கதவுகள் லேசுப்பட்டவை அல்ல ,
எந்தக் காலத்திலும்
தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல்
நம்மைப் பழிவாங்கியவை அவை
கதவுகள் லேசுப்பட்டவை அல்ல ,
நாங்கள் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல்
பழியை வாங்கியவை அவை.
எங்கள் வீடுகளில்
கதவுகள் மரம் கடைந்தும், வசதிப்பட்ட வீடுகளில்
இரும்பும், துரும்புமாயும் காகமிருக்கக் கொப்பாய்
உயர்ந்து நெடுந்து , வளர்ந்து காவலிருக்கும்.
கதவுகள்,
சின்னஞ்சிறு குழந்தைகள்,
தொங்கித் தொங்கி ஊஞ்சலாட வாய்ப்புக் கொடுக்கும்.
எல்லாக் கதவுகளும் யாரையாவது காவலிருப்பது குறித்து
ஒரு நாளோ இரு நாளோ தயக்கமடைந்திருக்கும்.
அல்லது வெட்கப்பட்டிருக்கும்.
அடைக்கலம் தந்த கதவுகளும் இருக்கின்றன.
காட்டிக் கொடுக்கத் திறந்து கொண்ட கதவுகளும் இருக்கின்றன...
கதவுகள் எங்கள் பாட்டிகள் மாதிரி,
மூதாதைகள் மாதிரி,
சின்னச் சின்னக் கதைகளை
கதவு இடுக்குகளின் துவாரம் வழியாக
யாருக்கும் பதனிடாத புதுக் காற்றில் சேமித்து வைத்திருக்கின்றன.
இன்னொரு இன்னொரு தலைமுறைக்காக
கதவுகளை நம்பி நாம் துயில் கொண்டோம்...
எங்கள் பெண்களின் சொல்லக் கூடாத
கற்புகளை கதவுகளுக்கு மட்டும் காட்டி வைத்திருந்தோம்.
சல்லாபம் தெறிக்கச் சிந்தி வரும்
பொல்லாத குழ ஒழுக்கங்களுக்காய் கதவுகளை
காவலுக்கு வைத்திருந்தோம்.
கதவுகளுக்குப் பின்னாலே ஒளிந்து கொண்டு
கையாலாகாத தனமாய் களவுகள் செய்தோம்.
கதவுகளின் இடுக்கில் சன்னம் பார்த்து,
எதிரியையும், தோழனையும் முதுகில் சுட்டோம்.
கதவுகள் கற்பக தரு மாதிரி,
அச்சாக் கதவுகள்
ஜன்னல்களின் பாதிச் சுதந்திரத்தை முழுதாய்த் தந்தவை....
என்னை தாண்டிப் போ தாண்டிப் போ என்று
தடுக்காமல் திறந்து விட்டவை...
வாழ்வின் சமநிலையின் உயிரிக் குறியீடுகள் !
எங்கள் பழந்நாளில் கதவு திறக்கப் பாடியும்,
திறந்த கதவு மூடவுமே தேவாரம் பாடி
மந்திரங்கள் பல செய்து மாயக் கதவுகளை உட்பத்தியாக்கினோம்
எங்களை அவை பாழும் நரகங்களில்
படு குப்பைகளை உட்பத்தியாக்கப் பயன்படுத்தின.
என்றைக்கு நாங்கள் திறந்த வெளிகளுக்குள்,
கதவுகள் இல்லாத வானப் பரப்பின்
விரிந்த நிழலுக்குள் அன்பையும், சமத்துவத்தையும், சாத்வீகத்தையும்
உட்பத்தியாக்கியிருகிறோம் ?
கதவுகள் எங்களுக்குத் தடையா ?
பூட்டிய அறைக்குள் செய்கிற கள்ளத்தனம் தானே மனிதன்...
எங்களை உண்மைக்குப் பிறந்தவர்களாக்குங்கள்...
திறந்த வெளிகளுக்குள் எங்கள் குழந்தைகளுக்கு
அமுதூட்டுங்கள், அவர்களை
சுதந்திர புருஷர்களாக வலம் வரச் செய்யுங்கள்
எங்கள் சமுதாயத்தின் அடக்கு முறைகளை
அவர்களுக்குச் சொல்லித் தராதீர்கள்...
அவர்களின் கதவுகளைத் திறந்து விடுங்கள்....
எங்களை இன்னொருவனுக்காய் உற்பத்தி பண்ணச் சொல்லியோ,
அடி கழுவி விடும் படியோ கதவுகளுக்குள் போட்டு அடைக்காதீர்கள்.
மனிதர்களின் உயிர்க் கூடுகளின் கதவுகளையோ,
குருவிகளின் சின்னச் சின்னக் கூடுகளின்
கதவுகளையோ திறந்து விடுங்கள்,
நாங்கள் எதுவாகிலும் ஒன்றிலிருந்தாவது தப்பிக்க விரும்புகிறோம்.
காகக் குருவிகள், தேர்ந்தெடுத்துக் கட்டிய கூட்டில்,
குழந்தைகளைப் போடாமல், குயில்பொந்தில் எம்மைத் தூக்கி எறியாதீர்கள்...
எம்மை அந்நிய தேசத்துக்காய் தயார்ப்படுத்தாதீர்கள்...
எங்கள் கதவுகள்,
எங்கள் பாரம்பரியங்கள்,
எங்கள் சுதந்திரங்கள்,
எங்கள் உயிர்களின் விலைகள்
எல்லாவற்றையும்
ஒரு கதவுக்குப்பின்னால் நின்று பேரம் பேசாதீர்கள்.
நாங்கள் எங்கிருந்து அடைக்கப்பட்டோம் என்பதில்,
துநீஷியாவா ,
லிபியாவா ,
முள்ளி வாய்க்காலா,
என்று எங்கெங்கோ தொலைக்கப்பட்ட
திறவு கோல்கள் இல்லாமல்,
கதவுகளைத் திறந்து விடுதல் என்பது லேசுப்பட்டது அல்ல ,
கோடி மனிதர்களின் உயிர்கள்...
கோடி மனிதர்களின் மலினமான மானங்கள்...
கோடி மனிதர்களின் கடைசி அபிலாஷைகள்..
கோடி மனிதர்களின் கடைசி இருப்பு...
கோடி மனிதர்களின் ஒரே கனவுகள்....
கதவுகளைத் திறந்து விடுதல் என்பது லேசுப்பட்டதல்ல !
கோடி மனிதர்களின் ஒரே கனவுகள்...அவை
-நிலா
கவியரங்காற்றுகைக்காக எழுதப்பட்ட கவிதை..
கதவு எனும் மூன்று வார்த்தைகளுக்குள் இருக்கும் ஒரு பெரிய உலகத்தையே காணக்கிடைத்தது..
ReplyDeleteமிகவும் அருமையான எழுத்து..!