ஆழம் குறையாத அகன்ற நீர்ப்பரப்பு
தெளிந்த மனம் போல சிதறாத வான் நிழல்
நாணம் பற்றிச் சிந்திக்காத நாமிருவர்-நம்மிடையே
நலிந்து தோற்றுப் போன வெட்கம்; சிக்கனம்;
இன்னும் பிற கக்கணம்.
நீண்ட மணற்பரப்பில் நீர் துள்ளி ஓடும்
மீன்களற்ற தாழை மடல் கசங்கிக் கிடக்கும்.
ஆற்றங்கரையின் வளைந்த மூங்கிலுக்குள் கீச்சிடுவேன் நான்.
கருதுதல் ஒரு பிழையுமஅல்லவே ?-நாங்கள் வாதித்திருப்போம் !
வசந்தங்கள் போய் கோடை வருகையில், குளம் குட்டி மீன்களும்
குறுனிப் பேத்தைக்களுமாய் தவம் கிடக்கும்.
நல்ல கொக்குகளிற்கு நளினம் பிடிபடாது !
நமக்கென்ன கொக்கு துரத்தும் வேலையா?
கொஞ்சம் கூடி பற்றைக்குள் படுத்திருப்போம்.
புள் உரசும் ;போகம் காட்டும்
சத்தமிடும்; சரசம் காட்டும் !
சன்னத உச்சியில் ஒரு குருவி
வேட்டைக் காரனின் கவணுக்கு இலக்காகும்.
நீ துயில் களைந்து எழும்புவாய்,
நான் தூங்காத பலநாளின் கதை சொல்லுவேன்.
கோடை கழிந்துவிடும்.
கொடும் வெயிலில் நீ புழுத்திருப்பாய்.
ஆடை அற்ற அன்பில் நான் ஆயுதங்கள் வேண்ட நிற்பேன்!
நீண்ட நிலம் பெருகி,
பூக்கள் நமக்கு காய் தரும்.
அன்று ஈக்கள் பழம் நக்கி
தேன் சுனையை தேடி வரும்.
மாக்கள் வடு பிளந்து மாந்தளிரை
நுனி பிளக்கும்
தேக்கும் தேமாவும் இதம் தருகும்; இங்கிதமாய்.
வீட்டின் கூரையில் ஒளித்து வைக்கும்
உன் கடிதம் -ஒரு நாளோ ,இரு நாளோ -
காற்றின் பலவந்தம்
கன பேர் முன் வந்து விழும்.
திண்ணை பெருக்கும். ஊர் கூடும்
கள்ள உன்மத்தம் ,கடிதம், குறிப்புக்கள்,
எள்ளும் பாகும் போல் எங்கள் சல்லாபங்கள்
எல்லாம் அந்நாளில் அப்பட்டாமாய்ச் சிக்கும்.
எங்கள் காலத்தை எங்கும் முடித்திட ,
போர் என்ற ஒன்று பொய்க்காய் வீடு வரும்.
புரளும் சனத்தை அது புதைத்துப் போடுமாம்.
வெடிகள், விமானங்கள் குண்டு போடுமாம்.
குழந்தைகள், குமாரர்களை அது அள்ளித் தின்னுமாம்.
வானம் நிறம் மக்கிப் போனது.
நதி தீரம் ஈரம் குலைந்தது.
நதிப் பள்ளத் தாக்கில் பிணங்கள் குவிந்தன.
ஊரில் நரிகள் ஊளையிட்டன.
நமக்கேதும் புரிந்தது?
ம்ஹூம் ஒன்றுமில்லை.
கள்ளம் கபடமற்று நாங்கள் காலம் தள்ள எண்ணினோம்.
காலம் ஒரு நாள் ஒரு கர்வம் புரிந்தது.
நீ என்னை நீங்குதலாய் அது இருந்திருக்க வேண்டும்.
நீ விலகிப் போய் கன நாட்கள்....
துப்பாக்கியின் பாரத்தில் உன் தோள் விரிந்திருக்கும்.
இப்போது நீ குறிபார்த்து சுடத் தொடங்கியிருப்பாய்.
நீ காடுகள் மலைகள் கடந்து பயனிப்பாய்,
கன தரம் குண்டுகள் அடிபட்டு
சாகக் கிடந்திருப்பாய்,
நிரந்தரம் இல்லை- நாம், நமது, என்ற உன் தொனி
நிலங்களைச் சுரண்டுவோரை சாடிக் கொண்டே இருந்தது.
நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்,
நீ சுட்டுச் சாய்த்தவர்கள் அயலூரில் புதைக்கப்பட்டார்கள்.
நீ பெரிய கனவான்.
நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்,
நீ புதைத்தவர்களிடம் இருந்து விதைகள் மறுக்கப்பட்டன.
நான் இன்னும் கேட்டுக் கொண்டே இருந்தேன்,
நீ ஒரு நாள் புதைகுழிக்குள் மண் தூவி மூடப்பட்டதை.
நிலவு விழுந்து நொறுங்கிய நதி வளைவில் நான் தனியே
ஓரிரவில் சிந்தித்தேன்.
அரைத்து முடிந்திருந்த அரளிவிதைகள் கசக்கும்.
இனிக்கும் முத்தமும்,
நீ என்ற நினைப்பில் பாறைக்கல்லில்,
உன் மார்பில் என் நித்திரையும்
நாங்கள் சாவோம்.
எந்தச் சலனமும் இல்லாமல்.
அந்த இரவில்
குளிர் தெரியாது; நதிக் கரை ஊதல்க் காற்றுத் தொளைக்காது.
நாணல் வளைவது தெரியாது.
விடிந்த போதில் சூரியன் சுட்டதும் தெரியாது.
தூரத்தில் ஆராரும் சப்தமிட்டு சடைப்பார்கள்...
காகம் கத்திக் கரையும்.
இனொரு காகம் வட்டமடிக்கும்.
சின்னக் குருவிகள் சத்தம் கேட்டு கரைந்து போகும்.
நாய்கள் மோப்பம் பிடிக்கும்.
நாமிருவர் மல்லாக்காய் சாய்ந்திருப்போம்.
இப்போதும் சொப்பனம் தானே!
நூற்றாண்டுக்கு முன்னம்
இன் நதி தீரத்தில்
நானும் நீயுமாய்
எறித்த நிலவொளியில் மகிழ்ந்திருந்தோம்.
புல் நுனியின் பூக்கள் பிய்த்து மகிழ்ந்திருந்தோம்.
காலம் விரைந்து போனது.
கடுகளவு மாற்றமும் இல்லாமல்
மீண்டும் நூறாண்டுகள் கழித்து நாம் பிறப்போம். இறப்போம்
இந் நதி தீரம் நமக்குச் சொந்தமானது.
பொழிதல் ஒழிந்து வான் மூடவிருக்கும் சந்தர்ப்பத்தில் நாங்கள் பிறப்போம்.
வானை நோக்கி கைகள் பொத்தி முஷ்டி உயர்த்தி
ஜய கோஷம் சொல்வோம்.
போர்கள்இல்லாத ஒரு இரவில் நாங்கள் பிறந்ததாய் மார் தட்டுவோம்.
இந் நதி தீரம் நமக்குச் சொந்தமானது........
நாங்கள் இங்கு தான் வாழ்ந்தோம்
இந் நதி தீரம் நமக்குச் சொந்தமானது........!
இது ஒரு போர்க்காலக் காதல்க் கவிதை என்ற நினைப்போடு
நான் எழுதியிருக் கக் கூடும். அந்தக் காங்களில் [2004 ]காதல்க் கவிதைகள்
தனியே எழுதி கொஞ்சமும் பழக்கமில்லாததால், போர் போன்ற ஒரு பொதுமையை இணைக்க
வேண்டி இருந்திருக்கலாம்.
எனக்கு இன்னுமே ஒன்றுமாக
விளங்கேல்ல, நான் ஏன் நதி தீரத்தைப் பற்றி எழுதத் தொடங்கினேன் என்று,
வடக்கில் போருக்கும், [நான் அந்தக் காலங்களில் இருந்தது கண்டி மகாவலிக்கு
அருகே :) ]நதி தீரத்துக்கும் நிறையத் தொடர்பே அல்லாமல்ப் கவிதையில
பொருந்திப் போயிருக்குது. போர் வேறு அனுபவம், நதிகள், கங்கைகள் ,இயற்கை
..வேறு அனுபவம் இரண்டையும் சேர்க்க முயற்சித்திருக்கிறேன் போல.
திருக்கோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்கள் இவை என்று இப்போதைக்கு மழுப்பி விடலாம். உண்மையாகவே அனுபவங்கள் சார்ந்ததில்லாது வரும் உணர்ச்சி வெளிப்பாடுகள்,
அவற்றின் அனுபவங்கள் கிடைத்ததும் தூசுகளைப் போல சிதைந்து போகின்றன அல்லவா?
இந்தக் கவிதையும் அப்படித் தான்.
நிலா-
[2004]
Comments
Post a Comment