Skip to main content

என் நாளினது சுமை



னிதனின் நிலைப்பாடு என்பது எந்தப் புள்ளியில் தங்கியிருக்கிறது என்பதற்கான கேள்வியுடன் ஆரம்பிக்கிறேன்.

சாதாரணமாக ஆசனத்தில் அமர்ந்து இருப்பீர்கள். அது அவ்வளவு சௌகரியப்படாத போது , காலைக் கொஞ்சம் மடக்கி, பிறகு காலுக்கு மேல் கால் போட்டு இன்னும் பிறகு புழு நெளிவதை போல கால்களைப் பின்னிக் கொண்டும், கொஞ்ச நேரமப்பால், கால்களை நிதானமாக பிரித்துப் போட்டும ஆயாசமான நிலையில் ....... இருக்க எத்தனிப்பீர்கள்.

இந்த உட்காருதலுக்கான கூர்ப்பே இவ்வளவு நீளுகையில், மனிதனின் நிலைப்பிற்கான கூர்ப்பானது எத்துனை நீண்டதாய் இருக்கும்.?உங்களைக் கடந்து செல்கின்ற நாட்களை ஒவ்வொருவரும் எவ்வாறு  கழிக்கிறீர்கள் ?

புதிதாக புலருகின்ற நிதானமேயல்லாத காலைப் பொழுதில் மனமும் உடலும் வெறுப்பைச் சுமந்து கொண்டு உடலைக் காற்றில் மிதக்க வைக்கின்றது. நித்திரையின் இறுதிப்படி இன்னமும் கண்களில் பேராசையைத் தூண்டி , நாளின் அபவாதங்களை ஆராய்கின்றது. இந்த நாளின் தொடக்கம் ஒரு வேளை ஏதாவது ஆராய்ச்சியுடன் ஆரம்பமாகலாம். என்ன, எதுவென்ற கேள்விகளுடன் மணிகளை, விழுங்கி ஏப்பம் விடுகின்ற அவசரத்தில் காலம் நகருகின்றது.
  
கண்ணாடிக் கூட்டுக்குளிருந்து கண்ணாடியை எடுக்கும் போது ,அது ஒரு சவப்பெட்டி போலவும் அது என்னை உள்வாங்க வாய் திறப்பது போலவும் இருக்கிறது.

சூரியனுக்கும்,எனக்கும் பொதுவான காலையில் அதிருப்தியுடன் நான் வாழ்ந்து கழித்த நாட்களை எண்ணுகிறேன். நேர்மையான நாளினை உருவாக்கிக்கொள்வதட்காக பிற மனிதர்களை பார்க்க நேரிடுகின்றது.            மனிதர்களின் லாவகமும், இயக்கமும் கண்களில் சுறுசுறுப்பைத் தருகின்றது. ஓட்டமும் நடையுமாக அவர்களின் வேகத்தை ஒட்டிச்செல்கிறேன். அதன் காரணம் பொறாமை அல்லது அறியாமை போன்ற ஒரு வகை ஆமையாக இருக்கலாம். 

ஆமையினது தலை கூட்டிலிருந்து விடுபடுவதுபோல நாளினது கிரகணத்துக்குள் என்னை இணைக்கின்றேன்.
          
நாளின் தொடக்கத்தை பிறருக்கு தாரை வார்ப்பதா,எனக்காகவே வாழ்வதா என்ற பெரும் கேள்வி........................?
         
துரதிஷ்ட வசமாக என் கதா பத்திரம் இரண்டுங்கெட்டானாகி விடுகிறது. மனிதர்களின் பார்வைப் புலத்துக்குள் இருந்து விலகுவதை நான் லாவகமாக நிகழ்த்தினாலும் , எல்லா மனிதர்களிடமிருந்தும் விலகுவதில்லை. ...... மனிதர்களின் அணுகுமுறைகள் ஒவ்வொரு தருணத்திலும் எதுவோ ஒரு சொச்சத்தை விட்டுச் செல்கிறது. அவற்றை பூரணமாக்குதலுடன் நாளது கழிகின்றது.


வாகனங்களில் பயணிக்கின்ற ஒவ்வொரு தருணத்திலும், கூடு விட்டு கூடு பாயும் செய்கை ஞாபகத்தில் வருகின்றது. பேரூந்தில் செல்லும் போது, நான் பெரும்பாலும் புத்தராக மாறிவிடுவதுண்டு. இந்தமாற்றத்திட்கு இறக்கம் வந்தவுடன் பெரும் புள்ளி வைக்கப்படும்.மறுபடியும் நான் பண்டைய ராஜாக்களில் ஒருவனாகிவிடுவேன். இது என் அடிமட்ட அரசியல்த்தாகம் சம்பந்தமாய் இருக்கலாம்! இருப்பினும் இந்த நாளை எப்படி ஒட்டுவது என்பதுடனேயே பொழுதுகள் கழியும்.
புத்தகங்களைச் சுமக்கின்ற போது, நாளின் அந்தகாரம் உணரப்படும்.இருப்பினும், நிகழ் காலத்தின் வன்மம் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கங்களிலும் இருப்பதால் இந்த நாளை, அவை தூரத் துரத்துகின்றன.
           
 புதிய நாளினை தள்ளிவிடுவதற்கு பிரயத்தனங்களையும், அதிர்வுகளையும் சந்திக்க வேண்டி இருக்கின்றது. லட்சியமில்லதவர்களின் லட்சியம் என்னவாய் இருக்கலாம்?.............
நெருக்கடியான நாளின் முடிவுக்குள் பூர்த்தியாக்கப் பட வேண்டிய கொள்கைகள், கடமைகள்.....,சிலாகிப்புகள்..., எந்திரங்களின் கொடிய வாயாக என்னை உள்வாங்கி விழுங்குகிறது. ஆயுள் பரியந்தம் செய்கிற அளவுக்கு நாளின் கடமைகள்.!

மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு உயிரின் இருப்பை உணர வேண்டி இருக்கின்றது. தொழிலின் ஆதிக்கத்துக்குள்ளும், மனது மட்டும் தாவித்தாவி எங்கேயோ செல்கிறது. ஓய்வினை நோக்கி..........

வீட்டுக்கு வெளியில் நடந்து செல்கையில், ஒவ்வொரு மனிதர்களும், வார்த்தைகளை ஒரு மொழியினது கணத்துடன் உபயோகிக்கிறார்கள்.
அவற்றுக்கு தனிப் பிரயோகங்கள் வேறு.! ஆஹா...புதியதொரு நாளின் கணம் எத்துனயானது....?

மரங்கள், செடிகள்,கட்டடங்கள், ...எல்லாமுமே என்னைபோலவே எதையோ சொல்ல வருகின்றன. முன்னம் எனக்கு அவை சொல்ல வந்தவை விளங்கியது. இப்போது அவ்வளவாக விளங்குவதில்லை. பாலியத்தின் இறுதியை எட்டிவிட்டதால் காது செவிடாய்ப் போயிருக்க வேண்டும், இல்லை நான் கடவுளுடன் பேசுவதை தட்காலிகமாய் விடுவித்துக் கொண்டதாலாய் இருக்க வேண்டும். நான் கடவுளுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்ட போதுகளில்,
ஒருபோதும் , நாளினது கணம் தெரிவதேயில்லை. ஒரு பூச்செண்டின் வாசனையைப் போல் வாசம் தந்து நீங்கி விடும்...இப்போது அப்படியில்லை.

என் உலகத்தில் ஜன்னல்களை நான் சமைக்கவில்லை. இது ஒரு பெருங்குறை பாடு, மற்றவர்களுக்கு தெரிந்த, பத்தாவது நிமிடமே உலக விஷயங்களை நான் தெரிந்து கொள்கிறேன். ஒரு விதத்தில் இதுவும் நல்லது தான்!

கடவுள்,இயற்கை, மனிதர்கள், இலத்திரன் துணிக்கைகள், அண்டவெளி, உணவுப்பதார்த்தம், சிக்கலான நரம்புகள்.....இவற்றுடன் ஆன எனது பொழுதுகள் பையப் பைய எதுவோ ஒரு திசையின் வழி நகருகின்றது.
         
ஊடகங்களினது பரபரப்புக்களில், நாளினது இறுக்கம் கொஞ்சம் தளர்வடைகின்றது. ஒருவாறு மதியம் தாண்டுகிறது. உணவுக்கும், தாகத்துக்குமாய் மனிதர்களைக் கண் தேடுகிறது.
           
ஒவ்வொரு நாளும் இதேபோல இருக்கின்றது. ஆனால் ஒவ்வொரு நாளினதும் எதிர்பார்ப்புக்கள் விசித்திரமாயிருக்கின்றது.
      
எல்லா மனிதர்களுக்கும் பேசுவதற்கும் ,செய்வதற்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் ஒரே தருணத்தில் அமைந்து விடுகிறது. இருக்கிறவர்கள் செய்து முடிக்கிறார்கள்.இல்லாதவர்கள் அது பற்றியே சதாகாலமும் பேசி, ஒரு இருப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஓய்வில்லாமல் இயங்கிக் கொள்பவர்கள் எதையுமே அவர்களாக நிறுத்துவதில்லை.
       
அவர்களுக்கு, சிறியன பற்றிய சிந்தனை இல்லை, புறக்கணிக்கப் பட்டவர்கள் பற்றியும், யாரும் அலட்டிக் கொள்வதில்லை. பிறப்பின் அவதாரத்தை பூர்த்தி செய்கின்ற சுயநலமான மனிதர்களைப் பார்க்க நேர்கின்றது. ஒரு வித அசூசையாகவும்,வியப்பாகவும் தோன்றுகிறது!
        
மனிதர்கள் எங்குமே கூட்டங்கூட்டமாக செயற்படுகிறார்கள், யாராவது ஒருவர் யாரிலாவது தங்கியிருக்க நேரிடுகின்றது. ஒருவராலும் தனித்து இயங்கிக் கொள்ள முடிவதில்லை. ஏதாவது சாக்குப் போக்குடன் ஒரு ஆதாரத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே நான் சொன்னது போல, மனிதனின் நிலைப்புக்கு எதுவோ ஒன்றின் மேல் சமரசம் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது. இவை காலத்துக்குக் காலம், மாறிக்கொண்டே வருகின்றது.
     
 எனது நாளினைப் போக்கிக்கொள்வதட்காக, நான் மற்றவர்களை நோக்கவேண்டியிருக்கின்றது. இது என் சம்பந்தமான் சமரசம். குழந்தையாய் இருந்த போது நான் கோழிகளின் யாசகனாய் இருந்திருக்கிறேன். கோழிகளின் சுறுசுறுப்பை ஒட்டியே நான் வாழ்ந்திருக்கிறேன்.கோழிகள் எனக்கு விசித்திரப் பிராணிகளாக தோன்றியிருக்கின்றன.அவற்றின் பரிபாஷை, கெக்கரிப்பு, செயல் நிலை...எல்லாமுமே என்னால் அறியப்பட்டிருந்து. நான் கோழிகளை மனிதர்களை விடவும் நேசித்தேன்.
  
சிந்தனையின் மாற்றமோ, காலத்தின் மாற்றமோ கோழிகளை இப்போது நான் துர்ப்பறவைகளாகக் கருதுகிறேன். அவற்றின் துரித இறக்கையடிப்புக்கும் என் அந்திம காலத்திற்கும் சம்பந்தம் இருப்பதாய் உணருகிறேன். மனிதனின் நிலைப்புக்கு ஏதாவது ஒரு சாதனம் தேவைப்படுகிறது.! கோழிகளில்லாத உலகினில் நான் நீடித்திருக்கவில்லை.
               
 இப்போது நாய்கள். நாய்களின் பரிவர்த்தனை....உர்ர்ர்ர்....புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .......
க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................................................உலகத்தில் மிகத்தெளிவான வார்த்தையாடலாக இருக்கின்றது. அண்டத்தின் மிகத்தெளிவான பிராணிகளும் நாய்களாயிருக்கலாம்.அவைக்கு ஒரு நாளினது ஆரம்பத்திலும்,முடிவிலும் என்ன செய்ய வேண்டுமென்று மனிதர்களை விட தெரிந்திருக்கிறது.

யாரைக் கடிக்க வேண்டும், யாரைத் தழையத்தழைய வலம் வர வேண்டுமென்றும் தெரிகின்றது. சமைக்காத இறைச்சியை உண்ட பின்னும் , அவையின் சுகந்தத்தின் பரிமளம் மட்டும் குறைவதேயில்லை. நாய்கள்,
நான் எப்போதுமே பிரமிக்கத்தக்கவனவாக  நடந்து கொள்கின்றன. நாட்களின் சிக்கல்த்தன்மையை விரட்டுகின்றன !

இன்னும் கொஞ்ச நாளில் முதலைகளின் யாசகனாய் மாறலாம் என்று சிந்தித்துக் கொள்வேன்.பிறகு இன்னும் கொஞ்ச நாளில் காண்டாமிருகங்களின் யாசகனாகலாம். பிறகு.........,வாழ்க்கையின் அத்தமனத்தின் போது, பூனைகளைத்தருவிக்கச் செய்யலாம். அப்போது தான் அம்மானுஷ்யமாய் இருக்கும். என் இறப்பின் பின் பில்லிகளுடன் உலா வரலாம்....என்னே ரம்மியம்...?

ஒரு காலப் பொழுதினை ஒட்டிவிடுவதற் குள்சிந்திக்க வேண்டியிருக்கின்றது.? காலமென்பது எதிலே தங்கியிருக்கின்றது.? மனிதர்களின் முதிற்ச்சியிலா?  இல்லை பொழுதுகளின் நிற ஜாலங்களிலா....? இரவென்பதும், பகலென்பதும் தோற்றத்தின் வெளிப்பாடுகளா...இல்லை, அவை தோன்றி மறைகின்றனவா?....
       
 சிந்தனையைத் தாண்டி, என் நாள் இருட்டின் எல்லைக்குள் வந்துவிட்டது. வெறும் பொழுதுகளை என்னைத்தவிர யாராலும் வெறுமையாகவே ஒட்டிவிட முடியாது.! ( என்னே அகங்காரம்?) சூரியாத்தமனத்தின் பின் என் நாளில் எதுவோ ஒன்று இழைகின்றது. இசையினது தேக்கங்களைப் பற்றுகிறேன். மெல்லிய இசையை உள்வாங்கியபடி.....
      
தேவ காந்தாரியில் குழையத் தொடக்கி, மாற ரஞ்சனியில் விழுந்து, பழம்பாஞ்சுரத்தில் தத்தளித்து, இரவினது உச்சக்கட்டத்தில் அது குறிஞ்சியில் முடியும். அதுவொன்றே என் நாளின் ஆதாரமாய் இனிக்கக் கூடியது. அதுவரை இல்லாத தெளிவு அதன் பின் வந்து விடும். மனிதர்களின் செய்கைக்கான அர்த்தம் புரிகின்ற மாதிரிக்கு திராணியும் பிறக்கும்.

பறவைகள் கூடு திரும்புகிற மாதிரி, களைப்பும் , சோர்வும் , விகசிப்பும், அன்றைய நாளின் தவிர்க்க முடியாத பிரமிப்பும் எதையோ ரகசியமாய்த் தெரியப்படுத்தும். மனம் அதனை ஏற்றும் ஏற்காமலும் ஜாலங்காட்டும்.தினப்படி இது தான் நடக்கிறது, இருந்தும் இனம்புரியாத புதுமையும், ஆச்சரியமும் கண்களில் இருந்து கொண்டேயிருக்கும், அந்த நாளின் இறுதி வரைக்கும்.
        
மனிதர்களைத் தாங்குகின்ற இலத்திரன் திரையின் முன் அமர்ந்துகொண்டால் ,
திரையில் யாராவது பரிகாசம் பண்ணப் பட்டிருப்பார்கள். அந்தச் சிரிப்பிலே கண்களுக்குள் இருக்கின்ற மலினம் துரத்தப்படும். அர்த்தமேயில்லாத, அர்த்தபுஷ்டியான வம்புச்சண்டையுடன் மூடப்படும் கணனித்திரை ! இயற்கைக்கும்,செயற்கைக்கும் பாதிப்பில்லாத அந்த மெல்லிய அணுகலுடன், இளைப்பறிவிடத் தோன்றும்.

 படைப்புக்கும் ,வெறுமைக்கும் உள்ள மணிக்கணக்கை எண்ணிக் கொண்டே நெருப்பில் குளிர்க் காய்கின்ற எண்ணத்தோடு கண்களை மூடிக்கொள்ள நேரும். அடுத்து விடிகின்ற பொழுதுகளின் வார்த்தையாடளுக்காக, வார்த்தைகளை எங்கெங்கிருந்தோ புத்தி சேமிக்க ஆரம்பிக்கும். 

இருட்டுக்கும்,எனக்குமான அந்த குருட்டு உறவின் உச்சக்கட்டத்தில் தெளிவும்,அமைதியும் சேர்ந்தாற்போல் வரும். நாலாவது சாம வேளையில் தொலை தூர நாயினது ஊளையுடன் கனவுகளின் விரைவு கூட்டப்படும். கனவின் ஒவ்வொரு படி நிலையும் தளம் தளமாக நகர்த்தப்படும்.
      
படுஊ..... சுவாரஷ்யமாக அவை விரிந்து செல்லும்.ஒவ்வொரு தொடர் கனவின் பின்னும் தவிர்க்கமுடியாத சிரிப்புத்தோன்றும் .சலிக்க மாட்டாத விசித்திரக் கனவுகளின் தொன்மையுடனான நாளின் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும்.

முடிவை நெருங்குகின்ற போததன் வலியுடன் மனம் சோம்பிக் கிடக்கும். மனிதர்களைத் தவிர்க்கின்ற அந்தஐந்து மணி நேரம்......

மறுபடியும் துரத்திக் கொண்டு வருகின்ற காலையில், புதுப் பிரமிப்புடன்,
கலைவதும், கலைக்கப்படுவதும், அர்த்தங்களுக்காகவா...? இல்லை மௌனங்களுக்காகவா....?


-நிலா
 2009

Comments

  1. நல்லாயிருக்கு விடியப்புறம் எழும்பி எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. ஏதோ ஞானிகள் அறிவுரை சொல்ற மாதிரி இருந்தது...
    நீங்கள் நிறைய விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்...
    ஆனால் வழமையைப் போல பாதி விடயங்களைத் தான் புரிந்து கொள்ள முடிந்தது...

    ஆனால் நன்றாயிருக்கிறது...

    ReplyDelete
  3. முகப்புத்தகம் என்று சொல்லி Facebook ஐ தவறாக மொழிபெயர்த்த உங்களை தமிழ் மொக்கை மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் சார்பாக கடுமையாகக் கண்டிக்கிறோம்.
    Facebook என்பதன் சரியான மொழிபெயர்ப்பு 'மூஞ்சிப்புத்தகம்'
    ஹா ஹா ஹா....

    ReplyDelete
  4. தொடர் பதிவொன்றிற்கு அழைத்திருக்கிறேன்...

    வாருங்கள்...

    http://tamilgopi.blogspot.com/2009/10/blog-post_03.html

    ReplyDelete
  5. இதை வாசிக்கேக்க எனக்கென்னவோ நான் பூமீல இருக்கிறமாதிரி தெரியுதில்லை... நல்லாயிருக்குது..

    ReplyDelete
  6. இதனை வாசிப்பதற்கான கூர்ப்பே இவ்வாறு நீளுகையில், இதனை எழுதுவதற்கான கூர்ப்பு எவ்வாறு நீண்டதாக இருந்தது ?
    நீங்கள் எழுதியிருப்பதை வாசிக்கும் பொது விளங்காது போலு சிலவேளைகளில் விளங்காமலும் போகிற மாதிரி இருக்கின்ற இந்த எல்லோருக்கும் முடியப்போகும் இந்த மாலைப்போழுதையே எனது விடியலாக கொண்டிருக்கும் நான், வேலைக்கு ஆயத்தமாகிகொண்டு இடைப்பட்ட காலத்தில், விடியற்காலையில் எழுதியிருக்கும் இந்த பதிவை படித்துக்கொண்டு இருக்கிறேன். ஹா ஹா.

    நன்றாயிருக்கிறது என்று சொல்லுமளவிற்கு எனக்கு விளங்கியிருக்கிறதோ தெரியவில்லை ஆனால் எதோ விசயமிருக்கிறது. அதனால் நன்றாயிருக்கிறது :)

    ReplyDelete
  7. நல்ல பல விடயங்களை பதிவிட்டிருக்கின்றீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...