Skip to main content

உணவு புசித்தல்





சாப்பாடு என்பது ஒரு வகை நிறைவு. அதன் ஒவ்வொரு கோணமும் திருப்தியின் பால் நிறைந்தது. உணவின் மீதானதும், உடலின் மீதானதும் கொண்டாட்டமென்பது ஒவ்வொரு மனிதனிற்கும் தேவையானது. அது சுகதேகியான வாழ்க்கையின் ஆரம்பத்திற்கும், வாழ்க்கை மீதான பிடிப்பிற்கும் வழிகோலும்.

உணவு தொடர்பாக நிறைய சேகரிக்கத் தொடங்கி இருக்கிறேன். நல்ல உணவுகளை தேடிப்புசிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றை ரசிக்க வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சுகிக்க உணவென்பது ஒரு திறவுகோல். உணவு மீதான தடைகளையும், வர்க்க உணவு நிலையையும், பணத்தின் பண்பு நிறைந்த உணவையும், பணத்தின் பணபல்லாத உணவையும், பணவழி உணவையும், உணவல்லாத நிலையையும் கூடக்கதைக்கலாம்.

உணவு புசித்தல் ஒரு ஆடம்பரம் அல்ல. தேவைக்கு மேலதிகமில்லாத, உணவு விரயமல்லாத, விருப்ப உணவை உண்ணல் ஒரு ஆரோக்கியமான செயற்பாடு. உடை அணிதல் பற்றிப்பேசும் போது உடை தேவையாக இருப்பவரைப்பற்றிப் பேசுதல் இன்றியமையாதது; அவ்வாறே உணவின் தேவையும், அனைவருக்குமான உணவு பற்றிய கருத்தும். இருப்பினும் விருப்ப உணவும் அதன் குணகமும் தனிமனித விழுமியம் சார்ந்த ஒன்று.


உணவு என்பது பசிக்கானது மட்டுமல்ல. உடல் உள ஆரோக்கியத்திற்கும், சிறப்பான வாழ்வியல்க் கட்டமைப்பிற்குமானதென்பதை, உணவின் ருசியறிந்து தேடித்தேடி, உலக இலக்கியங்கள் கற்றறிவதைப்போல, உலகின் குசினியை ருசிக்கும் போது, யெளவனத்தின் ஏதாவது ஒரு அந்தத்தில் அது கண்டுபிடித்து மேலும் கட்டமைக்கப்படுகையில் உணர்வீர்கள். அதை நான்  உணர்ந்திருக்கிறேன்.


பெண் உணவை ருசித்துச்சாப்பிடுதல் என்பது நமக்கு அந்நியமானது. ஆண் ருசித்துச் சாப்பிடுவதற்கு உரியோன். வீடுகளில் உணவின் சுவை போதாமையால் வீட்டுக்கலவரங்கள், மனைவியுடனான பிணக்குகள், ஹோட்டல்ச் சாப்பாட்டுக் கலாசாரம் போன்றனவற்றை உருவாக்கக் கூடியவர்கள் அவர்கள்.

கடையில் சாப்பிடும் பெண்கள் கூட உணவின் தன்மை, உடல் ஆரோக்கியம், விலை முதலியன பற்றிய விழிப்புணர்வுடன் ஆண்களை விட அவசியமாக இருக்கத் தூண்டப்படுகின்றனர். கடையில் சாப்பிடும் பெண்களை வேறு விதமாக அழைக்கும் சமுகம் கூட எம்முள் உண்டு. தனியாகப் பெண் ஒருத்தி கடையில், பூங்காவில், சுற்றுலாத்தளமொன்றில் இருந்து உணவைக் கொறிப்பதோ, புசிப்பதோ கேள்விக்குள்ளாக்கப்படும் செயல். உணவு என்பது மனிதனின் அத்தியாவசியத் தேவை. எவ்வாறு பெண் பொது இடங்களில் கழிப்பறை தேடி அலைய வேண்டிய கேடான செயல் இருக்குமோ, அதே போல சொளகரியமான உணவுச்சாலை ஒன்றை வாடிக்கையாக்கி வைப்பதும் அவளின் அன்றாடக் கடமையாகிறது, அவள் வீட்டிற்கு வெளியில் உணவைப்பெறுமிடத்து. மேலும் பெண்கள் கூட்டமாகவே செல்லுதலும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

ஆடை, நடத்தை, பரத்தைமை இதற்கு நேரொப்ப உணவை பெண்கள் இயல்பாக உட்கொள்ளுதல் தொடர்பான கருத்துக்கள் பரவலானவை. உடல் சுருங்கி அழகாக இருத்தல், தோல் பொலிவுற இருத்தல், பல பேரின் முன் சிறிது உண்ணல், விலை பார்த்து உண்ணல், நளினமாக உண்ணல், கொடுத்ததை உண்ணல்....இவ்வாறு பட்டியல் நீளும்.

மேலும் துரித உணவகங்களில் உண்பதால் மலட்டுத்தன்மை, ஆரோக்கியக்கேடு பெண்களுக்கானது என்பதை வீடுகளில், சமுக வலைத்தளங்களில் வலியுறுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. ஆண்களின் உடல் வலிமை சார்ந்து பெண்களின் உணவொடுக்கம் காலாகாலமாக நிகழ்கிறது. பரம்பரை அலகுகளைக் கடத்தவல்ல, தலைமுறைத் தாங்கிகளாகவும், காவிகளாகவும் தொழிற்படும் பெண்களிற்கு ஊட்டச்சத்து மிகுந்த நிறை ஆகாரம் இயல்பாகவே தேவைப்படுகிறது. பெண்ணின் பூப்பின் போதான ஒரு மாத காலத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவையும், அதன் பின் உடல் மெலிதல், அழகியல் சார்ந்த உணவையும் வலியுறுத்தல் அபாண்டமானது. பெண்களின் தேகவலிமை, உடல் ஆரோக்கியம், அவர்களது மனவெழுச்சி சார்ந்த தேவைகள் யாவற்றையுமே உணவு பூரணமாக்குதல் அவசியம்.

பள்ளிப்பருவத்து ஆண்களிற்கு இருக்கும் இடைவேளைச் சிற்றுண்டி பெற்றுக் கொள்ளும் வசதி அதே வயது பெண் மாணவிக்குக் கிடைப்பதில்லை. வேலைக்குச் செல்லும் பெண்கள் தேடித்தேடி உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும், நுகர்வும் வேலைக்குச்செல்லும் ஆண்களினளவு கிடைப்பதில்லை. கிடைத்த நேரத்திற்குள் குழுமமாகச் சென்று அருகிலிருக்கும் சிற்றுண்டிச் சாலையில் உணவு வேளையை முடிக்கவே விரும்புகிறார்கள்.

அம்மாக்களின் உணவுப் பழக்கவழக்கம் பற்றிய அறிமுகம் தேவையில்லை. எஞ்சியது, பழையது, நேரங்கெட்ட உணவுப்பழக்கம் இவ்வாறு போகும். கர்ப்பிணிகளை மட்டும் உணவுப் பழக்க வழக்கத்தில் ஓரளவு மேற்குலகை விடத்தாங்குகிறோம். அதிலும் முதலாவது பிரசவத்தின் போது மட்டும்.

இதே வேளை ஆண்கள் பசிக்கும் நேரத்தில் உணவை சாவகாசமாகவும், சர்வ சாதாரணமாகவும் உண்ணப் பெற்றவர்களாகின்றனர். அது நல்லதே. ஆயினும் பெண்கள் மீதான இந்த ஓரவஞ்சனை கவனிக்கப்பட வேண்டும். மிகை புரிந்துணர்விருக்கும் காதலர்களிடம் இந்த உணவுப்பழக்கவழக்கம் தொடர்பான கருத்து வேற்றுமை இருப்பதை எனது சிங்கள நண்பி ஒருத்தியிடம் அறிந்தேன். மிக மெலிதான உடல்வாகு கொண்ட அவளால் அவளது ஆண் நண்பரை விட அதிகமாக உண்ணமுடியுமாம். டேட்டிங்கின்போது தன்னை உணவு தொடர்பாக ஆண் நண்பர் மதிப்பிடுவதை அவள் விரும்ப வில்லையாம். பெண்கள் மீது உணவு செலுத்தும் ஆதிக்கம் எங்கெல்லாம் உதைக்கிறது!

பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் உணவின் மீது காதலாவது மிக நிறைவான வாழ்க்கையை அவர்கள் வாழும் போதுதான் என்று உணவு தொடர்பான ஆராய்ச்சிகள் கூறுகிறது. பெண்கள் நிறைவான வாழ்க்கையை உணவு தொடர்பாக வாழுவதற்கு சரியான நிலை வேண்டும். எனது உணவுப்பழக்கம் தொடர்பாக நாங்கள் விவாதிக்கவும் புதியன தேடுவதற்கும் எனது நண்பருடன Kanarupan செலவிடும் பெறுமதியான நேரம் வலுவாக்கியுள்ளது. கட்டமைக்கப்பட்ட குடும்ப அலகிலிருந்து தானியங்கிகளாக இருக்கும் இருவரிடம் உணவு தொடர்பான வித்தியாசமான தேடல் இருப்பதை அவதானிக்கவும் முடிகிறது. குறிப்பாகப் பெண்களிடம்.

உணவு தொடர்பான தொடர்ச்சியான தகவல்கள் சுவை மிகுந்தன. கதைகளைப் போல கேட்டுக்கொண்டிருக்கலாம். சமைத்து உண்ணும் பழக்கமுடையவர்கள், தீய்த்து உண்ணும், வாட்டியுண்ணும், பொசுக்கி உண்ணும், சுட்டுப், பொரித்து, அவித்து உண்ணும் பழக்கமுடையவர்கள் எல்லோருமே இன்றைக்கு ஒரு நுகர்வில் அகப்பட்டுக்கொண்டோம். உணவை பதுக்கியும், பரவலாக்கியும், பகிர்ந்தும், உணவில் ஒரு அரசியலைச் செய்யவும் பழகிக் கொண்டோம்.  இவை ஒவ்வொன்றின் மூலமாகவும் எமக்கான பண்பாட்டை பறைசாற்றியும் கொண்டோம்.


இன்று உணவுக்கான போராட்டம் மிக வலிமையானது. அதிமுக்கியமானதும் கூட. நுண்மர்மங்கள் செறிந்ததும், மக்களின் இருப்பை அழிக்கவல்ல எதிர்த்தாக்கத்தை புரிவக்கூடியதுமாகவும் உணவின் கட்டுமானத் தேவை இன்றைக்கு இருக்கிறது. நீருக்கானதும் உணவிற்கானதுமாக அடுத்த உலகப்போர்கள் அமையும் நிலை இன்றையது. உணவுக்காப்பையும், உணவு வீணாதலையும் தடுக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி