நான் கொதிக்கும் உலையில் இருந்து விடுபட்டு-
அந்தம் ஒழிக்க,
எனக்கென இருக்கும் ஒரு பகலோ இருபகலோ
போதாமல் போகும்.
வாமன உருவத்தில் இருந்த வலி காணாமல்
நீண்டு பெரும் இராக்கதனாய் அவதரிக்கும்.
பார்- நீ ஒரு நாள்
சினம் கொண்டு எழுதலில் இருக்கும் தீவிரம்
அனுதினம் எனக்குள்ளே பொங்கிப் பிரவகிக்கும்.
கடல் ,வெளிகள் ,மவுன மலைகள் தாண்டி எதிரொலிக்கும்.
யாரையும் வாழப் பிரியப்படாமல்-
ஓசை முறித்துக் கொள்ளும் -உணர்வலைகள் !
பொங்குதலில் உள்ள லாபகரம் என்ன தெரியுமா?
ரகசிய சந்திப்புகளில் புரியாத
வார்த்தையற்ற விரவும் வெளிகள்- தாம் !
புல் நுனியில் காலம் பனி தட்டி எழுந்து கூத்தாடும்.
புலர்தலுக்கு முன்னே பூப்பெய்தும்.
புருட சுகம் ஒன்றினையே புணர்ந்தலையும் ;
புல்லுருவி வாழ்க்கையில் இருந்து வெளியேறும்.
நல்லினக்கமில்லா நகைப்புக்களை
நரிக் குளிப்பாட்டும்.
நானெனும் தனியுடமை தங்கித் தங்கி பல திசைகளில்
காடு, சமுத்திரம், கரு மரப் பொந்துகள், இருட்டில் நீ அகன்ற வானம்
இல்லாது என்று போன அணியட்கைச் சபலங்கள் ,
எல்லாம் தீர்ந்து போன மூர்ச்சனையில்
நான் எழுவேன்,
நான் எழுவேன் ,
.......................................................................................
நமக்கான சாத்தியங்கள் அறுன்றொழியும்!
நமக்கான சமவுடமைகள் அல்லாது போகும்!
நமக்கான சரி நிகர்கள் தகர்ந்து தொலையும்!
அண்டப் பேரண்டம் எனும் தமிழ் வார்த்தையல்லாத
அகிலப் பிம்பத்தில் என் கை நீளும்.
சுற்றி வளைக்க அதலமும் பாதாளமும் கை வரும்.
விரல்கள் பூக்கும், நீ ஒருபோதுமளிக்காத கணையாழி மின்னும்.
ஒ..ராமர்களே ....
உங்கள் சீத்தைகளை கொண்டு போய் கைக்குட்டைக்குள் பதுக்குங்கள்.
ஒ...இரட்சன்னிய யாத்திரிகர்களே ....
உங்கள் இறை தூதப் படலத்தை கன்னியாத்திரிகளுடன் பகிராதீர் !
ஒ...இன்று முளைத்த வீர இளைஞர்களே.....
உங்கள் யுவ ராசாப் பட்டங்களை யுவதிகளிடமிருந்து ஒழியுங்கள் !
மரணத்தில் மிதக்கும் மறு உயிரொன்று வந்து
உங்களில் தங்கியிருக்கப் பிரியப் படலாம்.
மறுத்து விடுங்கள்....
மறுத்துவிடுவது , எந்தப் பாவத்தையும் போல
யார் மீதும் பழி சொல்ல நேரிடாத செயல்,
மறுத்து விடுங்கள்...
மறுப்பதற்கான இதயங்களை சேகரித்துக் கொள்ளுங்கள்
தவறியும் மரணம் யாசிக்கும் சந்நியாசினிகளை அண்ட விடாதீர்கள்......
ஓ.....
மறுப்பது பற்றி யோசிக்கிறீர்களா?
மறுப்பது ஒன்றும் மன்னிக்கக் கெஞ்சும் மானங்கெட்ட பிழைப்பில்லை.
மறந்து விடுவது எனும் மனிதாபிமானத்துக்குமப்பால்,
மறுப்பது மட்டும் தாழ்வுச் சிக்கலில்லை !
மறுப்பது தான் சாலச் சிறந்தது.....
மறுக்க அழையுங்கள்....
மறுக்க அழையுங்கள்....
மறுப்பதற்குக் கற்றுத் தாருங்கள்....
மறுபடியும் மறுபடியும் மறுப்பதற்குக் கற்றுத் தாருங்கள்....
சாட்டைகளால் முதுகில் ஓங்கி
அடிப்பதைக் காட்டிலும்,
மறுப்பது அழகு.....
வாசனையே இன்றி வனப்பு ஓடியும் வரை,
மூக்கை ஓட்ட அறுத்தது விடலிலும்,
மூக்கை ஓட்ட அறுத்தது விடலிலும்,
மறுப்பது அழகு....
ஒ...தேவ கணமே.....
உயிரிலும் இனிய கண்மணியே....
அந்தத்தின் அனுபந்தமே ......
மறுக்க அழை.....
மறுக்க அழை.....
மறுக்க மட்டுமாவது அழை....
மறுத்தல் என்பது மறக்க முடியாது போகும் வரை மறுக்க அழை....
மறுக்க மட்டும் அழைத்துக் கொண்டே இரு...............
நிலா-
23/05/2011
Comments
Post a Comment