ஒண்ணுமே சொல்லாம போன எஞ்சாமி !
குத்தமொன்னு சொல்ல- குமுறியழ நீங்க இல்ல-
ஒன்னுக்கு ஒண்ணா உசிரா வளத்துப்புட்டேன்-
உக்காந்து தேத்திவிட -நீங்க இல்ல எஞ்சாமி !
இவ கிடக்கா சிறுக்கியின்னு இம்புட்டும் இரங்காம-
விறைப்பா நீரு, வில்லங்கமாப் போனீரு,
கண்ணுக்குள்ள நீரு வரப்பத் தாண்டுது-
ஆத்தில தண்ணி அடிச்சிகிட்டு ஓடுது-
எருக்கம் வித கையிருக்கு- அரளி வித அரைச்சிருக்கு-
எஞ்சாமி நீயி எப்ப வருவ?...........
ஒத்தையில நட்டு வெச்ச மரம் போல வாடி நிக்கேன்-
வாடிய பயிருக்கு வாழ கொஞ்சம் பச்சை கொடு.
கத்தியில கட்டி வெச்ச காய் போல காஞ்சிருக்கு-
காயெல்லாம் தேஞ்சு என் வாய் போல பொளந்திருக்கு-
வேணாஞ்சாமி நான் உன்னைக் குறை சொல்ல
எல்லாத் தப்பும் எம்மெல்ல எஞ்சாமீ-
குடை பிடிச்சு இங்காரும் நெய் விளக்கு ஏத்துவாரோ?
கோடியில யாரும் கொடி வெச்சு தூத்துவாரோ ?
ஐப்பசியில் மழை பேஞ்சு ஆவணியில் காத்தடிச்சா
சித்திரையில், செங்கரும்பு சீனிபோல தித்திக்கும்முன்னு,
ஒத்தையில போன எறும்புகளைப் புடிச்சி வெச்சி-
ஒத்தடம் கொடுத்து- உருக்கமாப் பாத்துக்கிட்டது - எந்தப்பு எஞ்சாமீ !
எதுகை மோனை தெரிஞ்சா கை புடிச்சேன்-
எதுக்கும் நீரு தெரிஞ்சா கண் சிரிச்சீர்!
நாளுக்கு அந்தம் நாளாக நாளாக,
இந்த ஏழைக்கு அந்தம் பாழாக பாழாக,
யாருக்கு யாருன்னு எழுதி வெச்சா படைச்சாக,
நீருக்குள் இலையொன்ன அமுக்கி வச்சா ஒழிச்சாக?
ஒன்னும் குத்தமில்ல, ஒ மனசில் நானுமில்ல.
நீங்க ஆளப் பொறந்தவுங்க ஆண்டுகிட்டே அங்கிருங்க.
மாளப் பொறந்தவுங்க மாண்டுகிட்டே இங்கிருக்கோம்.
ஒண்ணுமே இல்லையின்னு ஒருவாட்டி சொல்லியிருந்தா-
இன்னுமே ஆகாம இங்கிருந்து அழுவேனோ?
எத்தன நாள் பாத்திருக்கோம்-
எதுவெல்லாம் பேசிருக்கோம்-
தனிமையில சிரிச்சிருக்கோம்-
தாங்காம மொறைச்சிருக்கோம்-
காத்தில கை விரிச்சு காணாதத தேடும் படி-
ஆத்திதில மீன்புடிக்கும் இந்த அருவாச் சிறுக்கிக்கு ,
ஏட்டில கை புடிச்சும் எழுத்தே வரல்லேன்னு,
ஏக்கப் பட்டவளை - நூத்தில ஒண்ணாக்கி நூழிழையில் தூங்கும் படி
எஞ்சாமி என்னதுன்னு போட்டே சொக்குப் பொடி?
கவித படிச்ச நீ கஞ்சிக் கலயத்தக் கவிழ்த்தாலும்
கஞ்சிப் பருக்கையில கவித தெரியுது கா.
பொத்திப் பிடிச்சபடி மனசே தெரியாம போக்குக் காட்டிக்கிட்டு நடக்கையில-
பொத்துன்னு விழுகுதுன்னு - பொறவெடுத்து பாக்கையில-
வேகாத என்னெஞ்சின் வேர் பிஞ்ச இதயம் சாமீ!
ஒன்னப் போல ரெண்டுமில்லே !
உன்னப் போல யாருமில்லே !
என்னப் போல பத்து விம்பம் என் எதிர்க்கே தெரியுது கா.
ஒன்னொன்னும் கேலிசெய்து உச்சத்தில் கத்துது கா.
ஆழம் பாத்தா காலவுட்டேன்-
காலம் பாத்தா சொல்லிப்புட்டேன்
கடல் பெருசுன்னு கலந்துக்க நான் நினைச்சேன்-
குருட்டுக் கண்ணுக்கு அது குளமென்னு புலப்படல்லே!
ஆசைப் பட்டபடி உங்கூரு பிள்ளையாரை-
ஒன்பது நாள் சுத்தி வந்தேன்-
தொந்திப் பிள்ளையாரே தோக்கப் பண்ணிணீ ரே !
அந்திமக் காலத்திலேயும் மறப்பேனா ஐயா சொல்லும்?
ஒண்ணுமில்ல எஞ்சாமி,
உசிரு போகையில ஒத்தையில நின்னு- ஒன்கண்ணைப் பாத்த படி
பத்தி எரிகிற பாடையில என் தேகம் -
பச்சை இலை போல - மசமசன்னு புகையடிக்கும்.
அது நான் காத்திருந்த கண்ணீருன்னு,
ஒன காதில யாரும் சொல்லுவாக.
கேட்டபடி நீ போவ -
உனக்காயிரம் ஜோலியிருக்கும்.
(மட்டக்களப்பு /அம்பாறை நாட்டாரியல் வழக்கில் எழுதப்பட்டது)
நிலா -
06 .09 .2010
எப்படியென்று சொல்ல. படிப்பறிவில்லாத ஒரு பேதமையின் சொல்லாடலில் கவிதாயினியாக ஜொலிக்கும் உன் சாமததியதை. வாழ்க வள்ர்க
ReplyDelete