Skip to main content

அப்பா, நீங்கள் கையாலாகாதவரா?





இரண்டு கலைகளை ஒன்றாக நேசிப்பதையிட்டு,
ஒன்றுக்கு நிறம் பூசுதலையும்,
இன்னொன்றுக்கு நிறம் மக்கி விடுதலையும்
பிரிவினையாகக் கொண்டிருக்கிறேன்.

இரு தெரிவுகளையும்  பல் தேர்வுக்கோட்டு வினாவைப் போல்
நன்னாங்கு விடைகளை கொடுத்து தெரிவு செய்கிறேன்.
விடைப்பரப்பு தெளிவில்லாது போகுமானால்,
குதிரையோடுதலையும் வழக்கமாகக் கொள்வேன்.

தேடலுக்கு அப்பால் உள்ள புண்ணிய நதிக்கரையில்
எனது கலைகளது தெரிவுகள் விரிந்துகொண்டிருந்தது.

அப்பா !
திருத்த முடியாத உங்கள்  மகள்
கனவுகளில் இருந்து 
மீளப் படக் கூடியவள் என்று எப்போதாவது நினைக்கிறீர்களா?

பூமியின் நடுவே தொலைந்து போன
சிறிய மின்கம்பிகளைப் பரிசோதிக்கப் போவதாய்
உங்கள் கடைசி மகள் கூறிக் கொண்டு
ஆய்வுகூடமொன்றை சொந்தமாய் அமைக்கையில்
நீங்கள் ஏன் தடுக்கவில்லை ? 

விஞ்ஞானிக் குழந்தையொன்றைப் பெற்றெடுத்த சந்தோசத்திலிருந்து
அப்போதெல்லாம் நீங்கள் மீளவில்லையா?
எனது பிறப்பிலிருந்த கயமையை
நான் உதாசீனப்படுத்தக் கூடாதென்று நினைத்தீர்களா?

பாய்மரக் கப்பல்களைப் பின்னிக் கொண்டு
நான் கடல் கடந்து போவேன் என்று சொன்ன போது,
நீங்களேன் , குழந்தையின் முஷ்டிகளைப் பிடித்து,
முறுக்கி, அடங்கிக் கிட என்று சொல்லவில்லை ?

காக்கைக் குஞ்சொன்றை நான்
செல்லமாய் வளர்ப்பேன் என்றபோது,
என் உச்சந்தலையில் முகர்ந்து,
நான் தீனி வாங்கித் தருவேன் என்று ஏன் சொன்னீர்கள் ?
எங்கள் சமரசக் கதைகளில் இருந்து விலகிச் சென்ற சமயம் ,
உங்கள் முதலாளிக் குணத்துக் கெதிராய்
நான் துப்பாக்கி தூக்குவேன் என்றபோதும்,
என்னை ஏன் சின்னப் பிடில் ஒன்று வாங்கிக் கொடுத்து
உற்சாகப் படுத்தினீர்கள் ?

ஒரு வாய்ச் சோற்றைத் எனக்குத் தீத்துவதற்காய்
பொழுதுசாய்வதட்கு முன்னால் சிவந்து போயிருந்த
அந்தச் சூரியக் குமிழியைப் பிடித்துத் தருவதாய்ச் சொல்லிக் கொண்டிருந்த
உங்களுக்கு என்ன ஆயிற்றப்பா ?...........

நான் உங்களிடமும் ,
நீங்கள் என்னிடமும் இப்போது என்னால் ஒரு வாய்ச் சோற்றை
உட்கொள்ள முடியாததற்குக் காரணம் கேட்க முடியாமல்ப் போனதேன் ?
நான் வளர்ந்து விட்டேனா அப்பா ?..........

இப்போதும் அந்தச் சூரியக் குமிழியப் பிடித்துத் தந்தால்
நீரருந்தி ,
முழுமையாக ஒரு கோப்பைச் சோற்றைச் சாப்பிடுவேனே அப்பா !

நீங்கள் எனக்கேன், 
நரியும் திராட்சையும் கதை சொல்லித் தரவில்லை ?
யதார்த்தத்துக்குமப்பால்  தன் குழந்தை
வளர்ந்து விடக்கூடாதென்பதற்காய் அம்மா சொல்லித்தரும்,
'கூழ்ப்பானைக்குள் பல்லி விழுந்த' கதையை, எதிர்க்கும் திராணியை,
என் எதனை வைத்துத் தீர்மானித்தீர்கள் ?

உங்கள் குழந்தை ஒருநாள்
சாவின் சலிப்பூட்டும் பண்புகளின் ஊடாகப்  பயணிப்பாள்  என்பதை
நீங்களேன் உணரவேயில்லை?
நித்திய கைங்கரி  என்று நினைத்தீர்களா?

நான் விரும்பினால் எனது தியாகங்களையும்
திருத்தமற்ற எனது விழுமியங்களையும் பின்னைய நோக்கமின்றி
பரம்பலடையச் செய்யலாம் என்று எனக்கேன் அழுத்தி உரைத்தீர்கள் ?

என் சுயாதீனமான சிந்தனைகளை
ஒரு போதும், யாரும் மறுக்கமாட்டார்கள் என்று,
எப்படி உங்களால் தீர்க்கமாய் உணர முடிந்தது ?
நீங்கள் எனது பதின்ம வயதின் ஈற்றில் தோற்றுப் போவீர்கள் என்று,
உங்கள் வயதையொத்த நண்பர்கள் ஏன்
உங்களுக்குச் சொல்லித் தரவில்லை ?

அப்பா, நீங்கள் ஒரு முரண்பாட்டுக் குழந்தையை,
மூளைவளர்ச்ச்சி மற்றவர்களில் இருந்தும் வேறுபடுகின்ற ,
உலகத்தில் சடைத்துக் கொண்டு வாழத் திராணியற்ற
ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறீர்கள்.
நான் பிறந்த அன்றைக்கு
வைத்தியர்கள் யாரும் இதனைச் சொல்லவில்லையா ?

கொடிய யுத்தமொன்றின் நடுவில் துப்பாக்கிச் சன்னங்களின்
சூட்டு இடைவெளிகளுக்குள் பிரசவித்த குழந்தையல்லவா,
மனப்பிறழ்வுகளை 
பிறப்பின் போதே ஏற்றிருப்பேன் என்று நீங்கள் ஏன்
இன்னும் நம்பவில்லை ? ...........

இளவேனிலின் நட்சத்திரங்ககளை நீங்கள் பரிசளிக்கின்ற
ஒவ்வொரு தினத்திலும், நான் முரண்பாடாக எனக்கொரு
மசுக்குட்டியைப் பரிசளிப்பீர்களா என்று கேட்டவைகள்
ஞாபகமிருக்கின்றதா அப்பா ?

கடவுள் அதி காலையில் துயில் எழுந்து பல் துலக்கச்
சொல்லியிருப்பதாய், அம்மா சொன்ன போதெல்லாம்
கடவுளின் துவைக்காத கோவணம் பற்றி நீங்கள்,
சிரிக்கச் சொல்லித்தந்தது என்னப்பா ?

மலைகளின் அடியில் விழும் தெள்ளிய நீரை
நாலு பக்கமும் பிரித்து சமமாக அனுப்ப வேண்டும்  என்று
நான் முடிவெடுத்த போது ,
சின்ன மண்வெட்டியுடன் என்னை தனியாக
தெருவில் இறங்க ஏனப்பா  அனுமதித்தீர்கள் ?

இன்னொரு  உலகின்  அழைப்பின்   போதும்
அலுப்புத்  தட்டும்  பாதைகளைக்  கடக்க  ஏன்
மெல்லிய இசையை இசைக்கச் சொல்லிக் கொடுத்தீர்கள் ?
எனது  இசையை , 
ஆளுவோர்களுக்கு எதிரான யுக்தியாக ஏன் அறிவித்தீர்கள் ?

சட்டத்துக்குப் புறம்பான நரகமொன்ரை நான் பார்த்த போது ,
சட்டமொன்றை நான் கையிலெடுக்க 
எதற்காக என்னைத் தனியே அனுப்பினீர்கள் ?

நிலைத்தும், சரிந்துவிடாமலும் இருக்க முயன்று கொண்டிருக்கிறேன்!
என்னை ஊனமாகவும், குருடாகவும்,
சில பொழுதுகளில் செவிடாகவும் ஆக்க விடாமல்,
என்னைச் சுற்றிய இரைச்சல் தாடாத்துகிறது !

அப்பா,
எனது இயலாமைகளை எங்கெல்லாம் கழற்றி விட்டீர்களோ,
அதுவெல்லாம் என் இயலாமையாய்ப்  போனதேன் ?

பணம் படைத்த ஒரு அதி நவீனக் காரிலோ,
பங்களாவோன்றின் சொகுசு அறையிலோ 
நான் வாழ விரும்பவில்லை  என்றபோது
எனக்கும் தங்கப்பல்லு வேண்டாம் குஞ்சு !-
என்று என்னை ஏன் வாரி அணைத்தீர்கள் ?

நாங்களெல்லாம் தேவர்களின் தூதனில்லையா என்றபோது,
தேவ மகனைப் பற்றி எனக்கெதற்காய் ஆசை காட்டினீர்கள் ?
கனவின் பிடி  உறக்கத்தில் நான் பிதற்றும் போது
ஒரு நாளில் நனவாகும் என்று
எதெற்கெடுத்தாலும்  ஏன் சொல்லித் தொலைத்தீர்கள் ?

கனவுகளில் இருந்து மீள முடியாத பெட்டைக் குழந்தையை
நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறீகள் என்ற சுமை,
உங்களுக்கு எப்போதுமே உறைக்கவில்லையா?
என் பதின்மத்தின் இறுதியில் உறைக்கிறதில்லையா ?

ஒரு தோற்றுப் போன குழந்தையின் அழகிலியலை
இன்னுமா நீங்கள் எனக்கே சொல்லாமல் இரசிக்கிறீர்கள் ?
சூரியக் குமிழியைப் பிடித்துத் தருவேன் என்று 
ஆசைகாட்டிய அப்பன் நீங்கள் தானே ?
நீங்கள் கையாலாகதாவர் இல்லையா ?
நிலவு காட்டாமல் சூரியக் குமிழி காட்டி 
என்னை ஏன் முரண்பாட்டுக் குட்டியாக வளர்த்தீர்கள் ?
நீங்கள் கையாலாகாதவரா அப்பா ?

எனது தேவைகளை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
ஆயிரம் சங்கல்ப்பங்கள் பூண்டு 
அவை நமக்குள் எந்த வித கைங்கரிய பேதத்தையும்
தரமுடியாதென்று,
நீங்கள் ,
என்னை குதிரையேற்றம்  பழக்கிய
இரண்டாம் நாள் தனியே என்னை குதிரையில் தவிக்க விட்டபடி
கை காட்டி மறைந்த போது
தூரத்தில் உரக்கச் சொல்லவில்லியா ?

அப்பா, நீங்கள் கையாலாகாதவரா  ?

எனக்கென்ன தேவை என்பதை 
மணம் நுகர்ந்தே  அறிவேன் என்று பொய்க்குப் பிதற்றியிருக்கிறீர்கள்!
இல்லாவிட்டால், இன்னுமா உங்களுக்குத் தெரியாது ?

உங்களைக் கையாலாகாத ஆளாக்கிவிடும் நிலை எனக்கேனப்பா வந்தது ?



நிலா -
2011 



Comments

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...