Skip to main content

குடிநீருக்கான அறப்போராட்டம்






நேற்றைய குடிநீருக்கான அறப்போராட்டம் பற்றி நேற்றே எழுதியிருக்க வேண்டும். கால தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். இந்த இளைஞர்கள் படை என்ன செய்யும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எப்போதும் இருந்தது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட அதிக வேலைப்பழுக்களோடு இருக்கும் எங்களில் பலரை நேற்று அங்கே கண்டேன். மிகவும் நெகிழ்வான தருணம் அது. மக்கள் பண்பாடு, மக்கள் இறைமையை நேற்று நாங்கள் நிருபித்தோம்.ஏற்பாட்டுக் குழுவுக்கு குறிப்பாக , சிவமைந்தன்,புருஜோத்தமன் இருவருக்கும் நன்றி.

இந்த ஒன்றுகூடல் நிகழ்வு, மக்கள் பலத்தை நிரூபித்தது. மக்கள் பலத்தை மட்டும் தான் எங்களால் காட்டவும் முடிந்தது. குறிப்பாக வடக்குக் கிழக்கு வாழ் முஸ்லீம்கள் அல்லாத தமிழ் பேசும் மக்களை மட்டுமே அங்கே என்னால்க் காண முடிந்தது. ஏன் எங்களால் பாதிக்குப் பாதி முஸ்லீம் மக்களை / குறைந்தது கால்வாசி இஸ்லாம் மதத்தைச் சார்ந்த தமிழ் மக்களை இந்த அலையில் திரட்ட முடியவில்லை? அவர்களாக இதைத்தவிர்த்தார்களா? அண்மையில் இசுலாமிய மக்களுக்கு வலுக்காட்டாயமாக வன்முறை நிகழ்ந்த போது இசுலாமியர்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் மக்கள் உதவுவதற்கு முன்வரவில்லையா? இதன் பின்னணி என்ன? இந்த நெருக்கடி வடக்குவாழ் தமிழ் மக்களுக்குமட்டுமானது என்று யாராவது நினைத்தார்களா? ஒன்றிரண்டு சிங்கள மக்கள் பேஸ்புக்கில் இதுதொடர்பாக பகிருவதையும்,நிகழ்வுக்கு வந்திருந்ததையும் கூட என்னால்க் காணமுடிந்தது.
மற்றது இது ஒரு போராட்டமல்ல. ஒன்றுகூடல் நிகழ்வு.மக்கள் பலத்தைக் காட்டக் கூடியதாக மட்டுமே இருந்தது. எங்களின் பயமும் வாழ்க்கை தொடர்தலுக்கான அச்சமும் இதனை போராட்டமாக பிரகடனப்படுத்தாமையின் வலியை உணரக்கூடியதாக இருந்தது.இதில் பெண்களின் பங்கு மகத்தானது. தலை போகிற காரியமாக வெள்ளவத்தையில் பெண்களை அழைத்தால்க் கூட வராதவர்கள் வந்திருந்தார்கள். மிக்க அகம் மகிழ்ந்தேன்.

இந்த அலை, குடிநீருக்கான போராட்டம் என்று இருந்தது. சுத்தமான குடிநீர் எமது உரிமை என்கிற தோற்றப் பதாகைகளையே அதிகம் காண முடிந்தது. நன்னீர் மாசு, நீர் மாசுக்கான காரணிகள், அதன் ஏகபோகிகள் யார் ,மாசடைந்த நிலத்தடி நீர் அன்றாடத்தில் எவ்வாறு மக்களை சென்றடைகிறது, இதனை யார் நிறுத்த வேண்டும்? எவ்வாறானவர்கள் இதற்கெதிராக கேள்வி கேட்கவேண்டும். யார் எல்லார் மீதும் நாம் குற்றத்தை சுமத்துகிறோம்? இதன் குறுங்கால ஆபத்தென்ன? நீண்டகால விளைவென்ன? ஆயின் அரசாங்கம் என்ன மாதிரியான சேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டும், அதற்கான இந்தப் பேரணியின் கேள்வித்தரம்/ நோக்கு என்ன? போன்ற மிக முக்கியமான விடயங்களை நாங்கள் செய்யவில்லை. இதன் பின்னணி அமைதியான நீண்டகால வாழ்க்கை பற்றிய கேள்வி நிமித்தமானது என்று விளங்குகிறது. இருப்பினும் போராட்ட அலை இவற்றை எல்லோருக்கும் கேட்கும்படி, சாதாரண குடிநீர்/ மின்சார வெட்டுத் தினங்களில் அறிவிப்பதைப் போல அறிவித்திருக்கலாம். இதை நான் முன்கூட்டியும் சொல்லியிருக்கலாம் .
wink emoticon
ஆனால் இதுபற்றிய ஆவல் இருந்தது.

சாதாரண மக்களுக்கு, யார் இதன் காரணி என்பதைக் கூட பிரித்தரியத்தெரியவில்லை. இதன் நீண்டகால ஆபத்துப் பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. வடக்குச் சூழலானது ஏற்க்கனவே போர்க்கழிவுகளான இரசாயனக்கழிவுச் சூழலினால் ஆக்கிரமிக்கப்பட்ட சூழத்தொகுதி. அதன் இரசாயன உயிரியல்ச் சமநிலை நீர்மட்டத்தோடு அந்தத்தில் இருக்கிறது. .நீர்த்தொகுதியும் முற்றிலுமாக பாதிக்கப்படுமாயின் அதன் ஆபத்து எல்லையற்றது.

தெற்கில் பூகொட போன்ற தொழிற்சாலைக் கழிவகற்றும் பாரிய நிறுவனங்களை அரசாங்கம் ரத்து செய்ததைப் போல வடக்கிலும், இன்னும் எங்கெல்லாம் இந்தப் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் செய்ய வேண்டும். மாற்று நீர்ச்சுத்திகரிப்பை ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீரின் தன்மை பற்றிய ஆராய்ச்சிப் படிப்பிற்கான ஊக்குவிப்பை அரசு செய்ய வேண்டும்.மக்களிடம் நேரடியாகத் தொடர்புகொள்ளக் கூடிய, வைத்தியர்கள், ஆசிரியர்கள், தாதிமார்,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும், விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும்படிக்குத் தூண்டவும் வேண்டும். பாடசாலைகளில், பலகலைக்கழகங்களில் இதுதொடர்பான போதியளவு கருத்துபரிமாற்றம் வேண்டும். சூழல் விஞ்ஞான மாணவர்கள் தவிர்ந்தவர்களுக்கு, இது தொடர்பான அறிவு புகட்டப்பட வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக இது தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுதலை தூண்ட வேண்டும்.

நேற்றைய இந்த அலை மதிப்புக்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும். இதன் தொடர்ச்சி இன்னுமின்னும் நீள வேண்டும். வடக்கில்/ தேவைப்பாடு இருக்கும் இடங்களில் இது தொடர்பான விழிப்புணர்வை தகுந்த விளக்கங்களுடன் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதன் தொடர்ச்சி அப்படியாகவும் இருக்க வேண்டும். ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.நான் தயாராக இருக்கிறேன்.




Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி