Skip to main content

மேற்செம்பாலையும் மினக்கெட்ட வேலையும்

இசை பற்றி ஏதாவது குறிப்பு எழுதவேண்டும் என்று நினைக்கும் போது மட்டும் நேரம் கிடைப்பதில்லை என்று ஆகிவிடும், அடிக்கடி எழுதும் கவிதைகளை இவ்விடம் புறக்கணிக்க. நேற்று நிலைச் செய்தி/ நிலைபரம் போட்ட, "நினைத்து நினைத்துப் பார்த்தேன் ", '7G, ரெயின் போ கொலனி' படப் பாடலுக்கு அவ்வளவு அமோகமான வரவேற்பு, எல்லாரும் பாதிக்கப்பட்ட மக்கள் தான் போல.ஒரு கட்டத்தில் என்னுடைய நிலைத்தகவலை என்னுடைய பாதுகாப்புக் காரணமாக இரகசிய பாதுகாப்புச் சட்டத்தில் மறைக்க வேண்டியதாய்ப் போச்சு. அதற்குப் பிறகு நிறைய நண்பர்கள் அதனுடைய இசைக் கோர்வை வடிவத்தை முடிந்தால்த் தரும்படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள், [ அவை யாருக்கும் அதை நான் தருவதாக பதில் அனுப்பவே இல்லை எண்டது வேற கதை ] இந்தப் பாடலை நான் கீ போர்ட்டில் வாசித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக இருக்கும், இசை வடிவத்தில் வாசிக்கவே கூடாது என்று இறுக்கமாக வைத்திருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. கடைசியாக நண்பி ஒருத்தியின் பிறந்த நாள் வைபவத்தில் வாசித்து, எல்லோருடைய "மூட்" டையும் மாத்தி விட்டதாக ஞாபகம். நண்பிகள் நிறையப் பேர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புறதா அன்பு மிரட்டல் விட்டதற்குப் பிறகு இதைப் பொது இடங்களிலோ, வீட்டிலோ வாசிக்கிறதை மறக்க வேண்டியதாய்ப் போச்சு, மற்றவர்களதும் எனதும் சௌகரியத்திற்காக 😉 ஆனால், நேற்று இரவு தொடக்கம் இன்று மதியம் வரை [ இன்னும் எத்தினை நாளைக்குத் தொடரும் என்று தெரியேல்ல ] இந்தப் பாடலை திருப்பித் திருப்பி வாசிக்கத் தூண்டிய நல்ல நண்பர்களை சாத்தான் கவனிப்பானாக 😉 இந்தப் பாடலைப் பற்றிக் கதைத்தால் இதிண்ட ராகத்தைப் பற்றிக் கட்டாயம் கதைக்கோணும். "கல்யாணி" இசை தெரியாதவர்களுக்கும் பரீட்சயமான அந்த இராகத்தில் தான் இந்தப் பாட்டு அமைஞ்சிருக்குது. இந்த இடத்தில் தான் படிச்ச மியூசிக் தியரி எல்லாத்தையும் ஞாபகப் படுத்தி எழுதோணும் 😉 72 மேளகர்த்தா இராகங்கள் இருக்குதெண்டு சங்கீத அரிவரிப் பிள்ளைக்கும் தெரியும், அதில இது 65 வது இராகம். வேங்கட மகி ,வேங்கட மகி என்று ஒருத்தர் இருந்தார்.அவரை அவற்றை நண்பர்கள் 'வேங்கி டேய்...வேங்கி டேய்..., எண்டு ஷோட்டாக் கூப்பிடுவின. இவர் இராகங்களிண்ட பெயரையும் அவையிண்ட இராக ஒற்றுமையையும் கண்டு பிடிக்கிறதுக்காக "கடப ஜாதி" எண்ட ஒரு கல்குலேஷனை மையமா வெச்சு "சதுர் தாண்டிப் பிரகாசிகை" என்ட ஒரு புத்தகமா எழுதினர். [ பரவாயில்ல பழைய நோட்ஸ் எல்லாம் ஞாபகம் இருக்குது] இதை இசையின் இலக்கணம் எண்டு குறிப்பிடுவம். தமிழுக்கு தொல்காப்பியர் எழுதின தொல்காப்பியம் மாதிரி இது இசைக்கு இலக்கணம். அதில இதை "மேஷ" எண்ட அடை மொழிப் பெயரோட சேர்த்து அழைச்சார். அதால இது மேஷ கல்யாணி எண்டு ஆயிட்டு, இதை வட நாட்டில "யமன் கல்யாணி", "சாந்த கல்யாணி", "யமன் தாட்" அப்பிடியெல்லாம் சொல்லுவினம், எங்களுக்கு, கல்யாணி எண்டாலே தெரியும், பக்கத்து வீட்டு கல்யாணி அக்கா மாதிரி இதுவும் படு பயங்கர இனிமையானது. வேங்கி மாமாக்குப் பிறகு வந்த பொன்னுசாமி எண்ட அங்கிள் 72 மேளகர்த்தா வடிவம் பிழை, 32 தான் இருக்குது எண்டு சதுர் தாண்டிப் பிரகாசிகையை எடிட் பண்ணினது வேற கதை. அதுக்கு அவர் "பூர்வீக சங்கீத உண்மை" எண்டு தமிழில பேர் வெச்சு 36 இராகங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இவர் நாதஸ்வர மும்மூர்த்திகளில் ஒருத்தர். மதுரை பொன்னுசாமி எண்டா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் . [1887 ] "சங்கர் + ஆபரணம்" எண்டு சொல்லுற சங்கராபரணம் எண்ட இரகத்திண்ட நேர் பிரதி மத்திமம். நேர் பிரதி மத்திமம் எண்டா பெரிய இசை லோகிதமெல்லாம் இல்லை, சங்கராபரணத்தைத் முட்டைப் பரோட்டா மாதிரித் திருப்பிப் போட்டா வார சத்தம் கல்யாணியா இருக்கும். அவ்வளவு தான் ! பிறகு நிலா இசை தெரியாத ஆக்களுக்கெல்லாம் விளங்காத மாதிரி எழுதுறா எண்டு வந்திரக் கூடாது பாருங்கோ. இதை விட "சங்கர்" எண்டுற ஆள் அணியிற ஆபரணம், மண்டையோட்டு மாலை எண்டுறது நான் கடவுள் பாத்த எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தெரியாட்டி படம் பார்த்துத் தெளிக்க. இல்லாட்டி இலங்கை மூன்றாமாண்டு சமய பாடப் புத்தகத்தை ரிபர் பண்ணுக. இதை ஏன் சொல்லுறன் எண்டா, இந்த சங்கர் போடுற ஆபரணம் எப்பிடி மண்டையோடும் ,கவச குண்டலமுமா கரடு முறடா இருக்குமோ அந்த சங்கராபரண இராகமும் இசைக்க கரடுமுறடானது, அதற்கு நேர் பிரதி மத்திமமான கல்யாணியோ ச்சோ ச்வீட் ! சரியான ஸ்மூத். சங்கற்ற மனுசி உமா மாதிரி 😉 பிரதி மத்திமம் என்றால் "ம" என்ற சுரத்தானத்தை கூட்டாமல்க் குறைக்காமல் இரண்டாம் படியில் பாட வேண்டும். அதாவது, அடி நாதம், மத்திம நாதம், உச்ச நாதம் என்று அடி எடுக்க வேண்டும். கீழே குறிப்பிடட்ட ஒவ்வொரு சுரத்தானமும் இவ் வொவ்வொரு அடி நாதத்தில் பாடினால் ஒழிய கல்யாணி பெறப்பட மாட்டாது. ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) என்ற சுரத் தானங்கள் தான் பிடிபடும், அப்பிடி வேற ஏதாவது பிடி பட்டா அவர் வேற இராகம்.பிறகு வேங்கட மகி சொன்ன இலக்கணத்தில், இது ருத்ர என்ட பதினோராவது சக்கரத்தில் ஐந்தாவது தாய் இராகம். மேளகர்த்தா இராகம் எண்டும் சொல்லுவினம், [மேளம் அடிக்கிற இராகம் இல்லை 😉 ] ஹங்கேரி போன்ற சாஸ்திரீய இசையுடன் தொடர்புடைய மேலை நாட்டில் இந்த இராகம் சரியான பிரபலமாம். "சொன்முயூஸ்" எண்டு அழைப்பினம். எல்லாத்தையும் விட "மேற் செம்பாலை" என்ற அழகிய பெயரால் தமிழிசையில் அழைக்கப்பட்டது தான் மேஷ கல்யாணி என்றாயிற்று. இந்த அநியாயத்தைச் செய்தவர் சாரங்க தேவர் எண்ட மனுஷன். பதின் மூன்றாம் நூற்றாண்டில காஸ்மீரத்தில இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த மனுசன் சும்மா இருக்காம, கருநாடக இசையில் இருந்து தான் தமிழிசை தோன்றினது எண்டும், தமிழிலை இருந்த ஒலிக் குறியீடுகளுக்கு வட மொழிப் பெயர்களைப் புகுத்தி "சங்கீத ரத்னாகரம்" என்ட நூலை எழுதிப் போட்டார். அதுவே எங்கட "அவாள்" மாருக்கு சரியாப் பிடிச்சுப் போயிட்டுது. கடவுளின்ட மொழியில தான் உதுவும் வந்தது எண்டு சும்மா எகிறிக் கிளம்பீட்டாங்கள். அடியார்க்கு நல்லார் பதிவு செய்த 11 ,999 தமிழிசைப் பண்களும், [இவர் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதினவர்] அகத்தியர் பதிவு செய்த 108 பண்களும், வார்த்தல், வடித்தல், கானல், உ றத்தல் , தெருட்டல், அள்ளல்,உந்தல், பட்டடை எண்டு யாழ் மீடடுற எட்டு வகையான அமைப்பையும், ஏழிசை பற்றியும், நான்கு வகைப் பாலை பற்றியும் தொல்காப்பியரே சொல்லி இருக்கிறார். பிறகு உந்தத் தமிழசை எல்லாம் எங்கயிருந்தாம் வந்தது ? "செயிற்றியம்", "குண நூல்", 'சிகண்டி முனிவர்' எழுதிய இசை "நுணுக்கம்", 'யாமளேந்திரர்' எழுதின "இந்திர காவியம்", 'ஆதிவாயிலார்' எழுதின "பாரத சேனாபதீயம்", 'மதிவாணன்' எழுதின"நாடகத் தமிழ் நூல்" , 'அறிவாணர்' எழுதின "பஞ்சமரபு" [தொல்காப்பியர் காலம் ] போன்றவற்றில் தமிழிசை பற்றித் தெளிவாக விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப காலத்தால் அழிந்த புத்தகங்களாயீட்டுது.நூலகங்களில தேடியும் படிக்க முடியாமல்ப் போற நிலை வந்தாச்சு. "நாடகத் தமிழ் நூல்", மற்றும் "சேனாபதீயம்" போன்றவற்றை கொழும்புத் தமிழ் சங்க நூலகத்தில் விரும்பினவர்கள் தேடிப்படிக்கலாம். 'யாமளேந்திரர்' எழுதின "இந்திர காவியத்தை" வெச்சிருந்த எண்ட தெரிஞ்ச தாத்தா ஒராள் அண்மையில செத்துப் போயிட்டார், ஆள் இருந்தாலாவது அதைத் தேடித் பாக்கலாம். புத்தகங்களைப் பேரப் பிள்ளையளுக்கு எழுதி வெச்சிட்டு செத்துப் போங்கடா டேய் ! குறிஞ்சிப் பண், மருதப் பண், காஞ்சிப் பண், செவ்வழிப் பண், படுமலைப் பண், விளரிப் பண் போன்ற பெயர்கள் புற நானூற்றில அடிக்கடிக் காணலாம். இப்பிடி ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னமே தொல்காப்பியர் இவற்றைத் தொகுத்து வெச்சவர். தொகுக்கிறத்துக்கு முன்பாக வாய்மொழி ரீதியாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பேணிப்பாதுகாக்கப் பட்டதோ தெரியேல்ல. அது கிடக்க, வேதங்கள் சொல்லுற ஒரு கல்ப்பமே ஐயாயிரம் வருஷம் தான், கல்பாகல்ப்பமா தொடருற தமிழிசை எண்டு அவையே ஒத்துக் கொண்டிட்டினம். சரி அதை விடுவம். "மேற் செம்பாலை " யைப் பற்றிப் பாத்துக் கொண்டு இருந்தம், இந்த இராகத்தில் ஏழு சுரங்களுமே கைகோர்த்து ஜதி தரும். ஜதி தருமெண்டா இந்த இடத்தில இளையராஜா அவர்களை ஞாபகப் படுத்தோணும். கல்யாணிக்கும் இளையராஜாவுக்கும் அப்பிடியொரு நல்ல பொருத்தம். பிழையா நினைக்காதியல்,கல்யாணி இராகத்துக்கும் இசை ஞானிக்கும் அப்பிடி ஒரு நல்ல ஒத்திசைவு எண்டு சொல்ல வந்தன். ஏராளமான படங்களில இந்த இராகத்தில பாட்டுத் தந்து பின்னி எடுத்திருப்பார். அதிலையும் அதே இராகத்தை முழுமையா, வேற இராகத்தின் சாயல் இல்லாமழ்த் தருவதில் அவருக்கு நிகர் அவர் தான். இது ஒரு சம்பூரண இராகம்.சம்பூரண இராகம் எண்டா, முழுமையான இராகம். எல்லா ஏழு சுரத் தானங்களும் ஒன்றை ஒன்று விடாமல் , இசைக்கேக்க வந்து சேரும் அவ்வளவு தான். இந்த இராகத்தை நல்ல சுதியா இருக்கேக்கையும் பாடலாம், அமைதியை விரும்பேக்கையும் பாடலாம்;இசைக்கலாம். முதல்லையே சொன்ன மாதிரி மங்களகரமான இராகம். இதை சரியாப் பாடினா, நெற்றி நிறைய குங்குமப் பொட்டும், நேர் உச்சி புறிச்சு , நீண்ட கூந்தலில நிறையப் பவள மல்லிகைப் பூவும் , மஞ்சளும் , வெண் பொன் பட்டுச் சேலையும் உடுத்துக் கொண்டு ஷோபா / அமலா மாதிரி அழகான பெண் பக்கத்தில இருந்து "ராகுநாதையற்ற வீணை" வாசிக்கிற மாதிரி ஒரு பீலிங் தரும் ;)) பொம்புளைப் பிள்ளையளுக்கு, இடைக்காலப் படத்தில வார ரகு என்கிற ரகுமான் மாதிரி அல்லது அந்த சாயலில் உள்ள யாராவது ( ? ) குர்த்தாவும், ஜீன்சும் போட்டுக் கொண்டு கடற் கரையோரத்தில கவிதை பாடிக் கொண்டே வீணை வாசிக்கிற மாதிரி பீலிங் குடுக்கும் ;)) மங்களகரமான இராகம் எண்டதில மேற்படி சமாச்சாரம் தான் விடயம் 🙂 இந்த இராகம் இன்னும் இன்னும் மேலே மேலே ஆலாபனை செய்துகொண்டு போகேக்க, இருட்டில் பயணிக்கும் போது உற்ற துணை ஒருவர் கையைப் பிடித்து வெளிச்சத்துக்குக் கூட்டி வரும் நிறைவைத் தரவல்லது, தனிமை பயம், இருட்டின் பயம், காதல் பயம், மன அழுத்தங்களின் பயம் போன்றவற்றை நீக்கவல்ல இராகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இராகங்கள் நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படும் வரிசையில் மேற் செம்பாலையின் குணம் இதுவாகும். மாலை நேரம் பாட உகந்த பண். முக்கியக் குறிப்பு, இந்த இராகத்தைத் தொடர்ந்து படித்து வந்தால் விரும்பும் திருமணம் கை கூடுமாம். நான் சொல்லேல்ல, "இராக கருணாநிதி" எனும் புத்தகத்தில் 'கோபையர்' சொல்லி இருக்கிறார். பாவம் 'கோபையர்' என்ன கஷ்டம் பட்டாரோ ;))) இன்னும் கொஞ்சம் விரிவாப் பாக்கிறதாய் இருந்தால், ஏறுவரிசை [ஆரோஹணம்] : ச ரி2 க3 ம2 ப த2 நி3 ச்- s r2 g3 m2 p d2 n3 S இறங்கு வரிசை [அவரோஹணம் ]: ச நி3 த2 ப ம2 க3 ரி2 ச் - S R2 G3 M2 P D2 N3 S' [keybord]கீபோட் எனும்இசைப்பலகையிலும், பியானோ போன்ற மேற்கத்திய இசைக்கருவியிலும், யாழ், வீணை, வேய்ங்குழல் போன்ற சாத்திரீய இசைக்கருவிகளிலும், குறிப்பா "ம்ருத்" எண்டுற மிருதங்கத்திலையும் அதாவது தாளக் கட்டுடன் வாசிப்பதற்கு, மிகவும் சுலபமான இராகம். ஆனால் நிறைய அசைவுகளுக்கு, விஸ்தாரமான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.ஆலாபனை எண்டால் கச்சேரி சீசன் நேரத்தில பாகவதர், 'நியூரோப் பரலைஸ்' [Neuro paralizes] வந்து வாய் இழுத்த மாதிரி அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் உய் உய் உய்.....எண்டு சொன்னதையே சொல்லி இழுத்துக் கொண்டிருப்பாரே!அதே அந்தச் சமாச்சாரம் தான். இவ்வளவு சொன்ன நான் சினிமாப் படத்தில வந்த கொஞ்சப் பாட்டுக்கள் சொல்லாட்டி எப்பிடி மேற் செம்பாலையை நாங்கள் கண்டு பிடிக்கிறது என்ன? நான் சின்னனில இருந்து பட்டியல் போட்டு வெச்சிருந்த சில பாட்டுக்கள் இதோ, 1} வீனைஅடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு...... மலையோரம் மாங்குயிலே ........ உன்னை நான் பார்க்கையில்.... மனதில் ஒரு பாட்டு....... மஞ்சள் வெயில் ....... தாலாட்டும் காற்றே........ கண்ணன் வந்தான்...... தாழையாம் பூ முடிச்சு தளம்பாத நடை நடந்து......... வெள்ளைப் புறா ஒன்று கையில்...... நிற்பதுவே நடப்பதுவே -[ பாரதி படத்தில் மட்டும் ]..... 2 } நதியில் ஆடும் பூவனம்...... புத்தம் புது ஓலை வரும்......... தேன் சிந்துதே வானம்........ கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே....... சுந்தரி கண்ணால் ஒரு சேதி...... நான் என்பது நீ அல்லவா தேவ தேவா........ வா காத்திருக்க நேரமில்லை....... ராதா அழைக்கிறாள் ஆசை ...... [இந்த மாதிரி செம டூயட் ரொமாண்டிக் பாடல்களுக்கு இதை விட்டா வேற என்ன ராகம் ?] 3 } காற்றில் வரும் கீதமே........ ஜனனி ஜனனீ ஜகம் நீ அகம் நீ...... அம்மா என்று அழைக்காத..... வைதேகி ராமன்....... சேது படத்தில வார அபித்தா முனுமுனுக்கும் அந்தப் பாடல், பேர் மறந்துட்டுது. 4} சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு....... உப்புக் கருவாடு......... சுத்தி சுத்தி வந்தீஹ ....... அத்திக்காய் காய் காய்..... கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்டை மீனைக் கண்டு........ 5 } சிந்தனை செய் மனமே...... இசை கேட்டால் புவி அசைந்தாடும்........ கலை வாணியே ....... கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா ....... அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ....... வந்தாள் மகா லக்ஷ்மியே........ இப்படி வகுப்பு வாரியாக பாடல்களைப் பிரித்துவைத்து மெல்ல முணுமுணுத்துப் பாருங்கோ, ஒரே ராகம் என்ட விஷயம் நால்லாத் தெரியும். இதை விட முக்கியமான விஷயம் நினைத்து நினைத்துப் பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் பாட்டும் மேற் செம்பாலைப் பண்ணில் அமைந்ததே. இதைச் சொல்லுறத்துக்குத் தான் இவ்வளவு பிரயத் தனம், நேற்று என்னட்டக் கேட்ட எல்லா நண்பர்களுக்காகவும் அந்தப் பாடலின் வரிகளுக்கான சுரக் கோர்வையை எழுதியிருக்கிறேன். இசைக்கருவியில் வாசிக்கும் போது மத்திமத்தானத்தில் வாசிக்கவும். இதை மேற்கத்திய முறைப்படி " C " இல் கோட்ஸ் பிடித்துக் கொண்டு வாசிக்க வேணும். இந்தப்பாட்டிண்ட வரிகளையும், இசையமைப்பையும் சொல்லுறதுக்கு ஒரு தனிப்பதிவு எழுதவேண்டியிருக்கும். எப்ப இந்தப் பாட்டைக் கேட்டாலும் என்னமோ செய்யும், ஐயோ! என்னமோ செய்யிறதென்ன கொல்லும்/ சாகடிக்கும். தொடர்ந்து நாலைஞ்சு நாளைக்கு மூளைக்குள்ள குடைஞ்சு கொண்டு ரீங்காரம் போட்டு , மனுசனை அடுத்த வேலை செய்ய விடாம பட்டினி போடும். இதை விட இந்தப் பாடலுக்கு வேற என்னத்தைச் சொல்லுவன்? எனக்கு நல்லாப் பிடிச்சதும், எப்பவும் கேக்க விரும்பாததுமான பாட்டு இது. நெருக்கம் குலைந்த பிரிவை இதை விட உணர்த்துதல் துர்லபம். நினைத்து நினைத்து பாடலின் ஸ்வரக் கோர்வை, "C " base இல் வாசிக்க, இசை-யுவன் ஷங்கர் ராஜா. பாடியவர்கள், ஸ்ரேயா கோஷல் மற்றும் கே.கே எழுதியவர்.நா.முத்துக்குமார் ஸ்வரஸ்தானம் : s r2 g3 m2 p d2 n3 S முகப்பு SnS PGS nSnd- (2) pS-nSnd p-pmg m-pp-- pS-n-d p-pmg m-pp-- பல்லவி நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன். S n S | P G S | n~~S n~d | S n S | P G S n | S n~d உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ,உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ! p p~S n | d p | pmg m | p m~p p~SnSnd | p | p~S | n d p | pmg m | p m~p எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே , எறியும் கடிதம் உனக்கு கண்ணே ! |GG G |G2G2G |S S S |n~RS |GG G |G2G PGS |SS S n~R |S-RSn-Snd-ndp சரணம் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் , நமது கதையை காலமும் சொல்லும் PM M | P~GG | S S S RS | n n S | P M M | P G G | S S R~S | n S உதிர்ந்து போன மலரின் வாசமா .............................. SG S | G~MG | M P P~MG |G M P MPMPGMP~MM~G~~~` தூது பேசும் கொலுசின் ஒலியை , அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும், P~M M | P~GG | S S SRS | nn S | PM M | P G G~S | S S RS | n S உடைந்து போன வளையலின் வண்ணமா........ SG S G~ | MG M | P P M~G | G M P~M~P MPMPMGM~D1~~~~~ உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில் D1D1 D1 D1 | M~D1M~G | M~D1 D1 | P P P | P P | MPMP G~MMPMG~~~~ தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை ...... D1 D1 | D1 D1 | N S ND1 D1 D1~ | P P P P | P P P MPMP GMPMG~`~`~~~ முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு! P M | P~M P | G~PM G | S n d-ndp | p pdp | m~gg m p~~S~~~~ ***

Comments

  1. அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Wow...First Class! Everything!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...