Skip to main content

இயல்பாய் இருத்தல்








இரவு ஒன்பது மணிக்குமேல் கொழும்பின் தெருக்களில் சோடி போட்டுகொண்டு நடந்துவிட்டு வருவது ஒரு தவிர்க்கப்படவேண்டிய செயல் மாதிரித்தான் பார்க்கப்படும்; நள்ளிரவு வரை நகரம் இயங்கினாலும். வேலைகளிலிருந்து வீடு திரும்புகிறவர்களுக்கு, எட்டு மணிக்கு மேல்த்தான் காலாற நடந்துவிட்டு வர முடிகிறது. 

புது வீடு மாறிய நாட்களிலிருந்து அவதானிக்கிறேன், வீட்டுக்கு அருகில் ஒரு வடிவான குளமும் செப்பனிட்ட கால்நடை வீதியும்,பூங்காவும் அதில் சிமெந்து பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கின்றது. ஒரு அழகான மாலையில் உலாத்துவதுக்குத் தேவையான எல்லாமும் இருக்கிறது.


எனக்குத் தெரிந்து கொழும்பில், ஆணும்,பெண்ணும் நண்பர்களோ, மனைவி,கணவன் இருவருமோ, இரண்டு பெண்களோ உட்கார்ந்து கதை பேச ஒரு இடம் தனும் இல்லை, கோப்பி ஷொப்களோ, வினோத இரவுணவுக் கடைகளோ, பல்பொருள் வணிகவளாகமோ இதற்குள் வராது. சில நேரம் கதைப்பதற்காகவே இரவுணவை கடையில் உண்பதுண்டு. பணப்பை மெலிந்து உடல் எடை கூடும் அவ்வளவு தான்.

அதுவும் சில சந்தர்ப்பங்களில் டீசன்ட்டான இடங்களில் மட்டும் தான் ஆணும் பெண்ணும் இருந்து கதைக்க வேண்டி இருக்கும். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் உயர் ரக உணவகங்கள் சாதித்துக்கொள்ளும். முன்பு போல தனித்தனியாகச் சந்திக்கத் தேவையில்லை. எங்கள் இருவருக்கும் இவ்வாறான மாலை நேரச் சந்திப்புகள் இப்போது குறைந்தாயிற்று.அது ஒரு பெரிய நின்மதி. நேற்று நானும் கணாவும் எந்தெந்தக கடைகள் எங்களுக்கு அவற்றில் பங்குதாரர்களாக எங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வந்தோம். நகரத்தின் முக்கால்வாசிக் கடைகள் நம்மை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்தளவுக்கு அவற்றுக்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறோம்.

இந்த நகரம் இருந்து கதைப்பதற்கு ஒரு பொது இடமும் மனிதர்கள் இயல்பாய் இருப்பதற்குமான மொழியையும் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என்று தோணியது. பொது இடங்களில் காதலர்கள் எனும் பெயரில் இருப்பவர்கள் செய்யும் சேட்டைகள் பற்றி நிறையப் பேர் கதைகிறார்கள். மனிதர்களை அடைத்து வைத்துவிட்டு திடீரென்று திறந்து போகக் கூடிய தொளையைக் காட்டினால் அப்படித்தான் நடக்கும். வளரிளம் பருவத்தினருக்கு இதுபற்றி போதியளவு கல்வியைக் கொடுப்பதோடு எங்களில் இருந்து அன்னியப்பட்ட முந்திய தலைமுறையினருக்கும் போதியளவு கல்வியைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பிறழ்வான மனநிலையுடைய சமுகம் உருவாகிக் கொண்டிருப்பதை தவிர்க்கவியலாது.

ஒரு மாதத்திற்கு முன்னர் என்னுடைய இரண்டு நண்பிகள் விகாரமகாதேவி பார்க்கில் நீண்ட கால/ வருட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அதனை நெடு நேரமாகப் பார்த்துகொண்டிருந்த காவலாளி அவர்களை "இப்ப பெண்களுக்கு கூடிப்போச்சு!" என்கிற தொணியில் பேசி வீட்டுக்குப் போகச் சொல்லி இருக்கிறார். அவருடைய கருத்தின் படி பெண்கள் இருவர் தனியாக இந்தக்காலத்தில் பேசினால் அவர்கள் சமப்பால் உறவாளர்கள் என்பதே ஆகும். இன்று குறிப்பிட்ட வயதில் உண்மையிலேயே ஆண் நண்பர்கள் இல்லாமல் பெண்களுடன் இயல்பாக நட்பாக இருக்கும் பெண்களுக்கு இந்த "எள்ளி நகையாடல்" தான் கிடைக்கிறது. ஆண்களுக்கும் கிடைக்கத் தவறுவதில்லை. நாங்கள் நான்கு பெண்கள் கங்காராம சுற்றுப்புறத்துக்கு படகு சவாரி செய்யப் போனோம். அங்கு கொஞ்ச நேரம் இளைப்பாற விரும்பினோம். சுற்றிலும் காதலர்கள் அல்லது கணவன் மனைவி. அவர்களில் யாருமே அவர்களாக இருக்கவில்லை. அங்கிருந்த எங்களை மற்றவகள் சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்தவர்கள் போலப் பார்த்தார்கள்.

பொது இடத்தில் ஆரத்தழுவுவதும், முத்தமிட்டுக் கொள்வதும் தவறே அல்ல. அது மகிழ்ச்சிகரமானது. கொண்டாடக்கூடியது. ஆனால் அவை கொண்டாட்டமாகவும், இயல்பாகவும் அன்பு பரிமாறவும் புனையப்பட்டவை போல இருப்பதில்லை. அசூசையாக சில வேளைகளில் இருக்கும். நமதல்லாத மற்றவர்களின் காதல் ஏன் அசூசையாகப் படுகிறது? கல்லூரிக் காதலர்கள் போல அல்லாது, ஒரு ஆடைத்தொழிற்சாலையில் வேலைசெய்யும் பெண்ணும் ஆணும் காதல் செய்வது ஏன் அநாகரீகமாகத் தெரிகிறது? நாகரீகமாக உடை உடுத்தாதவர்கள் கொஞ்சிக் கொள்ளும் போது ஏன் அரியண்டமாகப் படுகிறது? அவ்வாறு பார்க்கச் சொல்லிக் கொடுத்தது எது?

காதல், காதல்த் தேவை பற்றிய விளக்கங்கள் நம்மிடையே ஒரு விரசமானதாகவே பார்க்கப்படுகிறது. திருமணமாகி பத்துப் பதினைந்து வருடங்கள் ஆன தம்பதிகள் வெளியிலே, குழந்தைகளுடன் உலாப் போவது எங்கள் சமுகத்தில் மிகக் குறைவு. இப்போது சிங்கள முஸ்லீம் மக்கள் இதனை அழகாகச் செய்கிறார்கள். குடும்பங்களாக மகிழ்வான நேரத்தைக் கழிக்கிறார்கள். குடும்பங்களாக வெளியில் செல்வதென்பது பணத்தின் தீர்மானம். ஆனால் குடும்பங்களாக எந்தத் தலையீடும் இன்றி மகிழ்வாக இருக்க முடியும்.

இந்த விரசப் பார்வையே, திருட்டுத்தனத்தையும், கள்ளத்தையும் இயல்பை ஒழிக்கும் நிலையையும் ஏற்படுத்தி விடுகிறது.  காதலைத் தவிர திருமணத்துக்கான வாய்ப்பு இல்லாமல்ப் போகும் காலமொன்று வரும் போது இப்பார்வை குறையலாம். தமது பெண்குழந்தைகள் பற்றிய அடக்குமுறை கலந்த அக்கறை, ரெண்டு பேர் ரோட்டில கதைச்சுக் கொண்டிருந்தா மினக்கெட்டு போன் பண்ணி வீட்டுக்குச் சொல்லுகிற முறைகள் இதெல்லாம் தான் பிள்ளைகளை வீட்டிலிருந்து அந்நியப்பட வைக்கிறது. பாலியல் முறைகேடு, போதைபோருட்கள் போன்ற கவனக்கலைப்பான்கள் இருக்கிற போதும், வளரிளம் பருவத்தினரின் இயல்புத்தன்மை பற்றிய கல்வி கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.


எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற பூங்கா பற்றி சொல்ல வந்தேன். இன்றிரவு நாங்கள் அந்த இடத்துக்கு எட்டரை மணி தாண்டிப் போனோம். எங்களுக்கு முன்பாக அங்கு மூன்று சோடிகள் அமர்ந்திருந்தனர். வெளிச்சம் மிதமாக இருந்த  அந்த இடத்தில் இரவுக் காவலர்கள் விழித்திருக்கிறார்கள். விடிய விடிய அந்த இடம் யாரையும் தொந்தரவு செய்யாது இருக்கும் போலப் பட்டது. யாரும் யாரையும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. யாரும் யாரையும் எந்தத்தொந்தரவும் செய்யவில்லை. பிழைகள் நடக்கவில்லை.


ஓராயிரம் கொக்குகள் இரவில் பூத்திருக்கும் வெள்ளைப் பூக்களைப் போல குளத்தின் நடுவிலிருக்கும் கண்டல் மரங்களில் ஓய்வெடுத்துகொண்டிருந்தன. பூரணை முடிந்த இரண்டாம் நாள், சந்திரன் பிரகாசமாக இருந்தது. புள்ளுறங்கும் இரவில், சின்ன மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. இந்த இரவை தனித்து ரசிக்க முடியாது.
ஏன் எப்போதும் மக்கள் இயல்பாய் இருப்பதில்லை. இருப்பதை மற்றவர்கள் விரும்புவதுமில்லை?

Comments

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி