A poem about two Mango trees and this is a picture of my native hometown 'karutha kolumban' Mango tree in Jaffna
மாம்பழம் ,
சாப்பிடுவதற்கென்று ஒரு மரம் வளர்த்தேன்.
ஒரு மரம் என்றா சொன்னேன்? ஒரு மரமல்ல,
ஒன்றுக்குத் 'துணையாய் நிற்கட்டுமே' என்று இன்னொரு கன்றையும்
வளர்த்தேன்.
ஒரு 'கறுத்தக் கொழும்பான்'.
மற்றையது, நல்ல நெடுமி-
அது 'பிளாட்'!
மரம் காய்க்கத் தொடக்கி,
ரெண்டு நாள் இல்லை-
வண்டடிச்கிப் போட்டுது.
'கறுத்தக் கொழும்பான்' முழுக்க
மாம்பழ வண்டு.
"பிளாட்" ஒரு புனிதனைப் போல
ஓங்கி ஓங்கி வளர்ந்து கொண்டே
இருந்தது-
இன்னும் காய்க்கவே இல்லை.
இப்போது,
வண்டடிச்சாலும் பரவாயில்லை
அது தான் ருசி எண்டு பக்கத்து வீட்டுச் சிறுசுகள்
மரம் முழுக்க ஏறி,
கொம்மாளம் போட்டுக் கொண்டு
பழம் பறிக்கத் தொடங்கினர்.
காய்ச்ச மரம் எண்டதால அது கல்லெறியும் பட்டது.
பிறகு,
'பிளாட்' மரத்தைப் பார்த்து,
சனம்,
இது மலட்டு மரம் எண்டு கதைக்கத் தொடங்கீட்டுது.
காய்க்கும் காய்க்கும் எண்டு காத்துக் கிடந்த மரம்
இன்னமும் காய்க்கேல்ல..
நானும்
உது மலட்டு மரமேண்டு நம்பத் தொடங்கீட்டன்.
மரத்தைப் பார்க்கும் போது ,
அசூசையும், இவ்வளவு நாள் உன்னையும்
தண்ணியூத்தி வளர்த்தனே எண்டும் இருக்கும்.
சிலநேரம் "சீ " எண்டும் போகும்.
ஆனால்,
மரம் மட்டும் அசராமல்
காத்தை வடிகட்டி ஜன்னலுக்கால்,
தென்றலாகத் தந்துகொண்டிருந்தது.
அப்போது
எனக்கும், மரங்களுக்கும்
எண்ட வீட்டுக் காரர், உவர் தாத்தாவுக்கும்,
நல்லா வயசு போட்டுது.
எங்களுக்கு சீனி வியாதியும்
வந்துட்டுது.
காத்தாட நடந்துட்டு வரத்தான் ,
" டொக்டர் " சொன்னவர்.
பிளாட் மரத்தைச் சுற்றிச் சுற்றி
நானும் அவருமா நடப்பம்.
நல்ல காத்தா இருக்கும்.
'கறுத்தக் கொழும்பான்' காச்சுக் கொட்டும், அதுக்குக் கீழ போகவே முடியாது.-
அதைப் பொறுக்க முன் போல
அந்தக் குஞ்சுக் குரும்பான்கள் இல்லை-
அதுகள் பெரிசுகளா வளர்ந்துட்டுதுகள்.
மூத்தவன் ஆரோ ஒரு பெடிச்சியைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போயிட்டான்.
சின்னவள், ஆரோ ஒரு பெடியனைக் கூப்பிட்டிருக்கிறாள்,
அவன் வராததால
கிணத்துக்குள் விழுந்து மாண்டு போனாள் .
இது இப்ப பழங்கதையாச்சு!
கிணறும் இப்ப தூர்ந்து போச்சு!
ஆருமே இப்ப இல்லை - அந்த 'இனிப்புப் பழம்' பொறுக்க.
ஒரு நாள்
" டொக்டர்" வீட்ட வந்தார்.
பிளாட் மரத்திண்டையும்
கறுத்தக் கொழும்பான் மரத்திண்டையும்
சின்னக் கிளைகளை வெட்டி
பதியம் போட்டு
தென்னந்தும்பும் கட்டி , ஒரு மூண்டு மாசம்.....!
மரம் காய்க்கத் தொடங்கீட்டுது.
மரங்காய்க்கிறது ,
எனக்குச் சந்தோசம்-
அவர் தாத்தாவுக்கும்
சரியான சந்தோசம்.
ஒரு, ஒரு, பழம் சாப்பிடலாமாம்,
சீனி வியாதிக்காரர்கள்-
"டொக்டர்" சொல்லீட்டுப் போட்டார்.
வந்த "டொக்டருக்கு" தேத்தண்ணியுங் குடுக்கேல்ல.
கடைசியா ஒரு வழியா
ரெண்டு மரமுங் காய்ச்சிட்டுது,
ஆனா 'பிளாட்' காய்ச்சது தான்
அதிசயமாக் கிடக்குது.
இப்பவும்,
இவர் தாத்தா சொல்லுவார்,
யாதொண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாதெண்டு.
என்னால ,
இப்பையும்
மரத்தைப் பார்த்து ,
"சீ" எண்டு துப்பினத்தை மறக்கேலாமக் கிடக்கு.
ஒரு நாள்,
தாத்தாவைப் பார்த்து,
ஏனப்பா,
நான் திடீரெண்டு கண்ணை மூடிட்டா,
உந்த பிளாட் மரத்துக்குக் கீழ தாப்பியளோ ?
எண்டன்.
தாத்தா, அழுதாரா எண்டு தெரியேல்ல,
மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டிருந்தார்.
நான் அழுதேன்!!!
***
And this is the Dilapidated well,which actually mentioned in the poetry
நிலா -
6 /8 /2010
மிகச்சிறந்த ஒரு படைப்பு.
ReplyDeleteஇயல்பின் இருப்பை இயல்பாய் வெளிப்படுத்துகிறது கவிதை.
எதையும் சீ எண்டு உதறித்தள்ளும் உலகத்தை கணக்கெடுக்காமல்
நம்வழியே நாம் உயர்ந்து கொண்டு செல்லவேண்டும் என்று பாடம் கற்பிக்கின்ற பிளாட் சொல்வதைத்தான் நானும் உங்களுக்குச் சொல்கிறேன்.
தொடர்ந்தும் எழுதுங்கள்.
கவிதையில் ஒரு கதை. நல்லாயிருக்கு.
ReplyDeleteஅது 'பிளாட்'டா? அல்லது 'விளாட்'டா? தாட்சாயணீ
மன்னிக்கவும் தர்ஷாயணீ... பெயரை மாற்றி எழுதிவிட்டேன். அது சரி... பெயரில் என்ன இருக்கிறது:)
ReplyDelete