Skip to main content

நாம் நமது எதிர்காலச் சந்ததியினருக்காக்க எதை விடுத்துச் செல்லப்போகிறோம்?

தமிழ்நாட்டின் ஒரு துணுக்குப் பத்திரிக்கையின் செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. சுற்றுலாத்தளமொன்றில் பரிசல் கவிழ்ந்து குடும்பத்தினர் அறுவர் பலியாகியுள்ளனர். அதற்குக் காரணமாக அவர்கள் மகிழ்ந்திருந்த பொழுதொன்றில் கையடக்கத் தொலைபேசிக் கமெராவில் செல்ஃபிக்கள் எடுக்க முனையும் போது பரிசலின் சமநிலை குழம்பி பரிசல் கவிழ்ந்ததாகச் சொல்கிறார்கள். 

அதில் பத்து மாதக் குழந்தையொன்றும் அடக்கம். மேலும் இளந்தம்பதிகளும் குழந்தைகளும் இருந்துள்ளனர். மிகவும் துன்பியல் செறிந்த செய்தி இது. இச்செய்தி பகிரப்பட்ட தொணி, செல்ஃபிக்களால் உயிருக்கு ஆபத்து என்பதே. அச்செய்தியின் கீழ் ஏராளமானோர், செல்ஃபி மோகத்தினால் உயிர் பலி, செல்ஃபி அவசியம் தேவையா என்றெல்லாம் கருத்திட்டிருக்கிறார்கள். 

மனிதர்கள் இரண்டு வகை. ஒருவகை பழைய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டாடுபவர்கள். பண்பாட்டில் இல்லாதவை அறங்களுக்கு ஒவ்வாதவை என்பவர்கள். இது பெரும்பாலும் பழையவர்களின் குணம். அடுத்த வகை எது தற்போதைய நடைமுறையோ அதை மட்டும் உள்வாங்கிக் கொள்பவர்கள். இது பெரும்பாலும் புதியவர்களின் குணம். இதில் பழையவர்கள் காரண காரியமில்லாமல் புதியன புகுதலை வெறுப்பவர்கள். தன்னால் முடியாது என்பதும், தன்னுடைய இளம் பிராயத்தில் குரும்பட்டியில் செய்த விளையாட்டுப் பொருளை விளையாடினார் என்றால் அதைத் தவிர உன்னதமான விளையாடு இவ்வுலகில் இல்லை என்று பறை தட்டுபவர். 

இவர்கள் தான் நிலாச்சோறு உண்ட கதைகளையும், சேலையணிந்த அம்மா தான் உலகின் அம்மா, நைட்டி அணிந்தவர்கள் அம்மாக்களே இல்லை என்பதையும், தாவணி கட்டி, கொலுசு போட்ட பெண்களை திருவிழாக்களில் காண முடியவில்லை என்றும், புத்தகத்தில் மயிலிறகு குட்டி போடக் காத்திருக்கும் வயதே உலகின் உன்னதமான பிராயம் என்றும் இப்போதும் இணைய வழியாகவும் பரப்பிக் கொண்டிருக்கிறவர்கள். 

இவர்கள், தாய், தாய்நாடு, தாய்மொழியை உயிராய் நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் எதையோ பிடித்துக் கொண்டு ஓடுபவர்கள். வாழ்க்கையை வாழ்வதற்காக வாழ்ந்து பார்த்திராதவர்கள். புதியவர்கள் வாழ்வது வாழ்வேயல்ல என்று எப்போதும் அடித்துக் கூறுபவர்கள். இவர்களுக்கு நூறு வருடங்களுக்குள்ளான வரலாறும் பண்பாடும் மட்டுமே தெரிந்திருக்கும். மற்றவற்றை தெரிந்தும் அறிகிலர். 

கவனிக்க, புதியவர்களுக்கு, அவர்கள் வாழந்த ஊரை அந்நியப்படுத்தி, யுத்தத்தை மூட்டி, இரசாயன கலப்புள்ள ஆயுதக் கழிவை உரமாக்கி, பசுமைப் புரட்சியின் மரபணு மாற்றம் பெற்ற உணவுகளை மட்டுமே விட்டுச் சென்ற, விஞ்ஞானத்தை மக்களுக்கெதிரானதாக்கி, மரங்களை வெட்டி, விலங்குகளை அரிதாக்கி, சிந்தெட்டிக் உடைகளை அறிமுகப்படுத்தி, விவசாய நிலங்களை விற்று வெளிநாட்டுக்கு தம்மக்களை அனுப்பி, கேவலமான அரசியல் குப்பைகளை நிரந்தரமாக்கி, மரபணு நோய்களை அகமண முறையில் எதிர்காலத்துக்குக் கடத்தி, மதத்தை, சாதியை, இனத்துவேசத்தை, அடிமை முறையை, இழி பண்பாட்டை எல்லோருக்கும் விட்டுச் சென்றவர்கள் நான் சொல்லும் அந்தக் காலத்தவர். 

ஒவ்வொரு காலத்தின் இளைஞர்களே வர்க்கத்திற்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தவர்கள். புதியவர்களுக்கு நீங்கள் என்ன விட்டுச் சென்றீர்கள், குறை சொல்லுவதற்கு? உங்கள் எச்சங்களைத் தெரிந்தோ தெரியாமலோ தொடர வேண்டி இருக்கிறது. உங்களுக்கும் சேர்த்து இந்த உலகைப் பின் வருபவர்களுக்காக, எதிர்காலச் சந்ததியினருக்காக, பாதுகாக்க வேண்டிய கடமை எப்போதும் அந்நாளினருக்கே இருக்கிறது. எந்தக் காலத்தின், அந்தக் காலத்தவர் எவருக்கும் தமது எதிர்காலச் சந்ததியினருக்கான வளமான உலகை விட்டுச் செல்லும் எண்ணம் இருந்ததில்லை. எந்தவொரு தொழிநுட்பத்தையும் அதன் பொறிமுறையை அதன் தேவையுடன் சேர்ந்து பயன் படுத்த வேண்டும். தேவைக்கான பொறிகளே வேண்டும். மக்களுக்கானதே விஞ்ஞானம். 

சொல்ல வந்ததற்கு வருகிறேன். அந்த உயிரிழப்பிற்கு செல்ஃபி காரணமல்ல. அப்பரிசலில் பயணித்த எவருமே லைஃப் ஜக்கெற் அணிந்திருக்கவில்லை. அது காற்றுப் புகுத்திய பிளாத்திக் உறையிலானது; நீரில் மிதக்க உதவக் கூடியது. நீர் விளையாட்டுக்கள், நீர் மூலமான போக்குவரத்தின் போது கட்டாயம் அணிய வேண்டியது லைஃப் ஜக்கெற். அக்கவசம் இல்லாத நீர்ப்பயணத்தை அனுமதிக்கிற சுற்றுலாத்துறை ஒன்றும் இவ்வுலகில் இருக்கிறது. அதே உலகில் தான் மக்கள் இயல்பாய் மகிழ்வாய் இருக்கும் போது எடுத்துக் கொள்ளும் செல்ஃபிக்கள் பெரும் இடராயும் இருக்கிறதாம். 

அரச இயந்திரம் மக்களின் மீதே மீண்டும் மீண்டும் குற்ற எண்ணத்தைத் தூவி விடட்டும். "இரவில் வெளியே" சென்ற பெண் பாலியல் வதைக்கு ஆளானார். "தனியாகப் பயணித்த" பெண்ணை ஆண்கள் தொல்லைப் படுத்தினர். "நாட்டிற்குள் வந்த" புலி மக்களைக் கடித்தது. "புயலில் கடலுக்குச்" சென்ற மீனவர் காணாமல்ப் போயினர். 

உண்மையில் இவற்றின் நேரடிக் காரணங்கள் எவை என்பதையும், சொல்லப்படுகின்ற காரணங்கள் எவை என்பதனையும் அலசிப் பாருங்கள். ஏன் என்று எல்லாவற்றையும் கேள்வி எழுப்புங்கள். காரணங்கள் புரியும். இது ஒரு அற்புதமான அற்பமான உலகம் என்பதை உணருவீர்கள்.

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி