Skip to main content

அது அல்லது இது...



ரு காகம் கிழக்கிருந்து மேற்காக கரைந்து கொண்டு வெள்ளை எச்சம் போட்டுவிட்டுப் போன நாளில், வீட்டில் அரிசிபொங்கவில்லை. உலை கொதிக்கவில்லை. அம்மாச்சியும், மாமியும் அழுது வடித்துக் கொண்டிருந்தார்கள். ரங்கன் மாமா சைக்கிளை எடுத்துக் கொண்டு போனவர், போனவர் தான் இன்னுமே வரேல்ல. அப்பா கொழும்பால வீட்ட வந்துட்டார். சிங்கம் மாமாவும், மூர்த்தி அங்கிளும் எல்லாத் திக்குக்கும் போயிட்டினம், ஒரு தகவலும் வரேல்ல. 

கண்ணைச் சுழட்டிக் கொண்டு பசியும், தண்ணித் தாகமும் எடுக்குது. நான் வெள்ளப் பிள்ளையா குளிச்சிட்டு, படம் கீறிக் கொண்டிருக்கிறன். என்னை யாருமே கவனிக்கேல்ல. அப்பா கொழும்பால கொண்டுவந்த போட்டெல்லோ அப்பிடியே கிடக்குது.

அப்பாண்ட கொழும்பு பாக்கை இன்னும் யாருமே திறக்கேல்ல. அம்மாவும், பூமணிச் சித்தியும் கிணத்துக் கட்டில நிண்டு குசுகுசுத்துக் கொண்டிருக்கினம். பூமணிச் சித்தி அழ வெளிக்கிடுறா. அம்மா அங்க நிண்டு போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறா. அக்காவும் வீட்ட இல்ல. எப்பயுமே அடிச்சு விளையாடுற அண்ணாவும் அண்டைக்குச் சண்டைக்கு வரேல்ல. 

நான் அண்ணாவிண்ட கலர்ப்பெட்டியை எடுத்துத் தான் படம் கீறிக் கொண்டிருக்கிறன், இத்தறுதிக்கு, அவன் மளமளவெண்டு வந்து அவ்வளத்தையும் இழுத்துப் போட்டு என்னை அடிச்சிருக்கோணும். 

அண்ணாவும், அங்கால வீட்டுத் தீபனும் அப்புச்சி வாங்கில இருந்து நாடியில கைவெச்சு யோசிச்சுக் கொண்டிருக்கினம். இப்ப பட்டம் விடுற சீசன், கோகுலன் , ராஜன், ரதீஸ்,யதுசன் எல்லாப் பெடியங்களும் பட்டத்துக்கு முச்சை கட்டிக் கொண்டு அங்கால கண்ணுக்கெட்டியபடி நிக்கிறாங்கள். அவங்கள், இவங்களை விளையாடக் கூப்பிடவுமில்லை, இவங்கள் அவங்களுக்குள்ள போகவுமில்லை. 

அப்பா, எனக்குக் கிட்ட வந்து, குஞ்சு சாப்பிடன் எண்டு கெஞ்சிக் கேட்டார்..... 

நான் ம்ஹூம் எண்டுட்டன்.....

பிள்ள என்ன செய்து கொண்டிருக்குதாம் எண்டார் ...? 

டடி, நான் படங்கீறுறன் ..........! 
நான், ஒரு ஆமிக்காரன் அப்புச்சிக் கோயில்ப் பிள்ளையாரை கும்பிட்டுக் கொண்டு இருக்குமாப் போல படம் கீறி இருக்கிறன். அவன்ட சேட்டும் காச்சட்டையும் பச்சையும் சாணிப்பச்சையுமா புள்ளிப் புள்ளி போட்டிருந்தன். நான் பச்சையும், சாணிப்பச்சையுமா வரி வரி போடேல்ல. 

அப்பா படத்தைப் பார்த்துவிட்டு, உறைஞ்சு போய் நின்றார். அழுகை வருமாப் போலிருந்த முகத்தைத் தூக்கிக் கொண்டு விறாந்தைக் கட்டுக்குள் விரைந்து சென்றார். அப்பா அழுது நான் பாத்ததேயில்ல. டடி, ஏன் அழுறதேயில்லை ம்மீ?....நீங்க மட்டும் அழுவிங்கள்?.....??
முகவாயக்கட்டில் கையை ஊன்றிக் கொண்டு ஒரு தினுசான மருட்சியில் அம்மாவிடம் பலதடவை கேட்டிருக்கிறேன். 

அம்மா சிரித்துக் கொண்டு, என்னைக் கலியாணம் கட்டப் போறனெண்டு சொல்லேக்க, அவற்ற முகத்தைப் பாக்கோணும், அழுது சிவந்து....,,, அம்மா இப்பிடித் தான் எதோ சொல்ல வந்து, வெக்கமோ , நான் சின்னப்பிள்ளை இருக்கிறேன் என்ற தயக்கமோ , தோளுக்குமேல வளந்த பூமணிச் சித்தீண்ட சேனா இருக்கிறதாலையோ..எதுக்காகவோ கதையை நல்லா மாத்தீட்டா. 


உடன சேனா, உங்கடை அப்பா அழுதா....பச்சையும் நாவலுமாத் தான் கண்ணீர் வருமாம் எண்டுட்டு, கிளுக் என்று இழித்தா. இப்ப இந்த சேனாவத் தான் காணேல்ல!!!

சேனா, நேத்து காலமை அரை ராத்தல்ப் பாணுக்கு, உவன் தம்பியண்ணனோட சண்டைபிடிச்சிட்டு வெளிக்கிட்டுப் போயிட்டா. நாங்கள் எல்லாரும் அவ சங்கீதக் கிளாசுக்குத் தான் போனவ எண்டுட்டு இருந்திட்டம். சிங்கம் மாமா கடையைச் சாத்தீட்டு வீட்ட படுக்க வார நேரம் வரைக்கும் சேனாவைக் காணேல்ல. பூமணிச் சித்தி அழுது குழறுறா. சித்தப்பாக்கு கையெல்லாம் தண்டல்க்காரன் மாதிரி விறைச்சுப் போயிட்டுது. ரங்கன் மாமா அப்பவே வெளிக்கிட்டுத் தேடப் போயிட்டார். வேணூவும், நானும் அப்பேலயிருந்து சாப்பிடவேயில்ல! 

சிங்கம் மாமா வீட்ட வரேக்க வேர்த்த முகத்தோட பேயறைஞ்சவர் மாதிரி வந்து நிண்டார். அப்பா, சிங்கம் மாமாவை விறாந்தைக்கு வெளியால கூட்டிக் கொண்டு போய், சொல்லடா, சொல்லடா எண்டு தனகிக் கொண்டு நிண்டார்.

அப்பா சிங்கம் மாமாவை அடா புடா வெண்டு தான் கதைப்பார். சிங்கம் மாமா , கனக்க நேரமா அப்பாண்ட முழிச்ச முகத்தையே பாத்துக் கொண்டு இருந்து போட்டு, ஒ எண்டு அழத்தொடங்கினார்.

அப்பாக்கு அஞ்சுங்கெட்டு அறிவுங் கெட்டுப் போச்சு.கை மீறிப் போச்சா டேய் ? எண்டு வாற அழுகையை விழுங்கிக் கொண்டு கேட்டார்.

அம்மான், நானறிய மல்லாவி வரைக்கும் வந்துட்டாங்களாம். கெதி கெதியா ஆக்களைச் சேர்க்கிறாங்கள். நேற்று பள்ளிக் கூடத்துக்கு வந்து கூட்டம் வெச்சிருக்கிறாங்கள். நாலு பெட்டையளும் மூண்டு பெடியங்களும் ஸ்பொட்டிலையே எழும்பிப் போயிட்டுதுகளாம். சுயானந்தியும் போயிட்டாளாம்! 

அப்பா, மெல்ல சிங்கம் மாமாவிண்ட தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு, இப்ப பயப்பிட்டுக் கொண்டு இருக்க நேரமில்ல ,உனக்கு ஆரையும் தெரியுமா டேய் ? பணிமனைக் காரங்கள் ஆரையும் தெரியுமா? நான் வெளிக்கிட்டுட்டு வாறன் என்று வீட்டுக்குள் திரும்பினார்.

அப்பா குடும்பத்திலையே தைரியசாலி என்று பெயர் வாங்கினவர். அப்பாக்கு ஊரில தெரியாத, அப்பாவை ஊரில தெரியாத ஆருமே இருந்திருக்க முடியாது.

பூமணி மாமி, மூண்டு தரம் மயக்கம் போட்டு , மீள் மயக்க நிலையில இருக்கிறா. அம்மா தேத்தண்ணி ஊத்திக் கொண்டு இருக்கிறா. வேணு பயம் அப்பிய கண்களுடன் வாங்கிலேயே நீண்ட நேரம் குந்திக் கொண்டு இருக்கிறான்.

எனக்குப் பசிக்குது. வேணு என்னைக் கிட்ட கூப்பிட்டு, தங்கச்சி, இண்டைக்கு அழுதிடாத, அம்மா பாவம் எண்டான்.எனக்கு நிறையப் பசித்தது. வேணுவுக்கும் பசிச்சிருக்கோணும். 

அப்பா பூட்டியும் பூட்டாததுமான சேட்டுடன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வெளியே போகப் போனார். போகும் போது, எங்க போறியள் எண்டு அம்மா கேக்கப் பயந்து கொண்டு, படலையடி வரைக்கும் ஓடி வந்து பார்த்தா.

அப்பா, தேட வேண்டாம் ! எண்டு சொல்லிக் கொண்டே சைக்கிள் பெடலை மிரிக்கவும், சதானந்தன் அண்ணை வீட்டு வாசலுக்கு வரவும் சரியாயிருந்தது.

அப்பா, சாந்தமான முகத்துடன், சதானந்தன் அண்ணையின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டு சைக்கிளில் இருந்து இறங்கினார். அண்ணை சொல்லத் தெரியாமல் நானும் வாரணன்னோய் எண்டு அப்பாவின் சைக்கிளில் தொத்திக் கொண்டார். அப்பா வெளிக்கிட,
புதுக் புதுக் எண்டு சத்தம் போடும் மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிளில் சிங்கம் மாமா அவர்களைப் பின்தொடர்ந்து வேகமெடுத்துக் கொண்டு ஓடினார். பின் அப்பாவும், சிங்கம் மாமாவும் சமாந்தரமாக குசுகுசுத்துக் கதைச்சுக் கொண்டு ஒழுங்கையால பிரிஞ்சு போயிட்டினம்.

அம்மா இன்னும் என்னைச் சாப்பிடக் கேக்கேல்ல. வேணுவுக்கு தலை சுத்திற மாதிரி இருந்திருக்கோணும். தங்கச்சி... எண்டுட்டு, எண்ட மடியில தலையை வெச்சுக் கொண்டு சாய்ஞ்சு கொண்டு கிடந்தான். தலைமேர் வெட்டின அவனின்ட தலை ஒருமாதிரி முள்ளு முள்ளாக குத்தினால், நான் முந்தி சண்டை பிடிப்பன். முள்ளுப் பண்டி முள்ளுப் பண்டி எண்டு கத்திக் கொண்டு அவனைக் கலைச்சுக் கொண்டு ஓடுவன். இண்டைக்கு நான் ஒண்டுமே சொல்லேல்ல.

அங்க பெரியவன், தாங்கள் பிடிக்கேல்லை எண்டு கையை விரிச்சிட்டானாம்!

அப்பா தனக்கிருந்த முழு இன்புளுவன்சையும் பயன்படுத்தி ஒவ்வொரு பணிமனையா ஏறி இறங்கினார். சேனாவை, காம்ப் மாத்திட்டாங்கள் என்ட தகவலைத் தவிர வேற ஒண்டும் கிடைக்கேல்ல. சிலர் சொன்னாங்கள் பயிற்சிக்கு அனுப்பீட்டதா. சில இடத்தில நேரடியா பீல்டுக்கு ரொளி ஏத்தீட்டாங்கள் எண்டும் சொன்னாங்கள். 

சிங்கம் மாமாவும் அப்பாவும் சேனாவின், வயது, முழுப்பெயர், பள்ளிக்கூடம் எல்லா விபரங்களையும் ஒவ்வொரு பணிமனைக்காரங்களிட்டையும் குடுத்துக் குடுத்துக் கொண்டு வந்தாங்கள். 

ஆகக் கடைசியா சேனாவை புளியங்குளத்தில வெச்சிருக்கிறதா தமிழவன் எண்டொரு அண்ணை சொன்னார், ஆனா அது எந்தளவுக்கு உறுதி எண்டு தெரியாது. அப்பா புளியங்குளத்து பெரிய காம்புக்கு போக ரெடி. ஆனா, உள் ஆக்களிண்ட கடிதம் வாங்காம பாக்க அனுமதி இல்லை என்டுட்டினம். 

பூமணிச் சித்தி, ஒவ்வொரு பொறுப்பாளர்களிண்ட பணிமனையிலையும் போய் நிண்டு அழுகிறா. பெரிய இடத்து ஆக்கள் யாருமே உள்ள இல்லை. எல்லாரும் பீல்டுக்கு போய்ட்டினம். ஆக்கள் காணாதாம்.ரவுண்ட் அப் தொடங்கீட்டாம். கிட்ட வந்துட்டாங்களாம். “போக்கஸ் லைட்”, வைலஸ் போஸ்ட்டுக்கு மேலால இப்ப இரவில தெரியிறது. நாங்கள் பானை சுத்திக் கொண்டு பங்கருக்குள்ள போக வெளிக்கிடுவம். சரியா ஒம்பதரை மணிக்கு செல் அடிக்கத் தொடங்குவாங்கள். 

அப்பா, ஒரு மாதிரி உள் ஆக்களிட்ட கடிதம் வாங்கிக் கொண்டு,போய் நிக்க, நாங்கள் பிள்ளையை படிக்க வக்கிறம் அம்மா , ஐயா என்டீச்சினம்.
எல்லாக் கம்புக்கும் போயாச்சு, பணிமனை பணிமனையா ஏறி இறங்கியாச்சு!
சேனாண்ட பேரை மாத்தீட்டாங்கள். தமிழினி! கண் செக்பண்ணி கண்ணாடியும் சேனாக்கு குடுத்திருக்கு. சீருடையும் வந்திட்டு. 

ஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா எண்டு மாமரத்துக்குக் கீழ நிண்டு சேனாக்கா,ஓர்கானிக் சமன்பாடு பாடமாக்கிக் கொண்டே பாட்டுப்பாடுவா. இப்ப அவாக்கும் சண்டையில செத்த ஆரிண்டையோ உடுப்பைத்தான் குடுத்திருப்பினம்! 

அப்பாவும், அம்மாவும், பூமணிச் சித்தியும், சேனா முதலாம் ஆண்டிலிருந்து அவள் முதலாம் பிள்ளையா வந்த கதை, ரிப்போட்டில சயன்சுக்கு நூறு மாக்ஸ் எடுத்த கதை. ஒ/எல் சோதனையில 
எட்டுகு "ண்டீ" எடுத்த கதை, சயன்ஸ் செண்டரில எல்லாச் சோதனையிலும் தொன்நூற்றாருக்கு மேல எடுத்த கதை, கவின்கலையில சாந்தனுக்கு முன்னால பாட்டுப் பாடி, “கண்ணன்” மாஸ்டரின்ட கையால பிரைஸ் வாங்கின கதை எண்டு எல்லாத்தையும் ஒண்டுக்கு விடாமச் சொல்லி அழத்தொடங்கீச்சினம்.

பிறகு அப்பா , இயக்கக் காரருக்கு செய்த உதவிகளையெல்லாம் ஞாபகப்படுத்தினார். இன்ன இடத்தில் இயக்க நிதி சேர்த்துக் கொடுத்தது. “இது” “இது” கொழும்பால எடுத்துக் கொண்டு வந்து ஆமிச் செக்கிங்கில பாதுகாப்பாகக் கொடுத்தது. தனக்குத் தெரிஞ்ச சாதி குறைஞ்ச பெடியனைப் பற்றியும் அவன் வீரமரணம் அடைஞ்சது பற்றியும் வாய் கூசாம ஞாபகப்படுத்தினார், தன்னில நல்ல அபிப்பிராயம் வரட்டுமெண்டு.

அதனால் ஆவது, அவர்கள் சொல்ல வந்தது,
நல்லாப் படிக்கிற பிள்ளையை ஆயுதம் தூக்கிச் சாக்காட்டாதீங்கோ எண்டது தான். 

பிறகு “பெடியள்” ல ஒராள் யோசிச்சுப் போட்டு, ஐயா அழாதையுங்கோ ,அம்மா அழாதையுங்கோ, இப்ப சேர்ந்தாக்களை கனகபுரம் பணிமனைக்குக் கொண்டு போயிருக்கிறம். அங்க தான் பீல்ட் பிரிச்சு அனுப்பிவினம்.அங்க போய் விசாரியுங்கோ. அங்க பெரியவர் சுருளி அண்ணை இருப்பார். நான் சொன்னனண்டு கேளுங்கோ என்று தன்னுடைய பேரை ரகசியமாக அப்பாவின் காதில் சொல்லிப் போட்டு உள்ள போயிட்டேர். 

அங்கயும் அவை, நாங்கள் ஆரையும் பிடிக்கிறதில்லை அம்மா. விரும்பி வாறவையை என்ன செய்ய? உங்களுக்கே விளங்கும் என்டீச்சினம்.

பூமணிச் சித்தி பணிமனை வாசலில குந்திக் கொண்டு இருந்து நாசமறுவாங்கள், என்ரை ஒற்றை பொம்பிளைப் பிள்ளையைப் பிடிச்சுக் கொண்டோட்டாங்கள். ஐயோ ....தலியருவாங்கள்.... படிக்கிற பிள்ளையைக் கூட்டிக் கொண்டாட்டாங்கள்....அருமந்தப் பெட்டை நல்லாப் படிச்சுக் கொண்டிருந்தவள்..ஐயோ.... கதைச்சுக் கதைச்சு அவளிண்ட போக்கைப் பிடிச்சிட்டாங்கள்....ஐயோ..., உந்த கதைக்குத் தானே அவளை “அங்கே” படிப்பிச்சிருந்திருக்கலாம் எண்டு கத்தினன்..ஐயோ..., பெடியனைப் பெக்காம பெட்டையாப் பெத்தனே ஐயோ....”வை போசா” சேர்க்கிறியளே, இது ஞாயமா? ஐயோ...என்ற குஞ்சு,ஒரு வேளை பசி தாங்கமாட்டாளே, துவக்குத் தூக்கிச் சுடப்பண்ணுறியளே, ஐயோ, பிள்ளை ரத்தத்தைக் கண்டால் மயங்கி விழுந்திருவாள்....பொத்திப் பொத்தி வெச்சனே...ஐயோ...
துரையன் கேட்டு வரேக்க கலியாணத்தையாவது கட்டிக் குடுத்திருக்கலாம்....ஐயோ...

இப்படி வார்த்தைக்கு ஒரு ஐயோ வீதம் சொல்லிச் சொல்லி பணிமனை வாசலில் இருந்து, சாரியை விரித்து, சாரித்தலைப்பைக் ஒற்றைக் கையால் பிடிச்சுக்கொண்டு, மணலை அள்ளி அள்ளி வீசி, வயிற்றில் அடித்துக் கத்திக் கொண்டிருந்தா.

அந்த இடத்தில் இராமர் வில்லூண்டி போல நீர் பொத்துக் கொண்டு வந்திருக்கும் வாய்ப்பு வர முன்னர் அம்மாவும், சிங்கம் மாமாவும் கையைப் பிடிச்சு அவவை சைக்கிளில் இருத்தி வெச்சுக் கொண்டு வெளிக்கிட்டீச்சினம். 

கனகபுரம் பணிமனையில போய், சயந்தகுமார் சொன்னார் எண்டு அங்க நிக்கிற பெடியளைக் கேட்டால், இங்க ஒரு பொட்டு ஆக்களும் இல்லை அம்மா! ஐயா! எண்டுட்டாங்கள்.

என்ற பிள்ளையில்லாம நான் அரக்க மாட்டன்.பூமணிச் சித்தி பெரிய சத்தியாக்கிரக மேம்பார்வையோடு பணிமனை வாசலில் குந்தீட்டா. அங்கால போற வார பெடியள், பெட்டையள் இவவையே வச்ச கண் வாங்காம பாத்துக் கொண்டு நிண்டீச்சுதுகள்.

அப்பா, தொங்கின முகத்தோடு வந்தார். ஏதேனும் காரியம் சரிப்படேல்ல எண்டால் அப்பா இந்த முக பாவனையைக் காட்டுவேர். 

பூமணிச் சித்தி, அப்பாவின் முகத்தைப் பார்த்து ஏம்பலிச்சிட்டா.
ஐயோ......என்னைப் பெத்த ராசாத்தீஈஈ....என்று அலறினா....மயங்கி விழுந்தா...தூக்கிக் கொண்டு ஓடினம்.

அப்பா, பொறுப்பாளரின்ர சிநேகிதர் ஒராளைத் தெரியுமெண்டு சொல்லி, சிற்றூரவைத் தலைவற்ற மகனொறாள் “இவற்ற” உதவியாளரா இருக்கிறதாக் கேள்விப்பட்டு, நேரடியாப் போய்ப்பார்த்து, கடும் பிரயத்தனத்தில, சேனாவைக் கூட்டிக் கொண்டு வந்திட்டார். ஆனா ஒரு 
“ரூல்சும்” போட்டுத் தான் சேனாவை வீட்ட அனுப்பினாங்கள்.

ஐயா! ரூல்ஸ் மாத்தேலாது. உங்களுக்கே தெரியும்.

***********************
அடுத்த நாள்,

அப்பா " ........" இல செயலாளரா இருந்ததையும், மாவீரர் தினத்துக்கு பன்னெண்டு மீட்டர் நிறக் கொடி சுத்திக் கட்டினதையும், அம்மா பெருமையாச் சொல்லிக் கொண்டிருந்தா.

சேர்ட்டும், செருப்பும், டவுசரும் போட்ட அண்ண மார் ரெண்டு பேர் வீட்ட வந்தீச்சினம்.சிங்கம் மாமா, "இ’னா" வந்திருக்கு எண்டு சின்ன மாமரத்துக்குக் கீழ் நிண்ட அப்பாவிடம் சாடையாச் சொல்லிவிட்டு வந்தார். அப்பா ஓடி வந்தார். சாதுவான குரலில, “ரெக்கியா” எண்டு கேட்டார். மாமா ஓம் போல எண்டார்.

அம்மா பால்த்தேத்தண்ணி கொண்டுவந்து குடுத்தா. முந்தி இயக்கப் பெடியள் பால்த்தேத்தண்ணி குடிக்கிறதுக்காகவே அம்மா , ஐயா வீட்ட இல்லையோ எண்டு கேட்டுக் கொண்டு வாறவை. சின்னச் சின்னப் பெடியள், இருவது, இருவத்திரண்டு....அரும்பின மீசையோடை, அம்மாக்கு சரியாப் பாவம் பாக்கிற குணம். தம்பியவை சாப்பிட்டுப் போங்கோ எண்டுவா. சாவல் அல்லது ஆட்டுக் கறியாய் இருக்கும் அண்டைக்கு. கையில அலுமினியக் கோப்பையை வெச்சுக் கொண்டே சாப்பிட்டு முடிப்பாங்கள் அவங்கள்.

போகேக்க , வவா எண்டு எண்ணக் கொஞ்சிப் போட்டுப் போவாங்கள். இல்லாட்டி எங்களோட வாறீங்களா தங்கச்சி எண்டு கேப்பாங்கள்.

நான் ஒ..வாரானே எண்டு தயக்கமே இல்லாமல் சொல்லுவன். பிறகு சேட்டுப் பொக்கேற்றுக்குள்ள இருந்து மூண்டு கலெண்டர் காட்டுகளை எடுப்பாங்கள். ஒண்டு ரோசாப்பூப் படம் போட்டது, இன்னொண்டு வடிவான வவாப்படம் போட்டது, இன்னொண்டு தலைவரப் படம் போட்டது. எது வேணுமெண்டு கேப்பாங்கள். நான் மூண்டாவது எண்டு படக்கெண்டு சொல்லுவன். அங்களுக்குத் தெரியும், நான் அதைத்தான் சொல்லுவன் எண்டும். சிரிச்சுக் கொண்டு அதைத்தந்துட்டு மோட்ட சைக்கிளிலை வெடியாப் பறப்பாங்கள்.

நான், அந்தப் படத்தைக் கொண்டு போய் நடராஜாக் கொம்பாசுக்குள்ள வெச்சிருப்பன். வேணுவுக்கும் எனக்கும் அந்தப் படத்துக்குச் சண்டை வரும்....
வேணு சொல்லுவான், இயக்கத்தில சேர்ந்தா துவக்கும், மோட்ட சைக்கிலும் தருவினம். 

ஆனா அண்டைக்கு "வவா" எண்டு என்னைக் கூப்பிடேல்ல. நான் கிட்ட போக, அப்பா தொண்டையை இருமிக்கொண்டே என்னை உள்ளுக்க போகச் சொன்னார். 

நிறைய நேரம்,அப்பாவும் அவங்களும் குசு குசு வென்று கதைத்தாங்கள். அம்மா விறாந்தையின் தாவாரத்தோடு ஒண்டிக் கொண்டே நிண்டா. 

திடீரெண்டு பூமணிச் சித்தி விராந்தைக்குள்ள நுழைஞ்சா...அம்மான் நான் கதைக்கிறன். சேனா என்ற மகள் எண்டு சத்தமாக் கத்தினா. 

வந்தவங்கள், அம்மா சத்தம் போடாதையுங்கோ! மெல்லமாக் கதையுங்கோ, எங்களுக்கும் பிலத்துக் கதைக்கத் தெரியும் எண்டாங்கள்.

பிறகு பூமணிச் சித்தி, நீண்ட பெரு மூச்சொன்றை விட்டுக் கொண்டே, 
"நான், வாறன் துவக்குத் தூக்க....."
உங்களுக்கு என்ர மகளுக்குப் பதிலா இன்னொராள் தானே வேணும், உங்கட ரூல்ஸ் அதானே? வீட்டுக்கு ஒராள்த்தானே? நான் வாறன்....உடம்பில தெம்பிருக்கு...நான் வாறன்....

அப்பா, கதிரையில் இருந்து எழும்பினார். பூமணிச் சித்தியை உள்ள கூட்டிக் கொண்டு போகும் படி அம்மாக்குச் சைகை காட்டினார். 
அம்மா, சித்தியின் கையைப் பிடிச்சு இழுத்துக் கொண்டு உள்ளறைக்குப் போனா.

அப்பா நிதானமாக உள்ளறைக்கு ஒருக்கா வந்து, என்னைத் தூக்கிக் கொஞ்சிப் போட்டு, அம்மாவைக் கூப்பிட்டார்.

அம்மா அழத் தொடங்கீற்றா. 

தம்பி கவனம். சின்னவள் கவனம்.மாமா வீட்ட போய் நில். 
இரவில கவனம் என்று ஒரே வார்த்தையில சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார். 

அவங்கள் மோட்ட சைக்கிளில அப்பாக்கு முன்னால்ப் பறந்தாங்கள்.

**************
நிலா 
2012-2013

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி