல்கழைக் கழகத் தெரிவுக்கு மிகப் பெரிய தடையாக அமைகிறது.

உயர் தரத்தில் எந்தப் பிரிவிலாயினும் தமிழ் மொழி மூலம் கற்று வந்த மாணவர்கள் இன்றைக்கு எஸ். ராமக்கிருஷ்ணனையோ, கணையாழியின் கட்டுரைகளையோ  வாசிப்பதற்குச் சிரமப் படுகிறார்கள் என்றால் , தேவைக்கதிகமாக மாணவர்களைப் பயப்படுத்திய பாடசாலைக் கல்விச் சூழலையே நான் சாடுவேன். மேலே குறிப்பிட்ட எழுத்துத் தரத்தை விட மிகச் சிக்கலான எழுத்து முறையில் பௌதீகவியளிலும், பொருளியளிலிலுமாக தமிழை உபயோகித்த மாணவர்களுக்கு இத் தமிழ் புரியாததன் காரணம் என்ன ? ஒரு மேட்டுக் குடித் தன்மையை, கீழ்மட்ட அரசியலாக்கி இருக்கிறார்கள்.


//
நீண்ட ஒலி மாணியின்
இடுக்கியின் ஒவ்வொரு அதிர்விலும்
பாதரசக் குமிழிகளை
இரைப்பையின் ஒவ்வொரு மென் சவ்வும்
அரைப்பதாக உணர்கிறேன்.
ஆகையால் ,
வர்த்தமானத்தின்  காலாண்டில்
உனது வருகைக்காக பூத்திருப்பேன் //

இது ஒரு உதாரணத்துக்காக இன்றைய கவிதைகளின் நடை  முறை புரியாத வார்த்தையில் எழுதியது. இந்தக் கவிதையின் வார்த்தைகள் புரியவில்லை என்று இலங்கைப் பாடத்திட்டத்தின் உயர் தரம் படித்த ஒருவர் சொல்லுவாராகில் , ஒவ்வொரு எழுத்தாளனும் தூக்கில் தொங்குவது தலையாய கடமையாகும். உண்மையில், மாணவர்களது மொழி அறிவின் பரவலைக் கூட பன்முகப் படுத்தாமல் பரீட்சையின் நோக்கமாக புதிர்க் குற்றுக்களாகப் பார்க்க வைக்கிற சோதினை வணிகமே இதன் எல்லாப் பாதிப்புக்கும் காரணம்.  சரி பெரிய மாணவர்களை விடுத்துக் குழந்தைகளின் கதைக்குள் போவோம்.


எல்லோரும் பரிந்துரைக்கின்ற பாரதியின் பாடல்களைக் கூட தமிழ் சூழலில் குழந்தைகளுக்குத் தனியாக  வாசிக்கக் கொடுக்க முடியாமல் இருக்கின்றது.
ரௌத்திரம் பழகுதல், வதுவை புரிதல் போன்ற சின்னச் சின்ன புழக்கமற்ற வார்த்தைகளைக் கூட எங்களவர்கள் அரும் பொருளாக்கி வைத்திருக்கிறார்கள். சுய வாசிப்பையும் , அவர்களாக வாசிப்பை அறிமுகமின்றி உணருதலையும் இது தடுக்கின்றது.
காமத்துப் பால் எவ்வாறு பாடப் புத்தகங்களில் வலிந்து தவிர்க்கப் படும் போதும், மாணவர்கள் திருக்குறளை எடுத்து விளக்கவுரையுடன் சோரம் போகும் அதிகாரம் வரை வாசித்துத் தெளிவடைகிரார்களோ அதுவே தான் பெரியவர்களின் இந்தப் பயப்படுத்தளுக்கும் தீர்வாக அமையும்.

அம்மா சமைக்கிறாள்,அப்பா பத்திரிகை படிக்கிறார், அண்ணா பந்து விளையாடுகிறான், அக்கா சமையலறையில் தாய்க்கு உதவுகிறாள் போன்ற பழைய கழிவிரக்கம் நிரம்பிய பாடப் புத்தகங்களையும், கதைப்புத்தகங்களையுமே திரும்பத் திரும்பக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

'னா -அம்மா, 'னா -இலை , ' யன்ன - ஈசன் என்று சொல்லிக் கொடுக்கும் போது சிவபெருமானினது படத்தையும் இன்னொரு புத்தகத்தில் அ'னாவில் தொடங்கும் அல்லா பற்றிப் படிக்கையில் அவனுக்கு உருவம் இல்லாது போதலையும் சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகளுக்கிடையிலான முரண்பாடுகளை யார் வளர்த்து விடுகிறது ? இன்னும், உருவமில்லாத அல்லாவை அவன், இவன், நாயன் என்று ஆண் பாலிலேயே அச்சுக் கோர்த்திருப்பதும்  பற்றி குழந்தைகள் என்னவென்று புரிந்து கொள்வார்கள் ?

எல்லாத் தரப்புக் குழந்தைகளும் , எல்லாத் தரப்புப் பெரியவர்களும் சேர்த்து உரையாடக் கூடிய தலைப்பில் குழந்தைகளுக்கான படிப்புக்கள் எதுவும் இல்லை. பிறகெப்படி இரு தரப்பினருக்குமிடையான அந்த நிரவலற்ற இடைவெளி பூர்த்தியாகும் ? குழந்தைகள் வேறு மொழியிலும் , பெரியவர்கள் அவர்களைத் அதே மொழியை இன்னும் கொச்சையாகக்  கையாண்ட படியுமே இரு தரப்பினருக்குமிடையான சமரசப்படுத்தல்கள் நிகழ்ந்து கொண்டே போகும்.

சின்னக் குழந்தைகள் பிரியப்படும் இலக்கியங்களில் முடிவும், தொடக்கமும் தேவையில்லை. அமெரிக்க குழந்தை இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் சூஸ் ,சின்னச் சின்னக் கதைகளை எழுதினர். பூனைகள், குரங்குகள், காக்கைகள், அவற்றுக்கான உடைகள, தொப்பிகள் போன்றவையும் அவற்றை நாளாந்தம் அவை உபயோகிக்கும் விதத்தையும் குழந்தைகள் இரசிக்கும் படியாக எழுதியிருப்பார். அதே நடை முறையில் பெறப்பட்டது தான் டொம் அண்ட் ஜெர்ரி கதைகள். டொம் அண்ட் ஜெர்ரிக் கதைகளின் முக்கியத்துவம் இது தான், பெரியவர்களுக்கும் விளங்குகின்ற சிறியவர்களுக்கும் விளங்குகின்ற சிறுவர்களுக்காக கதைகள் அவை. போது வாழ்க்கையில் இருவரது சந்திப்பின் போதும் நாம் மனம் திறந்து இது பற்றி உரையாடக் கூடியதாக இருக்கின்றது. பெரியவர்களின் கதைக்குள் வராதே என்று குழந்தைகளைத் திட்டுவதாகவோ, சின்னக் குழந்தைகளுக்கானவை என்று பெரியவர்களால் முற்றிலுமாக ஒதுக்கி விட முடியாததுமே இவற்றின் மிகச் சிறப்பம்சம். இவையே இரு தரப்பு வாழ்வியலதும் அடிப்படைப் புரிந்துணர்வுகள்.

இந்த இடத்தில் சம்பந்தப்பட்ட ஒராளுக்கு மட்டும் புரிந்தால் போதாது. ஏனென்றால் குழந்தைளை நாங்கள் பெரியவர்களாக வளர்க்க விரும்புகின்றோம். அதே போல குழந்தைகள் எங்களை குழந்தைகளாக்க விரும்புகிறார்கள். இருவருக்கும் அடிப்படைப் புரிந்துணர்வு என்பது மிக அவசியம்.

குழந்தைகளின் புத்தகங்கள் ஒலி நயத்துடனும் ஒரே மாதிரியான வார்த்தைகளை திருப்பத் திருப்ப ஒலிக்கச் செய்கிறதாயும், இலக்கணமாய்ச் சொல்லப்  போனால் ரைமிங் வார்த்தைகள், ஐறனி வார்த்தைகள் நிரம்பியும் இருக்க வேண்டும். எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சில  வார்த்தைகள் எத்தனை தடவை உச்சரிக்கப்பட்டன என்பதன் அளவு தெரிவதில்லை. இரண்டு நாட்களுக்கு முன் அதே அளவான வார்த்தைகள் உச்சரிக்கப் பட்ட போதும் கூட ஞாபகத்தில் இருப்பதில்லை. ஆகவே தொடர் ஒலி நயமான சந்தம் கொண்ட வார்த்தைகள் குழந்தைகளுக்கு மிக அவசியம்.

ஆங்கிலத்தில் அவை அதிகமாக இருக்கின்றது. ஆங்கிலத்தை அதிகமாக நான் சொல்லக் காரணம் தமிழ்ச் சூழலில் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டுமே குழந்தைகளுக்கு நாம் பயிற்றிவிக்கும் மொழியாக இருக்கின்றது. ஆனால் ரேடியன்ட் வேய், ஜங்கிள் புக் , கிண்டர் கார்டன் தவிர மேற்கத்தைய குழந்தைப் புத்தகங்கள் தமிழ்ச் சூழலுக்குள் வரவே இல்லை. கொஞ்சக் காலத்துக்கு முன் ரேடியன்ட் வேயில் கிறித்துமத்திற்கு  பையனுக்கு கேக் கொடுப்பதும் , பெண் குழந்தையொன்றுக்கு சின்னப் பையன் ஒருவன் பூச்சியைக் காட்டி பயமுறுத்துவதும் என்கிற பெண்ணிலைவாதச் சித்தரிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. மேற்குலகில் இவ்வாறான பழம் பெரும் குப்பைகளை தூர வீசி விட்டார்கள். இன்னமும் நாங்கள் தாத்தா காலம் தொடக்கம் எங்கள் வீட்டு 'புஸ்கா' 'கிஸ்கா' என்று பெயர் வைத்திருக்கும் வாண்டுகள்  வரை அவற்றையே பயன் படுத்துகின்றோம்.

குழந்தைகளின் உளவியல் மிக விசித்திரமானது . அவர்களுடைய பிடித்தமான கதை , உரையாடல், கார்டூன்கள்,பாடல்கள் போன்றவற்றை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவை ஒரே தன்மையானவை என்பதைப்  புரிந்து கொள்ள அவர்களுக்கு சில  நீண்ட வயதுகள் போக வேண்டும். சாப்பிடும் போதோ , நித்திரைக்குப் போகும் போதோ அவர்கள் திரும்பத்திரும்ப அவற்றைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சலிப்படைதல் என்பது சிறு குழந்தைகளின் மனப்பாங்கில் இல்லை. நாம் கதை  சொல்லும் பாங்கில் சின்ன ஒரு மாற்றம் வந்துவிட்டாலும் அவை அழத் தொடங்கி விடும். இன்னும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் கதை சொல்லலில் தவரவிடப்படும் சின்ன ஒரு வார்த்தையையும் முரண்டு பிடித்துத் திருப்பக் கேட்கும். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்குள் எழும் முரண்பாடான கேள்விகளைக் கேட்கவும் மறக்க மாட்டார்கள். இது ஒவ்வொரு நாளும் நிகழ்வதானாலும் குழந்தைகளின் மூளையில் இவ்வொவ்வொன்றும் புதியனவையாகவே பதியப்படுகின்றது.ஆகவே எமது விளக்கங்களும், குழந்தைகளது கேள்விகளின் நுட்பங்களும் மிக முக்கியமானவை.

மற்றையது உளவியல் ரீதியிலான பாதிப்புகளைச் சொல்கின்ற எந்தப் புத்தகத்தையும் நாங்கள் எங்களுடைய சூழலில் வரவேற்பதில்லை.

மரணம் பற்றிக் குழந்தை நூலொன்றில் விரிவாகச் சொல்லியிருக்குமாயின், மரணத்தின் பின் ஆவிகளாக அக் குழந்தைகளுடன் உரையாடும் பெற்றோர்களாயும், மந்திர சக்தி வாய்ந்த சின்ன இளவரசர்களாகவுமே  அவை இருக்கும். நாளாந்தச் சூழலில் யுத்தமோ, அசம்பாவிதமோ பெற்றோர்களைக் காவுகொடுத்த குழந்தையொன்றின் மன நிலையை குழந்தைகள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதுவதில்லை. என்னுடைய தகப்பனோ தாயோ  எதற்காக என்னிடம் மந்திரக் கோலைத் தரவில்லை என்று எல்லா அநாதரவாக்கப் பட்ட குழந்தைகளும் கட்டாயமாக நினைக்கும். குழந்தைகளுக்கான இலக்கியங்கள், புனைவுகள் என்பன ஏன் கணிதங்கள் வாய்ப்பாடுகள் என்பன கூட இன்னொன்றை அவர்களின் கற்பனை  உலகத்தில் புதுப்பித்துப் போட்டுவிடுவதற்காக நாம் எடுக்கிற அடிப்படைகள் தானே ? அவ்வாறிருக்க வாழ்வியலின் முக்கிய கட்டங்களை அவர்களிடமிருந்து மறைப்பதும், வளர்ந்தும் வளராத வளரிளம் பருவத்தில் சாவு பற்றியும், பாலியல் வன்புணர்ச்சியின் மூலம் சிசுவொன்று பிறத்தல் பற்றியும், கோர யுத்தங்களில் இருந்து பெறப்படும் திடீர் இழப்புக்கள் பற்றியும் , உறவுகளின் பன்னடத்தை பற்றியும் சொல்லிக் கொடுப்பதில் இருக்கின்ற பெரும் விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

இங்கிலாந்து குழந்தை நாவலொன்று, இவ்வாறு தொடங்குகின்றது. தகப்பனுக்கு எட்டுக் குழந்தைகளும், தாயிற்கு ஏழு குழந்தைகளும் இருந்தார்கள். அவர்கள் ஒரே வீட்டில் வசித்தார்கள். அது மிகவும் நகைச் சுவையான குழந்தை நாவல். தமிழ் சூழலில், தெற்காசியச் சூழலில் வளரக் கூடி குழந்தையொ ன்றிட்கு , நிச்சயமாக அந்த முதல்ப் பந்தியை விட்டு விலகி அடுத்தடுத்த பந்திகளுக்குள் தன்னை நியமமாகப் புகுத்திக் கொள்ளவே முடியாது.

'
எனது அப்பாவிற்கும் அம்மாவிற்கும் நாங்கள் இரண்டு பிள்ளைகள்,
ஒருவேளை நான் அம்மா பிள்ளை என்று சொல்லுவதும், தம்பி அப்பா பிள்ளை என்று சொல்லுவதும் போல ஒரு சமாச்சாரமோ ! ........'
குழந்தைகளின் மன நிலை மாறுபட்ட கோணங்களில் மிக யதார்த்தமாக ஆழமாகச் சிந்திக்கும். ஏனென்றால் சில பல ஆண்டுகளுக்கு முன் நான் இதே புத்தகத்தை வாசித்த போது என் முதிராத மன நிலை இப்படித் தான் இருந்தது.
 
இலங்கையைப்  பொறுத்தவரையில் சிங்கள மொழியில் அதிகளவிலான குழந்தை இலக்கியங்களை சமகாலத்துக்கு ஏற்றதாக பதிப்பகங்கள் தொடர்ந்தும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன .

ஆங்கில நூல்களின் துரித தேர்ந்தெடுத்த மொழிமாற்றமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. மிகச் சிறந்த குழந்தை இலக்கியங்களைத் தந்துகொண்டிருக்கின்ற மொழியாக சிங்கள மொழி தொடர்ந்தும் இருந்துகொண்டே வருகின்றது. கவலைக்குரிய விடயம் என்னவென்றால் மேற்கத்தைய ,எமது குழந்தைகளுக்குப் புரியாத நடப்பில் உள்ள இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் காட்டுகிற ஆர்வத்தை எமது தமிழ்ப் பதிப்பகங்கள் சிங்கள மொழி மூலங்களை மொழி பெயர்ப்பதில்க் காட்டுவதில்லை என்பதாகும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய 'அம்ப யாளுவோ' போன்ற சிறந்த புத்தகங்கள் மிக அருமையானவை.


குழந்தைகளுக்காக எழுவதற்கு எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகள் விரும்புகின்றவற்றை யாரும் எழுதுவதில்லை. குழந்தைச் சிறுகதைகளைக் காட்டிலும் குழந்தை நாவல்களில் சினிமா பிரதிபலிக்கும் அதே சூப்பர் ஹீரோயிசத்தொடும்,பிரபஞ்ச விழுங்கி மனிதர்களையும் எப்படியாவது உள்ளெடுத்து விடுகிறார்கள். மாயாவிக் கதைகள் , சித்திரக் குள்ளன் கதைகள் ,அம்புலி மாமாக் கதைகள் போன்றன கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கானவை என்பது சிறிய திருப்தியாவது அளிக்கிறது. இவற்றின் இருப்பு இப்போது முற்றிலுமாகத் தீர்ந்து போய்விட்டது. எனது பாலியக் காலங்களில் நான் மாயாவிக் கதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை. இவை சொல்லிக் கொண்டு வந்த சரக்குகள் தீர்ந்து விட்டன. ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் தொகுப்பைக் கூட சிறுவர் பகுதியில் தான் இன்றைக்கு வாசிக்க சாலையில் வைத்திருக்கிறார்கள். ஆனால் பாப்பாப் பாடல் பற்றிய எளிய உரைகளும் பாடல்களும் பெரியவர்களுக்கான  இலக்கியப் பகுதியில் கிடக்கிறது. வாசிக்கின்ற உங்களுக்கு , இவற்றை சீரணிப்பதட்குக் கொஞ்சக் காலம் எடுக்கும் !

எல்லாவற்றையும் விட இவற்றைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இவரக்ளை விட்டு மிகத் தூரத்தில் இருக்கிறார்கள்.தம்முடைய குழந்தைகள், தாம் கற்பிக்கும் குழந்தைகள் பற்றின புரிந்துணர்வு இல்லாமலேயே இவர்கள் தொடர்ந்தும் இருக்கிறார்கள். தாம் என்ன வகையான தொழிலைச் செய்ய விழைகிறோம் என்கிற அடிப்படை அறிவு கூட குழந்தைகளைக் கற்பிக்க வெளிக்கிடும் ஆசிரியர்களிடம்   இல்லாமை தான் மிகக் கவலையான விடயம். சாதாரணமாக குழந்தையோன்ருடன் உரையாடும் விடயத்தில் இருந்து, குழந்தைகளின் வெளிப்படையான  கேள்விகளுக்கு  பதிலளிப்பதில் இருந்து இவர்களின் உதாசீனம் பரவல்  மயப்படுத்தப்படுகின்றது.

எப்போதும் ஆசிரியர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று தான், தங்களை விட அறிவிலும் , மூளை பலத்திலும் சிறந்தவரகளை  உருவாக்குவதில் தான் உங்கள் நோக்கம் இருக்க வேண்டுமே ஒழிய, உங்களுக்குக் கீழ்ப்பட்ட அடிமைகளை அல்ல. காலா காலம் உங்களைப் பணிந்து நன்றி சொல்லக் கூடியவர்களாக உங்கள் மாணவர்களை உருவாக்கிப் போடுவதில் இருக்கும் முனைப்பு சின்னக் குழந்தையொன்றின் இயல்புக் கேள்விக்கான மிகத் திருத்தமான பரந்த வாசிப்புக் குட்பட்ட பதில் ஒன்றில் இருந்து தொடங்கட்டும். அவ்வாறே பெற்றோர்களாகிய உங்களுக்கும், குழந்தைகளை விடப்பெரியவர்களான என் போன்றோருக்கும் !

குழந்தைகளை உருவாக்குதல் என்பது உற்பத்திச் சிறப்பின் நோக்கமானதல்ல, என்ன வகையான உற்பத்தியை உருவாக்க வேண்டுமென்று அவர்களே தான் எதிர்காலத்தில் தீர்மானிக்கிறார்கள்.

நிலா-  

2010

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...