....அம்மா, அந்த அனிச்சம் பூ பூக்குமாம்மா?.......
பூக்கும் ராசாத்தி..........
'எப்பம்மா பூக்கும்? ..........
... மழை நிறையப் பெஞ்சு, காத்தும் சூரிய ஒளியும் தாராளமாக் கிடைக்கிரண்டைக்குப் பூக்கும்.
.........
"இன் சபிசியன்ட்" பூட்ஸ் அப்பிடித்தானேம்மா ?
ம்ம்ம்........
'' ஏண்டா, தேவ மகனே , இந்த அனிச்ச மரம் எப்ப பூக்கும்? .........
'தெரியேல்ல'..............,
அது பூத்த அண்டைக்கு அதைப் பிச்சு எனக்குத் தருவியளா? ...........
.........இல்லை....., மாட்டன்.
'ஏன்? .............
அதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.
......சரி, அணிச்சம்பூவைப் பிச்சுத் தரவேண்டாம்.அது எப்ப பூக்குதெண்டு பாத்தியள் எண்டா எனக்குச் சொல்லுவியலா? .........
'இல்லை...., மாட்டன்.
'உங்களுக்கு, 'இல்லை'யையும் 'மாட்டனை'யும் தவிர தமிழில வேற ஒன்டுமும் தெரியாதா? .......????
...........தெரியுமே, திருப்புகழும், திருவாசகமும், சயந்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியும், தேசாந்திரியில முழுசும்.... சுஜாதாவும்.... அவரிண்ட எல்லாமும் ......,தெரியுமே !!!
'எங்க, எனக்கொரு பாட்டுச் சொல்லிக் காட்டுங்கோ, திருப்புகழில இருந்து? .....
.........ஏலா..., மாட்டன் !
திருப்பியும் அதே வாக்கியம், ஏதாவது வேண்டுதலா? இல்லாட்டி ஏதாவது போட்டிக்குத் தயார்ப்படுத்துரியளா, உங்களை? "இல்லை", "ஏலா", "மாட்டன்" இதுகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிரியள்....?
நான் அப்பிடித் தான் - தேவமகன்.
அதான் ஏனாம்?....... .......
......."ஏனென்டா நான் ஒரு சுயநலவாதி.பகுதி நேரமாயும் முழு நேரமாயும் நானொரு சுயநலவாதி, அதால......,,,,,,
ஹ்ம்ம்... இப்பவாவது நான் கேட்டதுக்கு பதிலா ஒன்றைச் சொன்னியளே ! -
.....இல்லை, ..இது நீங்கள் கேட்டதுக்கில்லை, எனக்குச் சொல்லோணுமெண்டு தோணீச்சு ......, அதான் சொன்னன். மற்றும்படி நீங்கள் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்லோனும் என்ட அவசியம் எனக்கில்லை.
கடவுள்களோடு வாழுதல் மிகவும் பிரயத்தனமானது !
அப்ப ஏன், எனக்கு நீங்கள் காட்சி கொடுக்கிறியள் எண்டு கேக்கோணும் போலக்கிடந்தது. அதைக் கேட்டா காணாமல்ப் போயிடுவான். அவன் காணாமல்ப் போனா பரவாயில்லை, அத்தோட நானும் சேர்ந்து காணாமல்ப் போயிடுவன்.அடிப்படையில் நான் தான் சுயநலவாதி !'நான்' பற்றித் தேடுதல் என்பது இந்த உலகத்தில் இருக்கிற மிகக் கடுமையான வேலைகளுக்குள் ஒன்று. அவன் போலவே அவன் இயல்புத் தனமும் பிடித்தது, கடவுள்கள் எப்போதுமே இயல்பாயிருக்கக் கற்றுத் தந்தனர். மனிதர்கள் தாம் பழகிக் கொள்ளவில்லை...!
..........நீங்கள் நல்ல வடிவாக் கதைக்கிறியள் ! - நான்.
எனக்கென்ன வேற வேலை இல்லை எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறியளே ? ...உங்களுக்கு கதை அலம்ப? stop talking ! இனி என்னோட கதைக்க வேண்டாம். -தேவமகன்.
(பார்ரா சாமி இங்கிலீஷ் கதைக்குது, ஏன் சாமி விரும்பினா தெலுங்கும் கதைக்கும் அதான் சாமி எண்டுறது ! )
நான் அதிர்ந்து போயிட்டன், ஏன் அப்பிடிச் சொல்லுறியள்...? ............
( இப்ப மூக்கின் நுனிப்பகுதியில் சளி மாதிரி தொங்கிக் கொண்டிருக்கும் கண்ணீர் வந்து, விழுகிறதா இல்லையா என்று தொக்கு நிக்கும், இது வாசகர் கற்பனைக்கு )
நான் எப்பிடி என்ன சொன்னா உங்களுக்கென்ன? இதுவும் தேவமகன் தான் கேட்டான்.
எனக்குத் தானே நீங்கள் 'எப்பிடியோ', 'என்னத்தையோ' சொல்லுறதைச் சொன்னியள், அது என்னைப் பாதிக்காதா?
( இப்போது மூக்குக்குச் சற்றுக் கிழே இரண்டு cm தூரத்தில், கண்ணீர்த் துளி விழத் தொடக்கி விடுகிறது. பன்றி உறுமுவது போல சளியை உள்ளே உறிஞ்சி, மூச்சை சிக்கனமாக இழுத்து விட்டுக் கொண்டேன், இதுவும் வாசகர் கற்பனைக்கு )
.....ஆரை எது எப்பிடிப் பாதிச்சா எனெக்கென்ன? நான் ஒரு சுயநலவாதி ! பகுதி நேரமாயும் முழு நேரமாயும் ஒரு சுயநலவாதி!எனக்கு எவ்வளவோ வேலையிருக்கு. நாட்டைப் பரிபாலிக்கோணும், வீட்டைப் பரிபாலிக்கோணும், இந்த உலகத்தை ரக்ஷிக்கோணும்.... பிறகு உங்களை மாதிரி........,,,,,,,
தேவமகன் பேசுவதை நிறுத்திக் கொண்டு பெருமூச்சொன்றை விடுகிறான். ......
'பெரு மூச்சு விடுறியளா? .....
........இல்லை....., ஜிம்னாஸ்டிக் செய்யுறன்.... நல்லா வாயில வரூது !
தேவ மகன் பொய் சொல்லும் போது அவனுக்கு ஒரு கொம்பு முளைக்கும். போய் சொல்லி முடிகையில் அது சாதுவாய் மறைய ஆரம்பிக்கும். நான் பொய் சொல்லத் தொடங்கையில் அவன் இந்த உலகுக்குள் இருப்பான். பொய் சொல்லி முடிக்கிற தருவாயில் உலகில் இருந்து நீங்கி விடுவான். தேவ லோகம் சென்று விடுவான். இங்கேயும் சாத்தானுக்கும், புத்தனுக்குமான அடிப்படை வேறுபாடு தான். அடிப்படை வேறுபாடா, அடிப்படை ஒற்றுமையா, இல்லை அடிப்படையில் இரண்டுமே ஒன்று தானா என்று கேட்டால், பதில் சொல்லத் தெரியவில்லை, பதிலில்லாக் கேள்விகள் இப்ப கொஞ்சக் காலமா கூடிக் கொண்டு வருகுது.
ஆனால் புத்தனுக்குள் இருக்கும் சாத்தானையும், சாத்தானுக்குள் இருக்கும் புத்தனையும் சந்திச்சுப் பேசவைத்தால் என்ன நிகழுமோ அது தான் என் தேவமகன். விளக்கமாகச் சொல்லுவதென்றால், ஒரு கட்டத்தில், உடல் மன சாட்சியாகவும். மனசாட்சி உடலாகவும் மாற்றுக் கருத்துப் பேச விழைகிற சந்தர்ப்பமே என் தேவ மகன்.
கடவுள்களை என்னால் மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது, அவர்கள் கொட்டாவி விடுதல் ஈறாக. அப்படித்தான் இவனையும். தேவமகன், நினைச்சால் சாதுவாய்ச் சிரிப்பான், இன்னொருக்கால் நினைச்சால் தூரத்தில நிண்டு கொண்டு கண்களை நெருமி முறைப்பான். மனதுக்குள்ள என்ன இருக்கெண்டு ஆருக்கும் சொல்ல மாட்டன். ஆனா எனக்குத் தெரியும். அதால தான் நானும் கேக்கிறதில்லை.
கடவுளுக்கு மனமென்று ஒன்று இருக்குதெண்டு நினைக்கிறதே எவ்வளவு பெரிய கோமாளித் தனம். அதால தான் நான் கோமாளி. அவன் தேவ மகன்!
அதால தான் நானும் அவனும் பிரான்ஸ் !!!!
....இல்லை , நீங்கள் என்ட பிரன்ட் இல்லை...., - தேவமகன்.
அதான் ஏன்?..... அதை நான் உங்களிட்டச் சொல்லோனுமேண்ட அவசியமில்லை- தேவமகன்.
( அதுவும் இல்லாமப் போச்சா, கிழிஞ்சுது. உந்த மாணிக்க வாசகர், அருணகிரி, ஆண்டாளேல்லாம் கடவுளைக் கண்டபடியெல்லாம் வழிபட்டிருக்கினம், மெய் மறந்து வாழ்ந்து கெட்டிருக்கினம், எனக்கு மட்டுந்தான்.......! கெடவும் முடியேல்ல, வாழவும் முடியேல்ல. ஒண்டு கெடோனும், அல்லாட்டில் வாழோணும், வைக்கோற் பட்டறை நாய் ! )
ஒரு தென்னை மரம், வளைந்து , கோடுகள் நிறைந்தது, இளநிக் குலக்கால் நிறைந்தது. காற்றுக்கு அப்படியும் இப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது.அந்த மரத்தின் உச்சாணிக் கொம்பில் நான் தலை கீழாகத் தொங்குவது போலவும் இருந்தது.
தேவமகன் பயணங்களின் போதும், நான் இனிமையைச் சுரம் பாடும் போதும், கவிதைகளில் இளமை மொண்டு களிக்கும் போதும் மட்டும் தான் இனிமை பகர்வான் போல. அவன் வருவதும் போவதுமே இப்போது கனவு போல ஆகிற்று. கனவிலே கவிதை எழுதுவது போல, கனவிலே அவனைக் காணுதலும் சுலபமாயிற்று.
அவன் ஒரு காட்சிப் புலம், காட்சிக்கு அப்பாற் பட்ட புலம். தூலம் , அருவுருவம்..என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இங்கு தான் நிற்பான், இதோ ...அவன் இதோ ....என்று சுட்டிக் காட்டினால் சுட்டுப் பொருளாகி விட மாட்டான். எங்காவது தொலைவில் , கெக்கலிப்புக் காட்டியபடி இரண்டு வாழைப்பழம் மட்டும் தின்னும் குரங்கு போலே, தாவுகிற மரமொன்றில் அசமந்து வீற்றிருப்பான்.
அவன் வருகின்ற பொழுதுகள் ஆகாம்மியமானவை. ரசமானவையும் கூட. ஒரு திகில்ப் படத்தைத் தனியே இருந்து ரசிப்பது போல இருக்கும். இன்னும் சொல்லப் போனால், வீடு அதிர்ந்து, பூகம்பச் சாயலில் மரங்கள் வீழ்ந்து, மழை கொட்டிப் பெய்து, இடி வானத்தை விண்டு பிளந்து....எல்லாம் ஆனதன் பின் தான் வருவான். இம்மளவும் நடந்து தான் போயிற்றா என்று வெளியே போய்ப் பார்த்தால், மாடித் தாழ்வாரத்தில் பூத்து நிற்கும் கொத்தோடு மஞ்சள்க் கொத்தமல்லி ! காற்றில் ஈரப்பதன் குறையாமல் திரைச்சீலை மென்மை படிந்து கிடக்கும், ஒரு ஆறுமாதத் தாவள்யக் குழந்தை நீர்ச் சட்டிக்குள் விழுந்தெழுந்த போது ஏற்பட்ட சலனம் தவிர யாதொருமே இருக்காது. கடவுள்கள் வருதல் முன் போல அல்ல. நேரமற்ற புனர் காலைப் பொழுதுக்கு முன்னே அவர்கள் பறவைகள் போலக் கூடடையப் போய் விடுகிறார்கள். ராத்திரியின் அச்சக்கரிக்குள் கதை படித்துச் சொல்லி விட்டு.
கடவுள்கள் எப்போதும் கடவுள்களாகவே ..!!!
கனவுப் படலத்தில், மேகங்கள் பஞ்சுப் பொதிகளைப் போல முட்டியும் மோதியும் விலகிக் கொள்ளும், ஒரு சுழலக் காற்று அல்லது பேய்க்காற்று சுற்றும், அந்த அமானுஷ்யம் அவனது வெள்ளைச் சிரிப்பில் அகன்று தூர ஓடும். ஒரு கிழ வாத்தைப் போல "தத்தக்கா பித்தக்கா" என்று தேவமகன் ரெண்டரைக் காலில் நடந்து வருவான். அவன் சந்தோசமாக இருந்தால், அந்த வெள்ளைச் சிரிப்பு, இல்லாவிட்டால் 'உர்ர்ர்' என்று முகம் கோணி வாய் நூறு கோணலாக மடிந்து, முக்கோணமாகி, எள்ளுப் போட்டால் நூறாய் வெடிக்குமளவுக்குச் சிடுசிடுப்பு இருக்கும். அவனுக்கு எது பற்றியுமே சலனமிருக்காது.
வரங்கொடுக்கிற கடவுள் பற்றி இதைப்போல ஒவ்வொருவரும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியம். ஒன்று, வரங் கிடைக்காட்டியும், சாபம் பெறாமல் இருக்கலாம். 'மூட்' பார்த்து சாமி கும்பிட வேண்டும் எனும் தத்துவத்தை வாசகர்கள் இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
தேவமகன், என்னுடன் வாயினால் கதைப்பதை விட, கண்களினால், செய்கையினால், சுபாவத்தினால் கதைப்பான். நான் கண் தவிர்த்து அவனை மூக்கினால் பார்ப்பதைப் போல !
இதைவிட அதிகம் கதைக்கமலேயே இருப்பான். அவன் கதைச்சானா, இல்லை நானாக கண்டு பிடிச்சேனா எண்டதெல்லாம் வேற கதை, இது பக்தி மான்களுக்கு மட்டும் விளங்கும், இல்லாட்டி பக்திச் சிறுத்தைகளுக்கும் விளங்கும். ( ஏன் புலி எண்டு போடேல்லை எண்டால் புலி நாட்டிலை குறைஞ்சு போட்டுது ! இல்லாமலுமில்லை )
தேவமகனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஒராள் கேட்டார், உது என்ன சிவாஜி கனேசனிண்ட "தெய்வ மகன்" மாதிரியோ எண்டு...? உது அதைக்காட்டிலும் வேற எண்டன் . பிறகு ஜெமினி கனேசனிண்ட தெய்வம் படம் மாதிரியோ எண்டார்? ...
ஐயோ உது அதையெல்லாம் தாண்டியல்லோ எண்டன்.
பின்ன எப்பிடி எப்பிடி எண்டு கேட்டுத் தொந்தரவு குடுத்துக் கொண்டே இருந்தார். அவருக்கு உதாரணத்துக்கு ஒரு படம் சொல்லோனும்,
நான் பேசாம யோசிச்சுப் போட்டு, ................. அந்தப் படம் மாதிரி இருக்குமெண்டன், இதுக்குப் பிறகு அந்தாள் கதைக்கிரதையே நிப்பாட்டிப் போட்டார். ( நான் பேரரசுவின் படமொன்றையும் சொல்லவில்லை என்பதை நினைவில் வைக்குக)
தேவமகன், கைகளைக் கட்டி மணிக்கட்டை இன்னொரு கையால் பொத்திப் பிடித்துக் கொண்டு இருந்தானானால் என்னில் அதிக கோவமாய் இருக்கிறானென்று அர்த்தம். (கடவுள் சபிக்கக் கூடாது ) கைகளைத் தளர்த்தி, கதிரையின் பிடியிலே லாவகமாய் ,ஆசுவாசமாய்ப் போட்டுக் கொண்டு இடுப்பில் கை ஊன்றிக் கொண்டிருந்தால் (எ)உன்னைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை என்று அர்த்தம்.
கால்களை முன்தள்ளி, அட்டனைக்காலோ, அல்லது, பாதங்களைப் பின்னியோ போட்டுக் கொண்டு கண்களை மூடி ஒரு கணமோ இரு கணமோ கிலாகித்தால் உன்னை எப்பவாவது நேரம் கிடைச்சால் மன்னிக்கிறதா இல்லையா எண்டு யோசிப்பன் என்று அர்த்தப்படுகிறதாய்க் கொள்ளலாம். கடவுள்களின் சிந்தனை எப்போதுமே மாறு பட்டது, அது ஜகத்தைத் தாண்டியும், பரலோகம் சம்பந்தமாய்க் கிடக்கும். எனக்கதில் அனுபவமுண்டு. ஆருக்காவது கடவுளாக நானும் இருந்திருக்கக் கூடும், பிணைய ,புணர் ஜென்மங்களில்.
அவன் என் மனச் சாட்சி. கடவுளை மனச் சாட்சியாக் கொண்டால் 'படூ டேஞ்சர்' எண்டுறதையும் வாசகர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைச்சவன் திணை அறுப்பான். அவன் என் பிற திருப்பம். பிற திருப்பங்கள் பொதுவாவே சொன்னபடி கேக்காது எண்டு என்ரை ' கெமிஸ்ட்ரி டீச்சர்' சொல்லியிருக்கிறா. அவன் என் சமதானி, அதுக்கும் அவ எதோ டேபினிஷன் சொன்னவா, நான் அதைக் கேக்காமல் பாடத்தைக் கட் அடிச்சுப் போட்டு லைபிரரியில கிடந்திருக்கிறன் போல. அவன் இன்னும் பல, பல எண்டு பேசாமல் விட்டுட்டுப் போறன், கடவுள்களுக்கு எது எங்கை எழுதியிருந்தாலும் கண்ணுக்குத் தெரியுமாம். பிறகு இதுவும் வில்லங்கமாகிப் போடும். ஆனால் தேவமகன் நல்லவன். ஏனென்டால் அவன் சாமி, அல்லது புத்தன். இந்த தேவமகன் மற்றக் கடவுள்கள் மாதிரி நகை நட்டு, பட்டுச் சொக்காய் எல்லாம் போடுறதில்லை , ஏன் எண்டு கேக்கோணும், இன்னொருக்கால் சந்திச்சால்??
பேசாமல் இவ்வளவு நேரமும் நான் மேற்படி சொன்னதில்லை இருந்து ,ஒரு சில சமன் பாடு எழுதி தேவமகன் ஆர் எண்டுறதை நிரூபிக்கலாம் எண்டு பாக்கிறன்.
தேவமகன் = என் மனச்சாட்சி =தேவமகன் = புத்தன். ஆகவே, என் மனச் சாட்சி ஒரு புத்தன் என்று நிரூபிக்க வருகிறேன் என்று நீங்கள் நினைச்சால் நீங்கள் முதலாம் வகுப்பில மூன்று தரம் பெயிலாகி இருக்கிறியள் எண்டு அர்த்தம். (நான் முதலாம் வகுப்பே படிக்கேல்லை அது வேற கதை )
நான் ஒரு சாத்தான்.
சாத்தான் = என் மனச்சாட்சி ஆகவே, சாத்தான் = தேவமகன் எண்டு நிரூபிக்க முன் வருகிறேன் எண்டு நீங்கள் நினைச்சால் உங்களுக்கு மிகப் பிடிச்ச நடிகர் ராமராஜர் எண்டு அர்த்தம். ( எனக்கு சாருக்கானைத் தான் பிடிக்கும் )
இப்போதைக்கு ஏதும் இதுபற்றி சொல்லேலா எண்டு நான் தப்பிக்கிறன் எண்டு நீங்கள் நினைச்சால், உங்களுக்கு குருப் பெயர்ச்சி நல்லா வேலை செய்யுதெண்டு அர்த்தம். இன்னும் இதுக்குள்ள பல உள்க்குத்து இருக்குதெண்டு நினைச்சால் வேற வழியில்லை, நான் வழமையான மாதிரி புரியாத கவிதை எழுதத் தொடன்குவன். உங்கட சாவு , சொறி , உங்கட முடிவு உங்கட கையில தான்......!
-நிலா
18 /11 /2010
Comments
Post a Comment