Skip to main content

போன வழிப் பயணம்...

பாகம் - 02.






பயணப்படுகிற உடலைத்தூக்கிச் சொருகிக் கொண்டே அந்தராத்மா பூமிக்கும் வானத்துக்குமேலேயும் கூத்தாடுகின்றது. பேரூந்து ஒவ்வொரு முட் பதிவாளர்களையும் நின்று நின்று ஏற்றிக்கொண்டு செல்கிறது, அது தன் பாடு ; நான் என் பாடு ; ஊர்ந்துக்குள்ளே பலர் கூப்பாடு ! என் மௌன தவத்தைக் கலைக்கிறதுக்கேண்டே கண்டெக்டர் ஒரு பலத்த சப்தத்தில் இப்ப வந்திருக்குற பன்னாடைப் பாடல்களையெல்லாம் போடத்தொடன்கீட்டான். முதல் புலி உறுமுது, பிறகு, பொம்மாயி..., ச்சே..என் தவத்தைக் கலைத்ததோடு மட்டுமல்லாமல், அம்மாவின் அருமந்த வழிஞ்சு விழுகிற நித்திரையும் போச்சு..! சொப்பனம் கலைஞ்சு எழும்புற சின்னக் குழந்தையைப் போல அம்மா சுழன்று வருகிற கொட்டாவியை கையால் பொத்திக் கொண்டே எழும்பி திரும்பவும் நித்திரையாப் போட்டா... !

இடையில வீட்டையிருந்து ஒரு குசல விசாரிப்பு SMS, நான் குறுஞ்செய்தியைப் படிச்சிட்டு ஒரு மார்க்கமாச் சிரிக்கேக்க எனக்கு முன்னால இருந்த ஒரு "அரைவேக்காடு" என்னைப் பார்த்துச் சிரித்தது, அது சிரிக்குதா பழிச்சுக் காட்டுதா என்று தெரியாததால எனக்கு பலமாச் சிரிப்பு வந்துட்டுது, அது தன்னைப் பாத்துத்தான் நான் சிரிக்கிறனாக்குமேண்டுட்டு இன்னும் பலமா " ஈ" எண்டு சிரிக்கேக்க, சரியா அம்மா இன்னொருக்கால் முழிச்சுப் பார்த்தா, அவ்வளவு தான், நாங்கள் ஊர் போய்ச்சேருகிற வரைக்கும் அந்த அரைவேக்காடு எங்கள் பக்கமே திரும்பேயில்லை...அது படூ தமாஷ்!
  
காற்று எங்கெங்கோ இருந்தோ என்பக்கம் மட்டும் மோதும், மோதுகின்ற போது, அலைகின்ற கூந்தல் ஒரு புதர்க்காட்டைப் போல மிருது மிருதுவாக என்னையே திருப்பிக் குத்தும் என் கரும வினையைப் போல , இன்பம் ! தேவமகன் நான் படுகிற இன்பங்களை எல்லாம் ஓட்டுப் பார்க்க வந்தவன் போல உற்றுப் பார்த்துக் கொண்டே அமைதிகாப்பான், நான் தான் அவனை உலுப்பி , என் கிட்டே அழைத்து, மெல்ல காதுக்குள்ளே கவிதை மாதிரி ஒன்றைச் சொல்லி உணர்வுக்குத் திரும்ப வைப்பேன், நான் சொன்னது பின்நவீனக் கவிதையோ என்னமோ அவன் திரும்பவும் உறங்கி விடுவான்.

 போடா பயலே உறங்கு என்று சொல்லிக் கொண்டு நான் றோட்டுபுதினம் பார்க்க ஆரம்பித்து விடுவேன், மரங்களெல்லாம் ஓடும், கட்டடங்கள் இன்னும் விரைவாக ஓடும், தெருவிலே நிற்கின்ற மனிதர்கலேல்லாம் என் இஷ்டத்துக்கு ஓடுவார்கள், ஆடு ,மாடு, நாய், குருவி எல்லாமே ஓடும், என் முன்னே விரைகின்ற வாகனங்கள் கூட ஓடிக்கொண்டு தான் இருக்கும், நான் மட்டும் ஆயாசத்தின் இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு தேவமகன் சமேதளாய் வீற்றிருப்பேன்,தேவமகன் என் காலத்தை எனக்கு மட்டுமாய் மெல்ல ஊட்டுவான், நான் அவனுக்கு காலத்தின் தேவையை காதில் ஊதிக் கொண்டே வருவேன். இறக்கை விரிந்து பறப்பதற்கு ஆயத்தம் மாதிரியும் சில நேரம் இருக்கும், நீண்ட நேரம் இருக்கையில் சாய்ந்து இருந்தமையினால் முதுகு வலி எடுத்தது, அந்த வலி கூட இறக்கை பொத்துக் கொண்டு வெளியே வருவதற்குத் தானோ என்றும் பட்டது!

மேகம் பெய்யத் தொடக்கி விட்டது, பேரூந்தின் பலகணிக் கண்ணாடியில் துமிக்கின்ற ஒவ்வொரு துளியும் என்மேல் குளிர் இங்கிதத்தைக் கொடுத்தது, ஓடுகிற பேரூந்தில் சரிவு சரிவாயத் தான் மழை துமிக்கும், அது பெருங்கடைகளில் போட்டிருக்கும் வெளிச்ச விளக்குகளில் பட்டுத் தெறித்து இன்னொரு சூரியன் என் பக்கத்தில் இரவிலுதிப்பதாய் உணர்ந்தேன், அம்மாவை ஒரு மோனக் குதூகலத்துடன் இறுகக் கட்டிக் கொண்டேன், நித்திரையிலிருந்து நாலாந்தடவையாக விழித்து, என்ன...? பசிக்குதா....? இன்னுமே சாப்பிடேல்லையல்லோ, எண்டு வாழ்க்கையின் முக்கியமான படிகளில் ஒன்றை மறந்திருந்த சமயம் ஞாபகமூட்டினா, வாழ்க்கைப் படிகளை ஞாபமூட்டுவதால தான் அவ அம்மா, நான் மகள்!

சொன்னது தான் தாமதம், சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, பிரிச்சு மேயத் தொடங்கினன்(ம்).கட்டி வெச்ச சாப்பாட்டை அவிழ்த்துச் சாப்பிடேக்க, அது ஒரு தனி வாசனை....! ஏப்பம் வருகிற போது, 'போட்டெல்லோ' இனித்தது. மணி ஏறக்குறைய நடுச்சாமம் பன்னிரண்டு, கைபேசி ரேடியோவை காதுக்குள் செலுத்தினேன், நல்ல காலம் தகர டப்பாவைத் தட்டுற மாதிரி ஏதும் பாட்டுப் போகேல்லை, இசைஞானி அனாயசமா காதுக்குள்ள ஒரு தப்த தாளப் பாட்டோன்றைப்பாடினார், மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சில்.....

இந்த ஒரு பாட்டே காணும் ஏழு ஜென்மங்களைக் கடந்தும் நிலவுலகத்தில மிதக்கலாம், பாட்டின் குரலோடு ஒன்றிப் போய்க்கிடக்கேக்க , தேவமகன் தானும் பாட்டுக் கேட்கப் போவதாய் அடம் பிடித்தான், அடம் பிடிக்கேக்க தேவமகன், இங்கத்தே மனிதர்களைப் போலத்தான்....கெஞ்சி கேவுகின்ற முகமும், கடன் கேக்கிறவன் வாயைப் போலக் கோணலாய்த் தொங்குகிற வாயுமாய்த் தான் இருந்தான், அந்த பாவத்தை ரசித்து விட்டு அவனுக்கொரு தர்மோபதேசத்தைப் போதித்தேன், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே தேவமகனே என்று!


நல்ல காலம் அவன், நீ மட்டும், இங்கிதமில்லாமல், காலதேவனின் கல்ப காலத்தையும் ஊழியின் ஈற்றையும் ரெட்டிப்பாக்க ஆசைப்படலாமோ என்று கேட்கவில்லை, அப்பிடிக் கேட்டிருந்தா அவன் தேவமகனில்லை !
     
இப்ப புத்தளம் தாண்டீட்டுது, தென்னை மரங்கள் தலை விரிச்சு நிக்கிற காப்பிரிப் பொம்புளையலைப் போல அடிக்கொரு தடவை ஓடித்திரியுது. புத்தளம் எண்டா தெங்குப் பயிர்ச்செய்கை தான் முக்கியமானதெண்டு ஆண்டு எட்டிலை படிச்சதால இப்ப ஞாபகம் வந்து எழுதுறன், உண்மையா புத்தளம் தாண்டேக்க நான் நல்ல சொப்பன வாழ்வில் மகிழ்ந்திருந்தேன், புத்தளம் தாண்டி முக்கா மணித்தியாலத்தாலை தான் எழும்பி, எங்க நிக்கிறம் ம்மா.., எண்டன் .

...................இன்னும் பஸ்சுக்குள்ள தான் ராசாத்தி, எண்டு அம்மா சொன்னா! என்னே டைமிங் ஜோக்!

தேவமகன் ஒரு அவசரக் குடுக்கை, காலத்தை எவ்வளவு லாவகமாக ஒரு பஞ்சுப் பொதியைத்தள்ளி விடுவது போல நகர்த்துகிறான்? மெல்லப் போகட்டுமென்...கெஞ்சலாய் அவன் முகத்தைப் பார்க்கிறேன், அவன் மசியிரானில்லை, அவசரமா ஏதும் வேணுமெண்டு கேட்டா உதவி செய்யாத என் மற்ற நண்பர்களைப் போலத்தான் இவனும்...! போடா குரங்கு.

இப்ப அனுராதபுரம், பெரிய குளமொண்டு கண்ணுக்குக் கிட்ட வந்து போகுது, ஆனா எல்லாமே மங்கலாய்த்தான் தெரியுது, அண்ணன் கவுண்டமணிக்குப் போல எனக்கும் மாலைக் கண்ணோ எண்டு ஜோசிச்சன், இல்லை , நல்ல கும்மிருட்டு, ஒண்டுமே தெரியுதில்லை, பேரூந்துக் கண்ணாடியை சாடையாய்த் துடைச்சுப் போட்டு பார்த்தன் அப்பையும் தெரியேல்ல, இப்ப குட்டிக் குட்டி ஓலை வீடுகள் வர ஆரம்பம், அப்ப தமிழர் வசிக்கிற இடமும் நெருங்குது போல....! பகலிலை பஸ் ஏறியிருக்கலாம், நல்ல வடிவாப் பார்த்திருக்கலாம்.

திருப்பி, கரிகாலன் காலைப் போல கருத்திருக்குது கொழழு...! இந்தப் பாட்டுப் போகுது. "சயந்தவிக்கு' இப்ப நல்ல எதிர்காலம் இருக்குது, அதுவும் மனதில வந்து போகுது.

இப்ப பஸ்சுக்கு பெட்ரோல் அடிக்கிற நேரம், ஒருடத்தில நிப்பாட்டியாச்சு, சும்மா பட்டப் பகல் போல வெளிச்சம், ஊர்ந்துக்குள்ள இருக்கிறாக்கலேல்லாம் விழிச்சுக் கொண்டு "பெப்பே" எண்டு முளிக்கினம். ரேடியேட்டர் சூடாப் போச்சாமேண்டு, கண்டெக்டர் தண்ணி தண்ணியா கொண்டர்ந்து ஊத்துறார். நல்ல காலம் டிரைவருக்கு தண்ணி ஊத்தேல்ல. தலை தப்பினது தேவ மகன் புண்ணியம் எண்டன், அவன் உடனே, விதியை வெல்லுவார் தனும் உலகில் உண்டோ என்றான்...,

ஏன் மார்க்கண்டேயர், நசிகேதன் இவையெல்லாம் என்னத்தையாம் பின்னக் கிழிச்சவையல் எண்டன்..? அவன் ஆருக்கும் விளங்காமல் நானெழுதும் கவிதையைப் போல எனக்கே விளங்காமல் ஒரு சிரிப்புச் சிரித்தான். அதுவும் ஒரு கவிதை தான். எனக்கு அடிக்கொருக்கால்க் கோவம் வருமேண்டதால மூஞ்சியை அடுத்த பக்கமாகத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தன்,

...............அவன் திருப்பியும் பூடகமாகச் சிரித்து விட்டு, கோவமோ ? எண்டான். கேட்ட தாமதந்தான், ச்ச்சே ஒரு கோவமுமில்லை எண்டு சமாதானமாயிட்டன், இப்படித்தான் எனக்கு கோவம் வரும் அடுத்த கணமே வந்த வழிக்குப் போடும். இது கூட காலத்தின் பணிமானம் தான் எண்டான் அவன். எனக்குக் கேட்காமல், மெல்ல, அவன் மனதுக்குள். பிறன் மனதைப் படிக்கிற பரிபக்குவம் வந்த எனக்கு இன்னமும் காலத்தின் கிளர்வைப் பற்றி பாடம் சொல்லித்தருகிறான், ஈனப்பயல்!


ஒரு நாள் கலையில் எழுந்ததும் எத்தனை எத்தனை புத்துருவாக்கங்கள்? எத்தனை புதிய தினுசுகளைப் பார்வையில் செலுத்தோணும், அவற்றில் எத்தனையை மூளைக்குள் வடிகட்டி அடித்த காரியத்துக்காகப் பக்குவம் பண்ணவேண்டும்? இது எதுவுமே இல்லாத சில நாட்கள், இயந்திரங்களின் இறுக்க அரவணைப்பிலிருந்து, பசுஞ் சோலைகளுக்குள் ஹீரோயின் அறிமுகப் பாடலில துள்ளி ஓடுவதைப் போல ஓடிக் கழிக்க முடியாதா என்று தோணும்.மனம் அலைந்து போகிற உலகத்துக்கு உடலும் போனால் எவ்வளவு ஆத்ம திருப்தியாய் இருக்கும்? உடலையும் மனதையும் அலைக்கழிக்க வைக்கின்ற பொய்மை உணர்வுகளைப் போக்காட்டுவது எப்படி? சித்தர்கள் போலே ஆகாயக் குளிகைகளை உண்டுவிட்டு, கண்டதை விண்டும், விண்டதைக் கண்டும் களிப்பதுவா? சொல்லத்தேரியவில்லையே...!

...........ம்மா...ம்மா....இஞ்சே...ஒருக்கால் எழும்புங்கவன்...?

.......ம்ம்..என்னது?அம்மாவின் ஆறாவது திருப்பள்ளி எழுச்சி...!

உயிர் உடம்பில எங்கயம்மா இருக்குது...? இந்தக் கேள்வி கேட்ட நேரம் சரியாக என் கெடியாரத்தில் அதிகாலை இரண்டு பத்து. அம்மாவின் கடியாரத்தில் மணி இரண்டு. இன்னும் அந்த ஜெனரேஷன் கப் தீர்ந்து விடவில்லை.

அம்மா ஒரு மார்க்கமா என்னைப் பார்த்தா...! பார்த்த பார்வையில நல்ல காலம் வாந்தி பேதி,வயிற்ருளைவு போன்ற கெட்ட வியாதிகள் எதுவும் எனக்கு வரயில்லை, வந்திருந்தால் ஓடுகிற பேரூந்தில் அம்மாக்குத்தான் சிரமமாயிருந்திருக்கும்.

     பேசாமப் படுத்து நித்திரையைக் கொள்ளு....! என்டவ தான், ஆனா அம்மாவிண்ட கண்ணில எண்ட எதிர்காலத்தை நினைச்சு எழுந்த ஒரு பயத்தை என்னாலை காண முடிஞ்சது, இப்பிடியே போனா எண்ட பிள்ளைக்கு புத்தி கித்தி பேதலிச்சுப் போடுமோ எண்ட நல்லெண்ணந்தான் அது என்பதை நான் உணராமலில்லை. நானா உணராட்டியும் தேவமகன் உணர்த்தியிருப்பான், பிறகெதுக்கு என்னோடையே பயணம் வாரான்.

இப்ப பனி நிறைஞ்சிட்டுது. மணி மூண்டையுந்தாண்டி நாலாகிட்டுது, சுத்தி வர மனுசர் கொறட்டை விடுகிற இன்ப ஒலி கேட்குது. எனக்கு மட்டும் நித்திரை வரவே இல்லை, நாளைய கனவுகள் எண்டுவினமே, அது தான் படமா ஓடிக் கொண்டே இருந்தது, என் வீடு, என் வாசல், என் கிணறு, என் முற்றம், என் மரங்கள், என் மக்கள், என் இனம், என் பந்துக்கள்...ஆணவ மலத்தின் உச்சக் கட்டத்தில் என் கற்பனைகள் உயர உயரப் பறக்கின்றன, ஊர் கிட்டியதாலோ என்னமோ , உயரப் பரந்த என் கற்பனைகள் ஊர்க்குருவியைப் போலே தாழத்தொடங்கிவிட்டன, மணி அஞ்சாகத் தொடங்க வன்னிப் பெருநிலப்பரப்பு விரிந்து கிடந்தது வரவேற்கிறது, அங்கெல்லாம் வேளைக்கு வெளிச்சிடும் போல, கொழும்பில தான் "சூரியன்" எப்பவுமே லேட் !

தாண்டிக்குளம், அது தாண்டிப் போவதற்குள், சிவிலுடையில் கொஞ்ச ஆரமிக் காரங்கள் ஏறி பஸ்சுக்குள் வந்தார்கள். எங்க இன்னமும் பய புள்ளைகளைக் காணமே என்றிருந்த எனக்கு, பழைய வன்மங்களின் முடிச்சுக்கள் காரணமே இல்லாமல் அவிந்து படத் தொடங்கின, இப்ப தேவ மகனைக் காணேல்ல, வெரி குட்.

எல்லோரிடமும் அடையாள அட்டை காட்டும் படிக் கேட்கப்பட்டது, என் தவணை வரும் போது, அட்டையை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன் என்று சிங்களத்தில் சொன்னேன், ஏன் என்றான்? ......,,, அவ்வளவு பாரத்தை என்னால தூக்கீட்டு வரமுடியேல்ல எண்டன், ஹீ எண்டு சிரிச்சுப் போட்டு விட்டுட்டான். திருப்பி ஏதாவது என்னிடம் கேட்டிருந்தால் இன்னும் ஏதும் சொல்லவென நாக்கு நம நமவெண்டுகொண்டே இருந்தது, அம்மா தான் கையைப் பிடிச்சு முறுக்கிக் கொண்டே என் வாயை அடைச்சுப் போட்டா.

அந்த கோமாளிகள் போனவுடனே என் பார்வை நிலப்பக்கம் திரும்பியது.பார்வைக் கெட்டிய இரண்டு பக்கமுமே வெட்ட வெளியாய்த் தானிருந்தது. சின்னச்சின்ன முள்ளுப் பற்றைகளும், பனி முகிழ்த்திருந்த புற்றரையும், வெட்டித்துண்டாடப்பட்ட பனை மரங்களும், உறுப்பிழந்த மனித முண்டங்களைப் போல, மனது கசகசத்து வலித்தது.ஆங்காங்கே சின்னச் சின்ன இராணுவக் கொட்டில்களும்....

இற்றைக்கு பதினைந்து வருடங்கள் முன்பு, ஒரு பட்டப் பகலிலே, பிஞ்சுக் குழந்தையாய் இருக்கையிலே , இப்பையும் நல்லா ஞாபகம் இருக்குது....

தாண்டிக்குளம் இப்ப மாதிரி வெறும் வெளி இல்லை, அப்ப ராணுவக் கட்டுப் பாட்டுக்குள் இருந்தது, பயங்கர யுத்த சூழல், எல்லாப் பக்கமும் கிபிர்ச்சத்தம் கேட்கும், பொம்மர் சுத்தும், ஷெல்லிலே இருக்கிற செப்புத்துண்டுகள், மனித உடலத்தைக் கிழித்துக் கொண்டு பறக்கும்...

இந்த நிலமெல்லாம் சகதி....! சேறாக்கி வெச்சிருந்தாங்கள்,அரைகிலோ மீற்றருக்கு ஒருக்கா முள்ளுக் கம்பி போட்டு வேலி சுற்றியிருப்பாங்கள், மண் மூடைகள் அடுக்கின ஒவ்வொரு பொந்துக்குள்ளும் சன்னமும் துப்பாக்கியும் தூக்கின ராணுவம் நிற்கும், தாண்டிக்குளமேண்டுறது, வவுனியா செல்வதற்கு மக்களை விடுவிக்கிற எல்லையாக இருந்தது. பெரும்பாலும் தாண்டிக்குளத்துக்கு இப்பாலே புலிகளின் கட்டுப்பாட்டிலும் , அப்பாலே இராணுவக் கட்டுப் பாட்டிலும் இருந்தது. இது தான் அந்த இமயப்புரி எல்லை,

இன்னும் ஞாபகமிருக்கு எனக்கு, அம்மாவும் அப்பாவும் பெரிய ஆமிக் காரனோட சிங்களத்தில்லை கதைச்சுப் பேக்காட்டிப் போட்டு , இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த விதம், அம்மா அந்த எல்லையைத்தாண்டேக்க ஒரு வயதான அம்மாவும் நாலைந்து இளம் பிள்ளைகளும், என் அம்மாவின்ர கையைப் பிடிச்சுக் கொண்டு எங்களையும் காப்பாத்தி விடுங்கோ எண்டு அழத்தொடன்கீட்டுதுகள், இப்ப நினைச்சாலும் கண்ணீர் வரும்,

அண்டைக்கு, அந்த கணத்தில் சிங்களம் தான் தேவ பாஷை, தேவ பாஷையில் பரிபாஷித்து அவர்களை இப்பாலே கொண்டு சேர்த்த்ததும் அந்த அம்மா சாஷ்டாங்கமாக எங்கள் எல்லோரின் காலிலும் விழுந்து....,, ஒருவர் உயிரை இன்னொருவர் யாசமாக கொடுக்க முடியுமா? கொடுத்து விட்டோம் என்று அந்த அம்மா சொன்னார், இந்த லோகத்திலே மிக மிகப் பெரிய செயல்
தக்க தருணத்தில் உதவுவது தான், என்னாலை இப்பையும் கையில் புல்லரிச்சதை உணர முடிகிறது, உணர்ச்சிகள் முட்டி மோதிப் பிரவாகமெடுக்கிற போது, தேவமகன் ஆயாசமாக உறங்கத் தொடக்கி விடுகிறான், அவனுக்கும் உணர்வுகளின் பிணைப்பிலிருந்து விடுதலை வேண்டும் போல.

தாண்டிக்குளம் தாண்டி பஸ் ஏதோ கோளாறு என்று பத்து நிமிடம் நின்றது, ஊர்ந்திலிருந்து எல்லோரும் கிழே இறங்கினோம், செம்பாட்டு மண், என் பாதம் பட்டதும் என் மக்களின் ரத்தத்தின் சீவ அணுக்கள் தான் இவைஎன்று சொல்லாமல்ச் சொல்லியது. அப்படியே குனிந்து நிலத்தில் இருந்து, ஒரு பிடி மண்ணை உள்ளங்கை நிறைய எடுத்து, கை விரித்துப் பார்க்கையில் கண கனவென்ற சூட்டுக் கண்ணீர் பொத்து பொத்தென்று விழுந்து தொலைத்து. கண்ணீர் விழுகிற பொழுதில் கண், வலி எடுத்தது. தேவ மகனே எழும்பி வாடா....சுமைகளுக்கு மேலே என் சுமைகள் என்னை அழுத்திப் பாரமூட்டுகின்றது, தாங்கிப் பிடிப்பதற்கு நீ தவிர யாருளர்....கால தேவனே , இந்த மாற்றங்கள் உன் பொழுதுகள் அஸ்தமித்த போதிலா நடந்து முடிந்தன..? முட்டாள்க் கடவுளனே இத்தனை அழிவு, நடந்தும், உருண்டும் ஓடியிருக்கின்றது, பார்த்துக் கொண்டு கிட்டிப் புல் ஆடினாயா, மானங் கெட்ட கடவுளனே? .....

தேவ மகன் அருகிலே வந்தான், இப்பயும் ஒரு சிரிப்புத்தான். எப்படி இப்படி எல்லாச் சமயங்களிலும் அவனால் சிரிக்க மட்டும் முடிகிறது. ஏனென்றால் அவன் தேவமகன், இருப்புக்கும் இல்லாமைக்கு அவனிடம் ஏது பேதம்.

ஊர்ந்து திருத்தி முடிந்தாயிற்று, ஏறிக் கொண்டோம், அம்மாவுக்கு இப்போது நல்லா ஆயாசமாக இருந்தது, தூக்கம் களைந்து எழுந்து என்னைப் போலவே வீதி பார்த்துக் கொண்டு வந்தார். கைபேசி முகப்பு அந்த இடத்தை "முருகண்டி" என்று சிக்னல் காட்டியது. அங்கேயும் பஸ் நிறுத்தப்பட்டது, பயணிகளின் பயணக் களைப்பைத் தீர்த்துக் கொள்ள அங்கே இறங்கிக் கொள்ளலாம், முகம், கை கால் அலம்பிக் கொண்டு திருத்தலம் போய் விட்டும் வரலாம்.

அம்மா, முருகண்டிப் பிள்ளையார் என்றதும் மள மளவென்று ஊர்ந்தை விட்டு இறங்கி விட்டார், நான் எப்பவும் ஆசுவாசப் பட்டுத்தான் எழும்புவேன், இப்போது காலை நல்லா வெளிச்சிட்டுது, மணி ஆறே முக்கால் இருக்கும்...கீழ் வானத்துச் சூரியன் தங்கக் கிரகணங்களை நெடுவான் எங்கும் பரப்பிக் கொண்டு விரைகிற அற்புதமான காட்சி, புதிதாகப் போட்டிருக்கும் கரண்டுக் கம்பங்களில் பட்சிகள் குந்திக் கொண்டு ஆலவாய்ப் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கின்றன, ஒரு வகைச் சில் வண்டினது ரீங்காரம், எப்போதுமே பற்றைக்குள்ளே கேட்டுக் கொண்டே இருக்கும்.

 காலை வெயிலின் இதம், இவ்வளவு நேரமும் காலை மடக்கி ஊர்ந்துக்குள்ளே இருந்த களைப்புத் தீர எழுந்து கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினோம், எல்லாப் பயணிகளும்.

ஒரு ஊரில ஒரு செட்டியார் இருந்தாராம், அவர் இருந்த வளவுக்குள்ள இருந்த ஆல மரத்து வேரில திடீரெண்டு ஒரு சுயம்புப் பிள்ளையார் தோண்றீட்டுதாம், அதே பிள்ளையார் செட்டியாரிண்ட கனவிலையும் தோன்றி தனக்கு கோவில் கட்ட வேண்டாமேண்டுட்டுதாம்....! ரியலி ஹீ த வன் கோல் காட் !

இது இற்றைக்கு முன்னூறு வருடங்களுக்கு முன்னர் நடை பெற்ற கதை, ஆனா இப்ப அந்தக் கோவிலை ஆல மரத்தோடை வச்சுச் சேர்த்துக் கட்டீச்சிணமாம், ஆனா கொள்கையில் பிடிவாதங் கொண்ட பிள்ளையார் கோவில்க் கூரையை ரெண்டாப் பிளந்து கொண்டு பெரு விருட்சமா வளர்ந்துட்டார். எந்த ஒரு கடவுள் தனக்கென்று தனியிடம் கேட்கேல்லையோ அது உண்மையிலேயே கடவுள் தான்...., சல்யூட் கடவுளே எண்டன், தேவ மகன் என்னைப்பார்த்து அதுக்கும் சிரிக்கிறான். எதுக்கெடுத்தாலும் என்னைப் பார்த்துச் சிரிச்சா எனக்கு வெக்கம் வெக்கமா வருமெண்டு அவனுக்குத்தெரியாது, ஏனென்டா அவன் தேவமகன். மனிசரில்லை !
        
மேற்சொன்ன கதையைக் கூறியவர் அந்த கோவிலுக்கு இப்போது புதிதாக வந்திருக்கும் பரிபாலன சபைத் தலைவர். முன்னாள் ஆகாயப் படை உத்தியோகத்துத் தமிழர் ஒருவர். எங்களுக்கு அந்த இடத்திலே முகம் அலம்ப அவருடைய வீட்டுத் தொட்டி நீரையும் தந்து, உள்ளூர் மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும், காணி உரித்துப் பற்றியும் என்னுடன் நிறையக் கதைத்தார், முல்லைத்தீவு, விஸ்வமடு போன்ற அதன் அண்மிய கிராமங்களில் எத்தனை ஏக்கர் காணியை யுத்த காலத்துக்கு முன்னர் ஒருவர் வைத்திருந்தாலும், மீள் குடியேற்றத்தின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் காணித்துன்டமே வழங்கப்படுகிறதாம்.

 கடவுளே இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா? மேலும் மக்களுடைய காணி அத்தாட்சிப் பத்திரங்கள், உறுதிகள், மற்றும் பிற ஆவணங்கள் பெரும்பாலும் யுத்தகாலத்த்தில் அழிந்து விட்ட படியினால், அந்த ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கு மீள் குடியேற்ற அனுமதியும் இல்லையாம்...! இதை எங்க போய்ச் சொல்லுறது. வீடு, வளவு, வாசலெண்டு ஏகப் பெருவெளியில் வாழ்ந்த மக்கள் முகாம்களில் அடைபட்டு மீண்டும் சொந்த இடத்துக்கு வருகிறார்கள், அப்போதும் இல்லையென்றால்...? சுவற்றிலே தலையை முட்டி விட்டுச் சாவதைத்தவிர அவர்களிடம் வேறு திராணி இல்லை. மீள் குடியேற்றம், மீள் நகரமயமாக்கல் எல்லாமே சிவில்க்கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அம்மா பிள்ளையாருக்கு கற்பூரம் கொழுத்திக் கொண்டிருந்தார். நான்  எந்தக் கடவுளையும் கும்பிடப் பிரியப்படுவதில்லையாதலால்,அதற்கான பிரயத்தனமும் செய்யவில்லை, பஸ் கிளம்ப ஆயத்தமாகியது, மீண்டும் ஓடி வந்து தொற்றிக் கொண்டோம். அம்மாவும் நானும் ஒரு பூர்வாங்க இடைவெளி நேரத்துக்கு "பேச்சு வார்த்தை" எதையும் வைத்துக்கொள்ளவில்லை, "அந்தக் காலத்தில்" "அவர்கள்" செய்தது போல.

 பஸ் முருகண்டி தாண்டி, பரந்தனுக்குள் நுழைந்தது. பரந்தனில் எரிசோடாத் தொழிற்சாலை முன்பு இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது அதன் எச்சமாவது இருக்குமோ என்னமோ? ஒவ்வொரு கிராம ஆரம்பத்திலும் நல்லா கிடுகால் வேயப்பட்ட அரணுக்குள் சிவில் படையினர் அதிகாலைத் தேநீர் சுவைத்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னமா கிடுகு வேயுங் கலையைப் படித்திருக்கிறார்கள் ? சில இடங்களில் வடலி வெட்டி ஒரு சந்து பொந்து இல்லாமலுக்கு ....ஷா ! இங்கத்தே மதில் தோத்ததும் போடும். எல்லாம் தமிழன் கலை. அவன் கண்டு பிடிக்காதது ஒண்டுமேயில்லை. யுத்த காலத்தில "பேபி ஓடிக்கலோனில" மோட்டார் சைக்கிள் ஓட்டின வீர விஞ்ஞானிகள் யாம். குப்பி விளக்குக்குள்ள பச்சைத் தண்ணி விட்டு எரிச்சுச் சோதினைக்குப் படிச்ச செல்வங்கள், எங்கள் பிள்ளைகள். பனங் காயைத் தேச்சு உடுப்புத் தோய்ச்ச விண்ணானமான தாய்மார்ர்கள். அழிக்கின்ற ஒவ்வொரு அணுவாயுதத்தின் சிதறல்ப் போட்டுக்களில் இருந்தும் நாம் உயிர்த்தெழுவோம், அது தான் தமிழன் சால்பு.


கிளிநொச்சி, பரந்தன், பளை...பளை தாண்டேக்கத் தான் அந்த காமெடி! யுத்த காலத்தில் எதிர்த்தரப்பை அழித்ததாகச் சொல்லப்படும் "செயின்புலக்" அதாவது ஒரு வகைப் போர்ச்சாதனம்,அதுக்கு மாலை போட்டு, குஞ்சம் கட்டி, கொடியேத்தி, கற்பூரம் காட்டாத குறை, உள்ளூரிலே பௌத்தர்கள் தம்ம சாலைக்குச் செல்லுகையில் வெள்ளுடை தரித்துச் செல்கிறதைப் போலவே அங்கும் அதே உடையில் பார்வைக்கு வந்திருந்தார்கள். ஏதோ 'பெரஹரா' பார்க்கிறதைப் போல படம் பிடித்துக் மொண்டும், கொண்டாட்டக் கதைகள் கதைத்துக் கொண்டும்......என்னே கூத்து? என்னே கொம்மாளம்? உயிர்களை அழித்துக் கூறு போட்டு விட்டு மாமிச தாகம் தீர்த்துக் கொண்டு வெட்ட வெளியிலே நிற்கிற செயின் புலக்கைப் பார்க்கிறத்துக்கு, பௌத்த தர்மத்தின் வழி வெள்ளுடை தரித்து வருகிறார்கள். தலையில் வருகின்ற குருதி குடிக்கும் பேனைக் கொல்லக் கூடாது என்பதற்காக சிகை முண்டம் செய்து கொண்ட சித்தார்த்தர் எங்கே ? இவர்கள் எங்கே...? இந்தக் கேள்வியைக் கேக்கும் போது மறுபடியும் தேவமகன் உறங்கி விட்டான். இயல்பிலிருந்து தப்பிக்க யனிப்பவர்களுக்கு நரகத்தில் என்ன தண்டனையோ ? தேவமகன் எழும்பினாக் கேக்கலாம். அல்லாட்டில் இப்ப சாமியார் நித்தியானந்தாவைக் கேட்கலாம். அவர் விளக்கமாச் சொல்லித் தருவார்.


பளைக்குப் பிறகு போகிற வழியெல்லாம், சின்னச் சின்ன உருக்குனிக் கோயில்களும், உடைந்து போன வீட்டு எச்சங்களுமே ! மக்கள் சந்தடியே மிகக் குறைவு, பேய் வசிக்கும் தேசம் போல நைந்து போன வயதான கிழவிகளையும் அவை மேய்க்கும் கிடாய் ஆடுகளையும் தவிர வேறேதும் காண முடியவில்லை,பிறகு, ஆனையிறவு,இப்ப நல்லா தண்ணி நிறைஞ்சு நிக்குது, அங்கேயும் முழுக்களும் இராணுவ சீருடையகள் தான். ஆனையிறவுக் கடல் மிகப் பிரபலமான வர்த்தக ரீதியான உப்பளம், தெளிந்த கண்ணாடிப் பளிங்கு போல நீர், ஆழமில்லாத கடல், காலை வெயிலின் இன்கிதத்துக்கு இன்னும் இதம் சேர்க்க இறங்கிக் குளித்து விட வேண்டும் போலக்கிடந்தது.


வசு ஊர்ந்து கொண்டும், பள்ளம் குழிகளில் விழுந்து எழுந்து குழுக்கி இடுப்புக்குச் சேதம் வரப்பண்ணிய படியும் தான் போகுது. யாழ்ப்பாணம் கிட்டுது. சோதினை மறுமொழி பார்க்கப் போன போது கூட இவ்வளவு பதைபதைப்பு இல்லை, இப்பத்தான் இப்பிடி. திருப்பியும் தேவமகன் எழும்பீட்டான்.

அவனை உலுப்பி உலுப்பி எண்ட ஊர் வரப் போகுது எண்டு கூவிக் கொண்டே வந்தன்,அவனுக்கு இப்பஎல்லாம் எண்ட செய்கையில படூ சிரிப்பு. இருந்தாலும் என்னோடையே தான் தாளம் போட்டுக் கொண்டு வந்தான். அம்மா மேலே உள்ள பொதிகளை சரிபார்த்து கிழே எடுத்து வைக்கத் தொடங்கீட்டா, எனக்கு இருதயம் பலமடங்கில அடிக்கத் தொடங்கீட்டுது, அப்ப மணி ஒரு ஒன்பது இருக்கும். யாழ்ப்பாணத்து அசல் வெயில் அடிக்கத்தொடங்கீட்டுது. உலகத்தை முதன் முதலில் சுவாசிக்கத் தொடங்குகிற பனிக்குடம் தாண்டின குழந்தையைப் போல கண் , மூக்கு, வாய், எல்லாவற்றாலும் என் தேசத்தின் ஆலாபனையை உள் வாங்க எத்தனிக்கிறேன்,

சுற்றும் முற்றும் எல்லாமே புதுசு, கண்ணுக் கேட்டிய தூரம் வரை எல்லாமே புதுசு, அறிந்தவர்கள் யாருமே அருகில் இல்லை, அம்மாவின் கைகளை இறுக்கப் பற்றிக் கொள்கிறேன், முதல் நாள் பாலர் பாடசாலையில் அம்மா என்னை விட்டு வரும் போது இப்படித்தான் அம்மாவுடனேயே ஒண்டிக்கொண்டு கையை இறுக்கப் பிடித்துக் கொண்டேன், இப்போதும் அதே செயல். யாழ்ப்பாணம் நகரம் ....பருத்தித்துறைச் சாலை பிரிஞ்சு போகிற இடத்தில் பேரூந்து நிறுத்திக் கொண்டது.

கண்ணை வெட்டி வெட்டி பார்க்கிறேன், பார்க்கிற இடமெல்லாம் புதிது போலவும், ஏதோ யுகமேல்லாம் பழகின என் நந்தவனம் மாதிரியும், பழக்கப் பட்ட குரல்த்தொனிகளும், எங்கையோ இருந்து எமக்கான உபசாரங்களும், எல்லாத்துக்கும் மேலே கண் பெருகிக் கொண்டு, விசும்புகிற சத்தம், அம்மா அனைத்துக் கொள்கிறா, ஊருக்கு வந்திட்டம்...! இப்பிடி இப்பிடி அழக் கூடா.

எவ்வளவு சுதந்திரமாக நடுத்தெருவிலே இப்பிடி அழக் கூட முடிகிறது? கொழும்பிலே நடுத்தெருவிலே இப்படி வாய் திறந்து விம்மி அழ முடிகிறதா..? இது தான் என் சொந்த மண்...! இந்தச் சுதந்திரத்துக்காகத் தான் இங்கே ஓடி வந்தேன்...,

இனி எல்லாமுமே சுதந்திர மயந்தான், சாசுவதத்தின் சாயலில் அகமணம் புளாங்கிதம் கொண்டலைந்தது. புலான்கிதத்தின் உச்சியில் என் தேவமகனும் என்னுடனேயே என் ஊர் இறங்கினான்.




(நேரமிருக்கிற போது மிகுதிப் பயணம் தொடரும் )



-நிலா -

Comments

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...