Skip to main content

"செக்கு" நாடகம்;Parakrama Niriyella's 'Sekku'

   


இடம்- கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை.
நெறியாள்கை- திரு பராக்கிரம நிரிஎல்ல
காலம்-31.01.2010- ஞாயிறு மாலை.
 


பொதுவாக நாடகங்களின் தன்மைக்கேட்பவே ரசனையாளர்கள் ஏற்படுகின்றார்கள், காலாகாலமாக நாடகங்கள் வீதிகளிலும்,அரங்குகளிலும் ஏற்றப்படுகிரபோது அவற்றினது கவர்ச்சித்தன்மையுடன் ஏதாவது ஒன்று மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுகிறது, இதன் அடிப்படியில் நாடகத்துக்கான தனிப்பட்ட ரசிகர்கள் குறைவடைகிரார்கள், பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், முற்போக்குக் கருத்துக் கொண்டவர்கள், மக்கள் ஸ்தாபனத்தைத் தாங்குபவர்கள், சமுதாயத்தினதும் அரசியலினதும் பார்வைக்குளிருப்போர் போன்றோரால் தான் முற்போக்கு நாடகங்கள் காலப்போக்கில் வரவேற்கப் படுகின்றன, இதன் காரணமோ என்னமோ நாடகத்தின் உட்பொருளும் இது சார்பாயே இருந்தது.

கிட்டத்தட்ட முறையான தமிழ் நாடகங்களையே காணக்கிடைக்காத இந்தக் காலகட்டத்திலே 'ஜனகரளிய' குழுவினரது 'செக்கு' நாடகம் அண்மையில் கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் சிற்றரங்கிலே கடந்த ஞாயிறன்று காணக் கிடைத்தது. வெறுமனே நாடகம் என்று சொல்லிவிட்டால் அதனது பாண்டித்தியம் குறைந்து விடும், அல்லது அதன் வெளியீட்டுத் திறன் குறைத்து மதிப்பிடபட்டுவிடும். எனவே அரங்காடல் என்று விட்டால் அதன் உள்ளீட்டு அரங்கியலும் வெளிப்பட்டுவிடும் .



வழமையான ஐரோப்பிய "ப்ரோசீனியம்" மேடையமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டு திறந்த வெளிக் களரியமைப்புடன் பார்வையாளிக்கும் அரங்காடுபவருக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொண்ட யுக்தி அருமையானது , இடப்பற்றாக்குறையும் அதற்கொரு காரணமாகும், இருப்பினும் நாடகத்தின் பொருள் புதைந்து போன பார்வைக்குள் பார்வையாளர்களை இட்டுச் செல்ல நல்லதோர் வழி அதுவாகவிருந்தது.

சிங்கள நாடக வரலாற்றில் தனக்கென தனியான தடம் பதித்துக்கொண்ட திரு. பராக்கிரம நிரியெல்ல அவர்களது தயாரிப்பில் 1979ஆம் ஆண்டு சிங்கள மொழியிலே "செக்குவ" எனும் பெயரில் அரங்கேற்றப்பட்டு தேசிய நாடக விழாவிலே ஏழு தேசிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட பெருமைக்குரிய இந்நாடகம் தமிழிலே "செக்கு" எனும் பெயரில் அரங்காடப் பட்டது.


நாடகம் சுமார் ஆறரை மணியளவில் தொடங்கப்பட்டது, தயாரிப்பாளர் திரு. பராக்கிரம நிரிஎல்ல, அவர்களின் முன்னுரையை நம்மவருக்காக மொழிபெயர்த்துத் தந்த இரா .லோகானந்தனின் உரையுடன் ஆரம்பமானது.

        கதைசொல்லியின் பொருளாதார வாழ்க்கைத்திறன் பாடலுடன் அரங்கம் ஒளிக்குள் பிரகாசிக்கிறது, சிறிய அரங்கம், சந்ததியான கூட்டம், அப்படியே அடங்கிப் போய் ஒன்றிவிடுகிறது சற்றைக்கெல்லாம்.

சம்பிரதாய பார்வையாளர்களைத்தருவிக்கத் தவறியதால் நிறைய நெறிகடந்தவர்களைக் காணமுடிந்தது, எனவே நாடகத்தின் உட்பொருள் அவரவர் பார்வைக்குள் திசைப்பட்டது. குறியீடுகளாலும் படிமங்களாலும் நவீனமாக்கப் பட்ட நாடகம் சாதாரண பார்வையாளனின் மனதை என்ன செய்திருக்கும் என்கிற கேள்வியையும் ஏற்படுத்தத் தொடங்கிற்று. நாடகத்தில வருகின்ற குறியீடுகள் குழப்பமும் மயக்கமும் மிகுந்து தெளிவில்லாமலிருந்தது.

குறியீடுகளில இருக்கிற இந்த மயக்க நிலை தெளிவின்மை, படைப்பாளி மக்களுக்குச் சொல்ல வருகின்ற செய்தியில் பார்வையாளனை லயிக்கச் செய்ததோ என்னமோ ? மறைபொருள் நிரம்பிய நாடகத்தின் குறியீடுகள் தற்கால சமூக நிலையையும்,அரசியல் கலாசாரத்தைக் குறிப்பதுமாக இருக்கலாம், அதன் காரணமாக சாடை கட்டப் படுகின்றதோ என்று பெரும்பாலானோர் எண்ணத் துணிந்தனர்.

நில ஒதுக்கீடு, முதலாளித்துவம், காலனியாதிக்கம், குடிமக்களின் தேசீயச் சுரண்டல்,அடிப்படை அரசியல் போன்ற அடிப்படப் பிரைச்சினைகளை வட்டங்காட்டுவதாக அமைந்திருந்தது, 1979ஆம் ஆண்டளவில் புனையப்பட்ட நாடகம் என்ற ரீதியில் அந்தக் காலகட்டத்து அரசியலமைப்பும் வெகுவாகப் பேசப்பட்டிருந்தது கண்கூடு, சிங்கள நாடகமொன்றை தமிழ் மொழிப்படுத்துதலின் போதான நெறி நீக்கல்கள் எதுவும் இங்கு இடம்பெறாமல் வெளிப்படையாக தந்திருந்தமை பாராட்டத்தக்கது. தமிழிலே இரா. லோகானந்தன் என்பவர் மொழிபெயர்த்திருந்தார், இவர் மக்கள் களரியமைப்பைச் சார்ந்தவர். நாடகத்தை நெறியாளகை செய்தவர்கள் தி. சிவநேசன் மற்றும் ரொனிக்கா சாமலி ஆகிய மக்கள் களரியங்கத்தவர்கள்.




 "செக்கு" என்பதன் அர்த்தத்தை நாடகம் பார்க்கும் முதல், ஒருதடவை மனதில் அர்ப்பித்துக் கொண்டேன், ஒரு பொருளைப் பிழிந்து அதன் சாற்றை எடுக்கப் பயன்படும் உபகரணம், அவ்வளவுதான்.

ஆனால் நாடகத்தின் ஒவ்வொரு கட்டத்தின் இறுதிப்படிகளின் போதும் "செக்கு" என்பதன் அர்த்தத்தை நான் மாற்றிக் கொள்ளவேண்டியிருந்தது. செக்கினது பரிமாணம் அங்கு ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறாக நிலைப்படுத்தப் பட்டிருந்தது, ஒரு கடை பார்வையாளிக்கு இது எந்தளவில் சென்றடைந்திருக்கும் என்பதில் எனக்கும் ஐயமேட்டப்பது. நாடகம் முழுவதும் எளிய பேச்ச்சுவழக்குத்தமிழிலே எந்த ஒரு வட்டாரத்தையும் சாடுவாதாக அல்லாது அமைந்திருந்தது. ஆனால் குறியீடுகளாலும் படிமங்களாலும் நிறைந்து வழிந்தது. அரங்கத்தின் தொங்கலிலே திரையால் மூடப்பட்ட பொ(ய்)ம்மையுருவங்கள் கிடந்தன, திறந்த வெளியமைப்பிலே இடது ஓரத்தில் வார்த்தியக் குழுக்களும், குழுப்பாடகர்களும் அமர்ந்து கொண்டார்கள், இரண்டு பெரு (சிறு) வழியினூடு அரங்கத்தினுள் அரங்காடுபவர்கள் பிரவேசிக்கக் கூடியதாயிருந்தது.

கதையின் ஆரம்பத்திலேயே இது ஒரு 'சமுதாயப் பிரதிபலிப்பு' என்று சொல்லிவிடப்பட்டமையால் ஒவ்வொரு நாடகப் பிரதிநிதிகளையும் சமுதாயத்தின் பிரதான பொது உருவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தோணுகிறது.

"கதை சொல்லி" வளமான சமுதாயப் பாடலுடன் மக்களை வரவேற்றபடி அறிமுகமாகிறார். (சிவப்புச்சட்டை அணிந்திருக்கிறார் (?) ) அவரது இயல்புத் தொணி ஒருவகை ஈர்ப்பைத் தருகிறது.

 "சின்னா" என்கிற சாதாரண குடி மகனின் விவசாய நிலம் சாதுர்யத்தனமாக தனது "துரை" என்று சொல்லப்படும் முதலாளியால் கைப்பற்றப்பட்டு விடுகிறது, தனது நிலத்தை மீளப்பெற வழி தெரியாதவனும், அது அவனிடமிருந்து சுரண்டப்பட்டிருக்கிறது என்ற அடிப்படைப் புத்திசாலித்தனமும் இல்லாதவனான சின்னா ஊரை விட்டு எங்காவது ஒழிந்துவிடத் தீர்மானிக்கிறான், அவனது நண்பன் (கதைசொல்லி) அவனைத்தடுத்து நிறுத்தி அவனது உரிமையான அபகரிக்கப்பட்ட நிலத்தினை துரையிடம் கேட்டு மீட்கச் சொல்லி அறிவுறுத்துகிறான், இருவரும் கேட்கப் போகிறார்கள்.

"துரை", மற்றும் "எடுபிடி" என்கிற சுரண்டல்ச் சமுதாயத்தின் பிரதிநிதிகளை அவர்கள் சித்தரித்திருந்த விதம் அருமை. பிரித்தானியரின் வருகைக்குப் பின் அவர்களோடு ஒட்டிக்கொண்டு, அடிமைச்முதாயத்தை உருவாக்கத் துணிந்தவர்களும் கடைஞ்சல் நாகரிகத்தையும் கொண்டவர்க்களுமாவர். முறையே நீலம், பச்சை ஆடை கட்டியிருந்தனர்.நிலவுரிமையைப் பெற எத்தணிக்கிற சின்னாவை, நிலத்தைக் கொடுத்து பொதுவுடமைதாரராகாமல், அடிமையாக உபயோகிக்க திட்டமிடுகின்றனர் .முதலாளிகளின் பணக்காரத்திட்டங்களுக்கு செவிபோகிற சின்னாவின் நிலை சாதாரண ஒவ்வொரு குடிமகக்களும் தேர்தலின் பின்னரான அரசியலைச் சகிப்பது போன்ற அவலநியையாகும், அவனறியாமலேயே அடிமைப்படுத்தப்பட்ட சின்னா, செக்கிழுக்கும் தொழிலாளியாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமர்த்தப்படுகிறான், செக்கு இழுத்து எண்ணெய் பெறப்பட்டதும், அவனது நிலம் அவனுக்கே உரித்தாக்கப்ப்படுமாம், செக்கு இழுக்க இழுக்க எண்ணெய் வருகிறது, அதனை முதலாளிகளின் சேவகர்கள் கொண்டு போகிறார்கள், மறுபடியும் சின்னா செக்கிழுக்கிறான்,சேவகர்கள் கொண்டு போகிறார்கள்,......இது தொடர்கிறது.

தொடர்ந்து ஏமாறத் திராணி இல்லாத சின்னா, அவனது நண்பனும் கதைசொல்லியுமானவரையுங் கூட்டிக் கொண்டு துரையிடம் நியாயங்கேட்கப் போகிறான்.

சின்னாவிற்கு இந்திரலோகத்தில் இருந்து தருவிக்கப் பட்டதாகச்சொல்லி "சகடை" எனும் மாடு, செக்கிழுத்தலுக்குப் பயன்பட வழங்கப்படுகிறது, மீண்டும் தனது நிலம் கிடைத்துவிடும் என்கிற முழுநம்பிக்கையுடன் சின்னா மாட்டைக் கொண்டு செக்கிழுக்கிறான், மாடு அசைந்து கொடுக்கவில்லை, இந்திரலோகத்திலிருந்து தருவிக்கப்பட்ட குறியீட்டு மாட்டிற்கு உயர்ரக உணவும், சின்னாவிட்கு மீய்ந்த தவிட்டு ரொட்டியும் உணவாக வழங்கப்படுகிறது. மாடு பொதிசுமக்க மறுக்கிறது, மறுபடியும் சின்னா தன் நம்பிக்கையை இழக்கிறான், கதைசொல்லியும் சின்னாவும் மீண்டுமொருதடவை துரையிடம் நிலத்தைத் தரும்படிக் கேட்கப் போகிறார்கள்,

மறுபடியும் சின்னாவின் அதிஸ்டம் எனக்கூறி இந்திரலோகத்திலிருந்து "எடுபிடியால்" தருவிக்கப்பட்ட "செவிலி" எனும் இளங்காளை தருவிக்கப் படுகிறது. மறுபடியும் நிலம் தனக்கு உரிமையாகும் என்ற சிரத்தையோடு செவிலியைக் கொண்டு செக்கிழுக்கிறான் சின்னா, 'செவிலி' இந்திரலோகத்தில் நன்றாக தின்று குடித்த மாடு... செக்கிழுக்க மறுக்கின்றது, சின்னா ஒரேயடியாய்த் துவண்டு போகிறான்,

மாடுகள் செக்கிழுக்க மறுக்கும் ஒவ்வொரு பட்சத்திலும் அவனது நிலம் அவனிடமிருந்து தொலைந்து போகிறது, மறுபடியும் துரையிடம் மாடு பற்றி முறையிடும் போது, முதலில் மாடுகளுக்கு கவசம் வழங்கப்பட்டது, அவை செல்லுபடியற்றதாக, பின் செக்கிட்கு பாதுகாப்புக் கவசம் வழங்கப் படுகின்றது.அந்த இடத்தில் செக்காக கதை சொல்லி பாவிக்கப் படுகிறார்.

எல்லா நிலைகளிலும் சின்னா வஞ்சிக்கப்பட்டு இறுதியில் அவனது நிர்வாணத்தை மறைக்கத் துணியில்லாதவனாகிறான். அரங்காடலின் ஒவ்வொரு கட்டத்திலும் "துரை" மற்றும் அவரது "எடுபிடி" இருவரும் வர்ணக்கலவையிலான, உயர்ரக, ஆடைகட்டிக் கொண்டு வருகிறார்கள், ஒருகட்டத்தில் கதை சொல்லி கேட்கிறான்,

'உங்களுக்குக் கீழ் தினப்படி செக்கிழுத்து வேலை செய்த சாதாரண குடிமகனான சின்னா காலப்போக்கில் தனது நிர்வாணத்தை மறைக்கக் கூட துணியில்லதவனாக இருக்கும் போது, உங்களால் மட்டும் நேரத்துக்கொரு டாம்பீகமான துணியணிந்து கொள்ள முடிகிறதே என்று,.... .. சுரண்டல்ச் சமுதாயத்தின் திரையைக் கிழிக்கும் யாதவமான வார்த்தைகள்,

சின்னாவின் அடிப்படைத்தனத்தைப் பயன்படுத்தி அதாவது கழுதைத்தனத்தைப் பயன்படுத்தி, நிலத்தை உரிமையாக்கிவிட்ட துரைமார் அவனுக்குப் போக்குக் காட்டுவதை கதைசொல்லியும், சின்னாவும் இறுதியில் தான் உணருகின்றனர், இருப்பினும் அதிலிருந்து மீள வழி தெரியாத சின்னா முதலாளிகளுடன் இணைந்து, உலகமயமாகுதலின் விளைவாலே, அவர்களுக்கு சிங்கியடித்து குட்டி முதலாளியாக வேஷம் போட யனிக்கிறான். 

கதையின் ஆரம்பத்தில், நாட்டுப் பாங்கான உடையுடன் இருந்த சின்னா இறுதி நிலைகளில் "கோட்டு", "டை" முதலிய முதலாளிச்சின்னங்களை அணிந்து கொண்டு வருகிறான் . கதை சொல்லி மட்டும் அதிகார வர்க்கங்களைக் கடந்து மாற முடியாமல்த்தவிக்கின்றார், இறுதியில் எல்லா மக்களும் அடிமைக் கொள்கையிலிருந்து மீறமுடியாமல், நாகரிகமான முதலாளிகள் வேடம் அல்லது நாகரிகமான பூர்ஷ்வா வேடத்தைக் உலகமயமாக்குதல் அல்லது போதுச்சந்தைக்குத் தள்ளப் படுத்தல் போன்றதொரு கருத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்பதுடன் கதை முடிகிறது, கதை முடியும் போது அந்த போலி பொம்மைகளின் திரை அகற்றப் படுகிறது, அவையும் நாகரீகத்தின் மிகுதியின் வடிவமாய்க் காட்சி தருகின்றன. ஒரு கவிதையின் முடிபு போல இறுக்கமாகவிருக்கிறது முடிபு. இது கதைச்சுருக்கம், முழுக்கத்தை ஆகா.

நாடகத்தின் ஒவ்வொரு திருப்பங்களும் மிகுந்த நகைச்சுவையுடனும், குறியீட்டு பொறி முறையுடனும் லாவகமாக காட்சிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு காட்சி முடிவின் போதும் எழுந்த கரகோஷங்கள் அதன் அத்தன்மையை தெளிவுபடுத்தியது.

கதையாடலின் காட்சிப்படுத்தலாகட்டும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பாகட்டும் குறை சொல்லும் விதத்தில் இருக்கவில்லை, உண்மையில் அருமை என்றே சொல்ல வேண்டும் . இடப்பற்றாக்குறையும், தொழிநுட்ப வசதிகளும் குறைவாக இருந்த போதிலும் நாடகத்தின் விறுவிருப்புக்குக் குறைவே இருக்கவில்லை.

நின்ற நிலையிலும் பார்வையாளர்கள் பலர் தொங்கித்தொங்கி இறுதிவரைக்கும் பார்த்துக் கொண்டேயிருந்தனர். பேச்சு வழக்குத் தமிழின் கொச்சை மொழியும், சில தவிர்க்கப்பட வேண்டிய மரபு தவறிய வார்த்தைகளையும் சேர்த்திருந்தமை கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது. பார்வைக்காக நேரஞ்செல்லச் செல்ல மாணவர்களும் வந்திருந்தார்கள், ஆகையால்.

தவிர நாடகத்தின் முக்கிய பாத்திரங்களாக அ. சாந்தகுமார், சோ. கிருஷாந்தன், தாஸன் சேம் போல், தினேஷ் குமார, ரனகிந்த் சுமித், இரா. லோகானந்தன், மற்றும் தி. சிவநேசன் ஆகியோர் நடித்திருந்தனர். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய "எடுபிடி"ப் பாத்திரம் சகோதர மொழியைச் சேர்ந்த சுமித் தினால் தெளிவான தமிழ் வசனநடையுடன் , வியக்கும் படிக்காய் இருந்தது.

நாடகம் முழுவதும், ஹர்ஷ விக்ரமதுங்க, சிநேத் தேவிந்தி, தினேஷ் குமார, இரா. லோகானந்தன்   மற்றும் இசுரு தயானந்த ஆகியோர் இசைவடிவம் தந்திருந்தனர். குறிப்பாக தாளவார்த்தியத்தினது மெட்டுக்கள் மாடுகளின் லாவணிய நர்த்தனத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய கட்டங்களில் ஓசையாகின பெரும்பாலான குரல்கள் சகோதரமொழிக்குரியவை, திருத்தமான் உச்சரிப்புடனே இனிமையாகவும் இருந்தது, ரொனிக்கா ஷாமலி, மஞ்சுல ரணசிங்க, செல்வராஜ் லீலாவதி, சுனேத் சாந்த பிரியந்த, நிஷாந்த குலரத்ன , பாலித அபேலால், தினேஷ் லிவேரா, அரோஷா தரங்கனி, மலிதி குமாரி, ஷாந்தனி மல்காந்தி, அகேல சதுரங்க, இரா. சத்தியப்பிரபா, இனோக்கா இலங்காபுர, அமிலேஷ் தினேஷ், புத்திக்க, மற்றும் சுரேஷ் அசங்க ஆகியோரே பங்கு பற்றிய பின்னணிப் பாடகர்கள் .

மேலும் அரங்கதுடனான ஒன்றிப்போன ஒளியமைப்பு,மற்றும் மேடையமைப்பினை இனோக்கா இலங்காபுர அமைத்திருந்தார். பாத்திரங்களின் ஆடையமைப்பாகட்டும், அரிதரமாகட்டும் பாத்திரங்களின் யதார்த்தத்தை உணர்சிகள் இல்லாமலேயே காட்டிக் கொள்ளக் கூடியதை இருந்தது.

    
Mr.Parakrama Niriyella
      

நாடகத்தைப் பார்த்து விட்டு வந்ததும் ஒரு வித நீண்ட கால பெருமூச்சொன்று வெளியாகிப் போன இலகுத்தன்மை தெரிந்தது, நண்பரொருவர் கேட்டார், நாடகத்தின் ஒவ்வொரு குறியீடுகளும் சொன்னதை நீங்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டீர்களேன்று, குறியீடுகளின் விளக்கங்கள் தான் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் முறன்பட்டிருந்தனவே தவிர பொருளல்ல.

இந்தமாதிரியான நாடகங்களை ஒரு தடவை மட்டுந்தான் பார்க்ககே கிடைக்கிறது , சினமாப்படம் போல விளக்கம் தேவையான போதெல்லாம் காட்சிக்குள் நாடகங்களைக் கொண்டு வர இயலாமை கூட முற்போக்கு நாடகங்களின் கருத்தாழம் மக்களைச் சென்றடையமைக்கொரு காரணமாயிருக்கிறது.
               
நாடகத்தில் குறிக்கப்பட்ட, 'நிலவுரிமை' என்பது, பொருளாதாரம் என்றும் ,அது சாதாரண பொதுமக்களிடம் காணப்படுவதாயும் , ' சின்னா' - சாதாரண குடிமக்களின் தோற்றமாயும் பொருளாதரமானது காலனிய முதலாளிகளினால் பறிக்கப் படுகிறதாயும்

 'செக்கு'- காலனிய முதலாளித்துவத்தின் சுரண்டலின் பெரும் பொருளாதார வடிவமாயும் சித்தரிக்கப் பட்டிருந்தது. (அது கால மாற்றத்திற்கு ஏற்ப வித விதமான மாற்றங்களுடன் மக்களின் உழைப்பை சுரண்ட பயன்பட்டது)
மாடுகள் (சகடை, செவிலி) , இலாபத்தை கூட்டும் வெளி நாட்டு முதலாளிகளின் பூர்ஷ்வா திட்டங்களாயும் முறையே எமது உள்ளூர் அடிமட்டத் தொழிலாளிகளின் உழைப்பாகவும் வருவது குழப்பம்.

நாடகம் தமிழ்ப்படுத்தப் பட்ட பின்னும், துரை, எடுபிடி ஆகியோரின் வாகனத்திலுள்ள 'ஸ்ரீ' எழுத்துக்கள் சிங்களத்திலேயே இருந்தமை, எழுபதுகளின் தீவிர நிலைமையை அப்பட்டமாகக் காட்டும் போது, அரசியலின் ஆதிக்கம் தானோ முழு நாடகமும் என்றும் எண்ணத் தோணுகிறது.

இறுதியில் செக்கின் தலையைக் காக்கப் பயன்படுத்தும் கவசம் கதை சொல்லியைச் செக்காகப் பாவித்து தலையில் சூட்டப் படுகிறது, அந்தக் கவசம் கூட காலனியத்தின் பின் முதிர்ந்த உலகமையமாதலில் அடக்கப் பட்ட நாடுகளின் அடிமட்டத்தைக் காட்டுகிறது. கடைசியில் காலப் போக்கின் புதிய காலனியம், எல்லாவற்றையும் அப்படியே மாற்றுகிறது. செக்கின் இடத்தை வேறேதோ சுரண்டல்

சாதனம் எடுத்துக் கொள்கிறது. மக்கள் அதன் விசித்திர மாயைக்குட்பட்டு தங்கள் மன சாட்சியை கொன்று வாழப் பழகுகிறார்கள். சின்னாவும் மாறுகிறான்.

தேர்தல் வைத்து மாட்டினைத் தெரிவு செய்வதும் , மாடுகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும், அரசியலின் கட்சி மோதல்களை ஞாபகப் படுத்தியது. மாடுகளின் பச்சை, நீலக் கொம்புகள் அதைப் பறை சாற்றின, கதை சொல்லியினது சிவப்பு நிற ஆடையும் குடியானவனின் தோற்றமால்லாத, தலைக்கட்டும் புரட்சிகரமான கம்யூனிசத்தை கொண்டு சேர்த்தது.

இந்த மாதிரியான மக்களின் பொது அறிவுக்கு எட்டாத பலவற்றை ஒருங்கே சேர்த்துக் குழப்ப நிலையை உண்டு பண்ணியிருந்தாலும், உரையாடல்களின் தெளிவு கதையாழத்திப் புரிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது.

இறுதியில் நவ யுகத்தின் உலகமயமாதலின் போததன் காட்சிகளிலே, நாகரீகத்தின் உச்சபட்சக் காட்சிகளைக் கூறி அவ்வளவு நேரமும் பேசப்பட்ட மக்களப்ப்ரச்சினையை பார்வையாளனை மறந்துவிடச் செய்திருந்தமை கூட ஒரு யுக்தியோ என்று தோணுகிறது, ஏனென்றால் பேசப்பட்டது மறைபொருள் அரசியல்.

இந்த மாதிரியான உத்வேகமான, நாடகத்தை தமிழ் பேசும் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் பொதுஅரங்கில் போடப்பட முடியாமை ஒரு வருத்தமாக இருந்த போதிலும், சகோதர மொழித் தயாரிப்பாளர்களால் எமக்கு மாற்றமின்றித் தந்ததை பெருமையாகக் கொள்ளவேண்டும்.

பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் நீண்ட நாட்களின் பின் கருத்துச் செறிவு மிக்க நாடகமொன்றைப் பார்க்கக் கிடைத்த மகிழ்ச்சி, அதுவும் இலவசம் எம்மை வாரி அழைத்திருந்தது. எனவே இலவசம் தந்த சொகுசில் நாடகத்தின் புரிதல் தன்மையுடன் அதிகம் முரண்படக் கூடாது, அரங்காடலின் மொத்த வடிவமும் நகைச்சுவையும் சிந்திக்கத் தக்கதுமான மேற்கோள் வடிவமாயே இருந்தது.

அரங்கம் முடிவுற்ற பொழுதுகளில், கலைஞர்களின் அறிமுகமும், அதைத்தொடர்ந்து நன்றியுரையும் தயாரிப்பாளர் திரு. பராக்கிரம நிரிஎல்ல அவர்களால் சிங்களத்திலும், தமிழிலும் வழங்கப்பட்டது.




மக்கள் களரி எனும் அமைப்பினது 'ஜனகரளிய' செயத்திட்டத்தினது முழு முயற்சியே இந்த வெளியீடு. மக்கள் களரி அங்கத்தினரின் பதட்டமில்லாத கைதேர்ந்த நடிப்பாற்றலும், தெளிவும் கூட , பார்த்துக் கொண்டிருப்பதற்கு ரம்மியமாகத்தான் இருந்தது. நாடெங்கிலும் இவ்வகையான நாடகங்களை அவர்கள் தொடர்ந்தும் பலவருடங்களாக அரங்கேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது, அதிலும் அனைத்து அங்கத்தவர்களும் துடிப்புள்ள இளைஞர் யுவதிகள்.

இந்த அரங்கேற்றத்தை தொடர்ந்து இவ்வாறான நாடகங்களை பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் மக்களின் முன் வருகை நாடகத்தின் வெற்றியைக் குறிக்கின்றது. மறை பொருளை விளங்கிக் கொண்டால்த்தான் முழு நாடகமும் விளங்கும் என்ற நிலை இல்லைஎன்பதும் அதன் வெற்றியைக் குறிக்கிறது.

மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகான தமிழ் நாடகம், பார்த்ததைப் பற்றிக் கதைப்பதற்கான களமாயிருந்தது.


நிலா -

Comments

  1. உங்கள் பதிவுகளை தனித்து ஒரே போக்கிலேயே கொண்டு செல்கிறீர்கள். நீங்கள் நிச்சயம் உயர்தரத்தில் கலைத்துறையில் படித்திருக்கிறீர்கள் என்பது உங்கள் பதிவுகளில் தெரிகின்றது.

    வித்த்யாசமாக முயற்சியுங்கள் உங்களுக்கு நல்லது

    ReplyDelete
  2. நல்ல தொரு பகிர்வு... வேறை பதிவுகள் எப்ப வரும்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...