Skip to main content

Posts

கதவுகளைத் திறந்து விடுங்கள் ...

கதவுகள் லேசுப்பட்டவை அல்ல , எந்தக் காலத்திலும் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல் நம்மைப் பழிவாங்கியவை அவை கதவுகள் லேசுப்பட்டவை அல்ல , நாங்கள் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல் பழியை வாங்கியவை அவை. எங்கள் வீடுகளில் கதவுகள் மரம் கடைந்தும், வசதிப்பட்ட வீடுகளில் இரும்பும், துரும்புமாயும் காகமிருக்கக் கொப்பாய் உயர்ந்து நெடுந்து , வளர்ந்து காவலிருக்கும். கதவுகள், சின்னஞ்சிறு  குழந்தைகள்,  தொங்கித் தொங்கி ஊஞ்சலாட வாய்ப்புக் கொடுக்கும். எல்லாக் கதவுகளும் யாரையாவது காவலிருப்பது குறித்து ஒரு நாளோ இரு நாளோ தயக்கமடைந்திருக்கும். அல்லது வெட்கப்பட்டிருக்கும்.  அடைக்கலம் தந்த கதவுகளும் இருக்கின்றன. காட்டிக் கொடுக்கத் திறந்து கொண்ட கதவுகளும் இருக்கின்றன... கதவுகள் எங்கள் பாட்டிகள் மாதிரி,  மூதாதைகள் மாதிரி, சின்னச் சின்னக் கதைகளை கதவு இடுக்குகளின் துவாரம் வழியாக யாருக்கும் பதனிடாத புதுக் காற்றில் சேமித்து வைத்திருக்கின்றன.  இன்னொரு இன்னொரு தலைமுறைக்காக  கதவுகளை நம்பி நாம் துயில் கொண்டோம்... எங்கள் பெண்களின் சொல்லக் கூடாத  கற்புகளை கதவுகளுக்கு

சொர்க்கத்தின் குழந்தைகளும், காலத்தின் முரண் பிணக்குகளும்

நிறையக் காலத்துக்கு முன்பாக என்று சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு முன்னதாக...ஒரு படம் பார்த்தேன். அந்தப் படத்தை அதற்கு முன்பாகவும் ஒரு தடவை பார்த்திருக்கிறேன்.  ஏன் எப்போதுமே படங்கள் காலத்தின் பக்கம் சார்ந்தவையாக இருக்கின்றது என்பது பற்றி மட்டும் எனக்குத் தெளிவே இல்லை. சினிமாப் படங்கள் நான் பார்ப்பது மிகக் குறைவு என்று சொல்லலாம், அல்லது பார்த்த படங்கள் மிகக் குறைவு என்று சொல்லலாம், இரண்டுமே ஏறக்குறைய ஒன்று போலத்தான். ஆனால், முந்திப் பார்த்த படங்களை , இப்பக் கொஞ்ச நாளா திருப்பியும் பார்த்துவிட வேண்டும் என்கிற அவா அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நான் காலத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் காலம் இனித் துரிதமடையப் போகிறதா, இல்லை தீர்ந்துவிடப் போகிறதா , இல்லை திடீரென்று வாழ்க்கை பற்றிய தீவிர அவாவா என்று தெரியவில்லை. முந்திக்கும், இப்பவுக்கும் என்னில் நிறைய மாற்றங்கள். ஒரு வேளை காதல்க் கவிதைகளெல்லாம் எழுதுவதில்லை என்று சபதமெடுத்துக் கொண்டிருந்த நான் காதல்க் கவிதைகள் எழுதுகிற அளவுக்கு  வளர்ந்துவிட்டதாலாக இருக்கலாம்.    முந்திய என் கவிதைக்கும்

வெறுங்கிழவீ !

                                                                         வெட்கமில்லை கிழவீ உன் சதைகள் ஆட வீற்றிருக்க முடியா உன் விதானமாட பற்கலில்லை கிழவீ உன் மலினமாட மாண்டிருந்த  மறைப்பெல்லாம்  மங்கியாட பிறழ்ந்து  வந்த கண்ணீரில் உன் கிழவன் ஆட கடந்து வந்த வாழ்க்கையிலே என்ன கிழித்தாய் காலம் தின்று துப்பவென சேலை விரித்தாய் செய்ய வழி ஏதுமின்றி பத்து பெற்றாய் -பின் எதேனக்குப் பத்து என்று எண்ணி முடித்தாய் ஆடி முடித்தகிழவி உன் ஆசையென்ன ? - ஆண்ட நிலை அடி வயிற்றின் பாண்டல் என்ன ? கக்கலிலே கலந்து வந்த பேதி யோடே கற்ற வினை யாதடியே -கருங்கிழவீ  ! உற்ற துணை ஊர் முழுக்க ஒன்றுமில்லை ஊரறிய உனக்குமொரு காவலில்லை. கற்றடிமை கால் பெரும்  காதலில்லை கடைசியிலே யார் வருகைக் காயிருந்தாய் ? ஆதியுந்தான் அப்பனுந்தான் ஆரும் வருகார் ஆத்தி ஆத்தி தேத்தடியே தனிக்கிழவீ  ! காலம் தின்ற கிழவீ உன் கந்தலென்ன ? காதல் கிழம் சாவதிலுன் பந்தமுமென்ன ? ஆட ஆட, ஆட  ஆட, அடிமை கிழவீ நீ ஆண்டிருந்த காலமெல்லாம் அருமை கிழவீ வாழ என்று வந்து நிற்க எது கிழவீ நீ வந்து போன பாதி வழி

சென்னை

சென்னையில் இருக்கிறேன். சென்னையில் இது எனக்கு முதல் முறை. கொழும்புக்கும் சென்னைக்குமுள்ள வேறுபாடு, கொழும்பையும் அடித்துச் சாப்பிடுமளவுக்கு இங்கே வெயில். மற்றது குப்பை. தெருவெல்லாம் நிறையக் குப்பை. கொழும்பு எவ்வளவோ மேல். அடுத்தது, தமிழர்களைக் கண்டால் துக்கம் விசாரிக்கிற மனநிலை. அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று விசாரிக்கிற போலி அரசியலும்,போலித்தனமும். குஜராத்தில் பூகம்பம் வந்த போதோ,காஸ்மீரில் குண்டு வெடிக்கும் போதோ, உள்ளூர்வாசிகள் இவ்வளவு இரக்கப்பட்டிருப்பார்களா தெரியவில்லை. ஏன் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடித்து குழந்தைகள் எல்லோரும் இறந்த போதோ,கும்பகோணத்தில் பள்ளிக்கூடம் எரிந்த போதோ கூட இவ்வளவு கவலை இருந்திருக்குமா தெரியவில்லை. அதில ரகசியமா,இன்னும் ஒருபடி மேலே போய், தலைவர்  இன்னும் இருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள். என்னத்த சொல்ல, ரஜினி இன்னும் உயிரோட தானுங்களே இருக்கார்...ன்னு சொல்லிட்டு வந்தேன். தட் மிடியல மொமென்ட் ... தைப்பொங்கலுக்கு சூரியன் கையில் விழுந்துவிடும் போல இருந்தது. சிவன் பார்க் பக்கத்தில், ஒப்பிலிராஜா சாலையில்   ஒரு லக்சரி வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொண

முன்னமொரு சகுனிகள்..

                                                முன்னமொரு சகுனிகள் முடிந்து வைத்த கதைகள் பல பின்னையொரு பொழுதிலே பேச்சவிழ்ந்த கதைகள் பல மன்னுமொரு காதல் மருந்தடித்த கதைகள் பல மாட்டிவைத்த அவன் கதையை மாய்ந்து மாய்ந்து-  உரைத்தன பல என்னையொரு நாளில் நீ அடித்துரைத்த கதையும் பல ஏக்கமொருநாளில் ஏங்கி வழிந்த கதையும் பல தோற்க வழியின்றி என்னைத் தோற்பித்த கதையும் பல தாக்க வழியின்றி எனைத் தகர்ப்பித்த கதையும் பல இருட்டிளுந்தன் பேர்தனை இடித்துரைத்த கதைகள் பல இன்னுமின்னும் இங்கிதமில்லாப் பங்கமும் பல கதை அழுக்கு என்று ஆர்ப்பரித்த ஆயிரங்கதை அன்றொருநாள் சொல்லிச் சொல்லி அழுத கதை பாடிப் பரவசம் காண முனைந்த பல கதை, பாடு பொருள் மட்டும் மாறாத பரிதவிப்பும் ஒரு கதை நாடி ஓடி வருங்கனவில் நான் நலிந்து போனதும் ஒரு கதை தேடி இனிதேடி தேய்ந்து போனதும் தொடர் கதை தேய்ந்த சகுனங்கள் தெளிவில்லை கண்ணே தேய்தலுக்கும் திரிதலுக்கும் எது எங்கே முன்னே ஆய்ந்து பதிலுரைத்தல் அடுத்தவிடை ஆனால் ஆன இன்பம் அது எனக்காம் பின்னே - ஏங்கி இனிப்பிரிதல் கூடாது என்றால் எது சரியோ, எது பிழையோ ஆரையும் நோகோம், இன

காக்கைகளும் நரிகளும் வடையும்...

 நா வலை மேம்பாலத்துக்கருகில் மிகப் பயத்துடன் நடந்துகொண்டிருந்த போது யாரோ என் முதுகுக்குப் பின்னால் இருந்து மிஸ் கந்தையா என்று கூப்பிட்டது நன்றாகக் காதில் விழுந்தது. கூப்பிட்ட குரல் எனக்கானதாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய இளம்பிராயத்தில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். சிறிது குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தேன். ஆளைச் சரியாக மட்டுக் கட்ட முடியவில்லை. திரும்பிப் பார்த்து நேரம் செலவழியாமல் நடக்க முனைந்தேன். அந்த நபர் என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வந்து எனக்கு முன் பாதையை வழி மறித்துக் கொண்டு என்னைத் தெரியேல்லையோ எண்டு கேட்டார். எனக்கு சாதுவாகவும் நினைவில்லையாதலால், மன்னிக்கோணும் எனக்கு சற்றைக்கும் நினைவு படுத்த முடியேல்ல என்றேன் . நினைவுப் படுத்துவதில் உள்ள சிரமத்தை விட அவர் எனக்கு முன்பாக வழிமறித்துக் கொண்டு நின்ற விதம் சங்கடமானதாக இருந்தது. இப்ப இங்கையோ இருக்கிறீர் எண்டார் . என்னைப் பொதுவாக யாரும் 'றீர் ' அடைமொழி பாவித்து அழைப்பதே இல்லை எனலாம். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு சொல்லுவதற்கு ஒரு பதிலும் இருக்கவில்லை. அவர் கொஞ்சம் உரத்த குரலில் சிரித்த