Skip to main content

மலபரிபாகம் !




                                

   
    விரிவாக நான் ஒன்றுமே இன்னமும் எழுதவில்லை. என் எழுத்தில் இருந்து விரவி ஓடும் எச்சில் ஈயைப் போல காலத்தின் முன் சிறு முட்களைப் போல இப்படிப் பல 'போல'  வாக நீ தள்ளி ஓடுகிறாய். காப்பிய மானத்தைப் பற்றி அக்கறை கொண்டவனாக நீ இருக்கையில், அதில் பாதி காப்பாற்றிய மானமாவது எனக்கிருக்கக் கூடாதா?

இல்லை, இருக்கக் கூடாது. அகம்பாவத்தின் அடிச் செருக்கு நீ, உனக்கேற்றாட் போல உன் மான விபரத்தைக் கூட்டிக் குறைக்கிற பொறுப்பு உன்னிடமில்லை. எந்தவொரு உயிரின் மீது நீ அளவு கடந்த பாசத்தை வைக்கிறாயோ, அந்த நொடி முதல் நீ  மனதாலும் உடலாலும், சமூகத்தாலும் பலவீனனாகிறாய். ஆக நீ கோழையாகி விட்டாய்.

'குரு தேவா, நான் மலபரிபாகம் பால் ஆட்கொள்ளப் பட்டவள் என்பதை நீங்கள் தானே சொல்லியிருந்தீர்கள்?'
 .....ஹஹ் பூ.....மலபரிபாகமா, நேற்று முதல் நீ அப்படியிருந்திருக்கலாம்,இன்று கடிகார முள்ளைப் பார்த்தாயா, காலத்தின் நிகண்டில் குத்திட்டு நிற்கிறது. ஒருகாலமும் முடியாது,உன்னால் ஒரு காலமும் முடியாது....! ஆக்ரோஷமாய்க் கத்தினார். மலம் என்று சிறப்பாகச் சொல்லப் படுவது ஆணவம் என்பதை. பரிபாகம் என்பது, முதிர்ச்சி; இது முதிர்ந்த நிலையில் சக்தி குன்றிப் போதல் எனப்படும். இவ்வாணவமே என்னிடத்தில் பரந்து வியாபகமாக நிற்க வேண்டிய உயிரை, அணுவுக்குள் அணுவாக்கி உன்னிலையில் சிறுமைப்படுத்துவது. எனக்கு அந்நியமானவன் என்கிற செருக்கை உன்னிடத்தில் வளர்ப்பது. உன் சாதனையால் இதனை உடைப்பதையே மலபரிபாகம் என்கிறேன், நேற்றுவரை நீ அந்த நிலையில் இருந்தாய், இப்போது,கேவலத்தில் வேறாகவும், சகலத்தில் உடனுடனும், சுத்தத்தில் ஒன்றாகவும் என் போலவே நீ ஆகி விட்டாய். சமயத்தில், ஒரு வகையில் என்னில் இருந்து வேறாகவும், பிறிதொரு நிலையில் கலந்தும் நிற்கிறாய். எனக்கே சமயாசமயத்தில் நீ நானா, நான் நீயா என்ற பேதைமை புலப்படுவதில்லை.....

'குரு தேவா, ஒரு காட்சி அனுபவத்தில், உயிரும் கண்ணும் கலந்து நிட்கிறத்தைப் போல, ஒரு வகையில் ஒன்றாகவும், பிறிதொரு வகையில் இரண்டாகவும் இருத்தல் தானே ? இது எனக்கு மட்டுமல்ல,அவனுக்கும் உண்டு !

யார் ? எவன்? எங்கே? எப்படி?.......................................................................................
................................................................................................................................

குரு தேவா, அவன் தேவமகன், அறியாப் புலம். என்னுடைய போதனா சாதனத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப் பட்டவன். மாயை, சுத்தம், பதிகரணம் எலாவற்றிலும், தீவிரத்தில், தீவிரமாயும். மந்தத்தில் மந்தமாயும், நிறைந்து கிடப்பவன். நீங்களும், நானும் எப்படி ஒன்றோ, அதே போல நானும் அவனும் ஒன்று. ஆனால், பேதா பேதம் போல, நானும் அவனும் வேறு.

குரு தேவர், சடாமுடியையும், நரைத்துப் போன தாடியையும், கெண்டியினால் சொறிந்து கொள்கிறார். பஞ்சாய்ப்  போன நரைமுடிகளை  பிய்க்க முற்படுகிறார். நானிருப்பதைப் பார்த்து விட்டு  சுதாகரிக்கிறார். அப்போது, சரிந்திருந்த கெண்டியிலிருந்து, கங்கா வஸ்திரம் கீழே ஊத்துகிறது. அது பெருகி ஒரு அருவியாக மாறுகிறது.

'குரு தேவா, கொழும்பில் ஒரே மழை , கங்கா வஸ்திரம் வேறு பெருகிக் கொண்டு விட்டது, எப்படியாவது, ஜலபேதத்தை அடக்கிக் கொள்ளுங்கள், அல்லையேல், ஆட்சி மாற்றமேதும் வந்துவிடக் கூடும்.

மாணாக்கா[கி], நசிகேதனுக்கும் உனக்கும் ஏதேனும் தொடர்புமை இருக்கிறதா?

ஐயோ, இல்லை குரு தேவா, இதென்ன புதுக் கேள்வி , நசிகேதன், நிலைப்பின் அந்தத்தைப் பிடித்துக் கொண்டு எமபுரி வரைக்கும் சென்று வந்தவன், நானோ நிலைப்பிலிருந்து வேறு பட்டு, திளைத்துக் கொண்டிருக்கிறேன்..... அவனுக்கும் எமதரும ராசாவுக்கும், பழங்காலத் தொடர்பு , எனக்கும் எமதரும ராசாவுக்கும் சிலகாலத் தொடர்பு... சின்னச் சின்ன பேதம் தான்....இன்னும் அவனும் ஒரு உச்சிக் குடுமி வைத்திருந்தான், நானும் இப்போது வைத்திருக்கிறேன். அவன் பார்ப்பான், நான் சூத்திரச்சி, இதைச்  சொல்ல வாயெடுத்து விட்டு என் பொதுவுடமைக் கொள்கை காரணமாகச் சொல்லாமல் விக்கி நிற்கிறேன்.

குரு தேவர், சால்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டார். அவர் கெண்டியில் இருந்து வீழ்ந்த கங்காத்திரவியம், இப்போது இரண்டு பருவதங்களை உருவாக்கி விட்டிருந்தது. ஒன்று கிழக்குத் தீமோருக்கும், இன்னொன்று மடாகஸ்காருக்குமாய் எழுந்து நின்றது. கிழக்குத் தீமோர் மலையில் இருந்து பனிப் பொழிவு ஆரம்பமாகீற்று. குரு தேவர், மீண்டும் சால்வையால் உடலைப் போர்த்திக் கொண்டார், குளிரில் முனங்கிக் கொண்டே !

குரு தேவா, தெற்குத் தேசத்தில், கடக்கக் கோட்டுக்குக் கீழே மடகஸ்கார்த்தீவில் கூட பனிப் பொழிவைத் தொடக்கி விட்டீர்காளா? ஏதேது இது பெருங்கொடுமையாய்க் கிடக்கிறதே ? இன்னும் குமார சம்பவமே நிகழவில்லை, தேவாதி தேவர்களையும் எம் குல அசுரர்களையும் யார் காப்பாற்றுவார்? ஐயோ கிலி பிடிக்கிறது குரு தேவா ! அவன், தேவமகனும் அங்கு தான் பொருணை நதிக் கரையில் போகம் விளைவிக்கத் தவம் கிடக்கிறான்.... ஏதாவது உதவி பண்ணுங்கள் தேவா.... பிளீஸ் ,,,,

அப்போது, கமலினியும் அணிந்திதையும் நந்தவனத்துக்குள் கெக்கலித்துச் சிரித்தபடியே வருகிறார்கள். குரு தேவர்  அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் மாறிச் சிதறிப் போகப் போவதை உணர்ந்தவராய்ச் சிரிக்கிறார். நான் குரு தேவரை உணர்ந்தவளாய்ச்   சிரிக்கிறேன். என்னை உணர்ந்தவனாய் அவனும் சிரிக்கிறான், தாமிர பரணியாற்றின் ஒரு கரையில் நின்றவாறே. சிரித்து விட்டு சிரித்ததை மழுப்புகிறான், அதிலும் என்னை உணர்ந்தவாறே.

"சித்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனம் ஒன்றிலே சீவன் முத்தராக வைத்தாண்டு
மலங்கழுவி ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிந்து
வரும் பிறப்பை அறுத்து முத்தாந்தப் பத மலர்க் கீழ் வைப்பன் "
என்று  அருணந்தியின் பாடலைப் பாடிக் கொண்டே குரு தேவர், சந்தியாவந்தனத்துக்குச் செல்கிறார்.

.....குரு...குரு தேவா, குமார சம்பவமே நிகழவில்லை, குமாரக் கடவுள் இன்னும் உதிக்கவில்லை, அவுணர்கள் இறக்கவில்லை, பிறகு அருணந்தி எங்கே தோன்றினார்?

...குரு தேவர்,  மஞ்சள்க் கரை வைத்த மல் வேட்டியை முழந்தாள் வரைத் தூக்கிச் செருகிக் கொண்டே, இது ரெண்டாம் கலிகாலம் என்று உரத்துக் கூறிக் கொண்டே என்னில் இருந்து விலகி நடந்தார்.

அர்த்த சாமத்தின் நாலாம் ஜாமம் தாண்டிய ஒன்றரை நாழிகையில் ஒரே ஒரு எஸ் .எம். எஸ் வந்திருந்தது.
  "I can please only one person per day. Today is not your day. Tomorrow isn't looking good either"



-நிலா -
28 /11 /2010

Comments

  1. ////"சித்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
    செனனம் ஒன்றிலே சீவன் முத்தராக வைத்தாண்டு
    மலங்கழுவி ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிந்து
    வரும் பிறப்பை அறுத்து முத்தாந்தப் பத மலர்க் கீழ் வைப்பன்////

    அருமை.......
    http://sivagnanam-janakan.blogspot.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...