தேவி எழுந்தாள்,
தென்மேற்காய் எழுந்தாள்
ஆதி நிலவரம் அங்கங்கே நிற்க
தேவி எழுந்தாள்
பணிந்து போகிற பண்பான குரலில்
முன்னெப்போதும் இல்லாத குரலில்
தனது பலவீனம்
பகை உணர்வானதெனக் கூறினாள்.
அக வலிமையையும்
தன்மானத்தையும்
தனக்கு உணர்த்தியதற்காக
எல்லா ஆள்வோருக்கும் நன்றி கூறினாள்
மாட்சிமை தாங்கிய ஒரு கனவுக்காக,
மற்ற நினைவுகளையெல்லாம்
தர மறுப்பதாகக் கூறினாள்
ஈட்டி பாய்ந்து கொன்ற
மேகங்களின் காம்புகளில் பெய்யக் கூடாத
மழைகளைப் பற்றி கவலை கொள்ளாமல்
புரட்சிகளைக் கருத்தரிக்க நீ தேவையில்லை என்றாள்.
***
தாகங்களை ஏரிகள் அறிந்தில்லாத ஒரு இரவில்,
பறவைகள் தம் கூட்டில் இயல்பாக
நித்திரை செய்த ஒரு இரவில்
மனிதர்கள் வேட்டைக்குப் போக மறுத்த ஒரு இரவில்,
நம்பமறுத்த பொத்தல் ஒன்றை
அவள் கைகள் தாங்கிப் பிடித்தன.
அழிந்து வருகிற நேயத்துக்கு அவள்
இரங்கற் பா பாட ஒத்துக் கொண்டாள்.
போராட்டமும், நிசமும் கலந்து போன வாழ்வில்,
நிச்சயமாய் அவனுக்கு குருதி சிந்தும்.
துயர் துடைத்து விடுகிற கைகள்
பக்கத்தில் இருப்பது பற்றி யாருக்கும் அக்கறையில்லை.
விடுதலை என்பது,
ஒரு பரிசு என்று இல்லாத ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,
புரட்சிக் காரிகளின் கைகளை
ஓங்கி உயர்த்திப் பிடித்துவிடுவதற்கு,
ஓங்கி உயர்த்திப் பிடித்துவிடுவதற்கு,
நீங்கள் தான் வர வேண்டும்.
அவள் மீளல் பற்றி
ஒவ்வொரு நிமிடங்களிலும்,நிசிகளிலும்
கணக்கிட்டுக் கொள்கிறாள்
கணக்கிட்டுக் கொள்கிறாள்
முன் எப்போதையும் விட பின் தங்கியதாய்
முன்னர் அவர்கள் காலங்கடத்திய,
அவர்கள் சொந்தமாக வைத்திருந்த
ஒரு சிறிய நீல வானத்துக்குக் கீழான
ஆற்றங்கரைப் படகின் மீது சத்தியமாக -
உண்மைக்குப் புறம்பானதை
கொலை காரச் சொற்களை,
மறுத்து அவள் நியாயப்படுத்தவாவது,
அவன் வரவேண்டும்.
ஒவ்வொரு புதிய கட்டங்களிலும்
கொள்களைகளையும்,
வழக்கங்களையும்
வழக்கங்களையும்
தகர்த்துக் கொண்டு போக வேண்டிய சந்தர்ப்பம்
வைக்கக் கூடாது.
திரும்பத் திரும்ப அவள் பாதைகளை மீள வரைவதில்
ஆர்வம் காட்டுகிறாள்
அவன் எடுத்துக் கொடுத்த எழுத்தாணிகளாலேயே
அவை புள்ளி வைக்கப்படுகின்றன.
நினைவுகள் அழுகுதலுக்கு விடும் காட்சி நீள்கிறது.
மனப்பிறழ்வுடையவர்களுக்கு தோற்றல் போல
நியமம் ஒன்றுமில்லை.
மனக்கிலேசமும்,
கொஞ்சம் துப்பரவற்ற முத்தச் சொச்சமும்
இறுதி வாக்குவாதமும்
ஒரு விலங்கின் குறுகிய
வழித் தடம் போல அது !
***
இயற்கை காட்டும் கடும் பிணியில்
ஊறி, மரங்கள் நழுவ விடுகின்ற இலைகளை
பிடித்து விளையாடும் குழந்தைகள் அற்ற சூழலில்
காற்றும், காற்றில் ஆடும் தூக்கணாங்குருவிக் கூடும்
காய்ந்த சருகுகளுக்குள் நெளியும் ஓந்தில்களும்
சுற்றிலும் வேடிக்கை பார்க்கக் கூடும் மனிதர்களும்
புழுத்துப் போன ஒரு தேசத்தில்,
வணக்கத்துக்குரிய தேவதையாக பிரதிட்டை செய்யப்படுகிறாள்.
ஓய்வின்றி ஆடும்
ஊஞ்சல்க் குருவிகள் கழிக்கும்
மலவாடையில் என்றும் போல்
ஒருவரை ஒருவர் நேசிக்கத் தவறிய பொய்களை
வண்ணத்துப் பூச்சிகள் தாங்கி வரும்
மகரந்தப் பொடிகளில் ஒழித்து வைக்கிறாள்.
அவள் வாழ்ந்திருக்கலாம் என்று
யாராவது என்னும் ஒரு அதிகாலையில்,
அவளின் முதுகுத் தண்டில் இருந்து
வெளித்துடிக்கும் சின்னச் சிறகுகளை
அவன் நேர்த்தியான கத்திரிக் கோல்களால் வெட்டி,
காப்பாற்றட்டும்.
கவிதைகளைத் தவிர பரிசளிப்பதற்கு
அவளிடம் எதுவும் இல்லாமல்ப் போகலாம்.
வெறும் கூழைக் கற்களையும்,
எச்சில் முத்தங்களையும் பரிசளிப்பதை
விடவும் அது மேலானது என்று
மன்னிப்பை உணர்ந்தவர்கள்
எல்லோருக்குமே தெரியும்.
நிலா -
24/04/2011
Comments
Post a Comment