Skip to main content

காதல்









காதலைப்பற்றி கட்டாயம் இண்டைக்கு எழுதிப் போடனுமாம்ல. அதுவும் நிறையப் பேர் மெசேஜ் அனுப்பி வேற கேட்டிருக்கிதுகள். grrr

அவன் மேட்ச் பாத்துக்கொண்டிருக்கிறான். நானும் அவனோட மேட்ச் பாத்துக்கொண்டிருக்கிறன். நான் மேட்ச் பாக்கிறத விட்டு கிட்டத்தட்ட பத்து வருஷங்களாச்சி. ஓ.எல் சோதினை மூட்டம் பள்ளிக்கூடம் மாறினது, கிரிக்கெட் நாட்டம் குறையக் காரணம். அப்பிடியே படிக்கிறதுக்காக விளையாட்டு மேட்ச் எல்லாத்தையும் நிப்பாட்டியாச்சு. ஆனா ரெண்டு நாளுக்கு முன்னமே இந்த முறை மேட்ச் பாக்கிற இண்டரெஸ்ட் வந்து தொத்தியிருக்கு. அது ஒரேவேளை காதலா இருக்கலாம். பின்னேரம் எனக்காக எங்கையாவது காலாற நடந்துவிட்டு, வெட்டிக்கதை கதைச்சிட்டு வருவோம்னு நினைக்கிறேன்.

காதலெண்டா என்ன எண்டு டெபினிஷன் எங்களுக்குள்ள இல்ல. அதுபாட்டுக்கு என்னவோ ஒரு வஸ்து. காதலிக்கிறம் காதலிக்கப்படுகிறம் எண்டு உணரத்தொடங்கிறது ஒரு அற்புதமான தருணம். எம்மை யாருக்காவது பிடித்துக்கொண்டால் இவ்வளவு இதமாக இருக்குமா என்றால் அது காதலாக இருந்தால் மட்டுமே சாத்தியம். யாரோ ஒருவரோ, சிலருடனோ மட்டும் எது செய்தாலும் அதை உற்றுப் பார்க்கும் படியாக இருக்கும். அந்த கெமிஸ்ட்ரி ஒருமாதிரியானது. ஏதாவது ஒருவிதத்திலயாவது அவங்க கூடவே இருக்கணும்னு சொல்லும்.

காதலில ஒவ்வொரு கட்டம் இருக்கும். ஒரு கட்டத்தில இந்தக் காதல் இருக்குமா இருக்காதான்னு பயம் இருக்கும், டிப்ரஷன் கூடின காலகட்டமது. இன்னொரு கட்டத்தில இந்தக் காதல் என்ன பண்ணினாலும் எங்கயும் போய்த்துலைஞ்சிராது என்ற ஒரு உறுதிநிலை கிடைக்கும், அப்ப காட்டுன்னு காட்டுவாங்க. அது ஒரு பெருமிதமான காதலா இருக்கும்,அப்ப அவங்களுக்காகவே வாழுவாங்க, ஒருத்தருக்காக ஒருத்தர் வாழுறம் என்கிற பொய் அங்க இருக்காது. நாங்க வாழுறதுக்காக நாங்க இருக்கிறம், எங்களுக்காக இந்தக் காதல் இருக்குன்னு ஜெனியுனா எல்லாமே இருக்கும்.

எத்தின திணிசான காலகட்டம் இருந்தாலும், எதோ ஒருவகையான அன்பை, சம்பந்தப்பட்ட ரெண்டு பேருக்குமே இருக்கு, அப்பிடி இருக்கின்னுறதும் ரண்டு பேருக்கும் நால்லாத் தெரியும், எப்பிடி சொல்லுறதுன்னு தெரியல ஆனா கண்டிப்பா சொல்லிடுவோம், அத சொல்லுறதுக்குள்ள ஒரு கெத்து மெயிண்டேன் பண்ணி வெச்சிருப்போம். இந்த ஆளை ஒருபோதும் விட்டுட்டுப் போயிற முடியாது எப்பயுமே பக்கத்தில தேவை எண்டு ஒரு கட்டம் எல்லாருக்கும் வரும். அதான் பெஸ்ட் மொமென்ட். அந்தக் கட்டத்தில தான் கஷ்டங்கள், முக்கியமான முடிவுகள், சந்தோசமா இருந்தாலும் முழுமையா அனுபவிக்க முடியாது, வயித்துக்குள்ள எக்கச்சக்க பட்டர்பிளைஸ், கை நுனியக் கூட தொட்டுப் பார்க்காத பிரஷ் பீலிங், சம்பந்தப்பட்ட ஆள் வீட்டில இப்போ என்ன நினைக்குதுங்க்கிற தெலிப்பதி, சம்பந்தப்பட்ட ஆள் ஒரு அம்பது அடி தள்ளி வந்தாலும், அவங்களுக்கான அந்த வாசனையைப் பிரித்தரியிற கெமிக்கல் ரியாக்ஷன், ஆயிரம் பேர் ஒரு கூட்டமா இருந்தாலும், வார்த்தை, சிக்னல் எதுவுமே இல்லாம சொல்ல வந்த விடயத்தை அப்பிடியே கன்வே பண்ணுற தந்திரம், கள்ளம், யாரப் பாத்தாலும் சிரிச்சிட்டு கண்சிமிட்டிட்டுப் போகச் சொல்லுற ஒரு என்னமோ பீலிங் இதெல்லாம் அப்ப தான் இருக்கும். அதில வேற பேரன்சுக்கே நமக்கு ஒரு பிரண்ட் இருக்கிறதும், நாம இன்னுமே மாட்டரை ஒப்பின் பண்ணாம பம்மிக்கொண்டு இருக்கிற விசயமும் தெரியும்னா, செம ஜாலியான விஷயம். அவங்களே நக்கலடிப்பாங்க. நாங்களும், எல்லாரும் எப்பயுமே சிரிச்சிட்து இருக்கிற மாதிரி ப்ரஷ்ணஸ் இருக்கும். அதுவே இப்பிடி எல்லாம் நடந்தும் எதுவோ ஒன்னால ஆப் ஆகிரிச்சுண்ணா அதிலுருந்து எழும்பி வர கன காலம் எடுக்கும். அது மிக வலிக்கும். ஆனா இந்த ஒவ்வொரு காலகட்டத்தின் வாசனையையும் அப்பிடியே பத்திரப்படுத்திரவங்க எல்லாருமே வாழ்க்கையை வாழுறாங்க.


எனக்கு காதல்னா அவனப் புடிச்சு, சாகிற வரைக்கும் கதைச்சிட்டே இருக்கணும். (யார் சாகிற வரைக்கும்னு கதை முடிவில தெரியும் )
tongue emoticoசெய்யிற எல்லா வேலைக்கும் கூடவே பக்கத்தில இருக்கணும்; பக்கத்தில இல்லாட்டி கையும் ஓடாது காலும் ஓடாது. எல்லா விசயத்தையும் நரேட் பண்ணிக்கொண்டிருக்கணும். எனக்குப் பிடிக்கிற எல்லாத்தையும் பற்றி ஏற்க்கனவே தெரிஞ்சு வெச்சிருக்கணும்.ஆனா சுயநலமி நான் எப்பயாச்சும் நுட்பமான வேலை செய்யும் போது டிஸ்டப் பண்ணினா கொஞ்சநேரம் என்னை தனியா இயங்கவிடுன்னு பேய் பிசாசு மாதிரி கத்திடுவேன்.
அவனுக்கு காதல்னா ரெண்டுபேரும் சேர்ந்திருந்து உலகத்தில இருக்கிற எல்லாப்படங்களும் பாக்கணும். அவனுக்குப் பிடிக்கிற எல்லாமும் எனக்கும் பிடிக்கணும். சிரிச்சுட்டே இருக்கணும். எங்கயும் போகக்கூடா, வீட்டுக்குள்ளயே எல்லாமும் இருக்கணும். நாங்க அப்டேட் ஆகிட்டே இருக்கணும் ஒரே விசயத்த மறுபடியும் மறுபடியும் கதைக்கக் கூடாது. புதுசு புதுசா கதைச்சுக்கிட்டே இருக்கணும், அவன் அதைக் கேட்டுட்டே இருக்கணும். ஆனா அந்த சுயநலமிக்கு தூக்கம் வந்தா/ போர் அடிச்சா நான் கதையை நிப்பாட்டிரனும் இல்லாட்டிக் கத்திருவான்.

எனக்கு ஒரே லப்டோப்பில ரண்டு பேரும் வேற வேற வேலைய ஒரே நேரத்தில ஒருத்தரை ஒருத்தர் குழப்பிக் குழப்பி சிரிச்சுக்கிட்டே வேலை செய்யணும். அவனுக்கு வேற வேற லப்டோப்பில ரெண்டு பெரும் ஒரே நேரத்தில ஒரே வேலைய ஒருத்தரை ஒருத்தர் குழப்பாம சிரிச்சுக்கிட்டே வேலை செய்யனும்.
அவ்வவ்....

இதெல்லாம் தவிர, ரெண்டுபேருமே ஒரே லப்டோப்பில வேற வேற வேலையை ஒரே நேரத்தில குழப்பிக் குழப்பிச் செய்தும், வேற வேற லப்டோப்பில ஒரே வேலையை ஒரே நேரத்தில ஒரே மாதிரி ஒருத்தரை ஒருத்தர் குழப்பாம செய்தும், எனக்குப்பிடிக்காட்டியும் நித்திரை கொள்ளாம அனிமேஷன் படத்தை முழுசா பார்த்து வாவ் ன்னு வியந்தும் போலியா இல்லாம அதைப்பற்றி நாள்ப்பூராக் கதைச்சும், நான் சொல்லுற எல்லாக் கதைகளையும் காது புளிக்கப் புளிக்கக் கேட்டு, இன்னும் சொல்லுன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லியும் வாழ்க்கையை வாழுறோம். இதுக்குள்ள எங்கயோ தான் காதல் இருக்குன்னு தெரியுது. அதுவா தனிச்சு தெரியுதில்ல. இதுவரைக்கும் காதல்னா எதுன்னு/ என்னன்னு சொல்லுற அளவுக்கு பக்குவம் வரலை. இன்னும் இப்பிடியே வாழனும்னு இருக்கிறதுக்குப் பேர் அதுவான்னும் தெரியல்ல.

உங்க வாழ்க்கைய நீங்க தான் வாழனும். உங்கள ஒருத்தர்/தி வந்து வாழ வைப்பாருன்/ள்னு நினைக்காத தெளிவு இருக்கிற வரைக்கும், எல்லாருக்கும் நல்ல காதல்கள் வாய்க்கும் 
heart emoticon


Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி