Skip to main content

அப்பா சொல்லித் தந்த பாட்டுக்கள்.


மாலை நேரப்  பொழுதினிலே
மாமரத்தைப் பாருங்கள்
மஞ்சள் நிற இலையெல்லாம்
மாறி மாறி விழுகுது
சின்னஞ்சிறு  பூவுண்டு
சிலதில் நல்ல பிஞ்ச்சுண்டு
வண்டு வந்து மொய்க்கவே
வாசம்  எங்கும் வீசுது -

மாலை நேரப் பொழுதிலே
மாமரத்திப் பாருங்கள்!



கிழக்குப் புறத்து பெரிய மாமரத்தின் கிளைகளிலே, வைகாசி மாத மாவடு தோன்றும் வாசத்தோடு, முற்றத்தில் விழுந்து கிடந்த மாம்பிஞ்சுகளை, கூட்டிக் கொண்டே அப்பா எனக்காகச் செய்த பாட்டு இது.   அது ஒரு செங்கல் மங்கலான பொழுது இன்னமும் ஞாபகமிருக்கிறது.  (4/5 வயதுக் குழந்தைக்கு)

 ***


வெகுமதியாய் புகழ்ந்திடவே
வெகுளி எங்கள் குழந்தைகளே....



வெள்ளை நிறக் குழந்தைகளை
வேடிக்கைகள் பார்த்துடுவர்-

விஞ்ஞானத்தின் விந்தைகளை
அள்ளி அள்ளி வீசிடுவார்-

அமெரிக்காவில், ஐரோப்பாவில்
அழகழகாய் குழந்தைகள்-

கைகள் தட்டி சிரிக்கிறார்
கண்ணைக் கண்ணைச்  சிமிட்டுறார்-

பறக்கும் தட்டு, பலூன்எல்லாம்
விண்வெளியில் பறக்குதங்கு

பேசும் பொம்மை, பேசும் நாயும்
திருகிடவே  நடந்து போகும்

பாழும் எங்கள் நாட்டிலே -
பறந்து வரும் விமானமோ

குண்டு வந்து போடுமோ?
கொலைகள்  செய்து போகுமோ?

என்று அஞ்சி வாடியே-
என் குழந்தை சாகுது!

எட்டுசான் வயிறு இறுகி
எலும்பெல்லாம் தெரியுது!

பக்கதிலே பாத்திருந்த
அப்பா மனம் பதறுது!

தங்கச்சிக்கு போடவே
பௌடர் இங்கு இல்லையே

கண்சிமிட்டும் பொம்மைக்கு
பற்றறி இன்னும் வரலையே!

வாகனத்தில் சுற்றவே
பெட்ரோல் வசதி இல்லையே-

கண்கவரும் வண்ணமெல்லாம்
ராத்திரியில்  இல்லையே

கண்விழிச்சு அக்கா படிக்க
லைட்டும் கூட இல்லையே

விஞ்ஞானமும், வேடிக்கையும்
நமக்கு இங்கு இல்லையே-

இருந்துவிட்டால் என் குழந்தை
நிலவினிலே இறங்கிடுவாள்.

இருப்பவர்கள் இல்லாருக்கு
ஏன்  மறைச்சு வாழனும்?

இல்லாததைக் கண்டு பிடிக்க
இருப்பதை ஏன் தொலைக்கணும்?

உழைப்பைச் சிந்தி உழைக்கணும்
ஒற்றுமை தான் பழகணும்!

***



அது போர்ச்சூழல். அப்போது பள்ளிக் கூடம் கிடையாது. ஐந்து வயதில் இல்லாமல் மூன்று வயதில் மொண்டிசூரிக்குக்  குழந்தைகளைச் சேர்க்கிறதாய் கதை எழுந்த காலம் எங்களது தான். அப்படி ஒரு வயதில் சொற்ப மாதங்கள்   முன் பள்ளிக்கும் 'முன்னால்'  போகிற பள்ளிக்குப் போயிருப்பேன், அதற்குப் பிறகு மூன்றாம் வகுப்பு வரைக்கும் முறையாகப் பள்ளிக் கூடமே போகவில்லை.

அப்பா தான் பாட்டுக்கள் , கதைகள், கட்டுக் கதைகள் எல்லாமே சொல்லித் தருவார். கைவசம் பாட்டுக்கள் இல்லாத போது அவ்வப்போது இயற்றுவார்,பொதுவாக புழுகு மூட்டைக் கதைகள் சொல்லுவார், குழந்தைகளுக்கென்று இருக்கும் கதைகளும் பாட்டுக்களும் அவர்களுக்கு தோதானதாக இல்லை என்பது பெரும்பாலும் அவரது எண்ணம்.

நிறையப் பாட்டுக்கள் இயற்றி, எனக்கும் அண்ணாவுக்கும்  சொல்லித் தருவார். அவற்றை நாங்கள் மனனம் பண்ணிக் கொள்ளுவோம். பள்ளிக் கூடம் இல்லாததால் மாறி மாறி அப்பா வகுப்பு வைப்பார். ஒரு நாளைக்கு கணித வகுப்பென்றால் அடுத்த நாள் விஞ்ஞான வகுப்பு. இன்னொரு நாள் பாட்டும் அபிநயமும். அப்போதெல்லாம் இந்தப் பாட்டுக்களைப் பாடி ஆடியும் காட்ட வேண்டும். நான்கிலிருந்து ஆறு வயதுக்குள் இவை நடந்தேறி முடிந்திருக்கும்.அபிநயமும், பாட்டும் முடிய நாங்கள் கோழி, தாரா மேய்ப்போம். கோழியை அடை வைத்து குஞ்சு பொரிக்கப் பண்ணுதல் பெரிய கலையாக இருந்தது. குறுணிக் குஞ்சுகள் முட்டை உடைத்து வரும் போது அப்பா இப்படிப் பாடுவார்,

முட்டையுடைத்து வருகிறார்
முழுதும் உடைத்து வருகிறார்
மொட்டையடித்து வருவது போல்
முட்டி முட்டி வருகிறார்

முயன்று முயன்று பார்க்கிறார்
முடியவில்லை என்றில்லை
முயன்றிருந்தால் பயமில்லை
திடமிருந்தால் இடரில்லை

முட்டைக் கோது இருப்பதினால்
முளையம் விட்ட  மூப்பனார்
முழுவதாக வளர்ந்ததும்
வளையை  விட்டு வருகிறார்              

முட்டையுடைத்து வருகிறார்
முழுதும் உடைத்து வருகிறார்
மொட்டையடித்து வருவது போல்
முட்டி முட்டி வருகிறார்!


*மூப்பனார் 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த காலம் அது.அதனால் மூப்பனாரும் நகைச்சுவைக்காக பாட்டுக்குள் வருகிறார்.


அப்பாவின் பாட்டுக்குள், அவரையும் எங்களையும் அறியாமல் நிறையச் சிந்தனைகள் இருந்தன. நேரடியாகச் சொல்லித் தந்த பொதுவுடமைக் கருத்துக்களை அப்பா அடிக்கடிப் பரிசோதிப்பார். அம்மா எப்போதும் குழந்தைகளுக்கு பொதுவுடமைக் கருத்துக்களைப் போதிப்பதையிட்டு குறைபாடாகவே கருதி வந்தார், அது ஒரு வகையான ஒதுக்கப்படல்  என்று நினைத்தார். சமுகத்தில் தம்முடைய குழந்தைகள் இவ்வகையான ஒரு தரவாழிக் கருத்துக்களால் பொதுச் சிந்தனை கொண்டவர்களிடமிருந்து தவிர்க்கப்படுவார்கள் என்பதை யூகித்தரிந்தார், அதுவே சரியாகவும் இன்றிருக்கிறது, வேற கதை.

நிறைய விவாதங்கள் இருந்தாலும் ஒருமித்து ,அன்றைய காலப் பகுதியில் என்ன இருக்கிறதோ அவற்றை முழுவதுமாக நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், பகுத்தறிய வேண்டும், என்பதை அம்மாவும் அப்பாவும் விரும்பினார்கள். அவர்களுடைய மற்றைய குழந்தைகளை விட என்னை இவ்வுலகில் பழக விடுவதையிட்டு இவர்கள் கொண்டிருந்த அச்சம் பேரபாயமாக இருந்தது. (இதற்கான காரணம் இன்று வரைக்கும் விளங்கவில்லை) ஒன்று, தலைமுறை இடைவெளி சற்று அதிகமாக இருக்கலாம். வளர்ந்த குழந்தைகளுடன், சிறு குழந்தையாக நான் இருந்ததாக இருக்கலாம். எது எப்படியோ, அவர்களது அச்சங்களை சாதாரண உரையாடல்களிலிருந்து நான் பெற்றுக் கொண்டதை விட இவ்வாறன பாடல்கள்,அசைவுகள் மூலம் பெறக் கூடியதாய் இருந்தது அதிகம் . இதுவே இன்றை வரைக்கும் எனக்குள் உறைந்தும் கிடக்கிறது.


ஏராளமான பாடல்கள், அவர் அப்பா என்றதாலோ என்னவோ கவனக் குறைவாக மறபட்டும், அப்பாவுக்கே மறபட்டும் காலவெள்ளத்ததோடு  போய்விட்டன.என்னுடைய ஞாபகசக்தியைப் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லாமல்ப் போகத் தொடங்கும்   இப்போது கூட, இவற்றை ஆவணப்படுத்தாவிட்டால்,இனி எப்போதும் இல்லை. ஆகவே வரலாறு முக்கியம் அமைச்சரே :)


அப்பா எழுந்தமானமாக சொல்லித் தந்த பாடல்கள், சிலவற்றை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு அவருடைய பேரக் குழந்தைக்கு, சொல்லிக் கொடுக்க தமிழ்ப் பாடல்களின் வறுமையை எண்ணிக் கொண்டிருக்கையில், நானே நட்சத்திராவுக்கு இப்பாடல்களைச் சொல்லிக் கொடுக்கிறேன்.     இது ஒரு அழகிய உணர்வு, தலை முறைகள் தாண்டி உணர்வுகள் ஒரே பரிமாணத்தில் கடத்தப்படுவது மிக அழகு.

அப்பா நான் வளர்ந்து விட்டதாக இப்போது தான் உணரத் தொடங்கியிருக்கிறார்.அதுவும் இன்னொரு அழகு :)  



ஆழமான கிடங்கை வெட்டி
அவனை நீ விழுத்த எண்ணி
பாதை தனில் ஒடுவியே -
பழி நின்றதா? நீ வெட்டிய குழி உனக்கு
நின்மதியில் தான் இருக்கா-
நினைக்கையிலே பார்  ஒருக்கா!
உன் குழியில் நீ விழுந்தாய்
உண்மை  இது தான் என்பதை-
உணர்ந்திடவே  நீ  மறுத்தாய்!





நிலா,2013

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி