Skip to main content

போன வழிப் பயணம்...



பாகம்- 01


பயணக் கட்டுரை.




   

மழை சொட்டுச் சொட்டாகப் பெய்து கொண்டிருந்தது, காதுக்குள்ள அடர்த்தியான காத்து வீசிக் கொண்டே இருந்தது, நல்ல கறுப்புக் கலர் இரவு, நானும் அம்மாவும் மட்டுந்தான், அம்மா கேட்டா இப்ப வந்திருமா..? வந்திரும் வந்திரும்...- நான்,
இன்னுங் காணேல்ல...?.... வரும் வரும்...வராமப் போகாது....

ஒரு வேளை விட்டிட்டுப் போயிட்டால்...?
..............நான் ஒருக்கா அம்மாவை நிமிர்ந்து பார்த்து விட்டு, விட்டுட்டுப் போனாப் பரவாயில்ல, கருத்து உருண்டு திரண்டிருந்த மேகங்களின் பஞ்சுப் பொதியில உங்களை இருக்க வெச்சு ..ஆகாய மார்க்கமாக் கூட்டீட்டுப் போறன் ம்மா...எண்டன்,,,
     
நல்ல காலம் அம்மாக்கு எதுவுமே கேக்கேல்ல, இரவு முழுக்க பனிக்க நிக்க வேண்டாமேண்டால் கேக்க்கிரதில்லை...., வாய்க்குள்ள அம்மா முணுமுணுத்துக் கொண்டு கைக்கெடியாரத்தில நேரம் பார்த்தா...
ஒன்பதே முக்கால்..., எண்ட கடியாரத்தில பத்து....! ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஜெனரேஷன் கப்?
...............................................................................................................

ஒரு சொறி நாய் வந்து அறுந்த வாலை தன் கால் இறைக்குள் போட்டுக் கொண்டு பாவமாக என்னைப் பார்த்தது, சொறி நாய், பாவம் பார்க்கிற அளவுக்கு நான் வந்திட்டனோ..? ஒண்டும் பேசாமல் கையிலிருந்த பிஸ்கோத்துப் பையை வாயாலை பிச்சு, நான் வாயாலை பிக்கிறத்தை ஆரும் பாக்கினமோ எண்டு கடைக் கண்ணால ஒரு நோட்டம் விட்டுட்டு நைஸா நாலு பிஸ்கோத்தை உருவிப் போட்டன், நாய் நன்றியுள்ளது, அதுக்கு க்ரீம் பிஸ்கோத்து பிடிக்கேல்லைப் போல 'உர்ர்' 'உர்ர்' எண்டு உறுமீச்சுது, ஹா..... நான் நாய் விஷயத்தில எவ்வளவு அனுபவ சாலி எண்டு அதுக்குத் தெரியேல்ல, பதிலுக்கு நானும் உறுமினன்..., அந்தக் கடைக்கார மனுஷன் என்னையே பாக்கத் தொடங்கீட்டுது, வித்தை காட்டிப் பிழைக்கிறவன் போல கித்தான் சட்டையும், பொத்தான் வைத்த கோட்டும் அணிந்திருந்தேன், பார்க்க சாடையா அரை லூசு மாதிரித்தான்...,


இருந்தன். ஆர் என்ன நினைச்சா எனக்கென்ன...நான் அரை லூசெண்டு எனக்குத் தெரியாதா...?மனுஷன் என்ன நினைச்சுதோ தெரியேல்ல, பரிதாபப் படுகிறதைப் போல முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு கடைக்குள் வேலையாய் அமர்ந்து விட்டார். நான் அம்மாவுக்குப் பின்னால ஒளிஞ்சிட்டன். ஆனா இன்னமும் அது வரேல்ல. அம்மா பொறுமையை இழந்திட்டா...., நான் அவசரவவசரமாக இலக்கங்களை அடிச்சுக் கொண்டிருந்தன், ஹல்லோ வந்துருவீங்களோ? .....

அப்பத்தான் அது நடந்தது, பெரூசா புகை கக்கிக் கொண்டு ஒண்டு எங்களுக்கு முன்னால வந்து நிண்டது, வெள்ளவத்தை மன்னிங் பிளேசிலை, தேங்கி நிக்கிற புனித நீரை வாரி இறைத்து, ஒரு மினி சுனாமியே வந்துட்டுது...ஐயோ பூகம்பம் பூகம்பம் எண்டு நான் கத்த வெளிக்கிட முதல், ஒரு மனிசன் வந்து நாங்கள் கையில வெச்சுக்கொண்டிருந்த தோள் பைகளை வாங்கிக் கொண்டு போனார், ஆனா நான் என்டையைக் குடுக்கேல்ல, எண்டை விசயத்தில நான் சரியான கவனம், எண்ட பைக்குள்ள பல முக்கியமான பொருட்கள் இருந்தன, நான் அதை கடைசி வரைக்கும் ஆரிட்டையுமே குடுக்கேல்ல..., நிறைய 'டிப்பிடிப்' பக்கேற்றுகளும், பிஸ்கோத்துப் பொட்டலங்களும், சுவிங்கம், ஸ்நாக்ஸ் தவிர இரவுச் சாப்பாடும் அதுக்குள்ளே தான் இருந்தது...அது காணாமல்ப் போனா எண்ட வாழ்க்கைப் பிரச்சினை...


இந்த மாதிரி விடயங்களில நான் தீவிர கவனம்.அதால ஆரிட்டையும் குடுக்கேல்லை.ஹையா ஜன்னல் சீட். பொதிகளை இறுக்கி பேரூந்தின் உச்சத்தட்டில் வெச்சாச்சு. அம்மாவும் எனக்குப் பக்கத்தில இருந்துட்டா. பஸ் காரன் 'ஏசி'யை ஓன் பண்ணீட்டான்.....குளிர்ந்து கொண்டு வருகுது, என்னமோ தெரியேல்ல, ஒரு புது வகைப் புளாங்கிதம், ம்ம்மா..., எத்தினை மணிக்கு அங்க போய்ச்சேருவம்...?


நாங்கள் போக விடிஞ்சிரும் குஞ்சு...!- அம்மா சொன்னா. தலையை அம்மாவின் தோளின் மேல் சாய்த்துக் கொண்டு எல்லாமே அப்பிடியே இருக்குமாம்ம்மா....?

.....தெரியேல்லையே ராசாத்தி....கொஞ்சம் இருக்கும் ; இன்னுங்கொஞ்சம் 

இல்லாமல்ப் போயிருக்கும்; இப்ப எல்லாம் புதுசு புதுசா வந்திருக்கும்..., போய்த்தான் பாக்கோணும்....! அம்மாவின் கண்களிலே ஒரு எதிர்பார்ப்பின் ஒளிக் கீற்று. என் கண், மூக்கு, வாய் எல்லாவற்றிலும் ஒரு சிரிப்பு. எதையோ சாதித்து விட்டது போல, ரெண்டு நாளைக்கு முதல்த்தான் காலிக்குப் போனன், இதுக்கு இன்னும் கொஞ்ச நாளுக்கு முதல் இன்னும் இறைய இடங்களுக்குப் போயிருக்கிறன். எவ்வளவு நெடுந்தூரப் பிரயாணமெல்லாம் செய்திருக்கிறன்...இண்டைக்கு மாதிரி உடம்பெல்லாம், ஒரே சமயத்தில வேர்த்துக் கொண்டும், குளிர்ந்து கொண்டும் வந்ததில்லை. ஆரம்பம் முதலே வித்தியாசமான அனுபவம் தான். பக்கத்திலே இருக்கிற அம்மாவுக்கு என் பெருமிதத்தின் ரகசியமெல்லாம் தெரியும், தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறா....நான் பிள்ளைக்கு சொல்லியிருக்கிற எல்லா இடங்களையும் கூட்டிப் போய்க் காட்டுறன்....ஒரு மெல்லிய புன்னகையுடன் சொன்னா. எல்லா இடமுமா....? , வாய் பிளந்த நான், பழைய படங்களில் பிளாஷ் பாக் வருவது போல கனவுச்சுருட்களை கண்முன்னே விரித்து விட்டு ஓங்கிச் சிரிக்கிறேன். கனவு மட்டுந்தானே இவ்வளவு நாளும்....ஹ்ம்ம் !!
     
பேரூந்து ஒரு அண்டக் குலுக்கலுடன் புறப்படத்தயாராகியது. பிளேனிலை போகேக்கக் கூட இப்பிடி ஒரு திகில்ப்பட்டது கிடையாது. ம்மா..சரியான எக்சைட்மெண்டா இருக்குது...! உள்ளங்கைகளிரண்டையும் உரசி வெப்பம் வர வைத்துக் கொண்டு கன்னங்களில் தேய்த்து, கண்களை அகல விரித்து, எதோ இந்திர லோகத்துக்குப் போவதைப் போல வாய் பிளந்து பார்த்தபடி.....,,, நகரின் இருட்டு, மின்விளக்கின் ஒளியுடன் குவிந்து குவிந்து ஒளிர்ந்து கொண்டிருந்தது.


பெரு வழிச்சாலையின் வாகனப் புகை எங்கேயோ ஒரு வானத்தின் கரும் பூதாகாரக் கோட்டைக்குள் விழுந்து என்னை விழுங்க வருகிறது போல கிளர்ச்சி செய்தது. எல்லாம் புதிது, பார்க்கிற திசையெல்லாம் புதிது, இன்னுமே நகரம் தாண்டவில்லை அதற்குள் எல்லாம் புதிது புதிதாய்.....

வண்டி விரைந்து கொண்டே போகிறது,ஒரு திருப்பம்,என் வாழ்க்கையிளல்ல, பாதையில்! அந்தத்திருப்பத்தையும் சந்தித்து வண்டி நகர்கிறது. என் ஆயுளையும் தாங்கிக் கொண்டே.


இரவு நல்லா நேரம் போட்டுது, அம்மாக்கு கண்ணைச் சுழட்டிக் கொண்டு நித்திரை வந்துட்டுது, எண்ட தோளில ஒரு தவ்வல்க் குழந்தையைப் போல அம்மா சரிந்து அணைத்தபடி படுக்க ஆரம்பிக்கிறா, அந்த அணைப்பு ஒரு புது உணர்ச்சியைக் கிளப்பி, அந்த உணர்ச்சியின் மேலே என் கிளர்வுகளை தூசு தட்டி அந்தம் பிடிக்கிறது. கண்கள் மூடிக் கொள்ளாமலேயே கனவு வெளி திறக்கிறது.


அவசர அவசரமான வாழ்க்கையின் நுனிப்பகுதியில் சாவகாசத்தின் ஜன்னல்க்கதவுகளைத் திறந்து விட்டபடி ஒரு 'தேவமகன்' சிரிக்கிறான். அந்தச் சிரிப்பிலே ஒரு அசாத்தியத்தின் துணிச்சல் ; என் எதிர்காலத்தின் சவால்கள்! என்ன அருமையாகச் சிரிக்கிறான் , விரக்தி கொண்டவனைப் போல, குலுங்கிக் குலுங்கியும், விக்கி விக்கியும்....! அந்த தேவமகன் சிரித்து விட்டு விலகி விடுகிறான், எல்லாரும் இப்படித்தான் அடிக்கடி விலகி விடுவினம் இவன் போலவே. ஆனால் அந்தச் சிரிப்பினது தொனியும் அவன் அலட்சியமும்...

பஸ் இன்னொருக்கா குலுக்கேக்க பழைய படி இந்த உலகுக்கு வந்திட்டன், ஆனா அவன்ட முகம் மட்டும் ஞாபகத்தில வரமாட்டனேண்டுட்டுது....தேவர் மகன் 'கமல்' மாதிரியோ, பிதாமகன் 'விக்ரம்' மாதிரியோ எதோ ஒரு சாயல் அவனுக்கு. கண்ணுக்குப் புலப்படாமல் கல்பிதமாக நிற்கிற பொருள் எல்லாமே கடவுள் தானாம். அப்ப அவன் கடவுள். நல்லா யோசிச்சுப் பார்க்கேக்க அவன் கால தேவனேண்டு விளங்கீட்டுது. என் போகிற வழி முழுவதுக்கும் அவன் தான் துணை. நான் ரசிக்கிற ஒவ்வொரு காட்சிகளையும், தருணங்களையும், அனுபவிக்கிற ஒவ்வொரு ரசவாதங்களையும், ரகசிய ஆலாபனைகளையும் பகிர்ந்து கொண்டே போனேன். காற்றைப் போல உருவமில்லாத அவனும் 'உம்' கொட்டிக் கேட்டுக் கொண்டே வருவான். சில நேரம் என் போலவே கண்ணசந்து விட்டு அசடு வழியச் சிரிப்பான்.

பயணம் இப்படியே நீண்டு கொண்டே போனது...




(பயணம் தொடரும்.... )


நிலா -

Comments

  1. தொடருங்கள் அடுத்த பகுதிக்காக
    காத்திருக்கிறேன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...