Skip to main content

கண்ணுக்கு லென்ஸ்

கண்ணுக்கு லென்ஸ் வைத்துக்கொள்வது எந்தளவு சுகாதாரமான, ஆரோக்கியமான விடயம் என்பதைப் பற்றி பார்க்க முன்னர், பன்னிரண்டு வயது முதல் கண்ணாடி போட்டு, இற்றைக்கு பன்ரெண்டு வருசமா முக்குக் கண்ணாடியுடன் அல்லல்ப்பட்டு, லோல்ப்பட்டு, குப்பைகொட்டிய எனக்கு லென்ஸ் முதலில் பயங்கர ஆறுதலாகவும் பரம சவுகரியமாகவும் இருந்தது.

கண்ணுக்கு லென்ஸ் போட்டுக் கொள்ள முதல், கிட்டத்தட்ட எட்டு வகையான கண்ணாடி மோஸ்தர்களை, பன்னிரண்டு வருடங்களுக்குள் மாற்றி விட்டேன். மோஸ்தர்களுக்காக மட்டுமல்ல,கண்ணின் பார்வைத்திறன் கண்ணாடி போட்டுக் கொண்டு வர வரக் குறைந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பத்தடி தூரத்தில் நடந்து வருபவர் யார் என்று தெரியும், அவருக்கு மூக்கு புடைப்பாக இருக்கிறதா,சப்பையாக இருக்கிறதா என்கிற அனுமானம் கண்ணினால் எடுக்க முடியவில்லை. மிகக் கஷ்டமாகவிருக்கும் அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில். இப்பவே இப்படி எண்டா நாப்பது வயசாகிற போது கண்ணு மொத்தமாக நொள்ளையாக போய்விடும் என்கிறதாய்ப்படும். முந்தி ஒரு காலத்தில் நாப்பது வயது வரும் போது செத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன், அதைத்தான், கண்பார்வையில் கோளாறு வரும் போது செய்ய வேண்டும் என்று இப்போது நினைத்துக்கொள்வேன்.

கண்ணுக்கு லென்ஸ் போடும் ஒரு தனியார் மருத்துவமனை "நாங்க இருக்கோம்" நாங்க இருக்கோம்னு அழைத்துக்கொண்டே இருந்தார்கள். அண்மையில் போய்ப்பார்த்தேன். கண் பார்வை பரீசிலிக்கும் போது நான்காவது வரியே வாசிப்பதற்கு தள்ளாடியது. முந்திய மூக்குகண்ணாடியின் திறனை விட அதிகம் திறனுள்ள கண்ணாடி தேவைப்பட்டது. அந்தக் கண்ணாடியை அணிந்தால் இரவில், வீதி குறுக்கறுக்கும் போது கண் கூசும். பகலில் தலை இடிக்கும். தலை பாரமாகவே இருப்பதுபோல் இருக்கும். புத்தகம் படிக்கும் போது கண்ணை இடுக்கிக் கொண்டு ஒற்றைக்கண்ணினால் படிக்க வேண்டி இருக்கும். கண்ணாடி அணிந்திருப்பினும், கண்ணாடியுடன், சரிந்தோ, கிடந்தோ, படுத்தோ புத்தகங்களைப் படிக்க சவுகரியம் குறைவாகவே இருக்கும். புத்தகத்தைத் திறந்ததும் கண் சுழட்டிக் கொண்டு வரும். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் நித்திரை வரும். இது எனக்குப் பெரிய கோதாரியாக இருந்தது.


அதை விட இற்றைக்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னரே ஒரு கிலி பிடிக்கத்தொடங்கி விட்டது. என்ட கலியாணத்தை நானே என்ட சொந்தக் கண்ணால பார்க்கோணும் என்ற அவா; ஆசை எப்பிடி வேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம். சொந்தக் கலியாணத்தை கண்ணால பாக்கோணும் எண்டுறது அவ்வளவு பெரிய பேராசை இல்லை என்று நினைக்கிறன். (so called engagement)  ரெண்டு காரணம் இருந்தது, சாரி கட்டிக்கொண்டு, நான் வழமையாகப் போடும் பென்னாம் பெரிய மூக்குக்கண்ணாடியை அணிந்து கொள்வது அவ்வளவு தோதாக இருக்காது. ஒரு வகையில் இடைஞ்சலாக இருக்கும். மற்றது அன்றைய நாள் அந்தரமாகவே இருக்கும். அங்க வந்திருக்கிற ஆக்களை கண்ணாடி இல்லாமல் மனக்கண்ணால பாத்திட்டு அம்மளவு பேரையும் கூட்டிக்கொண்டு "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" படிச்சிட்டு ஜோதியில் கலக்கிற அளவு சாமர்த்தியமும் இல்ல.


இதுக்கெல்லாம் ஒரு மாற்று வழி "நாங்க இருக்கோம்" சொன்னார்கள். கண்ணுக்கு லென்ஸ் வைத்துக்கொள்ளுங்கள். சவுகரியமாக இருக்கும். தூங்கும் போது கழற்றி வைத்து விடலாம். நீண்ட பாவனை. முன்பு போல கண்ணாடியில் வருவதில்லை. பொலித்தின் உறை போல இருக்கும். எங்கும் எப்போதும் அணிந்து கொள்ளலாம். நாளடைவில் பழக்கப்பட்டு விடுவீர்கள். அதை விட லென்ஸ் அணியும் போது கண் கூச்சம்,தலையிடி,வெயிலில் போகும் போது தூரத்தில் ஷைனிங் இருக்காது,தொடர்ந்து படித்தாலும் கண்ணீர் வராது, கணினி வேலை செய்பவர்களுக்கு மிக உகந்தது. UV கோட் அதிலேயே இருக்கும், கண் நோகாது....இப்பிடி ஏராளமான நன்மைகள்.

இது பற்றி நிறைய ஒன்லைன் பத்திகள் வாசித்தேன். வீட்டில் இருக்கிற டொக்டர் எதைக் கேட்டாலும் நோ சொல்லும் என்பதால் கேக்கவே இல்லை. மகி நூடில்ஸ் கூட சாப்பிட்டா கான்சர் வருமாம். நான் தரவழி ஆசையாச் சாப்பிடுற எல்லாத்துக்குமே கான்சர் தானாம். இப்ப பால்மா கூட அம்மா வீட்டில் பாவிக்கிறதில்லை. ஆகவே அந்த டொக்டரை நான் மனிசரா மதிக்கிறதா இல்லை எண்டுறது வேற கதை.

கண் லென்ஸ்! கண் வில்லை! லென்ஸ் முதலில் வைக்க பயமாகவும் பிரயத்தனமாகவும் படும் போலத் தெரிந்தது. கண்ணை முழிச்சு வெச்சுக் கொண்டு, ஆக்காட்டி விரலால கண்ணுக்குள்ள ஒரு வஸ்துவை வைக்க வேண்டும். வைக்கும் போது கண்ணீர் வரக் கூடா. அழக் கூடா!

இப்பிடித்தான் முஸ்லிம் நண்பர் ஒருவர் வீட்டில் ஒரு துக்கம். தந்தையார் இறந்துவிட்டார். ஆனா அழக் கூடாதாம்.தரையில் கண்ணீர் படக் கூடாதாம். அவளுக்கு அழுகை முட்ட முட்ட கையால் தரையில் படாமல் சவத்துக்கு முன்னால் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தாள் . நானும் அப்பிடித்தான். கண்ணீரை காத்தில கலைச்சுக் கொண்டிருந்தேன்.

ஒரு கழுவும் தண்ணி மருந்து, அதைத் தந்து கையை நன்கு கழுவிய பின் கண்ணில் வைக்கலாம் எண்டு சொல்லி, லென்ஸ் வைக்க சவப்பெட்டி வடிவில் நல்ல வடிவான பெட்டியொன்று தந்தார்கள். வலம் இடம் என்று பிரிச்சிருக்கும். எனக்கு வாழ்க்கையில இடம் வலம் எந்த மொழியிலும் தெரியாது. சென்னைக்கு போயிருந்த போது ஆட்டோக்காரர்களிடம் மிகக் கஷ்டப்பட்டேன். ரைட்டு கட் பண்ணி லெப்டு போகவா என்றால் எனக்கு ஒரு மண்ணும் விழங்காது. பிளம்மிங்கின் இடக்கை விதி, வலக்கை விதி அந்தோ கதி தான். இத்தனை வருசமாகியும் இடப்புறம் வலப்புறம் தெரியாது எனக்கு. பள்ளிக்கூட நண்பர் ஒருத்தி பாத்ரூமுக்கு போயிட்டு வா வலம் இடம் எதெண்டு தெரியும் எண்டு நக்கலடிப்பாள். ஐயா கழிப்பறை இப்போதெல்லாம் நவீன வசதியோடு வந்திட்டுது. நிற்க இப்பயும் வலம் இடம் எப்பிடக் கணிக்கிறது???

ஆனா லென்ஸ் காரன்/ரி நல்ல ஒரு ஐடியா செய்திருந்தான்/ள். லென்ஸ் பெட்டி இரண்டாகப் பிரியும். ஒரு பக்கம் இதயத்தின் படத்தையும், மற்றப் பக்கம்வெறுமனேயும் வைத்திருக்கும். இதயம் போட்டிருக்கும் பக்கம் இதயத்துக்கு நேர மேல உள்ள கண்ணுக்கானது, மற்றையது மற்றைய கண்ணுக்கானது. சிம்பிள்- எனக்கு இந்த லொஜிக் சரியாப் பிடிச்சுப் போய்ட்டுது. இதனாலே எனக்கு இடம் வலம் தெரிந்தது. ஐஞ்சு சோடி கண் அதுக்குள்ளே பதப்படுத்தி இருந்தது. மாதம் ஒரு சோடி இது தான் கணக்கு. விலை, கண்ணாடிக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்பதால் அதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை.

லென்ஸ் வாங்கிக் கொண்டு வந்தாச்சு. முதல்த்தடவ போட்டுக் கொண்டும் வந்தாச்சு. புதுசா பார்வை கிடைச்சது போல, மற்றைய நாளை விட எல்லாம் பிரகாசமாவும் ஒளியோடும் தெரிஞ்சுது. சரஸ்வதி சபதத்தில சிவாஜிக்கு பேச்சு வந்தோன்ன "அ..ம்...மா...அம்மா....இப்பிடி எழுத்துக் கூட்டிச் சொல்லுறதப் போல, நானும் பாக்கிற பொருளை எல்லாம் எழுத்துக் கூட்டிச் சொல்லிப் பாத்தன். செமையான பீலிங் அது!

ரெண்டு நாள் கவனமா ஊத்தை படாத கையில கண்ணை நோண்டி, பெட்டியில போட்டு மூடி வெச்சு, அடுத்த நாள் காலையில மாட்டிக் கொண்டு எல்லா இடமும் திரிஞ்சன். அந்தோ பரிதாபம்!!! அண்டைக்கு கீழே யாரோ வந்திருந்தார்கள் என்னைத் தேடி. படுத்திருந்தன். அம்மா கூப்பிட்டா. எழும்பி கண்ணைத்திறந்து பாத்தா...கண்ணைக் காணோம்டா! ஆத்தி....

எங்க தேடியும் கண்ணைக் காணோம். ஒரு கண் இருக்குது, மற்றைக் கண்ணைக் காணோம். என்னய்யா செய்யிறது? எங்க போய் நான் அவசரமாகத் தேட. கீழ குந்தியிருந்து, டைல்ஸில் ஒட்டுப்பட்டிருக்குமா எண்டு தேடினேன். காணோம். தலை கை கால் சுற்றத்தொடங்கி விட்டது. மீதி நான்கு சோடிகள் இன்னும் உள்ளே இருப்பதை நினைத்தேன் ஆறுதலாக இருந்தது.

இந்த ஐந்து சோடிகளுக்கும் முறையே ஒன்றிரண்டு கதைகள் உள்ளன, அவை தொலைந்து போனதற்கு. ஒருநாள் ஒரு பரீட்சை நடந்துகொண்டிருந்தது. நிறைய நேரமாக எழுதிக் கொண்டிருந்தேன். கண்ணில் எதோ விழுந்தது போலவிருந்தது, கண்ணைக் கசக்கிவிட்டுப் பார்த்தால் மறுபடியும் கண்ணைக் காணோம். கண் காணாமல் போனபின் பரீட்சை எழுத முடியவில்லை. பரீட்சையின் நேரம் போய்க்கொண்டிருந்தது. நான் கண்ணைத் தேடினேன். என் விரலில் என் கண் அமர்ந்திருந்தது. கண்டு பிடித்ததும், பரீட்சை அலுவலரிடம் கண்ணைப் போடப் போவதாகச் சொல்லிக் கொண்டு கண்ணாடி இருக்கும் பாத்ரூமுக்குள் சென்று போட்டுவிட்டு வந்தேன். அதன் பின் அவர் பரீட்சை முடியும் வரை எனக்குக் கிட்டவே நின்று கண்காணித்தது வேறு கதை.

இன்னொரு நாள் நானும் தோழர் கணரூபனும் உலாத்தி விட்டு நடு வீதியில் வந்துகொண்டிருந்தோம். கண்ணைக் காணோம்!!! ஒருமாதிரி இருவருமாகத் தேடிக் கண்டு பிடித்தோம். கண் சட்டையில் அமர்ந்திருந்தது. கண்ணை உடனடியாகப் பொறுத்த வேண்டும். அதற்கு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வேண்டும். வழியில்லை. கைபேசியில் இருக்கும் முன் கமெராவை ஓன் செய்து கொண்டு கண்ணுக்குள் துளாவிக் கொண்டிருந்தோம்- நடு வீதியில். பார்த்த சனம் காறித் துப்பிவிட்டுச் சென்றது. நல்ல காலம் அது வெள்ளவத்தை இல்லை.

இப்போதெல்லாம் கண் காணாமல்ப் போனால் ரெண்டு கண்ணுக்கும் ரெண்டு பாட்டு வைத்திருக்கிறேன். வலக் கண் காணாமல்ப் போனால் "மீளா அடிமை உமக்கே ஆளாய்" என்று சுந்தரர் தேவாரம். இடக் கண் காணாமல்ப் போனால், அதென்ன பாடலென்று சிலபஸில இல்லை, ஆனா சுந்தரர் காஞ்சி ஏகாம்பர நாதரை வழிபட்டார் என்று இருக்குது.

முக்குக் கண்ணாடியுடன் ஒப்பிடும் போது, லென்ஸ் தெய்வாதீனம் போலப் பட்டாலும். கண்ணு காணாமப் போனா எங்க போறதெண்டு மட்டும் தெரியேல்ல. அதையும் அந்த டொக்டரிட்ட அப்பயே கேட்டன். கண்ணு காணாமப் போனா எங்க போறதுன்னு. அவர் சொன்னார் எந்த டொக்டரிட்ட வேணும்னாலும் போகலாம்னு.
ஆங்...சிவராஜ் சித்தமருத்துவரிட்ட கூடவா?

இத்தால் அறியத்தருவது என்னவென்றால், இன்னிக்கு காலம கடைசிச் சோடிக் கண்ணும் காணமப் போயிரிச்சு. 
காலமையில இருந்து நிலா இஸ் சிங்கிங் புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே...


Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி