திரும்புவதற்குச் சாத்தியமற்ற உன் குரல்
தேடல்கள் தொலைந்து போன ஒரு
அந்தியில் என்னிடம் ஓடி வருகின்றன.
நீ கோபப் படுவாய் என்பதற்காய்
குரலில் மன்னிப்பு நிறைந்த கெஞ்சலை
அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
மன்னிப்பின் தீவிரத்தில் நீ
திட்ட மறந்த வார்த்தைகள்
நாளைக்காய் கிடப்பிலிருக்கிறது.
மெல்ல,
நொடிப் பொழுதில்
நான் உன் கர்வம் என்பது போல்
நான் உன்னில் நிறைந்து நிற்கும்
மந்திரக் கணத்தை ஆகர்ஷிக்க முற்படுவேன்.
உடனேயே,
என்னிலிருந்து விலகும் வெளிச் சுவாசம் போல
உன்னிலிருந்து விண்டு பிளவு படும் ஆக்ரோஷம்
வெட்கமேயின்றி என்னைத் திட்டும்.
சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த என் மானம் மலினமாகும்.
மூடு பனியின் நளினங்கள் சாகும்.
நீ உச்சத்தில் இருப்பாய்,
நான் பாதத்தில் இருப்பேன்.
முன்னை விடத் தெளிவாக தீர்மானமாக,
எல்லா நாளிலும் என் அழைப்பின் போது நீ சொல்லும்
தாரக மந்திரத்தை இப்போதும் சொல்ல மறக்க மாட்டாய்.
வழிகிற கன்னங்களை நான் துடைப்பதேயில்லை.
பதிலுக்கான சாத்தியமற்ற
ஓரிரு கணங்களில் துண்டிக்கப் படுகிறது,
தொடர்பு.
நான் காட்டிய திசையில் நீ நீங்கிப் போயிருக்கலாம்.
உறைந்து போன எனது அழைப்பின் ஆரம்பங்கள்
தந்திக் கம்பிகளின் எண் கோட்டில் இறுகிக் கிடக்கும்.
ஒரு காலத்தில் நடந்த விஷயங்கள்
எதுவுமே உனக்கு ஞாபகம் வருவதில்லை.
அல்லது ஞாபகத்தைப் பிடுங்கி அங்கே
எறிந்து விட்டு வந்திருக்கிறாய்.
அல்லது எறிவதற்காக,
அல்லது எதிர்காலக்
கவிதைகளுக்காகச் சேமித்து வைத்திருக்கிறாய்.
எவ்வையாகிலும்,
நான் -நீ , தவிர யாருக்கும் தெரியாமல் ,
அன்றிரவு நீ எழுதும் கவிதையில்,
என் பாதிப்பும் இருக்கும்.
அது போதும் எனக்கு.
- நிலா
02 /01 /2011
அசத்தல்
ReplyDelete//சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த என் மானம் மலினமாகும்.
ReplyDeleteமூடு பனியின் நளினங்கள் சாகும்.
நீ உச்சத்தில் இருப்பாய்,
நான் பாதத்தில் இருப்பேன்.//
அழகான விவரணைகள் கவிதை தரும் அர்த்தங்கள் யோசிக்கவைத்தாலும் ரசிக்கமுடிகிறது !!
Good one!
ReplyDelete