Skip to main content

காரைக்கால் அம்மையாரும் குமரன் பெஞ்சாதியும்!




ன்ர வீட்டுக்காரர் முருகன் மாதிரி. முருகன் மாதிரி எண்டா நிறைய விஷயம் உங்களுக்கு நினைப்புக்கு வரலாம்.. ஒண்டு அழகா இருப்பாரெண்டு யூகிக்கலாம்,அது சாடையாக் குறைவு.ரண்டு மனுசியா எண்டுங் கேக்கலாம், அந்தளவு விஷய சாமர்த்தியம் ஆளுக்குக் குறைவு, சும்மா சொல்லப்பிடாது ஆள் நல்ல மனுஷன்,ஆனா முருகன் மாதிரி. 

சீர்காழி கோவிந்தராஜணும், பித்துக்குளி முருகதாசும் ஒரு காசெட்டில் பாட்டுப்படிச்சிருப்பினம், “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்” எண்டு, ஓம் எங்கண்ட அவரும் அப்பிடித் தான், வீட்ட சிரிச்சா என்ட அலுவலகம் வரைக்கும் எனக்குக் கேக்கும். அண்டய நாள் முழுத்தும் சந்தோஷமா ஜெகஜ்ஜோதியாப் போகும். 
அதே மாதிரி வீட்ட மனஸ்தாபம் எண்டாலும் அலுவலகம் வரைக்கும் அது வந்து குடையும்;குத்தும்; தலை எல்லாம் இடிச்சு அண்டு முழுக்க ஒரு வேலையும் செய்யேலாமப் போகும். இதால நான் செல்லமா அவரை “முருகா” “முருகா” எண்டு கூப்பிடுவன். அவர் “வள்ளி” “வள்ளி” எண்டு கூப்பிட்டு “அடிக்கள்ளி” எண்டு முத்தாய்ப்பு வெச்சு எங்கண்ட ரோசங்கெட்ட சண்டை இனிதே முடியும். 

சொன்னாப்போல, ஆளுக்குப் பேரும் குமரன் தான். குமரன் ஒரு நாள் தைகிரிஸ் நதிக்கரைக்குப் போகப் போறன் எண்டு கோவிச்சுக் கொண்டு வீட்டை விட்டுப் போயிட்டேர். அண்டைக்குப் பெருசா ஒண்டும் வீட்ட சண்டை நடக்கேல்ல...நான் உடுப்புத் தோய்க்க மிஷினைப் போடச் சாதுவா நேரம் போய்ட்டுது. ஆள் விறைச்சுக்கொண்டு போய்ட்டுது. கோவிச்சுக் கொண்டு போனாப் பரவாயில்ல, தைகிரிஸ் நதிகரையில விவசாயம் செய்யப்போறதா சொல்லிட்டு வெளிக்கிட்டுட்டேர்.

எனக்கு தைகிரிஸ் நதியில என்ன நடக்கிறதெண்டு பெருசாத் தெரியாட்டியும்,அதை விட உடுப்புத் தோய்ச்சு மழை வர முன்னம் காயப் போடுறது பெருசாய்ப்பட்டது. ரண்டு தரம் தொலை பேசினேன். குமரன் எடுக்கவில்லை. இரவு ஏழே முக்காலுக்கு வீட்ட வந்து, கோப்பி ஊத்திக்கொண்டு வா கலா என்டேர்.

நான் கோப்பி குடுத்தன். புதுசா தூள் இடிச்சனியா எண்டு கதையைத் துடங்கினார், நானும் ஓம் எண்டுட்டு விட்டுட்டன். அண்டய சண்டை கோப்பிக் கதையோட காத்தோட போய்ட்டுது. 

ஒரு நாள் மகன்ர பள்ளிக்கூடத்துக்குப் போக வேணும். நானும் அலுவலகத்துக்குக் வெளிக்கிடுறன்,அவரும் அவசரமா வெளிக்கிடுறேர். அண்டைக்கு அப்பரைசல் எனக்கு. அவருக்கு கோஸ்டா டவர்சிண்ட மீட்டிங். சின்னவனுக்கு பள்ளிக்கூடத்தில எங்களைக் கூட்டிக் கொண்டு வரட்டாம் எண்டு வீட்டுப்பாடக் கொப்பியில எழுதி விட்டிருக்கு. பேரன்ஸ் மீட்டிங் எண்டோன்ன சின்னவனுக்கு ராவே காய்ச்சல் வந்திட்டு. 

செல்லக்குஞ்சன் எழும்புங்கோ எண்டு எழுப்பினா, சாதுவா அனுங்கிறான். அப்பா இண்டைக்கு பிள்ளையோட ஸ்கூலுக்கு வருவேராம், குஞ்சன் எழும்பி ஸ்கூலுக்கு அச்சாப் பிள்ளையாய் போவானாம். வீட்ட வரேக்க அம்மா kit cat வாங்கிக் கொண்டு வருவனாம். மெல்ல சின்னவனுக்குச் சொல்லிக்கொண்டு எழுப்ப முயற்ச்சித்துக்கொண்டிருந்தன். 

“கலா, நீர் போயிட்டு வாரும்”. எனக்கு இண்டைக்கு அசையேலாதளவுக்கு வேலை. அவன் ஜெகனிண்ட வேலையும் என்ட தலையில வந்திட்டுது. நான் மாட்டன், நீர் போயிட்டு வாரும். 

நேற்று ராவே, நீங்க போறதாப் பிளான் பண்ணிக்கொண்டேல்லோ படுத்தம்? 
இப்ப என்ன புதுசா? எனக்கு அப்பிரைசல் இருக்கெண்டு நாலு நாளைக்கு முன்னமே சொன்னனே குமரன்? 

ஓம்.சொன்னீர். பிளானும் பண்ணினம். ஆனா நீர் போயிட்டு வாரும். என்னால ஏலா எண்டா ஏலா...

சின்னவனுக்கு எங்களுடைய சண்டை நன்றாக காதில கேக்குது. சண்டையிண்ட தீவிரத்தை மனக்கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டு அவனுடைய காய்ச்சலின் தீவிரத்தை கூட்டுவதா குறைப்பதா எண்டு தீர்மானம் பண்ணிக்கொண்டிருக்கிறான். அப்பா, அம்மாவை, நீர், வாரும், போரும் எண்டால் அப்பா கோவமாக இருக்கிறேர் எண்டு அர்த்தம். அதே போல அம்மா சரி எண்டு ‘ஒரு’ வார்த்தையில் சொன்னால் பயங்கரக் கோவமாக இருக்கிறா எண்டு அர்த்தம். பதிலுக்கு அவவும் நீர், வாரும், போரும் எண்டு அப்பாவைக் கதைச்சால் இண்டைக்கு பள்ளிக்கூடம் போகத் தேவையில்லை எண்டு அர்த்தம். 

இந்த மூண்டு தெரிவில,அவன் சரியான விடையின் கீழ் கோடு போடுவதன் முன்னம், நான் விறு விரண்டு சாரியச் சுத்திக்கொண்டு, நான் இவனைக் கூட்டிக் கொண்டு போறன்,ஆனா மத்தியானச் சாப்பாட்டை சமைக்க மாட்டன். மத்தியானம் கட்டிக்கொண்டு போய்ச் சாப்பிடுறது நானும், சின்னவனுந்தானே, நாங்கள் பட்டினியாக் கிடக்கிறம், நீங்க போயிட்டு வாங்கோ எண்டு சொல்லிக் கொண்டு சின்னவனை வெளிக்கிடுத்தி கூட்டிக்கொண்டு போனேன். அன்று மதியம் அவன் ரோல்சும்,முட்டை பண்ணும் சாப்பிட்டான். நான் ஒண்டும் சாப்பிடவில்லை. 

இரவு எட்டரை மணிக்கு குமரன் வந்தான். வரும் போது வடிவான வெள்ளிச் சிரிப்பொன்றை அலுவலகத்தில் இருந்தே தயார்ப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறான் போல. வடிவாய் என்னையே குறி வெச்சுப் பார்த்துச் சிரித்தான். நான் கோவத்தில் இருந்தேன். கோவத்தைக் காட்டக் கூடாது என்று சமையலறைக்குச் சென்று, சும்மா பாத்திரங்களை சரிப்படுத்தியும் குலைத்தும் வைத்துக்கொண்டிருந்தேன். கிட்ட வந்து, என்ற கையைப் பிடிச்சு, கைக்குள்ள ஒரு சின்னப் பொதியைத் திணித்து விட்டு முன் வராந்தாவுக்குச் சென்று விட்டான். போகும் போது சிரிச்சுக்கொண்டு தான் போயிருக்க வேணும், சாடையா பின் கழுத்தும், கன்னமும் விரிஞ்சு, பிடரி ஆடினது நான் திரும்பிப் பாக்காமலே கண்ணுக்குள்ள நிழல் ஆடித்தெரிஞ்சது. நான் பேசாமலே இருந்தன். 

பிறகு கொஞ்ச நேரங்கழிச்சு கையில திணிச்ச பொதியத் திறந்து பாத்தன். வடிவா அலங்கரிச்ச ஒரு பையுக்குள்ள,ஐஞ்சு நெய் லட்டுக்கள். ஆரோ கலியாண வீட்டுக்காரர் குடுத்திருக்க வேணும். இல்லாட்டி பொம்பே ஸ்வீட்சில வாங்கியிருக்கோணும். குமரனுக்கு கடையில வாங்கிரளவு பொறுமை இல்லை. ஒருவேளை ஜெகனிண்ட மனுசி குடுத்து விட்டுருக்கலாம். 

சின்னவன் லட்டுப்பையைப் பிரிக்கிற நேரமாப் பாத்து கிட்ட வந்தான். அவனுக்கு இரண்டைக் குடுத்து, அப்பாட்ட , அம்மா தாங்க்ஸ் எண்டு சொன்னன் எண்டு சொல்லிட்டு, கொஞ்சிட்டு வா என்டன். 

அவன், நான் சொன்னதை செப்பனே செய்து முடிச்சான். காலமைச் சண்டை முடிஞ்சுது. குமரன் சிரிச்சுக் கொண்டே வெளி வராந்தாவிலிருந்து வந்தான். பள்ளிக்கூடத்தில என்னவாம் ஐயாவைப் பற்றிச் சொல்லிகினம், எண்டு சின்னவனைத் தூக்கி வைத்துக்கொண்டான். அத்தோட காலமை சண்டை நடந்ததற்கான தடயங்கள் அறவே போயின. 

அடுத்த நாள் போயா. எனக்கு லீவு. அமெரிக்கன் கம்பனியில வேலை எண்டு, குமரனுக்கு அண்டைக்கும் லீவு இல்லை;அரை நேரம். நானும் சின்னவனும் காலமை கோயிலுக்குப் போயிட்டு வர, மேல்வீட்டு அன்ரி பூசைச்சோறு கொண்டு வந்து தந்தா. சமைக்கப்பஞ்சியில இருந்த எனக்கு, அது நல்ல வேட்டு.அன்ரிய வெறுங்கையோட அனுப்பாமல் நேற்றே நெய் லட்டுகளைத் தூக்கிக் குடுத்துவிட்டன். 

குமரன் வந்தோன்ன, சாப்பிட்டான். பூசைச்சோறு சாப்பிட்டா, அது ஒரு வகை அமைதியும், மன நிறைவுந்தான் என்ன, எண்டு ஏவறை விட்டுக்கொண்டே பிரிஜுக்குள் லட்டுக்களைத் தேடினான். 

“கலா... நேற்றையான் சாமான் எங்க?” 
எனக்குக் காதில நல்லாக் கேட்டது. கேக்காத மாதிரி, தலையை காய வைத்துக் கொண்டிருந்தன். 
கலா கூப்பிடுறது கேகேல்லையோ..? அதெங்க...??

எனக்கு குமரன் கேட்டோன்ன, குடுத்து முடிச்சிட்டன் எண்டு சொல்ல மனமில்ல,ஒரு மாதிரியாக் கிடந்தது. காரைக்கால் அம்மையார், பரமதத்தன் மாம்பழத்தைக் கேக்க, இல்லை எண்டு சொல்ல முடியாமல் கடவுவுளிற்ற பிரார்த்தனை பண்ணின மாதிரி, குமரன் லட்டுக் கேக்க, சாமியறைக்குப் போய் நிக்கோணும் போல இருந்தது. சாடையாச் சிரிப்பாயும் வந்தது. நான் குமரனுக்குப் பதில் சொல்லாம அப்பிடியே நிண்டன்.

அவன் கிட்ட வந்து, என்ன கலா சொப்பனமோ?....
சாமியறையில போய்க் கை ரெண்டையும் அகட்டி வைச்சுக்கொண்டு நில்லும், சாமி லட்டு லட்டாப் போடுவர் எண்டு சொல்லி, கெக்கலிச்சுச் சிரிச்சுப் போட்டு என்னைத் தாண்டிப் போனான். 

பாவி! நான் நினைச்சத....அப்பிடியே சொல்லிப் போட்டுப் போறான். கள்ளன்! 

சிரிப்பாயும்,வேதனையாயும்,பாவமாயும்,பாசமாயும்....ஆயும் ஆயுமான இந்த குணங்கள் ஒரு சேர எனக்குக் குமரனில் வந்தது. அவனுக்குக் கிட்ட போய், அதை மேல் வீட்டு அன்ரிக்கு குடுத்து விட்டுட்டன். பூசைச் சோறு கொணந்தவ, வெறுங்கையோட அனுப்பைனாச் சரியில்ல...குடுத்து விட்டுட்டன்..... 

கலாகெண்டெல்லா, நேற்றுக் கொண்டு வந்தனான்? குமரன் கேட்டு விட்டு சும்மா இருந்தான். ஆசையா உனக்கெண்டு கொண்டுவந்தன்.ஹ்ம்ம்
அவ்வளவு தான் சொன்னான். பிறகு முகம் தொங்கிப் போனது. 

எனக்கு,காரைக்கால் அம்மையாரை விட பயங்கரக் குழப்பம்.ஏன் பரமதத்தனை விடவுங் குழப்பம். 

உடன கேட்டன், அதென்ன, உடன காரைக்கால் அம்மையாரைப்பற்றிச் சொல்லிட்டுப் போனிங்க?அதெப்பிடிக் க்ளிக் ஆனது?.... 

எடி விசாரி! குமரன் சிரிச்சான்.

எனக்கு...காரைக்கால் அம்மையாரை நினைக்கப் பாவமாப் படுது குமரன்...
என்னவோ மனம் லேசாப் போனது போலவும்,பாரமானது போலவும் ஒருசேரப் பட்டது. அவனுக்கருகில, சாய்மனைக் கதிரையின் கைப்பிடியில் அமர்ந்தேன். 

ஏனாம் பாவமாயிருக்கு? 

ஏனோ தெரியேல்ல, பாவமாக் கிடந்தீச்சு. மாம்பழம் கேக்கிறதெண்டுறது லேசான விசியமில்ல குமரன், அதுக்கொரு நினைப்பு வேணும்.பழத்தைச் சாப்பிட்டன் எண்டு மனுசி சொல்லி இருக்கலாம், அல்லது ஆருக்கோ குடுத்திட்டன் எண்டு சொல்லி இருக்கலாம். 

மனுசன்காரன் கேட்டோன்ன, சொல்லத் தெரியாம நிக்கிறதுக்குப் பேர் அழகான ஒரு விஷயம் குமரன்!

குமரன் சிரிச்சுக் கொண்டு, பொம்பிளையல் எல்லாமே ஒரே கேசுகள். அடி மட்ட முட்டாளுகள். நேரப் பாத்து, பழத்தை விழுங்கீட்டன் எண்டு சொல்லத் தெரியாத பத்தாம் பசலிகள். அதுகளை சமையலறைக்குள்ள வைக்கிறது சரியும் தான் எண்டான்.

“குமரன், பழத்தைத் திண்டுட்டன் எண்டு சொல்லுறது ஒண்டும்,நீங்க நினைக்கிற மாதிரி ஒரு நிமிஷ வேலை இல்ல”.... 

ஓம், பழத்தைச் சாப்பிட ஒரு அஞ்சு நிமிஷமாவது வேணும். அவனுக்கேயுரிய நக்கலைக் கொப்புளிச்சான். 

கலா சிரித்துவிட்டு, இல்லக் குமரன். மனுசன்மாருக்கு வேணுமெண்டா அது ஒரு சாதாரண விசயமாத் தெரியலாம். நான் அதை பெண்கள் மீதான வன்முறையோ, ஒடுக்குமுறையோ, திணிப்போ எதுமாப் பாக்கேல்ல, அவளுக்கு பரமதத்தன் மீதிருந்த,மறுப்புச் சொல்லமுடியாத் பாசமா இருக்கலாம் இல்லியா? அது இயல்பு தானே?

இரண்டாம் நூற்றாண்டு பொம்பிளைக்கு பாசமும் பிரேமையும்... கத்திரிக்காயும். வெட்டிக் கொண்டுருவாங்கள்,அந்தக்காலத்து ஆக்கள்! குமரன் சொல்லிக் கொண்டே அவரச அவசரமாய் எழும்பி பாத்ரூமுக்குள் போனான். 

நான், அவனை பாத்ரூமுக்குள் போக விடாமல், வாசலோடு அண்டிக்கொண்டு நிண்டு, வந்து கதையைக் கேளுங்களன். இஞ்சே...குமரன்...குமரன்...

அவன், சட்டெண்டு கதவை அடிச்சுச் சாத்தி, ப்ளஷரை என் தொணி கேக்காத வண்ணம் ப்ளாஷ் பண்ணிக்கொண்டிருந்தான். 

இரண்டாம் நூற்றாண்டுக்கும், ரண்டாயிரத்துப் பதின்மூண்டாம் ஆண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கெண்டு தெரியேல்ல எனக்கு!

பழத்தைச் சாப்பிட்டுட்டா, பதிவிரதை இல்லை எண்டுவாங்கள். பழத்தை அன்பு கூடிப் போய், அந்த அன்பால, இல்லாத காடவுளிற்றையே கேட்டுப் பெற்றுக் கொண்டா, ஐயோ கடவுள் அவதாரம், அல்லது பேய் பிசாசெண்டு ஆளைவிட்டு தள்ளி ஒடீருவாங்கள். ஹ்ம்ம்ம்...ஆண்கள் மட்டும் மாறி இருக்கினையா? இத்தின காலத்தில...இதை ஆரிட்டக் கேக்கிறது.... 


நான் திடீரெண்டு, வாய்க்குள்ள சிரிச்சு கொண்டே, இஞ்சே குமரன், சப்போஸ், நான் சாமியறைக்குள்ள போய்ப் பிரார்த்திச்சு உங்களுக்கு ரண்டு லட்டுக் கொண்டு வந்திருந்தா உங்கட ரியாக்ஷன் எப்பிடியிருந்திருக்கும்? 

குமரன், திருப்பி என்னைப் பார்த்துக் கொண்டு, மறுபடியும் வயிறு கலங்கின தோரணையில் பாத்ரூமுக்குள் அவசரமாய் ஓடி மறைந்தான். 

*****

நிலா 2013

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி