வெளிச்சம் குறைவாய்......
காலை நேர கைசிகப் பண்ணினது நாதத்தில்,
மல்லிகை இதழ்கள் விரிகின்றது
தேனின் திரவியத்தை சுமந்து கொண்டு,
யாகாவாரினும் நாகாக்க-
நான் தவறியதால்
சயங்கொள்ள முடியவில்லை.
சாய்மனையில் இருக்கின்றேன்
எதுவும் இயலாதபடிக்கு...,
விமோச்சனப் பலன் காண கௌளீயைத்
தேடினேன் -
இல்லையது என் முகட்டிலே .
விட்டத்திற்கு வேறுபட்டதாய்
நிற்கிறது -
கூரையின் தாவாரம்.
தாவர சங்கமங்களை எல்லாம்
தாரை வார்த்ததட்குப் பின்னும்
மண்ணும் ,மழையும் ,மடுவும்
கூடிய சங்கமமொன்று
தேவையாய் இருக்கிறது.
முதுமையின் பலம் ,
சாவுக்கு அந்தம் பிடிக்கிறதா ?
தெரு முனையிலிருக்கின்ற
நாய்க்குத் தெரிகிறது - என் சாவின்
ஜனனம் -அது
ஊளை செய்து நமனை எதிர் கொள்கிறது ,
சில காலமாய்.....
பழுத்த இலையின் இருப்பு
எத்தனை காலம் ?
சவங்காவிகளுக்கா
பஞ்சம் இங்கு......?
காலை நேரம் -
நியமம் தவறாமல் கைசிகப் பண்
கேட்கிறது எனக்கு -
நேரிசலடைந்த வாகன இரைச்சல் மத்தியிலும் .
என்னைத்தவிர நிழல் மட்டும்
தெரிகின்றது இறப்பின் சாயலுடன்
ரசக் கண்ணாடியில்.......
மூப்பேறிய ஆன்மாவுக்கு ,
சந்தத்தின் உன்னதம்
புரிவதில்லை.
சத்தத்திலிருந்து சந்தத்தை பிரித்தறிய
நிரம்பக் காலம் எடுக்கிறது -
வாழ்க்கை சம்பந்தமான அவாவினால் .-
ராகத்திலிருக்கும் பாவனைகள்
நெடு நாளைய நிறச்சூரியனைப் போல்
கண் கூச வைக்கிறது .
தூணிலே சாய்ந்து கொண்டதும் நின்மதி பிறக்கின்றது.
இப்போதைக்கு இப்போது -
இப்போதைக்கு போதும்-
இப்'போதை''க்கும் போதும் !
கண்ணிலிருந்து மறைகின்றது வண்ணத்து பூச்சி ஈறான தென்னை மரங்கள் -
என்னுடலைத் தவிர ,
உடல் சம்பந்தமான எனக்கு -
'லா லா பாசம்' கிடைக்கட்டும்
'லா லா பாசம்' கிடைக்கட்டும்
சாவிலே ........
வெளியே, வெளிச்சம் குறைவாய் இருக்கிறது -
ஏதும் தேடிப் பிடிக்க -,
***
அடைகிற ஆசையில்......
அட.,
நீண்ட நாட்களுக்கு பின்
அவன்..
முறுவலிக்கின்றான்
மீசை நெளிய -
மாபாவம் செய்த
சந்நியாசியைப் போல நான்-கூனிக்
குறுகிப் போனேன்.
துள்ளியது இளமைஎன்றால்...,
பொதி சுமப்பது........................?
சன்மார்க்கத்திலிருந்து
விலக வைக்கும்
சுடுகாட்டுச் சாம்பல் பூசிய
உனதுடல்................,
ஏக்கத்திற்கு மேல்
ஏக்கம் கொள்ள வைக்கிறது .-
'பிடியதன் உரு உமை கொள,'
'எனததன் உரு நான் கொள..'..
எனக்கும் கூட
ஓங்காரத்தின் புத்திரனைத் தருவாயா...?
ஒளியினது நாதத்தில் ,
தழைத்த எனதுடல் -
மாயைகள் பற்றி
உழல்கிறது .
நான்
சகலனாதலால் .......
மும்மலங்களையும் களைந்து..
மலச் சிக்கலில் இருந்து விடுபட
நார்ச் சத்துத்தா......!
மேரு மலையில்
மீதமிருக்கும் பாச அமுதத்தை
எனக்குத் தா.....,
எனக்கு நித்தியத்துவம்
வேண்டும்...,,
அடக் கடவுளே...........
உனக்கென்ன தான் தெரியும்....,
என்னையும் விட,...............?
முட்டாள்க் கடவுளே
நிழலுக்குப் பின்னால் அந்தம் பிடிக்கிற வெற்றிச் சூரியனும்,
நிர்மூலத்துக்குப் பின்னாலே தேய்ந்து போகிற நிலவொளியும்,
கமண்டத்துக்குளிருந்து வரும் உன் உச்சி குளிர்ந்த நீரையும் தவிர -
அவதாரமெடுத்த கடவுளே,
அவதாரமெடுத்த கடவுளே,
அகண்டிதாகாரமும், அருவத்துக்கும் பின்னாலுமான-
உன்னிலை தெரியுமா உனக்கு..............?
சத்தினி பாதம்,
திருவடி பேறு,
இதெல்லாம்
எந்தக் காலத்து
ஆன்மாக்களுக்காக.......?
மெல்லிய தாள்களிலான பச்சைப் பணமூடையையும்.,
சரிந்து விழுகிற தொந்திப் பாட்டையும்
கவனிக்காத
கடவுளே.............
உன்னையே தான்
இன்னமும் நான்அடைய விரும்புகிறேன்.
உன்னையே
கரம் பிடிக்க யனிக்கிறேன்.
என் வார்த்தைகளையும் ,
வார்ப்புடலையும் ,
கொழுந்து விட்டெரீயும்
விடலைத் தீயையும்
உனக்கெனத் தான்
குரு தெட்சினையாய் ...........
மெதுவாகச் சொல்கிறேன் ,
என் காதல்
ஆலாபனைகளை................
பிறகு , இன்னும் பிறகு....,
என்னை இமய மலைக்கு
கூட்டிச் சென்ற பின்.., சொல்கிறேன்....!
ஐயனே,,,,,,,
தேசீயவாதத்திட்கும் ,
உனக்கும்
என்னது வேறுபாடு...?
அறியாப் பொருள் என்ற
ஆணவம் உன்னிடம் மட்டும்
தகுமா....?
என் நேசம்
எத்தனை ஆகாமியம் என்பது
உனக்கு புரியாதா ....?
கடவுளின் லீலைகளுக்கு பின்னாலும்
லீலைகளுண்டு .
எனக்கும் உண்டு -
எதுவுக்கும் பின்னாலும்..............,
தேய்ந்து போன சாபம்.!
நிலா -
excellent darsayani, i like this poems
ReplyDelete