Skip to main content

ஒன்றுமே நடக்காதது போல -கவிதை-








-நிலா-
 4-4-2009


                                        
புற்களில் உட்கார்ந்து எழும் 
பூச்சிகள் பறக்க, 
மாட்டுச்  சாணமோ என்னமோ ஒன்று , 
காலில் மிதி படாமல் , 
லாவகமாகத் தப்பி-
தெருக் கரையில் புரண்டோடும் -
சிறு வாய்க்காலுக்குள் விழுந்து விடாமல் -
சீமெந்துத் தரை பிடித்து ஒண்டிக்கொண்டே -
ஆர் மேலும் உரசிக் கொள்ளாமல் நடந்து,
எல்லாத்துக்கும் ஒரே புன்னகை தான்- 
நிரம்பக் கதைக்க வேண்டும் போல் இருந்தாலும்,
ஒற்றை வார்த்தை தான்.


பெரும்பாலும் இருட்டுத் தான் - ஏதாவது 
பொதுக் கூட்டத்தின் முடிவிலாய் இருக்கும் -
எங்கள் புறப்படும் பயணம். 
நாலடி தள்ளி அல்லது விலகி 
சேர்ந்தாட் போல அல்லது முன்னுக்கும் பின்னுக்குமாய் -
சீ சீ ....,

பொதுவாய்ச் செர்ந்தால்ப் போலத் தான்..
நடக்க நடக்க இன்னும் வீடு, தூரம் போய்ச் சேர வேண்டும் போல் -
ஒன்றுமே இல்லை -எல்லாத்துக்கும் 
ஒரு லேசான தலையாட்டல் - பிறகு 
ஒரு சிரிப்பு- பல்லுக்கும் வாய்க்கும் இடைவெளியே தெரியாமல்- உள்ளுக்குள்
இறுகிச் சிரிக்கின்ற சிரிப்பு -
கள்ளத்தின் குறும்புச் சிரிப்பு ! 
அது எனக்கு மட்டும் தான்.

நாங்கள் நடப்போம்-
.........................
பிறகு ...? ,
அங்க என்ன விசேஷம்...?, 
இந்தப் பக்கமே காணேல்ல...? ,

இப்பிடி என்ன பொதுக் கேள்வி கேக்கப் பட்டாலும்
அந்தச் சிரிப்புத் தான்...
தோள்களை மெல்லக் குலுக்கி தலையைத் தலையை -
எல்லாம் சரி என்பது போல் ஆட்டி விட்டு 
திருப்பியும் ஒரு சிரிப்பு ....!
அது எத்தகையது என்று சொல்லமுடியாத சிரிப்பு -
சொல்லப் போனால் இப்போது ,
தொலைந்து போன சிரிப்பு !

நேசத்துக்கும், நிறைவுக்கும்
என்ன அர்த்தம் என்று வீடு வரும் வரைக்கும் 
நினைத்துக் கொண்டே வருமளவுக்கு -
அந்தச் சிரிப்பும் கூடவே வரும்.

பொதுவாய் மழை வரும்- 
ஒன்று தூறும் இல்லாட்டில் அடிச்சு ஊத்தும்.
குடை கொண்டு போவேன் - சில நாளில் இருக்காது.
அந்த நீல நிற நீண்ட குடைக்குள் ஒளிந்து கொள்ள ஆசை -
அது ஒரு நாள் நடந்தது ,
கொஞ்சத் தூரம் தான் ....
ரெண்டு அல்லது மூன்று நிமிஷம் பிடித்திருக்கும் - 
அந்த துளி தெறிக்கும் மழைச் சாலையைக் கடக்க..,
ஒன்றுமே இல்லை தலையை ஆட்டி விட்டு கிளம்பி விட்டேன், 
அதே சிரிப்பு மட்டும் விடை கொடுக்கும். 

வணக்கம் சொன்னால் -
"க்கம் " மட்டும் தான் சுணக்கமாக வாயிலிருந்து வரும்.
அது வெக்கத்தின் "க்கமா"? இணக்கத்தின் " க்கமா" என்று 
யாருக்குமே தெரியாது .
அப்போது அது பற்றி எனக்கும் தெரியாது !
ஒன்றுமே நடக்காதது போல 
ஒருவரை ஒருவர் பாராமலேயே வருவதில் -
நான் தான் கில்லாடி !


அந்த இருட்டுத் தெருவிலே 
சொறி நாய் நிற்கும், 
நுனி -வால் நக்கும் பூனை நிற்கும் ,
குறுகிப் போன பிச்சைக் காரக் கிழவன் கிடப்பான்....,
இப்போது பார்த்தாலும் அவையெல்லாம் ஞாபகச் சின்னங்களாய்..,















நிறைய வேர்க்கும்-
முகமெல்லாம், உடலெல்லாம் நனைந்து ஊற்றும்-
ஒன்றுமே இல்லாதது போல் காட்டுவதில் - 
இப்போதும் நான் தான் கில்லாடி !

ரெண்டு நிமிட நடைக்குப் பின் நான் தனியே 
வீடு வருவேன்-
தெருவிலே தனியே சிரித்துக் கொண்டு -
ஒரு புளாங்கிதத்தின் பெருமிதம் 
அல்லது புழுகு நிறைந்த புனைவுகளின் 
இருப்பிடம்.
அண்டு முழுக்க ரா ராவாய் கண்ணீர் வரும் -
கவிதை வரும் -
கேக்கப் படக் கூடாத கேள்விகள் எழும் -
எப்படியும் சமாளித்து விடுவேன்-
ஒன்றுமே நடக்காதது போலக் காட்டிக் கொள்வதில்-
நான் தான் எப்போதும் கில்லாடி !

அதற்குப் பிறகு வெகு காலம் கழித்து ஒன்று நடந்தாலும் -
ஒன்றுமே நடக்காதது போலக் காட்டிக் கொள்வதில் எப்போதும் 
நான் தான் கில்லாடி !



Comments

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி