Skip to main content

முகம்




சகுந்தலாவுக்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.ஆனால் இன்று வரைக்கும் யாருமே அவளை வந்து பார்த்துவிடவில்லை.சகுந்தலாவுக்கு இருபது நெருங்கிக் கொண்டிருந்தது .பள்ளிக் கூடப் படிப்பு ஐந்தாறு தேறும் .  பெரிய அழகியும் இல்லை . அழகிக்கு முதட்படியும் இல்லை   கருப் பீ.. ..  கொஞ்சம் குட்டை . உடம்பு மசமசவென்று துவண்டு கிடந்தது .பெரிய விஷய ஞானமெல்லாம் கிடையாது .


கூந்தல் நீளமாகக் கிடக்கும் அதுவுஞ்சுருட்டை .தனக்குள் தான்
பெரிய  அழகி என்ற  கர்வமெல்லாம் அவளுக்கில்லை . அவளுக்கு தன உருவமே மறந்தது போலத்தான் படும் .அவ்வப்போது தன முக வடிவம் மறந்து  போய் கண்டவர்கள் ,பார்த்தவர்கள் முகமெல்லாம் தன்னது தானென்று நினைத்துக் கொண்டாள்  .அதனால் அவளுக்கு தன அழகைப் பற்றி ஓரளவுக்கு பெருமிதமாகவும் இருந்ததுண்டு .அவள் சேலை தான் கட்டிக் கொண்டாள் .
 சில தடவை பாவாடையும் ,பிளவுசும் அணிந்தாள் .தன்னை சிங்காரிப்பதில்  எப்போதும்  ஆர்வமிருந்ததில்லை . தான் சிங்காரித்த முகத்துடனேயே எப்போதும் இருப்பதாகவும் பட்டது அவளுக்கு .......!

    அவள் தகப்பனாருக்கு வேலை இருந்தது. தரகர் வேலை. வீடு பிடித்துக் கொடுத்து, அதிலே கிடைக்கும் தரகுப் பணத்தில் ஐந்தாறு பேரைக் காப்பாற்றும் வேலை. அவள் தாயாருக்கு வேலை வீட்டில் இருந்தது. அவளுக்கு தம்பிமார் இருவர் இருந்தார்கள் .அவர்கள் பள்ளிக் கூடம் போனார்கள். அழகாகவும் இருந்தார்கள்.சகுந்தலா ரேடீயோ கேட்க மாட்டாள்.பத்திரிகை படிக்க மாட்டாள் .தோழிகளும் பெரிதாக இல்லை .  சும்மாதனும் வீட்டை துப்பரவாக்குதல் ,தோட்டத்தில் நிற்றல் போன்றவற்றை செய்வாள்.அவளுக்கு கனவு காண்பதென்பது என்னவென்றே தெரியாது .இதற்கு முன் அவள் சொப்பனமே கண்டது கிடையாது.

வீட்டிலோ, அவளை அழகானவள் என்று எல்லோருக்கும் எண்ணம். அப்பா அவளை ராஜ குமாரத்தி என்றும் ,அம்மாள் அவளை லச்சுமி தேவி என்றும் குறிப்பிடுவர்.

தன தம்பிகளுக்கும் அவள் அழகில் நம்பிக்கை இருந்தது .அவளுக்கு கிஞ்சித்தேனும் அழகைக் கொடுத்தது அவளது கேனைக் கதையும் ,அறிவிலித் தன்மையுமாம் . சில வேளை அதுவே மிகக் குரூரமாகவும் இருக்கும் .அவள் ஆக்களுக்குத்தகுந்தது போல் பேச மாட்டாள் .யாரிடமும் தெளிவாகவும் பேச வரா .நாக்குழரும் .தான் சொல்லவந்ததை அரை மணி நேரமாவது சென்ற பின்பே தெளிவாகச் சொன்ன பழக்கம் .சகுந்தலாவுக்கு நல்ல ஓவியம் கீறுவதில் திறமையிருந்தது .அவள் அழகிய பெண்களை நிலப்பாவாடை விரித்தும் ,தோட்டத்தில் சஞ்சரிக்கும் இளவரசிகளாயும் , பூவூஞ்சலில் ஆடும்  பெண்களாயும் கீறுவாள் .அவற்றை யாரிடமாவது காட்டும் போதெல்லாம் ,

        சகுந்தலாமாதிரி இருப்பதாகச் சொன்னார்கள் .தன ஓவியத்தில் அழகில்லையா? இல்லை தானே அழகில்லையா? இல்லை தன மீதுள்ள அளவுகடந்த பாசத்தில் சொல்கிறார்களா என்று அவளால் உணரமுடியவில்லை  .
               சகுந்தலா   கண்ணாடி பார்ப்பதில்லை .ஆனால் கண்ணாடியில் அவள் ,தன முகத்தை தினம் பார்த்ததாக நினைத்துக் கொள்வாள் .அவளுக்கு இது வரை காதல் உணர்ச்சிகள்,  அனுபவங்கள் வந்ததில்லை . அவள் அது பற்றி கவலைப் படுவதே இல்லை .அவள் அது பற்றி அறிந்தும் இருக்கவில்லை .
 அவள் பழங்கதைகள் மீது பிரியமாக  இருந்தாள்  .அவள் வீட்டில் தகப்பனின் தாய் இருந்தாள் .அவளுக்கு பாட்டி.   பாட்டியிடம் கதைகள் கேட்டாள். பெரும் பாலும் ராசா காலத்துக் கதைகள் .இளவரசர்களின் போர்ச்சாகசங்கள் அவளுக்கு வியப்பைத்தருவனவாக இருந்தன .போரைப்பற்றி அவள் அறிந்திருக்க வில்லை .அவள் அப்பா , அம்மாவிடம் அதிர்ந்து கூடப் பேசி யதில்லைபாட்டிக்கு காதலிலே ருசீயுண்டு.காதல்க் காட்சிகளைஉணர்ச்சி ததும்பச் சொல்வாள் .
         சகுந்தலாவுக்கோ அதில் மனம் போவதேயில்லை .காதல் செய்யும் இளவரசனும் ,இளவரசியும் அத்தனை அழகாய் இருப்பார்கள் என்றும், ஏக  அன்பு  வார்த்தைகள் பேசுவார்கள் என்றும் அவள் தனிமையிலும் நினைத்துப் பார்த்தது கிடையாது .அவளுக்கு அந்தக் காதல் இளவரசர்கள் கருத்து ,வெதும்பி, ஊளை வயிற்றுடன் தொங்கத் தொங்க முக படாம்  தாங்கியவர்களாய்த் தெரிந்தார்கள் . இளவரசிகளோ இடை மெலிந்து பட்டு நூலாடை கட்டி மேகலை புனைந்து ,  மார்புக்கச்சை அணிந்து ,கழுத்தில் வைர நகைபுனைந்து,   முகம்.... முகம் ..........மட்டும் ............தெளிவாகத் தெரி வதில்லை . எதோ மேகப் படலம் மறைத்தும் மறைக்காமலும் ..........மாதிரி. அதனால் இளவரசிகளை  எண்ணும்  போது அவளுக்கு பரிதாபம் தோன்றும் .அவர்கள் மனிதர்களல்லர் என்று பட்டதும் உண்டு .
                          சகுந்தலா தன்னிடம் உள்ள மங்கிய புகைப்படங்களை எப்போதாவது பார்ப்பதுண்டு.  ஆனால் அவளை அதிலே இனங்காண்பதே இல்லை. அவை தம்முடைய புகைப்படம் என்பதை அவள் அறவே மறுத்தாள்.      


        அவள் தன முகத்தை பக்கத்து வீட்டில் இருந்த சரோஜாவின் முகத்தோடு இணைத்துப் பார்ப்பாள் .    சரோஜாவிற்கு  நல்ல நீண்ட கூரிய நாசி .பிறை போல வட்ட முகம் .பெரிய கண்கள் .    சிவந்த உதடுகளிருந்தன .   நீண்ட கைகள் ,நீண்ட கால்கள், நீண்ட கூந்தல்ச் சடை .
சகுந்தலா, சரோஜாவின் முகத்தை மனதில் பதிய வைத்தாள். இன்னொரு சமயம் , அவளூருக்கு, தர்மு மாமாவின் பெண் வந்திருந்தாள் .அவளுக்கு இவளை விட ஏழெட்டு மாசம் மூப்பு .இருந்தாலும் அவளது முகம் இவளுக்குள் பதிந்தது. அவளுக்கும் கூர் நாசிதான். அகன்ற கண்கள் , திருத்தின புருவம் .பெரிய வாய் , ஆனால் சுருண்ட கேசம் . நல்ல வெளுப்பு . அவளுக்கு பரிமளா என்ற பெயர். சகுந்தலாவிட்கு அவளது முகத்திலும் பிடிப்பு ! ஆனால் அவளுக்கு அழகு எது? அழகின்மை எது என்று மட்டும் பிரித்தறிய முடியவில்லை .ஆனால் அவளையறியாமலேயே சில அழகிய பெண்ணுருவங்களை தனதாக்கிக் கொண்டாள் .
                             அவளுக்கு , அங்காலை ரோட்டு லக்ஷ்மியினது முகமும் தனதென்ற எண்ணம் இருந்தது. யாராவது கேட்கும் போது சொல்லவென பரிமளாவின் முகத்தை வைத்துக் கொண்டாள் . நிரந்தரமாக இருக்க சரோஜாவின் முகத்தை வைத்துக் கொண்டாள் .எங்காவது பயணம் போகும் போது லக்ஷ்மியினத்தை எடுத்துக் கொண்டாள். ஆனால் தெய்வங்களதும், இளவரசிகளதும் முகங்கள் மட்டும் அவளுக்கு தெரியவேயில்லை .அவள் பெரிய கண்களை உடைய முகங்களை விரும்பினாள் . தன பொழுதுகளை தோட்டத்தில் போக்கினாள் .பூக்களுக்கு மனிதர்களை விடவும் நல்ல முகம் இருப்பதாக அவள் அபிப்பிராயம். !........

       அவள் பூசை செய்யும் போது, தெய்வங்களின் உருவத்தையோ, முகத்தையோ பார்த்ததில்லை .அவளுக்கு வேறு எண்ணம், அவள் அம்மா, அவளுக்கு விரைவிலேயே கலியாணம் நடாத்தித் தரும்படி கடவுளிடம் பிரார்த்தித்து பூசை பண்ணுமாறு சொன்னாள் .
                அதன் படி, சகுந்தலா ஒரு சில நாளில் தேகக் கட்டுடனும், நல்ல சிவந்த முகத்துடனும் கூரிய  நாசியுடனும்,அடர்ந்த புருவங்களுடனும் கந்தருவனையோ, கின்னரனையோ ஒத்த ஒருவனைப் பார்த்தாள். அவளுக்கு ,அந்த முகத்தையும் தன்னுடையதாக்கும் எண்ணம் போல...........!
                  அவனுக்கோ ,இவளைப் பார்க்கையில் அசூசை மேலிடும். ஓரக்கண்ணால் தனும் இவளைப் பார்ப்பதில்லை.
                 சகுந்தலா ,அந்த ஆணினிடத்தே பிரியங் கொண்டாள் .அவனிடம் பேசிப் பழகதிருவுளங் கொண்டாள் . வீட்டுத் தெருவிலிருந்து, அவன் வந்து புழங்கும் தெருக் கோடிப் பக்கம் போக யனிப்பாள் .
அவளுக்கோ, தன செய்கை மீது நல்ல அபிப்பிராயமிருந்தது .அவளுக்கு அந்த முகத்தை தன்னுடையதாக்க வேண்டும் .!
         ஒரு நாள் மாலை , வெயிலடங்கி ஒரு மாதிரி கூதலக் காற்று வீசுகிற பொழுது. அவன் அந்தத்தெருவில் உலாவிக் கொண்டிருந்தான் .சகுந்தலா மெல்ல அவனருகில் சென்றாள்...............அதற்குப் பின் , அவன் ஓடி விட்டான்.
           சகுந்தலாவின் தகப்பனாருக்கு சந்தோஷ மிகுதி. அந்தப் பையனை, வரன் கேட்டு வரப் புறப்பட்டார். அவன் கொஞ்சம் தாழ்ந்த சாதியும் ,எழைப்பட்டவனுமாம். படிப்பும் அவ்வளவு இருக்கவில்லை . சகுந்தலாவின் தகப்பனாருக்கு ஏமாற்றம் தான் : இருப்பினும் முற்றக்கிவிட்டு வந்தார்.
              கல்யாணம் நடக்க ஏற்பாடாயிற்று. சகுந்தலாவிட்கு. உட்சவத்துக்கான ஆடை, ஆபரணங்கள், வெளிப் பூச்சுக்கள், தோழியர் எல்லோரும் கொணருவிக்கப் பட்டனர். சகுந்தலாவுக்கோ திருமணம் பற்றிய எண்ணம் எதுவுமில்லை. தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள் .
          அந்த வாலிபனது முகம், இநதப் பூக்களை விட பிரம்மதமானது என்று பட்டது. அவளுக்கு ஒரே அலாதி குஷி .! எப்பாடு பட்டாவது அவனது முகத்தை தனக்குள் செருகிக் கொண்டுவிட வேண்டும். தனதாக்கிட வேண்டும்...............,,
      
         கல்யாணத்தன்று, அந்தப் பையன் காகிதம் எழுதி வைத்து விட்டு மாண்டு போனான். விஷமோ ,நித்திரை மருந்தோ குடித்து .............,,,,,,,,

       கலியாணம் அசுபகாரியமாக மாறியது. கூடத்திலே பிணம் கிடத்தப்பட்டு, அவனது குடும்பத்துக் காரர்கள் ஒப்பாரி வைத்தார்கள். கூச்சலிட்டார்கள். சகுந்தலாவின் தாய்க்கும், தகப்பனுக்கும் மிகுந்த மன உளைச்சல்.

    அவளுக்கோ , தோட்டத்தில் வேலையிருந்தது. பூக்களை விட அவனது முகம்........................................................
       அவள் கூடத்திற்கு அழைக்கப் பட்டாள் . அழுகின்றவர்களை நிராகரித்துக கொண்டு பார்த்தாள். இன்னமும் அவனது முகம் பூக்களை விட மிக வடிவானதாய் இருந்தது .
     
          இப்பொழுது அவளால், இலகுவாக வாங்கிக் கொள்ள முடிந்தது, அவனது முகத்தை.....!



-நிலா

Comments

  1. சராசரிக்கு கீழான என் தமிழறிவுக்கு உங்கள் எழுத்துக்கள் இரண்டாம் வாசிப்புக்கு பின்னரே பாதி விளங்குகின்றன. முழுமையாக விளங்க இன்னும் இரண்டு தரம் வாசிக்க வேண்டும்... :)

    ReplyDelete
  2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  3. சகுந்தலா பற்றிய வர்ணனைகள் அழகாக இருக்கின்றது. இது ஏதோ கலியாணம் கட்டாமல் இருக்கும் பெண்கள் பற்றிய விடயம் என நினைக்கின்றேன். ஏன் அந்தப் பொடியன் தற்கொலை செய்துகொண்டான்?

    ReplyDelete
  4. //சகுந்தலா ரேடீயோ கேட்க மாட்டாள்.பத்திரிகை படிக்க மாட்டாள் .தோழிகளும் பெரிதாக இல்லை . சும்மாதனும் வீட்டை துப்பரவாக்குதல் ,தோட்டத்தில் நிற்றல் போன்றவற்றை செய்வாள்.அவளுக்கு கனவு காண்பதென்பது என்னவென்றே தெரியாது .இதற்கு முன் அவள் சொப்பனமே கண்டது கிடையாது //

    உயிரோட இருக்கத் தான் வேணுமா??? ;)

    //வந்தியத்தேவன் சொன்னது…
    சகுந்தலா பற்றிய வர்ணனைகள் அழகாக இருக்கின்றது. இது ஏதோ கலியாணம் கட்டாமல் இருக்கும் பெண்கள் பற்றிய விடயம் என நினைக்கின்றேன். ஏன் அந்தப் பொடியன் தற்கொலை செய்துகொண்டான்? //
    எனக்கும் அதே கேள்வி தான்...
    அதை கொஞசம் விளங்கப்படுத்தியிருக்கலாம்...

    ReplyDelete
  5. கனககோபி சொன்னது
    //சகுந்தலா ரேடீயோ கேட்க மாட்டாள்.பத்திரிகை படிக்க மாட்டாள் .தோழிகளும் பெரிதாக இல்லை . சும்மாதனும் வீட்டை துப்பரவாக்குதல் ,தோட்டத்தில் நிற்றல் போன்றவற்றை செய்வாள்.அவளுக்கு கனவு காண்பதென்பது என்னவென்றே தெரியாது .இதற்கு முன் அவள் சொப்பனமே கண்டது கிடையாது //

    உயிரோட இருக்கத் தான் வேணுமா??? ;)

    விட்டால் சாக்காட்டிப் போடுவிங்கள் போல..., அதான் பொடியன் ஜோசிச்சான், பிறகு தான் செத்துப் போட்டான்........

    (ஆனால் நிறையப் பேர், பெண்பிள்ளைகளை இப்படித்தானே எதிர் பார்க்கிறார்கள்? .....)

    வருகைக்கு நன்றி கனககோபி.

    ReplyDelete
  6. //(ஆனால் நிறையப் பேர், பெண்பிள்ளைகளை இப்படித்தானே எதிர் பார்க்கிறார்கள்? .....)//

    சொல்றத பாத்தா சொந்த அனுபவம் போல கிடக்குதே...???

    ReplyDelete
  7. கனககோபி சொன்னது…
    //(ஆனால் நிறையப் பேர், பெண்பிள்ளைகளை இப்படித்தானே எதிர் பார்க்கிறார்கள்? .....)//

    சொல்றத பாத்தா சொந்த அனுபவம் போல கிடக்குதே...???

    பிறகு, நீங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியோ கட்டுரை போட்டனிங்கள் எண்டு கேப்பன், பரவாயில்லையோ ? ......( அழகி விஷயம்) ஹி ஹி .........

    ReplyDelete
  8. மாட்டிவிட்டேன் என்பது வேறு அர்த்தத்தைத் தருகிறது.
    மாட்டிக் கொண்டுவிட்டேன் என வாசிக்கவும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி