Skip to main content

நீலவானத்தின் தொன்நூற்றோராவது பிரிப்பின் நிழல் ...



வானத்தின் வசந்தத்தை யாரோ விடுத்துச் சென்ற படகில்,
மகாவலி ஓடிக் கொண்டிருந்தது.
அதன் மருங்கில் கிளைத்த மரங்களை வீடு கட்டிக் கொண்டிருக்கும்
குச்சு வீடுகளை வாழ்தலின் உச்ச இடமாக
நான் கனவுகண்டுகொண்டிருந்தேன்.

வாரி இறைக்கும் மணல் டக்ற்றறொன்றில்
பணி புரிபவளாக இருக்க விரும்பினேன்.
நதியின் புல் முளைத்த திட்டுக்களில்
கங்கூன் அரியும் பெண்ணாக இருக்க என்னை மிகவும் நேசித்தேன்

ஒரு கோடை காலத்தில் காய்ந்து கிடந்த மகாவலியின்
சொறிச் சிரங்கை கைகளால் பிளந்து விட்டுக் கொண்டே
கற்கள் கடைந்து இரத்தினக்கல் பொறுக்கிக் கொள்ளவும்,
பொழிதல் ஓய்ந்த ஆற்றுப்படுக்கையில்
'சாயிலா' போல நீந்திக் கொண்டு போகவும் ஆசைப்பட்டேன்

ஒ..சாயிலா...
எனக்கு நீச்சல் சொல்லித் தந்தவள்...
அவளுக்கு நீண்ட கூந்தல்...
மகாவலியின் நீளத்தில் பாதி இருப்பதாக பீற்றிக் கொண்டாள் !
கூந்தலின் தேவை பற்றி அறிந்திராத எனக்கு, 
ஒரு பெடியனைப் போல இருப்பது சவுகரியமாகவிருந்தது,
இருப்பினும் சாயிலா நீண்ட கூந்தலுடைய ஒரு முசுலீம் பெண் !

சாயிலா... நீச்சல்க் காரி
சாயிலா போல் நீந்துவது கடினம் !
சாயிலா போல் நீந்துவதற்கு யாராலும் முடியாது ...
சாயிலா நீந்துவதற்கு தயாராகும் முன்பே 
மகாவலி புதிது விட ஆரம்பிக்கும்.
சாயிலா ஒரு நீச்சல்க் காரி !

நான்,
சாயிலாவிடம் கெஞ்சுவேன்...
நீச்சல் சொல்லித் தா வென ! பதிலாக,
நான் அவளுக்கு கணக்குப் போடச் சொல்லிக் கொடுத்தேன்.
சாயிலா கணக்கில் ஒரு போதும் தேறவில்லை,
இருப்பினும் என்னை விட பல மடங்கு
வேகமாக மகாவலியைக் கிழித்துக் கொண்டு நீந்தினாள்.
அவள் தண்ணீரின் குமரி என்றாள்.
மகாவலியின் புத்திரி என்றாள்
நீண்ட மூங்கில் கழிக்குள் இருந்து 
ஒரு நாள் அல்லா தன்னைப் படைத்தான் என்றாள்.

இன்னொரு நாள் 
தன் முக்காட்டை மகாவலியில் நீருக்கு எதிராய் வீசி எறிந்தாள்...
அதன் அடுத்தடுத்த நாட்களில் சாயிலா நீந்த வரவேயில்லை....

நான் கணக்குக் கொப்பியுடன் 
அவள் வீட்டைச் சுட்டிச் சுற்றி அலைந்தேன்....
காலடியில் காய்ந்த சருகுகள் நனையும் படிக்கு 
அழுதுகொண்டே வீடு திரும்புதலாய் ஆனேன்.....

சாயிலா வரவே இல்லை....
நான் மூன்றாம் நாளும் கணக்குக் கொப்பியுடன்
அவள் குச்சு வீட்டை நோக்கி
என் வீட்டில்
சொல்லாமல்க் கொள்ளாமல் போய் நின்றுகொண்டிருந்தேன்
பதில் சொல்ல,
சமீர் தம்பியோ, சாலிக் நானாவோ அங்கு வரவேயில்லை....

என் காலின் கீழ் இலையுதிர்ந்த மரத்தின் சருகுகள்
காய்ந்த வண்ணமிருந்தன.
சாயிலா வரவே இல்லை......
நதிக்கரையின் வானம் கறுத்து விரியத் தொடங்கியது...
அன்றும் சாயிலா மகாவலியில் நீந்த வரவேயில்லை........


சடசடத்து ஓங்கி வளர்ந்திருக்கும்
இருமருங்கினது மூங்கில் மரங்களும்,
ஒசை செய்து அடங்குவதாய் உணர்ந்தேன்
வானத்தின் நிறம் மக்கிய இருளின் நிறம்,
மகாவலியில் நிழல் படிவதாய் உணர்ந்தேன்......

அன்றைக்குத் தான்  எனது கொடுப்புப் பல்லில் கொதி  வந்து
நந்தினி டொக்டரிடம் 
அம்மா கூட்டிக் கொண்டு போனாதாய் நினைவு!
எனது மூன்றாவது சூத்தைப் பல் பிடுங்கப் பட்ட அன்றிரவே,
மகாவலி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.....

குச்சு வீடுகளும் , மூங்கில்க் கழிப் படகுகளும்
துவம்சமாகி மிதந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள்....

நதியில் அலை விழுவதைப் பார்க்க
அப்பா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை அதனால்,
மகாவலி எங்கள் எல்லோர் காதுகளுக்கும் கேட்க
அன்றைக்கு இரைந்து கொண்டு ஓடியது என்று நினைத்தேன்...

சாயிலா கணக்குச் டீச்சரிடம்
அடிவாங்குவதாய்க்  கனவு கண்டு கொண்டு நான் எழுந்த போது,
அவள், மகியாவை ஊத்தைக் கான் வழியாக
மகாவலியில் ஒதுங்கியதாகச் சொன்னார்கள்.
பொதிகள் கொண்டு வந்த வெள்ளைக் கொக்குகள் 
அவளை மீனென்று தின்னத் தொடங்கினவாம்.
மகாவலி கனத்த நதியாம்..... 

அவளுக்கு வீட்டில் கஷ்டம் என்றார்கள்,
அவளுக்கு தாய் வாய்க்கவில்லை சித்தி  என்றார்கள்,
அவள் வரர்ந்த பெண் பிள்ளை என்றார்கள்,
அவள் போக்கு சரியில்லை என்றார்கள்,
அவள் முக்காடு போடுவதில்லை என்று,
யாரோ தள்ளிவிட்டதாகச் சொன்னார்கள்........

எனக்கு எட்டு வயதும் அவளுக்குப் பதினைந்து வயதும் என்பதால்
இது எதுபற்றியும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

அம்மா,அந்த மாதிரியாக்களிண்ட 
செத்த வீட்டுக்குப் போகக் கூடாது எண்டா.......

சாயிலா ....
நான் உன்னை மறப்பதற்கில்லை
மகாவலியில் நீ மிதந்து வந்துகொண்டிருந்த போது
நான்,
கட்டுகஸ்தோட்டைப் பாலத்துக்கு மேலாக
பேரூர்ந்தொன்றில் போய்க் கொண்டிருந்தேன்......
எனது சூத்தைப் பாற் பல்லில் ஒன்றைப் பிடுங்குவதட்காக!


மகாவலி கங்கைக்குக் குறுக்காக கட்டப்பட்ட  பாலத்தில்
தொங்கிக் கொண்டிருக்கும் கருப்பு ராடார் கம்பிகளில்
யாரையாவது கட்டி வைத்திருக்கிறார்களா 
என்று பார்ப்பதற்காய் நான்,
பேரூர்ந்தில் இருந்து தலையைக் கவிழ்த்து ,
அந்தம் வரை பார்த்தேன் ...
நீ தெரியவில்லை
இருப்பினும் இன்று வரை
மகாவலிக்குள் யாரோ தொங்கிக் கொண்டிருந்து
என்னைக் கை நீட்டிக் கூப்பிடுவதாய் எப்போதும் உணர்கிறேன்!

அடுத்து அது விழுத்தும் பிணத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன்,
நீ போன பின் நதிக்கரை என்னோடு உரையாடுவதை நிறுத்திக் கொண்டது.

சாயிலா
நான் என்றும் உன்னை மறப்பதற்கில்லை ........

2004   மார்கழி 
நிலா -



சந்தர்ப்பம் கூறல் :)

சாயிலா, கண்டியில்  நாங்கள் வசித்த போது என்னுடைய சிறு பள்ளிக் கூடத்தில் படித்த சக தோழி, எனக்கு எட்டு வயதும் அவளுக்குப் பதினைந்து வயதுமாக இருக்கும் போது
நாங்கள் இருவரும் நாலாம் வகுப்பில் சேர்ந்து படித்தோம்.வீட்டிற்கு அருகே உள்ள பள்ளிக் கூடத்தில் தான் நான் படித்தே ஆகவேண்டும் என்ற சூழலினால் அந்த மாதிரியான
ஒரு பள்ளிக் கூடத்தில் நான் கிட்டத்தட்ட  எட்டு மாதங்கள் படித்திருப்பேன். அந்தப் பள்ளிக் கூடம் தந்த அனுபவங்களும் தினுசு தினுசான குழந்தை  நண்பர்களும் இன்னும் என்னுடைய நடத்தைக் கோலத்தின் பாதிப்பில் இருந்து கொண்டே இருக்கிறார்கள், வாழ்க்கையில் மிக  மறக்க முடியாத பள்ளிக் கூடம், நான் அப்போதெல்லாம் மிக வெறுத்த பள்ளிக் கூடமும், இப்போது அந்தச் சூழலை ஆராதிக்க ஆயத்தமாயிருக்கிறதுமான ஒரே இடம் அது.

அங்கு படித்த அந்தக் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு நிறைய உள, உடல், சமூகப் பிரச்சினைகள் இருந்தன. அது ஒரு இசுலாமிய அரசாங்கப்  பள்ளிக் கூடம். அந்தப் பள்ளிக் கூடம் இன்னும் இயங்குகிறதா என்று தெரியவில்லை,உலகத்தில் படிப்பே சொல்லிக் கொடுக்காத ஒரே ஒரு பள்ளிக் கூடம் அதுவாகத் தான் இருக்கும் என்று இன்று வரைக்கும் நான் நம்புகிறேன். அங்கு குழந்தைகள் இயல்பாய் இருந்தார்கள், மாங்காய்  அடித்துத் தின்பதும், பேரக்காய்  ( கொய்யாப்பழம் ) ஆய்ந்து தின்பதும் அவர்களின் வேலை.ஊத்தைக் கதைகள், கெட்ட வார்த்தைகள் , பெரிய கதைகள் என்கிற எல்லாம்  கதைத்தார்கள். அரசாங்க சம்பளம் வாங்கிக் கொண்டு பத்துப்பன்னிரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள். குழந்தைகளை கல்விப்படுத்துவதைப் பற்றி அவர்கள் கனவிலும் நினைத்துக் கொள்வதில்லை. அங்கு புருஷனும் பெஞ்சாதியுமாக இருவருமே அதிபராக, பிரதி அதிபராக மாறி மாறி  இருந்தார்கள்.

அங்கு தான் நான் 'தூஸ்' வாசிக்கக் கற்றுக் கொண்டேன். சலவாத் ஓதக் கற்றுக் கொண்டேன், அந்தப் பள்ளிக் கூடத்தில் எனக்குப் பிடித்த ஒரே ஒரு சமாச்சாரம், அந்த அதிபரும், பிரதி அதிபரும் நல்ல திறமையான ஓவியர்கள். (திரு, திருமதி மர்சுகீன் ) ஆகையினால், அந்தப் பள்ளிக் கூடத்தில் வரைதல் பாடத்துக்கு மட்டும் அதிகம் கவனம் செலுத்தினார்கள். எனக்குக் கொஞ்சம் படம் கீற நல்லா வந்தாப் போல நான் அவர்கள் இருவரின் ஆஸ்தான சிஷ்யை ஆகீட்டன். வேலை மினக்கெட்ட அம்பட்டன் பூனையைப் புடிச்சு சிரைச்ச மாதிரி என்னைப் பிடிச்சு வைச்சு, ' வரைஞ்சு பளவுரெய்  நல்லேய் தானே ? பழவுங்கே மவள் ...பழவுங்கே...எண்டு  அன்பு அன்பாய் உபசரிப்பாங்கள்.
'மவள் வரெய்ரேய்க்கு  தாள் இரிக்கா ? ஒசக்க ஒரு கலர், பணிய ஒரு கலர் ,ரெண்டுத்தையும் சேத்தி அழுத்தி தேயிங்கே ...அங்கன ஒரு கொலாஜ் மாறி வரும்.....அதில லாம்பெண்ணைய  பூசி  காய வெச்சீ எடுத்தா அய்  ஒரு பெஸ்ட் சாமானம். பொல் தெல் கொஞ்சம் பூசி அத ஒரு ஜாதியா மெலுவு ஸ்த்திரீல புடிச்சா வரெஞ்ச போனிக்கா மெழுவாட்டம் வரும்... எவ்வளவு டிப்ஸ் தந்தார்கள்... இன்றைக்கு வரைக்கும் எனக்கு உபயோகப்படுகிற மாதிரி....

ஆனால் நான் யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து கண்டிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடமே ஆகியிருந்தது. கண்டியில் நான் ஒரு ஆங்கில இலக்கணப் பறங்கிப்  பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன், தமிழ்க் கல்வியின் அவசியம் பற்றி திடீரென்று எனது தகப்பனாருக்குக் கிடைத்த ஞானோதயம் காரணமாக நான் தற்காலிகமாக அத்தகையதொரு பள்ளிக் கூடத்தில் படிக்க நேர்ந்தது. அன்றைய கால கட்டம் தான் சர்வதேசப் பாடசாலைகள் நம்மவருக்கிடையே பிரபலமாகத் தொடங்கிய காலம் என்று நினைக்கிறேன், நான் தமிழ் மொழியில் கல்வி ஊட்டப்பட வேண்டுமேன்பதற்கு எனது பெற்றோர்களுக்குள் மறைமுகமாக இருந்த புலைமைப் பாரிசில் பரீட்சைக்கு என்னைத் தோற்றி வைத்துவிட வேண்டுமென்ற அவாவுமே மிகப் பெரும் காரணமாம் ( தமிழற்ற புத்தி ! ) , இவை எல்லாம் இவ்வாறு இருந்த காரணத்தினால்  நான் மிகுந்த மேட்டுக் குடி மனப்பாங்குடன் அந்தப் பள்ளிக் கூடத்தில் வலம் வரத் தொடங்கியிருந்தேன்.
அந்தப் பள்ளிக் கூடத்தில் நான் ஒரு சிறு ராணியைப் போல நடந்துகொண்டிருந்ததை நினைக்க இப்போதும் மிகக் கேவலமாக உணர்கிறேன்.

உண்மையில் அதிகார வர்க்கம் படைத்த மேட்டுக் குடிக் குழந்தையாகவே மிகுந்த கர்வத்துடன் நான் நடந்துகொண்டிருந்திருக்கிறேன். பெரும்பாலான குழந்தைகளுடன் நான் கதைக்கக் கூடாதென்று அம்மா சொல்லி பள்ளிக் கூடம் அனுப்புவார். நானொரு ராசாத்தி மகளைப் போல செந்நிறக் கம்பளி சுவெட்டர் ஒன்றை ( கண்டியில் குளிர் அதிகம் ) அணிந்து கொண்டு ( அந்தக் குழந்தைகள் அவ்வாறு அணிந்து நான் பள்ளிக் கூடத்தில் பார்த்தே இல்லை ) டாம்பீகத்துடன் எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியாத குழந்தைகளுக்கு முன்னால் தொணி தெறிக்க வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தேன்.

நான் இயல்பாக கர்வமானவளாக வளர்க்கப்படவில்லை எனினும் அந்த சூழல் என்னைக் கர்வமாக்கியதாக யூகிக்கிறேன். என்னை எல்லா ஆசிரியர்களும் கொண்டாடினார்கள், ஆங்கிலத்தில் பாட்டுப் பாடச் சொல்லி மற்றக் குழந்தைகளை ரசிக்கக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கர்வத்தின் எல்லைகள் அப்போதெல்லாம் கரையத் தொடங்கிக் கொண்டிருந்தது. குழந்தைகளை நான் உணரத் தொடங்கிக் கொண்டிருந்தேன், குழந்தைகளை ,அவர்களின் சுதந்திரத்தை ஆக்கிரமிக்காத செயல்களை நான் ஒரு போதும் செய்யப் பூணுவதில்லை என்ற திட சங்கற்பத்தை நான் குழந்தையாக இருந்த போதே எடுத்துக் கொள்ளத் தொடங்கினேன். அந்தக் குழந்தைகளுடன் நான் சகஜமாகப் பழகினேன்.அவர்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பதும் ,கணக்குப் போடக் கற்றுத் தருவதும் என்னளவில் என்னைக் கம்பீரப் படுத்திக் கொண்டே இருந்தது, அதன் காரணம் அவர்கள் என்னை விட வயதில் பெரியவர்கள் என்ற காரணாமாய் இருக்கலாம் . superiority complex எனும் சமாசாரத்தின் ஒரு வித நெருடல் அங்கு எனக்கு உதித்திருக்க வேண்டும்.
இருப்பினும் அவற்றை மறைக்க நான் பாடு பட்டதை இன்னும் உணர்கின்றேன். இப்போத்ததன் கேவலமான உணர்ச்சிகளை நான் ஈனமாகப் பார்க்கிறேன் !

எவ்வாறாக இருப்பினும், வெளிநாட்டிலிருந்து அதிக சம்பளம் வாங்கும் ஒரு என் .ஜி. ஒ தொழிலாளியைப் போல என்னால் அக் குழந்தைகளின் பிரச்சினைகள் என்ன , குறைபாடுகள் என்ன, கஷ்டங்கள் என்ன என்பதை கேட்டறிந்து, ஒரு உயரதிகாரியின் தோரணையுடன் நடந்து கொள்ள நான் முயற்சித்த கேவலமான நினைவுகளே உள்ளன.
என்னுடைய எட்டாவது வயதில் நான் அவற்றை , உணவுப் பொருட்கள், அரிசி, பருப்பு, பிஸ்கட் பொட்டலங்கள், வாழைப்பழம் ,என்னுடைய சட்டைகள் போன்றவற்றை வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்துக்குக் கடத்துவதற்காக உபயோகிக்கத் தொடங்கினேன். பென்சில்கள், அழி இறப்பார்கள் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது
என்னிடம் ஒட்டாத நண்பர்கள், பிஸ்கட் பொட்டலங்கள், சட்டைகள் போன்றவற்றிட்கு நெருங்கி வருகிறதை என்னுடைய அறிக்கைகள் மூலம் உணரத் தொடங்கினேன்.
ஒரு கட்டத்தில் எனது அலுமாரியில் இருந்த முக்கால்வாசி உடைகள் காணாமல்ப் போகத் தொடங்கியதை அடுத்து நான் வீட்டில் அண்ணாவின் கிரிக்கட் மட்டையால் அப்பாவால் தண்டிக்கப்பட்டேன். தொடர்ந்தும் பத்துக் கிலோ அரிசி மூட்டை நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே வருவதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதற்கெல்லாம் மூல காரணமாய் அந்த மாணவர்கள் மிக வறியவர்களாக இருந்தார்கள்.  சாதியால் , வர்க்கத்தால் மிக ஒடுக்கப் பட்ட பிரதேசத்தில் இருந்து ,கண்டி நகரின் பொதுமயானப் பிரதேசத்தில் ( மகியாவ ) இருந்து வருகிறவர்களாக  இருந்தார்கள். கலப்புத் திருமணங்கள், முறையற்ற குடும்ப அமைப்புக்கள், தனிப்பெற்றோர்கள், வீட்டுவேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் குழந்தைகள், இன்னும் கல்வி முறையான வயதில் வழங்கப்படாமையினால் வயது கூடிய சிறிய வகுப்பு மாணவர்கள், இன்னும் இச் சூழல் காரணிகளால் உளப் பாதுகாப்பை உணராத குழந்தைகள் என்று அதிகம் பேர் இருந்தார்கள்.

நாளுக்கு நாள் இவ்வாறான தான தருமங்களால் நான் பள்ளிக் கூடத்தில் பேசப்பட்டுக் கொண்டிருந்தேன். வீட்டில் இருந்து பொருட்களை பள்ளிக் கூடத்தில் விநியோக்கிக்கிற என்னுடைய சேவை மனப்பாங்கு ( ? நல்லா வாயில வருது!!!  ) நாளுக்கு நாள் கூடிக் கொண்டே  போக, என்னைச் சுற்றி விதம் விதமான நண்பர்கள் சேரத் தொடங்கினார்கள்.
கிட்டத்தட்ட இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க வஜீர் எனக்கு நெருங்கிய தோழனானான் ( அப்ப எனக்கு எட்டு வயசு நம்புங்கப்பா ;) )  ஒரு குழந்தையைப் போன்ற மனநிலையுடைய வஜீருக்கு அ, ஆ வன்னா சொல்லிக் கொடுக்கிறதும், கொப்பியில் கலரடிக்கச் சொல்லிக் கொடுக்கிறதும் எனக்கு  பிடித்தமான விளையாட்டுக்களில் ஒன்று.
( இது எதோ ஐ'ஆம் சாம் படத்தைச் சுட்ட தெய்வத் திருமகள் படத்தைச் சுட்டுக் கதையடிக்கிற மாரிக்  கிடக்கு எண்டு நினைச்சிங்கள் எண்டா  ஐ'ஆம் பாவம். இந்த வரலாற்றுப் பதிவு 2009 ஆம்  ஆண்டு எழுதப்பட்டது, இதைப் பதிவேற்றேக்க இந்த விஷயத்தை மட்டும் இன்குலூட் பண்ணி எடிட் பன்னினன் ,தட்ஸ் ஒல் ) 

வஜீரைப் பற்றிச் சொல்லாமல் அந்தப் பள்ளிக் கூட நினைவுகள் ஒருக்காலும் மீளாது. அவனைத் தவிர அந்த வகுப்பில ஒன்பது பேர் படிச்சாங்கள், இப்ப வரைக்கும் அதில ஒருத்தரைப் பற்றியும் எதுவுமே தெரியாது. வஜீர் என்னுடன் பல சமயம் மிக அருகிலே இருந்த எங்களது பழைய மாத்தளை வீதி வீட்டிடுகு வந்து சோறு சாப்பிடுவான்.

வீட்டில் எல்லோரும் என்னுடைய நடப்பைப் பாராட்டி நக்கலடிச்சுச் சிரிப்பினம். அப்ப அம்மா சொன்ன ஒரே ஒரு உண்மை தான்...இப்ப வரைக்கும்...சரியாக் கிடக்கு.
உனக்கு உண்ட வயசுப் பெடியள் ஒருத்தரும் ஒருநாளும் பிரன்ஸ்சாகமாட்டாங்கள் எண்டா....சத்தியமா அதெண்டாச் சரிதான்
( கவலைப் படுறனா எண்டு கேக்கிறிங்களே ? ச்சே ! ஒருக்காலும் இல்லை ;) )  
நான் நினைக்கிற மட்டில  நாலாமாண்டு படிக்கேக்க அந்த வஜீர் தான் என்னுடைய முதல் நண்பனாக இருக்க வேணும். ( ஆரோ ஒராளுக்கு நீங்க தான் என்ற முதல் ஆண் நண்பன் எண்டு சொன்னதெல்லாம் ஞாபகம் வருகுது , சாரி பாஸ்  கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டன் :P ) ஆனா அவனையும் வஜீர் அண்ணா... வஜீர் அண்ணா... எண்டு கூப்பிட்டதாத் தான் ஞாபகம் ( என்ன கொடுமை சரவணா இது ? )

இப்பிடி  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நான் வளர்ந்து கொண்டிருந்தபோது, அண்டைக்கு  ' கொண்டாடினான் ஓடியற் கூழ்' எண்டொரு பாடம் கல்லடி வேலுப்பிள்ளையைப் பற்றினது, அதை வாசிச்சுக் காட்டியிருந்தேன். யாழ்ப்பாணத்தில தான் ஓடியற்  கூழ் கிடைக்கும் எண்டு இன்னொரு மேட்டுக்குடி விஷயத்தை பள்ளிக் கூட  டீச்சர் கிளப்பி விட்டுட்டா....

இது இப்பிடி இருக்க, சாயிலா எதிர்பாராத ஒரு நாள் என்னிடம் வந்து கூட்டாஞ்சோறு மாதிரியா கூழ் இருக்கும் என்று கேட்டாள்.நான் சொல்லத் தெரியேல்ல , அம்மாட்ட கேட்டுச் சொல்லுறன் என்டன். தனக்கு கூழ் குடிக்க ஆசையாக இருக்கிறதாகச் சொல்லிக் கொண்டு அன்றைக்கு எங்கள் வீட்டிற்கு சோறு சாப்பிட வந்தாள்....

அன்றைக்குப் பிறகு சாயிலாவை நான் எங்கு தேடியும் காணவில்லை. பதினைந்து பிராயத்து ,துடிப்பான சிறுமி. அவள் பேய்க்கதைகளை எனக்காக புதுப்பித்துப் புதுப்பித்து சொல்லுகிற அழகே தனி தான்.

    'காம்பராக்குள்ளே ஹோல்மன்  இரிந்திச்சி..அய் பஸிந்து குட்டியோட ரெத்தம் குடிச்சி ...அவள புளுத்தாட்டிடிச்சி.....அய் ..குட்டியோட மையத்தூட்டுக்கு ,வாப்பா என்னைய பெய்த்திர வாணம் சென்னார். உம்மாண்டே....! ஜாய் கத  வா அதி !

அவளுடைய ரசனை மொழிக்கேற்ப கதை சொல்லுவாள். அபிநயம் பிடித்து நடித்துக் காட்டுவாள். சினமாப் படமே பாத்திராத எனக்கு எம் .ஜி ஆர் படம் பார்க்கிறதைப் போல விறுவிருப்பாகவிருக்கும்.
சாயிலா அதன் பிறகு வரவே இல்லை. சிறுமியை யாரோ ஆற்றில் தள்ளிவிட்டதாகச் சொன்னார்கள். என்னென்னமோ கதை சொன்னார்கள். நான் அவளின் இறப்பிற்குப் போகவில்லை. அவளின் பேய்க்கதைகளில் வந்த பெயோன்றே அவளைப் பிடித்து விழுங்கியதாகவும், ஆற்றில் தள்ளியதாகவும் பல குழந்தைகள் நம்பினார்கள்.

என்னைப் பாதித்த மூன்றாவது மரணம். மிக மிகப் பாதித்த மரணம், சாயிலாவை ஒரு தோழியிலும் மேலாக, அந்த வயதில் தோழமைக்கு என்ன விதிமுறைகள் என்றெல்லாம் தெரியாது, என்னை ஆக்கிரமித்த ஒரு சக மனுஷியாக நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அவள் என்னை விட்டு விலகிப்  போய் விட்டாள். அவளின் இறப்பிற்குப் பின் நான் வளரத் தொடங்கினேன்.


என்னைப் பாதித்த மரணத்தைப் பற்றி கவிதையோ, அல்லது குறிப்போ எழுதிவிடும் வயதில் நான் இல்லாவிட்டாலும், எனது எல்லாச் செயல்களிலும் அம் மரணத்தின்  பாதிப்பு இனம் புரியாமல் இருந்துகொண்டே இருந்தது. அதற்குப் பிறகு எனது பள்ளிக் கூடத்தை அவசர அவசரமாக விபரீதம் புரிந்து மாற்றினார்கள். நான் படித்த ஆறாவது பள்ளிக் கூடம் அது என்று நினைக்கிறேன்.

2004  ஆம் ஆண்டு நான் கொஞ்சம் வளந்தவளாகிவிட்ட பின் எழுதிய கவிதை இது, இது எவ்வகையிலும் கைம்மாறறியாத அவ்வுயிரைப் பிரதிபலிப்பதாகவோ, விலைமதிப்பற்ற அச் சிறுமியின்  வாழ்க்கையை மீட்டிப் பார்ப்பதாகவோ இருக்காது என்ற நம்பிக்கை மட்டும் எனக்குண்டு. சாயிலாவுக்காக ,கண்டி- கொழும்பு இரயில்ப்பயணத்தில் 2009 இல் எழுதியது.

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...